Monday, December 31, 2012

உதிரிப் பூக்கள்




இரு கைகளால்
இணைந்த பூக்கள்,
நான்கு கைகள் பிணைகையில் பிரிகின்றன...

உறவு
இன்னும் வழுப்படுமென்று,
உதிர்ப்பதற்காகவே கட்டப்படுகின்றன;

கொடிகளில் மட்டுமல்ல,
மஞ்சத்திலும் பிறக்கின்றன (உதிர்கின்றன),
உதிரிப் பூக்கள்...

Thursday, December 27, 2012

ராசாவின் இசையிலே - இது மெளனமான நேரம்...


நேற்று இரவு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "சூப்பர் சிங்கர் T20"-யினைப் பார்த்தேன். சிறப்பு அழைப்பாளராக நடிகர் கமல் அவர்கள் பங்கு பெற்றதால் நிகழ்ச்சியினை முழுமையாகப் பார்த்தேன்.அப்போது, போட்டியின் முதல் பாடலாக "சலங்கை ஒலி" திரைப் படத்திலிருந்து ஒரு பாடல் பாடினார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பாடலைக் கேட்டதும் என்னுடைய பழைய நினைவுகள் நினைவுக்கு வந்தன.


இந்தப் பாடலை அடிக்கடி கொடைக்கானல் பண்பலையில் கேட்டதுதான் ஞாபகம் வருகிறது. அதுவும் இரவு நேரங்களில் இந்தப் பாடலைக் கேட்டால் ஏதோ ஒரு இனம்புரியாத ஒரு சுகம் கிடைக்கும். அப்பொழுதெல்லாம் எங்களது ஊரில் இரவு நேரங்களில், எதாவது பழுது காரணமாக மின்சாரம் தடைபட்டால் அவ்வளவுதான். மறுநாள் வரைக் காத்திருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட நேரங்களில், எனது வீட்டுத் திண்ணையில், கைகளையே தலையணையாக்கி படுத்திருக்கும்போது, நிசப்தமான அந்த இரவில் பக்கத்து வீட்டு ரேடியோவில்-ஒளிபரப்பு, மெல்லியதாக என் காதுகளில் கேட்கும்.
அதில் பேசுபவரும் அவ்வள்வு மெல்லியதாகப் பேசுவார். அப்போது அவர், "இது கோடைப் பண்பலை வானொலி நிலையம். அடுத்து வரும் பாடல், இளையராஜாவின் இசையில், சலங்கை ஒலி திரைப்படத்திலிருந்து... ஜானகி மற்றும் S.P. பாலசுப்ரமணியம் குரலில்" என்று சொல்லிவிட்டு அந்தப் பாடல் ஒளிபரப்பாகும்; அந்த நினைவுகள், இன்னும் என் நினைவுகளில் நிழலாடிக் கொண்டுதான் இருக்கிறது.
பாடல் ஆரம்பமே படு தூளாக இருக்கும். யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே எனபது போல, இந்தப் பாடலினைப் பற்றி துதி பாடுவதாகவே முதல் சில நிமிடங்களுக்கு இசை ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த இசையோடு பயணித்துக் கொண்டே நம் ஜானகி அவர்கள், இசையோடு இசைந்து பாடுவார்கள்.

முதலில் சில நொடிகளுக்கு மெல்லியதாக இசை மட்டுமே இருக்கும், பின்பு ஒலிக்கும் அந்த வரிகள்...

"இது மெளனமான நேரம் "


முதல் வரியினை ஜானகி அவர்கள் பாடுவதே மிகச் சிறப்பாக இருக்கும்.
"இது மெளனமான நேரம் " என்பதை சற்றே ஏற்ற இறக்கத்தோடு பாடுவார். குறிப்பாக மூன்று வார்த்தைகளுக்கும் ஒவ்வொருவிதமான ஏற்ற இரக்கங்களோடு பாடும்போது, அந்த ஒலிக்கேற்றாற்போல மெல்லியதாக தாளாட்டு பாடுவதுபோல நம்ம ராசா இசை கொடுத்திருப்பார்.
எப்படி அய்யா இப்படி இசை அமைத்தீர்கள் என்றுதான் வியக்கத்தோன்றுகிறது எனக்கு.

அவ்வப்போது இடையிடையே வரும் "குக்கூ குக்கூ..."என்று குயிலின் ஓசையினைப் போல வரும் அந்தப் புல்லாங்குழலின் இசை உயர் ரகமான ரசனை.
இசையே, இவரைப் பார்த்து "என்னைப் பெத்த ராசா" என்று சொல்லி எத்தனை முறை தன்னைத் தானே சுத்திப் போட்டுச்சோ தெரியவில்லை. ஆகா, ரஜா ராஜாதான்.



அந்தப் பாடலை அவ்வளவு அற்புதமாக உருவாக்கியிருப்பர்கள். அந்த இசையிலேயே அந்தப் பாடலின் உள் அர்த்தம் விளங்கிவிடும் அளவிற்கு பாடலுக்கேற்ற இசையினைக் கோர்த்து இருப்பார் நம் "இசை ராஜா, இசை இன்னிசை இம்சை அரசன் - இளையராஜா". தாளத்திற்குப் பாடலா அல்லது பாடலுக்கு தாளமா என்பதை கண்டே-பிடிக்க முடியாத அளவிற்கு அவ்வளவு அற்புதமான ஒரு கலவையாக இருக்கும் அந்தப் பாடல்.

நம்ம ராசா சொன்ன மாதிரி "இந்த இசையென்று ஒன்று இல்லாமல் போயிருந்தால் மனித குலம் என்னவாகியிருக்கும்?" என்ற கேள்விதான் என்னுள் எழுகிறது. இந்தப் பாடலின் ஆரம்பித்தில், முதல் வரிக்கும் அடுத்த வரிக்கும் சிறிது இடைவெளி இருக்கும், இசையிலும்தான். ஆனால், இந்த இடைவெளியினைக்கூட ஒரு இசையாக மாற்றிய பெருமை இவரைத்தான் சேரும். அவர் பாடப் பாட அப்படியே அந்தப் பாடலில் இலயித்துபோய் விடுவேன்.

அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த கமல் அவர்களும் ராஜாவினை ஏகமாகப் புகழ்ந்தார் "அவர் ஒரு இசை ராட்சசன்" என்று.


" இது மெளனமான நேரம்... இள மனதில் என்ன பாரம் " இந்தப் பாடலின் வரிகள்தான் தற்போது என் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

Monday, December 24, 2012

கிரிக்கெட்டிலிருந்து கிரிக்கெட் விடைபெற்றது...

ODI கிரிக்கெட் உலகின் கருப்பு தினம்… Dec 23rd 2012




"பள்ளியால் உனக்கு பெருமை என்பதை விட, உன்னால் பள்ளி பெருமைப்படும்படி வரவேண்டும்" என்பார்கள். அதுபோல,

"கிரிக்கெட்டால் சச்சினுக்குப் பெருமை என்பதைவிட, சச்சினால் கிர்க்கெட் பெருமைப்பட்டுகொள்கிறது" என்றுதான் சொல்லவேண்டும்.

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் கிர்க்கெட்டில் கோலோச்சிய சச்சின், திடுதிப்பென ஓய்வு அறிவித்து இருப்பதை என் போன்ற தீவிர ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகத்தான் உள்ளது. பாகிஸ்தானுடனான போட்டியுடனாவது ஓய்வு பெற்று இருக்கலாம். "கிர்க்கெட் ஒரு மதம் எனில், அதில் சச்சின் எமது கடவுள்" என்பதால், அவரைக் கடைசியாக அவரது இடத்தில் (மைதானத்தில்) தரிசிக்கும் ஒரு பாக்கியம் கிடைத்திருக்கும். இன்றுவரை, இவர் ஆடும்வரை மட்டுமே போட்டியினைப் பார்க்கும் பலகோடி ரசிகர்களில் நானும் ஒருவன்,

அது என்னவோ தெரியவில்லை, இவர் அதிகம் அடித்தாலும் சரி, குறைவாக அடித்தாலும் சரி, அது "Highlights" என்றால் கூட அவர் அவுட் ஆகும்வரைதான் பார்ப்பேன்.
என்னைப் பொறுத்தவரை, கிரிக்கெட் என்னும் விளையாட்டு நமது நாட்டில் இவ்வளவு தூரம் பிரபலமானதற்கு ஒரே ஒருவர்தான் காரணம், அது "சச்சின்".


இவரைப் பார்த்த பிறகுதான் பலரும் "ஓ, இதுதான் கிரிக்கெட்டா?" என்றார்கள் தற்போது அவரே ஓய்வு பெற்றுவிட்டார்.இன்னும் என்ன ODI கிரிக்கெட்டில் இரிக்கெட்டில் இருக்கப் போகிறது? கிரிக்கெட்டே "Retire" ஆகி விட்டது. ஒரு நாள் போட்டியென்றால் இனிமேல் பார்க்கத் தேவையில்லை, நம்ம வேலையைப் பார்க்கலாம்.

சச்சினைப் பற்றி எனக்குப் பிடித்த சில வரிகள்...

"
We have to split the Cricket period into two

Before Sachin (BS)
After Sachin (AS)
"
"
There are two kind of batsmen in the world.One is Sachin another one is 'Rest of the others'
"


சச்சினைப் பார்த்த பிறகுதான் எனக்கு கிரிக்கெட் மீதே ஒரு விருப்பு வந்தது. கிரிக்கெட்டைப் பார்த்தபிறகு சச்சினைப் பார்த்தேனா, அல்லது சச்சினைப் பார்த்த பிறகு கிரிக்கெட்டைப் பார்த்தேனா என்றால் எனது பதில். "சச்சினைத்தான் அந்தக் கிரிக்கெட்டாகவேப் பார்த்தேன்" என்பதுதான் எனது பதில்.


சச்சினைப் பத்தி சொல்லும்போது அவரது முதல் "Brand"-ஐப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். முதன் முதலில் அவரது Brand "MRF". இப்படி ஒரு கம்பெனி இருப்பதே இவரை வைத்துத்தான் தெரிந்து கொண்டேன்.


பனை மட்டையில் செய்த பேட்டானாலும்,
பரீட்சை எழுதும் அட்டையானாலும்,
தாமே செய்த பேட்டானாலும்,
அதில் "MRF" என்று எழுதிவைத்துக் கொண்டு விளையாடியவர்களில் நானும் ஒருவன்.

கிர்க்கெட் விளையாடும்போது, பந்து வாங்கச் செல்லும்போது, அந்தக் கடையில் இந்த "Brand" பெயர் இருந்தால் போதும், அங்கு கண்டிப்பாக நமக்குத் தேவையான பந்து கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்தது. ஒரு கடையில் விளையாட்டுப் பொருட்கள் கிடைக்கும் என்பதை இந்த "" பெயர் அல்லது சச்சினின் பெயரோ படமோ இருந்தால் தெரிந்து கொள்ளலாம். இப்படி, ஒரு வசீகரத்தை ஏற்படுத்தியவர் நமது சச்சின். உங்களில் பலரைப்போல, கிரிக்கெட் பேட்டுக்காக "Boost" குடிக்க ஆரம்பித்தவர்களில் நானும் ஒருவன். அதாவது சச்சின் கையொப்பமிட்ட பந்தும் பேட்டும் பெறுவதற்காக.

இவர் மூன்று தலைமுறை கண்ட மாபெரும் ஒரு விளையாட்டு வீரர். எனது தாத்தாவுக்கும், எனது தந்தைக்கும், எனக்கும் நன்கு அறியப்பட்ட ஒருவர் என்றால் அது சச்சின். எனது தாத்தாவும் எனது தந்தையும் அடிக்கடி போட்டிகளைப் பார்காவிட்டாலும் நான் போட்டியினைப் பார்த்துக் கொண்டிருந்தால் கேட்கும் ஒரு கேள்வி "சச்சின் எவ்வளவு?" என்பதுதான். அவருக்குத் தெரியும் சச்சின் ஆட்டமிழந்துவிட்டால் நான் அந்தப் போட்டியினைப் பார்க்கமாட்டேன் என்று. இப்படி அனைவரையும் தனது ஆட்டத்திறனால் வசீகரித்த பெருமை இவரையே சேரும்.

முன்பெல்லாம் எல்லாப் போட்டிகைளையும் "Cable" இல்லாததால் "TV"-இல் பார்க்க இயலாது. அப்படிப்பட்ட நேரங்களில் இரவு, மணிக்கொருமுறை வரும் 5 நிமிட செய்தியிக்காக விழித்திருந்து பார்பபதுண்டு. உண்மையினைச் சொல்லவேண்டுமென்றால் இந்தியா எவ்வளவு? என்பதைப் பார்ப்பதில்லை, சச்சின் ஆடிக்கொண்டிருக்கிறாரா? என்றுதான் பார்ப்பதுண்டு,

If Sachin plays well - India sleeps well

"Straight Down the Ground" என்பது இவருக்குப் பிறகுதான் உயிர்பெற்று இருக்கும். இவரைப்பார்த்துதான் பெரும்பாலானோர் கற்றுக் கொண்டிருப்பார்கள், அப்படி ஒரு வசீகரம் இருக்கும் அவரது ஆட்டத்தில்.


ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கையில் மின் தடைபட்டு மீண்டும் மின்சாரம் வந்துவிட்டால், நான் செய்யும் ஒரே வேலை, "கடவுளே, சச்சின் அவுட் ஆகியிருக்கக் கூடாது" என்பதுதான், முதன் முதலில் நான் பார்ப்பது "Score Board". அதில் எதுவும் விக்கெட் வித்தியாசம் இல்லமிலிருப்பதைப் பார்த்தால்தான் நிம்மதி. இல்லையென்றால் இதயமே நின்று விடும். அதைப் பார்க்கும்வ்ரை இதயம் துடிக்கும் துடிப்பே தனிதான். அப்படி எதாவது வித்தியாசம் இருந்தால் அடுத்ததாக "MRF" பேட் களத்தில் இருக்கிறதா என்றுதான் பார்ப்பேன்.

இவர் ஆடினாலும்,ஆடா விட்டாலும் இவர்மீது விமர்சனம் மட்டும் குறைவதே இல்லை. இப்போது கிரிக்கெட் ரசிகர்களைவிட இவர்மீது விமர்சனம் செய்த விமர்சகர்களின் நிலைமைதான் இன்னும் மோசமாகப் போகிறது. இவர் இருக்கும்வரை இவரை விமர்சித்து விளம்பரம் தேடிக்கொண்டவர்கள் தற்போது என்ன செய்வார்களோ? இவர் ஓய்வு அறிவித்தது அவருக்கு மட்டுமா அல்லது கிரிக்கெட் விமர்சகர்களுக்குமா? என்பது போகப் போகத்தான் தெரியும்.

எங்களை இத்தனை ஆண்டுகள் உமது ஆட்டத் திறத்தால் மகிழ்வித்த சச்சின் - உமக்கு மிக்கதொரு நன்றி...

அடுத்த டெஸ்ட் போட்டிக்காக உன் வரவை எதிர்னோக்கி காத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவன் - அன்பன் வினோத்

Tuesday, December 18, 2012

ஏங்கிக் கிடைக்கும் அன்றொரு நாளில்...


காதுகுத்து, சடங்கு,
கல்யாணம்,
கருமாதியென
ஏதாவதொன்று வராதா? என்று
'ஏங்கிக் கிடைக்கும் அன்றொரு நாளில்'
அம்மாவிடம் 50 பைசா வாங்கிக் கொண்டு
கடலை பருப்பும்,
பட்டாணியும் வாங்கி வைத்தும் தின்னாமல்;
'நான்கு படத்தில் முதல்படமெது' என்று கேட்கும்போது
எதிர்பார்க்கும் படமென்றால்,
அந்த இரவில் கூட,
அமாவாசை இரவென்றால்கூட,
முகம் பலிச்சிட்டுவிடும்;


மழைவேண்டா யாகம்செய்து,
புழுதி பறக்க மண் நிரப்பி,
எஞ்சோட்டுப் பசங்களுடன் கூடி அமர்ந்து,
அந்தப் பட்டாணியையும் கடலையையும்
கைகளில் தேய்த்து வைத்து,
நம்ம ராசாவின் இசையில் படம் ஆரம்பிக்கையில்,
கைகளில் இருந்து பருப்பில்லாமல்
ஊதித் தள்ளி மகிழ்ந்தபோது கிடைத்த சுகம் - தற்போது இல்லை;

முதல் படத்திற்கு பட்டாணியும்,
இரண்டாவது படத்திற்கு கடலையுமென
பிரித்து பிரித்து உண்டதை எண்ணும்போது
இவையெல்லாம் எனக்காகவா அல்லது
படத்திற்காகவா என்ற கேள்விக்கு இன்னும் பதில் தெளியவில்லை...


ஏங்கிக் கிடைத்த அந் நாளை எண்ணி
ஏங்கிக் கிடக்கிறேன்...!

Friday, December 14, 2012

இலக்கணம்னா என்ன?

தமிழுக்காக ஒரு சின்ன மொக்கை…






பெரும்புள்ளி, முக்கியப் புள்ளி, சிறுபுள்ளி, அந்தப் புள்ளி, இந்தப் புள்ளின்னு நம்ம ஊர்ல புள்ளிக்குன்னே தனி அகராதி போடலாம் போல. அந்த அளவுக்கு எண்ணிலடங்கா புள்ளிகள் உண்டு. “எண்ணில் மட்டுமா அடங்கல, அவங்க, யாருக்குமேதான் அடங்கமாட்றாங்க” – அப்படின்னு நீங்க முனு முனுக்கிறது கேக்குத்து. சரி எப்படி இப்படி நம்மாளுங்க புள்ளிய வச்சு விளையாடுறாங்கன்னு கொஞ்சம் உக்கார்ந்து யோசிச்சுப் பார்த்தா “கண நேரத்தில் உதயமானது இந்த விளக்க உரை”


இந்தப் புள்ளியை பத்தி யோசிக்கும்போது எனக்கு தமிழில் ஒரு அணியின் ஞாபகம்தான் வந்தது, அது “சொல் பின்வருநிலையணி”. ஒரே சொல் திரும்ப திரும்ப வந்து வேறு பொருள் தருவது – சொல் பின்வருநிலையணி.


இந்த புள்ளி இருக்கே, இந்தப் புள்ளி, இடத்துக்கு தகுந்தமாதிரி, தன்னோட அர்த்தத்தையும் மாத்திக்குது, நம்ப முடியலையா?


ஒரு வாக்கியத்தின் கடைசியாக ஒரு புள்ளி வைத்தால் அதற்கு முற்றுப்புள்ளியென்று பெயராம். (தனித்து நின்றால் – நிறைவாகிவிட்டதாம்)


ஆனா நாமதான், கவிதை(னு) எழுதும்போது கண்ட இடத்துல புள்ளி வைக்கிறோம், தொடர் புள்ளியும் வைக்கிறோம். அப்போ, அதுக்குப் பெயர்?

கவிதையில் தொடர்புள்ளி வைத்தால் அது அழகுக்காம்; அதுவே ஒரு சொற்றொடரில் தொடர்புள்ளி வைத்தால் அது அழுக்காக்குவதற்காம். பொதுவாகவே தொடர புள்ளியென்றால் அதைப் படிப்பவரின் மன நிலையைப் பொறுத்து பலவாறாகப் பொருள்படுத்தலாம்.


அப்படின்னா, நம்மாளுங்க பேசுறதே இலக்கணமாகதான் பேசுறாங்களா?

ஒரு படத்தில் வடிவேலு அவர்கள்


“காசெல்லாம் தர முடியாது. அப்படிக் கேட்ட… உன்ன அடிச்சுக் கொ..லை பன்னிடு…வேன் ஆமா”

“என்னது? என்னிய கொலை பன்னிருவியா?” என்பார் எதிரில் இருக்கும் ஒருவர்.

உடனே அவர் “ஆமா… உன்னக் கண்ட… துண்டமா, வெட்டிப்… புடுவேன் ஆமா” என்பார் சற்றே பய்ந்து கொண்டு [அவர்கள் இருவரையும் ஒருவர் தனது “Mobile”-இல் படம் பிடித்துக் கொண்டிருப்பார். இந்த உரையாடலில் பல தொடர் புள்ளிகள் இருக்கும்; ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான அர்த்தங்கள் இருக்கும்.

இதிலும் இலக்கணம் இருக்கத்தானே செய்கிறது. ஆக இலக்கணம்கிறது உங்ககிட்டையும் இருக்கு, எங்கிட்டையும் இருக்கு…



ஒருவர்: “இசை என்றால் என்ன? அது எங்கிருந்து வருது?”

வடிவேலு: “இசைன்னா,.. இசை..”

ஒருவர்: “இசைங்கிறது உங்ககிட்ட இருக்கு, அவருகிட்ட இருக்கு…”


இப்போ சொல்லுங்க. இலக்கணம்னா என்ன?

Thursday, December 13, 2012

மழையோடு ஒரு நாள்...

அன்றொரு தினம், நான்கு நாள் விடுமுறைக்கு எனது சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தேன். அன்று காலை முதலே சென்னையில் மழை பெய்து கொண்டிருந்தது. அன்றைக்கு நான் 7.35 மணிக்கு அனந்தபுரியில் டிக்கெட் பதிவு செய்து இருந்தேன். சென்னையில, சும்மா நடந்து போனாலே "Traffic"-ல மாட்டிக்குவோம், இதுல மழை வேறு. என்ன செய்ய? ஆகவே 5 மணிக்கெல்லாம் அலுவலகத்திலிருந்து கிளம்பிவிட்டேன். நான் சரியாக 7 மணியளவில் Station-யை அடைந்து விட்டேன். பிறகு சாப்பிடுவதற்கு இரண்டு தோசை பார்சல் வாங்கி விட்டு, வண்டிக்காக காத்திருக்கிறேன். வண்டியும் வந்தது. வந்து நின்றதும் மழை என்ன நினைச்சதோ தெரியல, கொட்டோ கொட்டுன்னு கொட்டுச்சு. சரியா என்னுடைய "Coach"- திறந்த வெளியில் இருக்கும் வண்ணம் வண்டி நின்றது. அதாவது எனது "Coach" -க்கு மேலே அடைப்பு எதுவும் இல்லாமல் இருந்ததால் நனைந்து கொண்டுதான் ஏற வேண்டும். நான் நிற்கும் இடத்திலிருந்து 5 பெட்டிகள் தள்ளி எனது "Coach" இருந்தது. அப்படி நனையாமல் ஏற வேண்டுமென்றால் நான் இருக்கும் இடத்திலிருக்கும் "Coach"-இல் ஏறி உள்ளேயே நடந்து சென்று எனது "Coach"-க்குச் செல்ல வேண்டும்.



“இப்படி உள்ளே நடந்து சென்றால் மண மணக்கும் நான்கைந்து இடங்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்குமே, சரி, நேரம் இருக்கிறதே கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போம்” என்று காத்திருந்தேன். "மழை வெறிக்குமா? வெறிக்குமா?" என்று மழையவே வெறித்து வெறித்துப் பார்த்து கொண்டிருந்தேன். மழை எனக்கு குறுக்கேதான் நிற்கிறதென்று பார்த்தால், இப்போது மல்லுக்கும் நின்றதுபோல நிற்கவேயில்லை.


கடைசியில வெறுத்துபோய், “சரி போவோம்” என்று முடிவெடுத்து, உள்ளேயே நடந்து சென்று எனது இடத்தை அடைந்தேன்.  
  நான் அமர்ந்ததும் சற்று நேரத்தில் ஒரு முஷ்லீம் பெரியவர் ஒருவர் தனது குடும்ப சகிதமாக அங்கு வந்தார். அவர்கள் அனைவரும் நன்கு நனைந்திருக்கவே தங்களையும், தங்களது உடைமைகளையும் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாரகள்.

அப்போது அந்தப் பெரியவர், அவருக்கு "Phone" செய்த ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

"என்ன நல்லா இருக்கேயலா?”

“ஆமா, பாத்துக்கிடுங்க, நல்ல மழை, எடையில மாட்டிக்கிட்டோம்.”

“பிறவென்ன?, பெட்டியெல்லாம் தூக்கிட்டு மழையில நனைஞ்சிக்கிட்டே வந்துட்டோம், பாத்திக்கிடுங்க".

என்று அவர் அவர்களுடன் அவர் பேசுவதிலிருந்து திருநெல்வேலியைச் சேர்ந்தவர் என்பது விளங்கியது.


கிட்டத்தட்ட நான்கைந்துபேரிடம் இதே பதிலைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் “எப்படிப் போனீங்கன்னு” கேக்குறாங்களோ இல்லியோ, இவர் மட்டும் இதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருந்தாரு. இப்போ நினைச்சுப் பார்த்தா, அது "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படம் மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ற மாதிரி இருந்துச்சு.

இப்படி இந்த பரபரப்புக்கு நடுவுல, ஒருவர் கைகளில் "Air Pillows" -உடன் அதை விற்றுக் கொண்டு வந்தார்.

அந்தப் பெரியவர் அவரை நிறுத்தி அவரிடம் "என்ன விலை இது?" என்றார்.

அவர் வலது தோள்பட்டையில் இருக்கும் ஒன்றை எடுத்து, "இது 80 ரூபாய்" என்றும், இடது தோள்பட்டையில் இருக்கும் ஒன்றை எடுத்து "இது 100 ரூபாய்" என்றும் சொல்லவே. அதைகேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெரியவரின் மகள் "வாப்பா, இப்போ எதுக்கு இது, வேணாம் விடுங்க" என்றார்.

ஆனால் அந்தப் பெரியவரோ, "இல்லம்ம ஒன்னு வாங்குவோம்" என்று சொல்லிவிட்டு கடைசியாக "பாவம்" என்றார் மெதுவாக. அவர் எதற்காக அப்படிச் சொல்கிறார் என்று விற்பவரை பார்க்கும்போதுதான் தெரிந்தது அவருக்கு நாம் யாரும் தெரிவதில்லை என்று, ஆம் அவர் ஒரு பார்வையற்றவர். அந்தப் பெரியவரைப் பார்க்கவே பெருமையாக இருந்தது.


இப்படி நான் நினைத்துக் கொண்டிருக்க, அந்தப் பார்வையற்றவருக்கு அவர் சொன்ன "பாவம்" என்ற சொல் அவருக்கு கேட்டுவிட்டது போலும். உடனே அவர் "இல்ல சார், அப்படியெல்லாம் நீங்க வாங்க வேண்டாம், வேணும்னா மட்டும் வாங்கிக்கங்க" என்றார். உடனே பெரியவரும் ஒன்றை வாங்கிவிட்டார். அவர் வாங்கும்போது, அந்தப் பார்வையற்றவர், அதில் எப்படி காற்று நிரப்ப வேண்டுமென்பதையும் சொல்லிவிட்டுத்தான் போனார். நான் அப்படியே உருகிப்போய் பார்த்துக் கொண்டிருந்தேன்.


வெளியில் இன்னும் மழை கொட்டிக் கொண்டுதான் இருந்தது. ஆம், நல்லோர் இருக்கும்வரை, மழை பெய்து கொண்டுதான் இருக்குமாம். உண்மைதான் போலும்...

இந்த இருவரில் பெருந்தன்மையாய் இருந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. இருவரும் ஒரே சாதியோ, ஒரே மதமோ, தெரிந்தவரோ இல்லை ஆனால் இது போன்றவர்களால்தான் மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை... வாழ்க மனிதம்...

Wednesday, December 12, 2012

நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க


நேற்று, இரவு உணவிற்காக, வழக்கமாகச் சாப்பிடும் கடைக்குச் சென்றேன். நான் உள்ளே சென்று அமர்ந்தவுடன் எனது எதிரில், இன்னொருவர் கையில் பெரிய பையுடன் வந்தமர்ந்தார். எங்கோ வெளியூரிலிருந்து வந்திருக்கிறார் என்பது நன்றாகவே தெரிந்தது.


சப்ளையரிடம் நான் “ஒரு தோசை” என்று சொல்லிவிட்டேன்.

எனது அருகில் இருப்பவரோ, "புரோட்டா இருக்கா?" என்றார்.

சப்ளையரும் “இருக்கு, எத்தினி (எத்தனை)?” என்று சொல்ல,

அடுத்ததாக "எவ்வளவு?" என்றார் அவர்.

சப்ளையரும் "20 ரூபாய்" என்றார்.

மீண்டும் அவர் "ஒரு செட்டா அல்லது ஒன்னு 20 ரூபாயா?" என்றார்.

சப்ளையரும் சற்று கடுப்பாகி "ஒன்னு 10 ரூபாய், ரெண்டு 20 ரூபாய், உங்களுக்கு எத்தனை வேணும்?" என்றார் சற்றே காட்டமாக.

மீண்டும் அவர் "குருமாவுக்கு தனியா காசு இல்லியே?" என்றார்.

அவ்வளவுதான் சப்ளையர் ரொம்பவே கடுப்பாகிப் போனார் "இல்ல சார், குருமாவுக்கு எல்லாம் காசு இல்லை, உங்களுக்கு எத்தனை புரோட்டா வேணும்?" என்று கத்தவே அவரோ "மூன்று புரோட்டா" என்று சொல்லிவிட்டு, யாரேனும் தன்னைக் கவனிக்கிறார்களா என்று நோட்டமிட்டார்.


ஒருவர்கூட, அவரைத்தவிர வேறு யாரையும் கவனிக்கவில்லை என்பதை அறிந்தபிறகு, அருகில் இருந்த என்னிடம் "இல்லீங்க, நேத்து இப்படித்தான், Egmore-ல ஒரு கடையில சாப்பிட்டப்ப, குருமாவுக்கு தனியா காசுன்னு சொல்லிட்டாங்க அதான்" என்றார் சற்றே வழிந்து கொண்டு. அவர் அப்படிச் சொன்னதும் எனக்கு நான் பட்ட அனுபவம் நினைவில் வந்து சென்றது.


 

பெரும்பாலும் இரண்டு மாதத்திற்கொருமுறை எனது சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். பெரும்பாலும் "Train"-இல் செல்வேன்,அப்படிக் கிடைக்காத பட்சத்தில் அல்லது அவசரமாக கிளம்ப வேண்டிய சூழலில் பேருந்தைத் தேர்வு செய்வது வழக்கம். அன்றும் அப்படித்தான், எனது நண்பனின் அண்ணன் திருமணத்திற்காக மதுரை வரை செல்ல வேண்டியிருந்தது. சென்னையில் இருந்து நானும் எனது மற்றொரு நண்பனும் பேருந்தில் சென்றோம். நாங்கள் சென்றது அரசுப் பேருந்து. நாங்கள் ஏறியது சுமாராக 8.40 மணி இருக்கும், வழக்கம் போல கோயம்பேட்டில் எடுத்து, தாம்பரம் வருவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது. தாம்பரத்திற்கு வண்டி வந்து சேருவதற்கே மணி 10 ஆகிவிட்டது. தாம்பரம் வந்ததும், கடலை, காரப்பொறி, பலாப்பழம் எனப் பலவும் விற்றுக் கொண்டிருந்தார்கள். பசி வேறு, என்ன செய்ய? நான் என் நண்பனிடம் “ஏதாவது வாங்கலாமா?” என்று கேட்டேன் அதற்கு அவனோ, இன்னும் 1 மணி நேரம்தான், நாம் சாப்பிட்டே விடலாம் என்று சொல்லவே நானும் தலையாட்டித் தொலைத்துவிட்டேன்.

வண்டியும் போகுது.... போகுது.... போகுது.... போய்க்கிட்டே இருக்கு. மனுசனுக்கு கொலைப் பசியாகிவிட்டது.

நானும் பசிக்காத மாதிரியே எவ்வளவு நேரம்தான் இருக்கிறது. அவனிடம் சொல்லியே விட்டேன், “முதல்ல அடுத்து எங்க நிறுத்தினாலும் சரி, எதாவது வாங்கிச் சாப்பிடனும்” என்று சொன்னதுதான் தாமதம், அவனும் “ஆமாண்டா, எனக்கும் வயிறு - காரு காருன்னு கத்துது, அதனால கண்டிப்பா சாப்பிடனும்னா” சொன்னான். "அடப் பாவி, என்ன மாதிரியே நினைச்சிக்கிட்டு இருக்கியேடான்னு” உள்ளுக்குள்ளேயே சிரிச்சிக்கிட்டேன். ஆனா நாங்க நினைச்ச மாதிரி, வண்டி எங்கையும் நிற்கவே இல்ல. நேராக விக்கிரவாண்டியில் வந்து நின்றது. "வண்டி 10 நிமிசம் நிக்கும், சாப்பிடுறவங்க சாப்பிடுங்க"ன்னு கேட்டதும்

"அப்பாடா, ஒரு வழியா ஒரு முடிவுக்கு வந்து நிறுத்திட்டானுக, நிம்மதியா சாப்பிட வேண்டியதுதான்" என்றெண்ணிக் கொண்டு நேராக கடைக்குச் சென்றோம். சரி புரோட்டா சாப்பிடலாமே என்று ஆளுக்கொரு புரோட்டா செட் சொல்லிவிட்டு காத்திருந்தோம். புரோட்டாவும் வந்தது, அதனுடன், சால்னாவும் தனியாக ஒரு கின்னத்தில் வந்தது. "பரவா இல்லையே, தேவைக்கதிகமாகத்தான் சால்னாவும் இருக்கும்போல" என்றெண்ணிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன். வழக்கம்போலவே முதலில் புரோட்டாவைப் பிய்த்துப் போட்டு அதன்மீது சால்னாவை ஊற்றி ஊறவைக்கலாம் என்றெண்ணி, புரோட்டாவைப் பிய்த்துப் போட முயற்சித்தேன்.


சென்னையை விட்டு இன்னும் தூரமாகப் போகவில்லைங்கிறதை அந்த புரோட்டாவில இருந்து தெரிஞ்சிக்கிட்டேன். பிறகு என்ன, அந்த புரோட்டா கூட சண்டைபோட்டுத்தான் சாப்பிடனும்னு முடிவி பண்ணி, கடினப்பட்டுப் பிய்த்துச் சாப்பிட்டேன். "அடக் கடவுளே, இவனுக, புரோட்டாவ மாவுல செஞ்சானுகளா, இல்லை ரப்பர்ல செஞ்சானுகளா" என எனக்குள்ளேயே நொந்து கொண்டு சாப்பிடாமல் இலையினை மூடிவிட்டு எழுந்து விட்டேன். பொதுவாக, சாப்பாட்டை வீணாக்க விரும்பாத எனது நண்பன் சாப்பிட்டு கொண்டிருந்தான். நான் கை கழுவிவிட்டு திரும்பி வருகிறேன், அவனும் கை - கழு வந்து விட்டான். "அடப் பாவி, இதை எப்படிடா இவ்வளவு வேகமா சாப்பிட்ட?" எனக்குள் நொந்து கொண்டு பில்லுக்காக மீண்டும் சாப்பிட்ட இடத்துக்கு வந்து பாத்தா, அவனும் சாப்பிடாம எழுந்திட்டான்னு தெரிஞ்சது. சப்ளையர் வந்து பில் கொடுத்தா அது 120 ரூபாய்னு இருக்கு.

“நான் அப்படியே சாக் ஆயிட்டேன்".

“என்னங்க, ஒரு புரோட்டா எவ்வளவு?” என்று கேட்க அவரோ, "புரோட்டா செட் 30 ரூபாய், குருமா (சால்னா) 30 ரூபாய் என்றார்".

சரி தொலையுதுன்னு 150 ரூபாயினை அவரிடம் கொடுத்துவிட்டு மீதி சில்லறைக்காக காத்திருந்தோம். வந்தவர் வழக்கமாக பில் கொடுக்கும் சிறிய தட்டில், சீரகம் நிரப்பி மீதி சில்லறையினைக் கொண்டு வந்தார். அதில் இரண்டு 10 ரூபாய் தள்கள் மட்டும்தான் இருந்தது, சரியென்று அதை எடுத்துக் கொண்டு, மீதி எங்கே என்று அவரிடம் கேட்கலாம் என்று வாயெடுக்கும் முன்னே அந்த சப்ளையர் "Thank You Sir" என்றவாறு, என் கையிலிருந்து அந்தத் தட்டை பிடித்து இழுக்க முயற்சித்தார். அப்புறம்தான் தெரிந்தது, அந்த சீரகத்திற்கு உள்ளே இரண்டு 5 ரூபாய் "Coin"-களை மறைத்து வைத்திருக்கிறார் என்று.


"அடப்பாவி, டிக்கெட்டு 5 ரூபாய், மல்லிகைப்பூ 50 ரூபாயா?" என்ற வடிவேலு காமெடிதான் ஞாபகத்திற்கு வந்தது.

“நாங்க 5000 ரூபாய்க்கு சாப்பிட்டாவே 10 ரூபாய்தான் கொடுப்போம், இப்ப நாங்க சாப்பிடவே இல்ல அதுக்கு ஒனக்கு காசா" என்று எனக்குள்ளேயே நொந்து கொண்டு, அவரைக் கடிந்து கொண்டு அந்த மீதிச் சில்லறையும் எடுத்துக் கொண்டு வந்தோம். அன்றிலிருந்து இன்றுவரை பயணத்தின்போது, வெளியில் எங்கு சாப்ப்பிட்டாலும் குறிப்பாக இது போன்ற கடைகளில், முதலில் விலையைக் கேட்ட பிறகுதான் சாப்பிடுகிறேன்.

ஆகவே “நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க”...

Tuesday, December 11, 2012

விஷ்வரூப(ம்) – வியூகம்

கமலின் மிகப் பெரிய ரசிகன் என்பதால் வக்காளத்து வாங்குகிறான் என்று நினைத்தாலோ அல்லது இதை பைத்தியக்காரத்தனமாக ஆதரிக்கிறான் என்று நினைத்தாலோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத, சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல நினைக்கும் “ஒரு கலைஞனின் ரசிகனின்” பதிவு இது.





முன்பெல்லாம் படம் வெளியான பின்புதான் அதன் பாடல்களும் வெளியாகும், ஏனென்றால், அப்படி பாடல்கள் முதலில் வெளிவந்துவிட்டால் படத்திற்கு மவுசு இல்லாமல் போய்விடும் என்று ஒரு காலம் இருந்தது. ஆனால் ஒரு காலகட்டத்தில் இந்த நிலை மாறிப்போனது. தற்போதோ படம் வெளிவருகிறதோ இல்லையோ பாடல்கள் வெளிவந்துவிடுகின்றன, சொல்லப்போனால் வரப்போகும் படங்களுக்கு ஒரு முன்னோட்டமாகவே இந்தப் பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன; இதே போன்ற முயற்சியினைத்தான் கமலும் முயற்சிக்கிறார்.


ஏற்கனவே திரையரங்குகள் பலவும் திருமண மண்டபங்களாக மாறி வரும் இந்த நிலையில் இது போன்ற விசப் பரீட்சை தேவைதானா? என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது. சரி, அப்படியே இது விசப் பரீட்சைதான் என்று வைத்துக் கொண்டாலும், வேறு என்ன நல்ல பரீட்சைகளை இந்தச் சினிமாத் துறையினர் பரீட்சித்துப் பார்த்து இருக்கிறார்கள்? இவர் எதைச் செய்தாலும் – ஏதோ செய்கிறார் என்றுதான் பலரும் புலம்புவார்கள். பிறகு 5 அல்லது ஆறு வருடங்களுக்குப் பிறகு யோசித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.

பயந்து பயந்து மாய்ந்து போவதைவிட
பாய்ந்து பாய்ந்து ஓய்ந்து போவது மேலென்றெண்ணுபவன் நான்

“திரைக்கு முன்னால் பார்ப்பவர்களுக்கு, முன்னாள் பார்ப்பதற்காக” இந்த ஏற்பாடு என்று சொல்லப்பட்டலும், இதில் சில்வற்றை சற்றே நாம் உற்று நோக்க வேண்டும். அதாவது இவர் சொல்வது போல, இப்படி இந்தத் திரைப்படத்தை திரைக்கு வருவதற்கு முன்னால் DTH-மூலமாக வீட்டிற்கே எடுத்துச் செல்வதால், தியேட்டர்காரர்கள் பாதிக்கப்படுவர்கள் என்றெண்ணுவது தவறு; ஏனென்றால், அப்படி இந்தக் காட்சியினைப் பார்க்க வேண்டுமென்றால், அதற்கு ரூபாய் 1000 செல்வழிக்க வேண்டும், மேலும், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட தினத்திற்கு மட்டுமே இது பொருந்தும், எனவே இவர் சொல்வதுபோல, திரையரங்கை ஒதுக்கிகொண்டிருப்போர்களைத் திரையரங்கை நோக்கி இழுக்கும் ஒரு முயற்சியாகத்தான் இருக்கும்.

டீவியில் திரைட்டால் மட்டும் திருட்டு VCD-யினை ஒழித்து விட முடியுமா? ஏன் நல்ல வசதியாக 42-INCH TV-யினைப் படம் பிடித்து அதிலும் திருட்டு CD தயாரிக்கமாட்டார்களா? என்று கேட்டால், என்னைப் பொறுத்தவரை – மாட்டார்கள். காரணம், அப்படிச் செய்தால் அதற்காக அவர்கள் 1000 ரூபாய்க்கு முதலில் கட்டணம் செலுத்த வேண்டுமே, மேலும் திரையரஙகில் காப்பியடிக்கப்படும் கப்பிகளே நன்றாக இல்லாதபோது, சின்னத்திரையினைக் காப்பியடித்தால்? எனவே இதை முயற்சிப்பவர்களுக்கு தோழ்வியே மிஞ்சும். இப்படிச் செய்வதால் மட்டும் திருட்டு CD-யினை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று சொல்லவில்லை, ஆனால் இப்படிச் செய்வதினால் அதனைக் குறைக்க முடியும் என்றெண்ணுகிறேன்.

ஒரு தயாரிப்பாளரின் பார்வையில் இதைப் பார்ப்போமேயானால்


திரைக்கு -ஒரு விலை,
‘திரைக்கு
முன்னால் பார்ப்பவர்களுக்கு,
முன்னாள் பார்ப்பதற்கு’ ஒருவிலை,
திரைக்கு வந்தபின் வீட்டுத்
திரைகளில்
திரையிட ஒரு விலை

என இதன் மூலமாக வியாபாரத் தளம் பெருக்கப்பட்டுளாது. ஒரு தாயாரிப்பாளராக இந்த முயற்சியினை அணுகினால் நிச்சயமாக அனைவரும் வரவேற்கும் ஒரு முயற்சியாகத்தான் இது இருக்கும்.


சற்றே யோசித்துப் பார்த்தால், இவர் சொல்வது போல, இது ஒருவகையில் – நமது சினிமாவின் வியாபாரக் களங்களில் ஒன்றாகத்தான் மாறிப்போகும் என்பது என் எண்ணம்.

எதையுமே செய்யாமல் இருந்து முயற்சிப்பதை விட – எதாவது முயற்சித்து முன்னேற நினைப்பது எப்போதும் பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.


--- கலைஞனின் ரசிகன் - அன்பன் வினோத்



Monday, December 10, 2012

முத்தம்


கூடிப் பிரிகையில்

எழும்
ஏக்கத்தின் சத்தம் – முத்தம்!!!



தெரிந்தவர்கள் கூடுமிடத்தில்…




தெரிந்தவர்கள்

கூடுமிடத்தில்
குதூகலம்தான்;
உண்மைதனை
உணர்ந்தேன் உன்
இதழ்கள் என்
இதழ்களில் கூடியபோது...

Friday, December 7, 2012

வாங்களேன் ஒரு டீ சாப்பிடலாம்…

எதாவது ஒன்றைப் பற்றி இன்றைக்கு எழுத வேண்டுமே என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். சரி, ஒரு “டீ” சாப்பிட்டுவிட்டு பிறகு யோசிக்கலாமே என்று “டீ”-க் கடைக்குச் சென்றேன். நம்ம ஊரு “டீ’-கடையைப் பத்திச் சொல்லவா வேணும். சும்மா இருந்தாலும் “டீ”, வேலைக்கு-இடையிலும் “டீ”; சந்தோசமா இருந்தாலும் டீ, சோகமா இருந்தாலும் டீ; இப்படி டீ நமது வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிப்போனது. நம்ம ஊர்ல என்னதான் மழை பெய்தாலும் சரி, வெயிலடிச்சாலும் சரி, இந்த டீ-ய மட்டும் விடவே மாட்டாங்க. அப்படியென்னப்பா டீ-க்கும் நமக்கும் அவ்வளவு சொந்தம்?பந்தம்? நம்ம ஆளுங்களுக்கு சொர்க்கம் எதுவென்று கேட்டால் பலரும் கையை காட்டுவது நம்ம “டீ”-க்கடையாகத்தான் இருக்கும். அந்தளவிற்கு நம்ம டீ-க்கடை நம்மளைக் கவர்ந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.



பல கடைகளில் “Paper” வைத்து இருப்பார்கள். இந்தப் பேப்பர் படிப்பதற்குதான் எவ்வளவு போட்டி? பெரும்பாலும் “News Paper” என்பது பல “Piece Paper” ஆகத்தான் இருக்கும். முதலில் ஒருவரிடம் இருக்கும் முழு பேப்பரானது, ஆட்கள் “கூடகூட”-ப் பிரிந்துவிடும். நாம் படிக்கிறோமோ இல்லையோ சும்மாவாவது எதையாவது படிக்க வேண்டும; நமக்கு எதுவும் கிடைக்காவிட்டால், ஒருவர் படித்துக் கொண்டு இருந்தால் அவர் படித்து முடிக்கும்வரை-அவரையே முறைத்துப் பார்த்துக்கொண்டும் இருப்போம்.


ஒருவர் “டீ” சாப்பிடும்போது, அவருக்குத் தெரிந்தவர் அங்கு வந்துவிட்டால், “வாண்ணே/வாடா டீ சாப்புடு” என்று சொல்லிவிட்டு, அவர்களது அளவளாவளைத் தொடர்வார்கள். சிலருக்கு தினமும் ஒன்றுகூடும் இடமே ஒரு “டீ”க்கடையாகத்தான் இருக்கும்.

டீ-யில் எவ்வளவு ரகங்கள் உண்டென்பதை அந்த டீ-யக் கண்டுபிடிச்சவனுக்கே தெரியாது. அந்த அளவுக்கு நம்மாளுங்க ஒரே டீ-யை பல ரகங்களாக்கிச் சாப்பிடுவார்கள்.

அதாவது சிலருக்கு “Strong Tea”, சிலருக்கு “Light Tea”, சிலருக்கு”சர்க்கரை இல்லாத டீ”, சிலருக்கு “சர்க்கரை அதிகமா டீ”, சிலருக்கு “பாலில்லாத கடும் டீ”, சிலருக்கு “சர்கரை கம்மியா டீ”, சிலருக்கு “நல்ல சூடான டீ”, சிலருக்கு ” நல்லா ஆத்திய டீ” என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். சரி, இந்த டீக்குத்தான் இப்படி பல முகங்கள் என்றால், இந்த டீ-யைச் சாப்பிடும் நம்மவர்களுக்கும் பல முகங்கள் உண்டு. அதை அவர்கள் அந்த டீ-யினைச் சாப்பிடும் தோரணையினை வைத்தே நம்மவர்களின் மன நிலையை அறிந்து கொள்ளலாம்.

டீ-யை வாங்கி மெதுவாக ரசித்துக் குடித்துவிட்டு சென்றால் அவர் நல்ல மன நிலையில் இருக்கிறார் என்று அர்த்தம்; அதே டீ-யை வாங்கி கையில் வைத்துக் கொண்டு, ஒரு சிப் இழுத்துவிட்டு எதையோ வெரிக்க வெரிக்கப் பார்த்துக் கொண்டே குடித்தால் அவர் ஏதோ கடுப்பில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். ஒருவர் மற்றொருவரி டீ சாப்பிட அழைக்கும்போதுகூட அவரது மன நிலையை புரிந்து கொள்ளலாம். “டேய் வாடா, போய் டீ சாப்பிட்டு வரலாம்” என்றால் சரி, அவர் நல்ல நிலையில் இருக்கிறார் என்றுதான் பொருள். மாறாக “டேய், வா போயி, டீ அடிச்சிட்டு வந்து வேலையைப் பார்க்கலாம் என்றால்” எதோ கடுப்பில் இருக்கிறார் என்று அர்த்தம்.

அடுத்ததாக டீ-டம்ப்ளர்



நம்மூர்களில் டீக்கடைகளில் பயன்படுத்தும் “டம்ளர்”-கூட ஒவ்வொரு கடைக்கும் மாறும். பல கடைகளில் கோடு போட்ட கண்ணாடி டம்ப்ளரும், சில கடைகளில் குறிப்பாக, முக்கியமான பேருந்து நிறுத்தங்களில் இருக்கும் கடைகளில் “கோடில்லாத” சற்று கணமான கண்ணாடி டம்ப்ளரும், சில இடங்களில் குறிப்பாக கிராமங்கள் மற்றும் சிற்றூராட்சிகளில் சில்வர் டம்ப்ளரும் பயன்படுத்துவார்கள். ஆனா ஒன்னு மட்டும் விளங்கவில்லை, ஒரே டீ-யை இப்படி வெவ்வேறு டம்ப்ளரில் குடித்தால் – வெவ்வேறு சுவையாக இருக்கிறது. அதெப்படி?

அடுத்ததாக – டீ Master கை வண்ணம்



ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு Style இருக்கும். சிலர் டீ ஆத்துவதே ஏதொ சாகசம் செய்வதுபோல இருக்கும். சிலர் வலது,இடது கைகளுக்குள் மாற்றி, மாற்றி வைத்து வேக வேகமாக ஆத்துவார், ஆனால் கைகளை மட்டும் பெரிதாக இழுக்கவே மாட்டார். வெகு சிலர் டீ – ஆத்துவதைப் பார்க்கவே கடுப்பாகும் அளவிற்கு ஆத்து ஆத்து என்று ஆத்துவார்கள். சிலர் டீ நுரையின் மீது, இலேசாக டிக்காசன் கலந்து தருவார்கள். டீ நல்லா இருக்குதோ இல்லியோ, பார்ப்பதற்கு ரொம்ப நன்றாக இருக்கும்.

அப்படி என்னதான் இருக்கோ இந்த டீ-யில, ஒன்னும் புரியலியே!

இப்படியே எழுதிக்கிட்டே இருந்தா அந்த டீ-யில இருக்கிற நுரை மாதிரி எழுதுகின்ற எனக்கும், இதைப் படிக்கிற உங்களுக்கும் நுரை தள்ளிடும்… அதனால நான் போயி டீ சாப்பிட்டு வந்து எழுதிறேன்…

நீங்களும் வாங்களேன் ஒரு டீ சாப்பிட்டு வரலாம்…

Thursday, December 6, 2012

நான் – நாங்கள்...?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – அப்படி

ஒன்றுமில்லை,
ஒன்றுபட்டதும்
ஒழித்துவிடுகிறார்கள்;

ஒருமையாகினும், பன்மையாகினும்
ஒரே பெயரில்தான் அழைக்கிறார்கள்;

அழையா விருந்தாளியாயினும்,
அழைத்த விருந்தாளியாயினும்,
அவர்கள்
கலையும்போது
அழைக்கும் (கூடும்),
அழையா விருந்தாளிகள் நாங்கள்…

காட்டிலோ மேட்டிலோ,
வீட்டிலோ ரோட்டிலோ,
பெரும்பாலும் இருக்கும்,
பெரும்பான்மையாளர்கள் நாங்கள்;
பெரும்பான்மை இருந்தும்
சிறுபான்மையினர் நாங்கள்!

எங்களை
ஒதுக்கியே வைத்து
ஓரஙகட்டினாலும்,
எங்களையும் நாடி வரும் சில கூட்டங்கள்…

தனிமைப்படுத்தியே,
கூட்டமாக்குகிறார்கள்;
ஒருமையாக்குவதாலே
பன்மையாகிப்போகிறோம் – இனம்
இனத்தோடு சேருமென்பது
இதுதானா?

சில நேரங்களில்,
எங்களை
எங்கோ வைத்து
எரித்தும் விடுகிறார்கள்…

சில நேரங்களில்
சிலர் செய்யும்
செயல்களையும், எழுதும்
எழுத்துக்களையும்
இப்படித்தான் சொல்வர்கள் – குப்பையென்று!
… நான் – நாங்கள்-குப்பை!?!?!

Wednesday, December 5, 2012

கருவறை



இக் கருவிற்கு,
யார் யாரோ காரணமாகிறார்கள்,
சில நேரங்களில்
எவையோ,
எதுவோ…

சில நேரங்களில்
பார்ப்பவர்கள்-கூட,
சந்தேகின்றனர்- தங்களுக்குள்ளேயே,
நம் சாயல் தெரிகிறதென்றும்,
நம்மை வடிதாற்போல் உள்ளதென்றும்…

பலர்
பலவாறாக காரணமாயினும் – இக்
கருவோ,
கருவறையோ
கலங்கப்பட்டதில்லை…

இது உறவால் வந்த கருவல்ல
கருவோடு உறவுண்டு,
கருவை
உருவாக்கும் உறவு…

பெரும்பாலும்,
பெண்ணால்
ஆண்மையாக்கப்படும் கரு;
பெரும்பாலும்,
பெண்ணாலேயே முதல்
கருவைச் சுமக்கும் இக்கருவறை…

இதுவரை
கலைக்கப்படாத
கருவறையில் வைத்து வெளிப்படும் கரு;
இது கவிஙனின் கரு-அறை…
- கவிஙனின் கற்பனை அறை !!!

Tuesday, December 4, 2012

வீடு திரும்பும்வரை...



இன்னவென்று அறியும் முன்னே

இழுத்துச் செல்லப்பட்டேன்;


எங்கோ
கட்டுண்டுள்ளேன்,
கட்டும் கயிறு நானளித்தது,
கட்டியது நானல்ல…

எங்கோ இருக்கிறேன்,
ஏன்,
எதற்கு,
எப்படி என்று கேள்விகள்
எழவில்லை…

காணும் காட்சிகள் அனைத்தும்
தெளிவில்லாது இருக்கின்றன,
தெளிவில்லாத பிம்பங்கள்தான் என்று
தெள்ளத்
தெளிவாகத் தெரிகின்றன,
தெரிந்தும் – தெளியவில்லை
தெளிவில்லாத என்
எண்ணங்களும், தெளிவில்லாத பிம்பங்களின்
வண்ணங்களும்…

பட்டப் பகலாகட்டும்,
நட்டநடு நிசியாகட்டும்,
பலர் இருக்கிறார்கள்,
இதற்கென்று இல்லாமல் எதற்கோ
இருக்கிறார்கள்,
பலர் இருந்தும்,
கண்ட
காட்சிகள் அனைத்திற்கும்
நான் மட்டுமே சாட்சியாகிறேன்;

முடிவில்லாத ஒன்றாகவே எப்போதும்,
ஆரம்பம் என்று ஒன்று இல்லாதிருப்பதாலா?


ஏன், எதற்கு, எப்படி
என்று
எண்ணத்தோன்றவில்லை – நான் வீடு திரும்பும்வரை,
நான்
கனவு கலைந்து எழும்வரை !?!?!?

Monday, December 3, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...

அதிகமாக "Dialogue" கிடையாது;


திரும்ப திரும்ப படம் நெடுக வந்த " Dialogue" மறுபடி மறுபடியும் வந்தால்? அநேகமாக எல்லா "Frame"- களிலும் நான்கு- பேர் மட்டுமே வந்தால்?.

பாடல்களே கிடையாது.

இரண்டு அறை, ஒரு திருமண மண்டபம் - இதுதான் படத்தின் "Location" ஆக இருந்தால்?

நடிப்பவர்கள் பதற்றத்துடனும், பயந்து கொண்டும், அழுது கொண்டும் இருப்பார்கள் -- ஆனால் படம் பார்க்கும் நாமோ சிரித்துக் கொண்டு இருப்போம்.

… இப்படி ஒரு படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால் நீங்கள் யாராவது போவிர்களா? கண்டிப்பாகப் போக வேண்டும்; அப்படி உங்களைக் கவரும் வகையில் எடுக்கப்பட்டு தற்போது ஓடிக்கொண்டிருக்கும் படம்தான் "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” .




தமிழில் இது போன்ற படங்கள் நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டுமென்பதற்காகவே இந்தப் பதிவு...

சமீபத்தில் திரைக்கு வந்த - "நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்", திரைப்படத்தைப் பற்றி எனது பார்வை...

பாடல்(களே) இல்லாமல் வெளிவந்த வெகு சில படங்களில் இதுவும் ஒன்று. அருமையான படம் - குறிப்பாகத் திரைக்கதை. நானும் படம் முடியும் தருவாயில் - இது ஒரு ஆங்கிலப்படத்தின் தழுவலாகத்தான் (Hang over) இருக்கும் என்றெண்ணினேன், ஆனால் இறுதியாக அவர்கள் இது ஒரு உண்மைச் சம்பவம் என்று விளங்க வைத்தபோது அவர்களைக் கண்டிப்பாகப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

மிக அருமையாக திரைக்கதை எழுதி இருக்கிறார்கள்; பெரும்பாலும் படம் முழுக்க "Close-Up" காட்சிகள். அதிலும் குறிப்பாக நான்கு-பேர்தான் படத்தின் முக்கால் பாகம்வரை காட்சியில் இருக்கிறார்கள். இதில் நடித்திருக்கும் நடிகர்கள்கூட மிக அற்புதமாக, எதார்த்தமாக நடித்து இருக்கிறார்கள். முக்கிய கதாப்பாத்திரங்கள் தவிர - ஒரு சில நிமிடக் காட்சிகளில் வரும், "சலூன் கடைப் பையன், 'பக்சி’-யின் நண்பர், நர்சுகள்" எனப் பலரும் நடிப்பில் தூள் கிளப்பிவிட்டார்கள்". ஆகவே இவர்களையெல்லாம் இப்படிக் கனக் கச்சிதமாக இயக்கிய இயக்குனரைப் பாராட்டியே தீர வேண்டும். பிண்ணனி இசையும் மிகப் பரமாதாமக இருந்தது –

மொத்தத்தில் படம் பார்க்கும்போது நம்மையும் அந்த இடத்திற்கே அழைத்துச் சென்றுவிடுகிறார்கள்... பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய ஒரு படம்… வாழ்த்துக்கள் நண்பர்களே


--அன்பன் வினோத்

Thursday, November 29, 2012

எனக்குள் நானே தொலைகிறேன்…


தொலைந்து போன
நாட்கள் அனைத்தும்
தொலைந்துதான் போயின…
நித்தம் நித்தம் தொலைகின்றன – தொலைந்ததெல்லாம்
நிசப்தமாகத்தான் உள்ளன…

நித்தம் நித்தம் தொலைந்தது
நாட்கள் மட்டுமல்ல
நானும்தான்…

என் முன்னே,
எனக்குள் நானே தொலைகிறேன்…



பழக்கத்தால் வந்த புலக்கம்…

                                                
கைகளில் வெயில்பிடித்து
மகிழ்ந்த காலம்
மறைந்து,
நாளு(லு)ம் இதழில் [நாழிதழ்]
வெயில் பார்த்து
வெறுத்துப் போனது…

நாட்கள்
புலப்படுகிறதே தவிர
பொழுதொன்றும்
புலப்படுவது இல்லை – தற்போது
குளுகுளு அறையில்
குடியமர்த்திக் கொள்வதால்…
ஞாயிறுகளில் மட்டுமே
ஞாயிறோடு
பழக்கத்தில் உள்ளது – எனது
புலக்கம்; – இது
புலக்கத்தில் வந்த பழக்கமல்ல -
பழக்கத்தால் வந்த புலக்கம்…



Wednesday, November 28, 2012

நில்... கவனி... செல்...

பாலில் கலந்த தண்ணீரைக்கூடப் பிரித்து விடலாம், ஆனால் சென்னையிலிருந்து போக்குவரத்து நெரிசலை மட்டும் பிரிக்கவே முடியாது. தினம் தினம் "தீபாவளி" வந்தால் மட்டுமே இது சாத்தியம். அந்த அளவிற்கு இங்கு போக்குவரத்து நெரிசல் மிக மிக அதிகம். இதற்காகப் பலவாறாக சென்னை மாநகராட்சி மெனெக்கெடுகிறது, இருந்தும் ஒரு பயனும் இல்லை. சென்னைக்கு வரத்து அதிகம் என்பதால், இந்த நெருக்கடியும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. பல இடங்களில் தானியங்கி விளக்குகள் வைத்துப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள், சில இடங்களில் போக்குவரத்து காவல்துறையினரே நேரடியாக ஈடுபடுத்தப்படுகிறார்கள்.






எனது பகுதியில் இருக்கும் - "Signal"-க்கு போக்குவரத்துக் காவல் துறையினர்தான் ஈடுபடுத்தப் படுகிறார்கள். நான் சாபிடும் கடைக்கு மிக அருகில்தான் இந்த "Signal" உள்ளது. நான் சாபிட்டு விட்டு "Signal"-கு மிக அருகில் இருக்கும் ஒரு கடையில் "டீ" குடிப்பது வழக்கம். அப்போதெல்லாம் இந்த "Traffic Police"-ஆர், எப்படிஅதைச் செய்கிறார் என்று கவனிப்பது வழக்கம்.அப்படி நான் கவனித்ததால் எனக்குள் ஓடிய எண்ண ஓட்டங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இதோ உங்கள் முன்னால்...

பொதுவாக ஒருவர் மட்டுமே பணியமர்த்தப்படுகிறார் - காலை முதல் மாலை வரை ஓய்வின்றி அவர் அதைச் செய்து கொண்டிருக்கிறார், சில நேரங்களில் இருட்டும்வரைகூட அவரது பணி தொடர்கிறது. அவர்களால் நிம்மதியாக ஒரு "டீ" கூட சாபிட முடிவதில்லை, அப்படி அவர்கள் ஓய்வாக "டீ" அல்லது ஏதாவது நொறுக்குத்தீனி சாப்பிட்டாலும் - ஒருவித பதட்டத்துடன்தான் இருக்கிறார்கள். பெரும்பாலும் இவர்கள் நின்றுகொண்டேதான் வேலை செய்ய வேண்டும்.எனது பகுதியில் இந்தப் பணியில் இருக்கும் ஒருவரிடம் இதைப் பற்றி ஒரு நாள் கேட்டேன். "ஏன் சார், நீங்கள் ஒருவரே காலையில் இருந்து சாயங்காலம்வரை இருக்கிறீர்களே, இடையில் யாரேனும் "Shift"-க்காக வருவார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை - என்னை ஒரு, முறை முறைத்துவிட்டு - "இல்லை" என்று மட்டும் சொன்னார். அதன்பிறகு எனக்கு ஒரே குழப்பம், என்ன கேட்டுவிட்டோம் என்று - நம் மீது கடுப்பாகிறார் என்று யோசித்துக்கொண்டெ நின்று கொண்டிருந்தபோதுதான் எனக்கு ஒன்று விளங்கியது.




இவர் போக்குவரத்தைச் சரி செய்யும்போது, பலர் இவர் கட்டளைக்கு மாறாகத்தான் நடக்கிறார்கள். சிலர் இவர் கண் முன்னேயே இவரைப் பார்த்து - ஒரு நக்கலான சிரிப்பு சிரித்து விட்டு செல்கிறார்கள். இப்படி இவர் காலையில் இருந்து எத்தனை பேரை இதைப் போல் பார்த்து இருப்பாரோ என்பது அவரிடம் வந்து வெறுப்பான பதிலில் இருந்து "மிக அதிகம்" என்பது விளங்கியது. போக்குவரத்துக் காவலரும் ஒரு மனிதர்தான் - அவரது கட்டளைக்கு கட்டுப்பட்டால் [குறிப்பாக “Signal”-இல்] அது அவருக்குப் பேருதவியாக இருக்க்ம், அது நமக்கும் நன்மை பயக்கும் என்பது என் எண்ணம். ஆகவே தயவு செய்து இனிமேல் "(Automatic)Traffic Signal"-ஐ அவமானப்படுத்துவதுபோல அல்லாமல், அங்கு ஒரு மனிதர் [போக்குவரத்துக் காவலர்] இருந்தால் அவரது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்... இதில் நாம் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லையே...

நில்... கவனி... செல்...

Tuesday, November 27, 2012

ஒரு முத்தமிட்டுச் செல்...

வெட்கத்தால் முகம் சிவக்குமாம் -
நம்பவில்லை
நானும் - வெட்கம் தின்று
வளர்ந்திருக்கும்
உன் இதழ்களைக் காணும்வரை...


வெட்கம் தின்று வளர்ந்தவளே - என்
முத்தம் தின்று - உன்
வெட்கங்ககளை என் இதழ்களில் கொடு;


ஈரிதழ் முத்தம் தவிர்த்து - நம்
ஈரிதழ்களால் முத்தமிடலாம்...

'உயிர்'-வரின் 'உ'-க்குரல் மெய்விட்டோடுமாம் - என்
இதழ்வரின் உன் வெட்கம் உன்னை விட்டோடும்...
எவ்வளவுதான் வெளுத்தாலும்
வெளுக்காத சாயம் உன் இதழ் சாயமடி...
வெளுக்க வந்த இதழ்கள் - சாயம் பட்டுத் திரும்பிகின்றன...

இறுதியாக, முத்தமிட்டதைத் துடைத்துவிட -
ஒரு முத்தமிட்டுச் செல்...

Monday, November 26, 2012

நினைவாணிகள் - பாகம் ஒன்பது

நினைவாணிகள் - பாகம் ஒன்பது



                                                         தேங்காய்

சிறு வயதில் தேங்காய் இட்லி செய்ததில் இருந்து, இன்று தேங்காய் மிட்டாய் சாப்பிடுவது வரை, தேங்காய் பற்றி என்னுள் தேங்கி இருக்கும் நினைவுகள் ஏராளம். அவற்றில் சில இதோ உங்கள் முன்னால் சிதறுகின்றன, சிதறு தேங்காய் போல...


சிதறு தேங்காய்:


நமது ஊர்களில் இன்றளவும் இருக்கும் வழக்கங்களில் இதுவும் ஒன்று. எங்கள் ஊரிலும் இது உண்டு. எங்கள் ஊரில் ஒரு வழக்கம் உண்டு. எனது ஊரில் - புதிதாகத் திருமணமானவர்கள் திருமணம் முடிந்து முதல் நாள் எங்கள் ஊருக்கு வரும்போது, அவர்கள் எங்கள் ஊரில் உள்ள துர்க்கை அம்மன், பெருமாள் மற்றும் குச்சாரி அம்மன் கோயில்களுக்குச் சென்று வழிபட்டுவிட்டு பின்னரே வீட்டுக்குச் செல்வார்கள். கிட்டத்தட்ட ஒரு ஊர்வலம் போலத்தான் இது இருக்கும். அப்படி ஒவ்வொரு கோயிலுக்கும் செல்லும்போதும் அந்தக் கோயிலில் ஒரு தேங்காயினை உடைப்பர்கள். அதைப் பொறுக்குவதற்காகவே சில சிறுவர்கள் அந்தக் கூட்டத்தில் வருவார்கள். அந்தக் கூட்டத்துடன் நானும் எப்போதாவது கலந்து கொள்வதுண்டு.


முதலில் துர்க்கை அம்மன் கோயிலுக்குச் செல்வார்கள். நான் ஏற்கனவே கூறியதுபோல - ஒரு பெரிய முண்டுக்கல்லும் அதன் ஓரத்தில் இரு தூண்களில் தொங்க விடப்பட்ட மணியும்தான் கோயில். தேங்காய் உடைக்க அந்தத் தூண்களைத்தான் பயன்படுத்துவார்கள், அதாவது அந்தத் தூண்களில் எரிந்து, தேங்காயினைச் சிதறடிப்பார்கள். அப்படிச் சிதறுவதை என்னைப் போன்ற சிறுவர்கள் எடுத்துக் கொள்வார்கள். அதன் பிறகு பெருமாள் கோயில், இந்தக் கோயிலானது ஒரு சிறிய அறை அளவில் இருக்கும். இதற்கு வெளிப்புறச் சுவர் இருப்பதால் அந்தச் சுவற்றில் அடித்து சிதற விடுவார்கள். அடுத்ததாக குச்சாரி அம்மன் கோயில். இதுவும் துர்க்கை அம்மன் கோயில் போலத்தான், வெளிப்புறச் சுவர் கிடையாது. ஆயினும் இங்கே, எந்தத் தூணிலும் தேங்காயினை உடைக்க மாட்டர்கள், மாறாக ஒன்று - சாமியாக வழிபடும் கல்லின் மீதே உடைப்பார்கள், அல்லது அதன் அருகில் இருக்கும் வீட்டின் சுவற்றில் எரிந்து விடுவார்கள்.


இன்றளவும் எங்கெல்லாம் சிதறு தேங்காய் சிதறுகின்றதோ, அதைக் காணும்போதெல்லாம் என்னுடய சிறுவயது நினைவுகளும் சிதறுகின்றன.


தேங்காய் - இட்லி:
தேங்காயில் சட்னி - உண்டு, அதென்ன தேங்காய் இட்லி? பொதுவாக மழை பொழிந்து முடிந்ததும் நாங்கள் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றுதான் - தேங்கய் இட்லி. அதாவது, கிடைக்கும் சிரட்டையினைக் கொண்டு [கொட்டாங் குச்சி], அதில் ஈர மணல் நிரப்பி, இட்லி வடிவில் மணல் மேடு எழுப்புவதுதான் - தேங்காய் இட்லி.இதை மழை பெய்யாத நாட்களில் விளையாடுவது சற்றுக் கடினம், ஏனென்றால் அப்பொழுதெல்லாம் ஈர மணலுக்கு சற்று குழி தோண்ட வேண்டும். சில நேரங்களில் - போட்டியும் உண்டு; யார் அதிகமாக செய்கிறார்கள், யாருடைய இட்லியின் அளவு அழகாக வந்துள்ளது என்றெல்லாம் போட்டி நடக்கும். கடைசியாக - செய்து வைத்த அனைத்தையும் காலால் உதைத்துக் கலைப்பதும் நல்ல வேடிக்கையாகத்தான் இருக்கும்.

மறு சுழற்சியினை அப்போதே செய்திருக்கிறோமோ?

தேங்காய் தண்ணீர்:

முன்பெல்லாம் எங்களது வீட்டில், தற்போதுபோல பொருட்களைக் கெடாமல் வைக்க "Fridge" வசதியெல்லாம் கிடையாது. எனவே தேங்காய் போன்ற விரைவாகக் கெட்டுவிடக்கூடிய பொருட்களைத் தேவைக்கேற்ப அவ்வப்போது வாங்கிக் கொள்வோம். மேலும் தற்போது போல, "Mixer Grinder" - உம் எங்கள் வீட்டில் அப்போது இல்லை. அப்போதைய காலங்களில் - சமையலுக்கு எனது அம்ம என்னை கடைக்குச் சென்று தேங்காய் வாங்கி வரச் சொல்லுவார்கள். சில நேரங்களில் நான் சென்று கேட்கும்போதுதான் கடைக்காரர் புதிய தேங்காயினை உடைப்பார். அப்படி இருந்தால் - ஒரே மகிழ்ச்சிதான், ஏனென்றால் அந்தத் தேங்காய் தண்ணீரை சிறுவனான எனக்கு கொடுத்து விடுவார்கள். அந்தத் தேங்காயினை அவர் உடைக்கும் அழகே தனிதான். முதலில் அதன் குடுமியினைப் பிடித்து அந்த நார்களை எல்லாம் எடுத்து விடுவார். அதன்பிறகு, அந்தத் தேங்காயினை இடது கையில் இலாவகமாகப் பிடித்து, தேங்காய் எடுக்க உதவும் சற்று கணமான இரும்பால் அதை ஒரு அடி அடிப்பார். பின்னர் தேங்காயினை சற்று சுழற்றி மீண்டும் ஒரு முறை அடிப்பார். தேங்காய் உடைந்துவிட்டது என்பதை அது எழுப்பும் சப்தத்தைக் கொண்டே கணித்து விடலாம். பின்னர் அது உடையும் தருவாயில் இருக்கும்போது, என்னிடம் கொடுத்து குடிக்கச் சொல்லுவார். அதை இரு கைகளில் பிடித்து, மெதுவாக, தேங்காயினை இரண்டாகப் பிழந்தால் இரு மழையின் நடுவில் இருந்து வீழும் அருவி போல, மெதுவாக வழியும். ஆகா, என்னே ஒரு ஆனந்தம் நான் ரசித்த/ருசித்த - முதல் தேனருவி - இதுதான் தேங்காய் தண்ணீர்...




வாங்கி வந்த தேங்காயினை, சட்னி செய்வதற்குத் தயாராகும்போது, சில நேரங்களில் நானும் பங்கெடுத்துக் கொள்வேன். அம்மியின் நடுவில் - பொறி கடலை, சிறிதளவு உப்புக் கல், மிளகாய் வைத்து அதனுடன் ஒன்றிரண்டு தேங்காய் சில்களையும் வைத்து விடுவார் என் அன்னை. பிறகு அம்மிக் குழவி எடுத்து இலாவகமாக அரைக்க ஆரம்பிப்பார். சில சமயஙளில், தேங்காய் மட்டும் நழுவிக் கொண்டு ஓடும். அதைப் பிடித்து மீண்டும் வைத்து அரைப்பார். அப்படி பாதி அரைபட்ட நிலையில் இருக்கும் தேங்காய் தனிச் சுவையுடன் இருக்கும். அதன் தோல்கள் பாதி நீக்கப்பட்டு, அதனுடன் உப்பு, மிளகாய் கூட்டணி அமைத்து ,அதன் சுவையினைக் கூட்டியிருக்கும். இதற்காகத்தான் என்னுடைய பங்கேற்பு...




கோயில்களில் தேங்காய்களை உடைத்து, அதை அபிசேகத்திற்குப் பயன்படுதாமல், வீணாகப் போகும் அந்தத் தண்ணீரைக் காணும்போதெல்லாம், அன்றிலிருந்து இன்றுவரை, அந்தத் தேங்காயினைப் போல எனது மனதும் தான் உடைந்து போகிறது. அதை நமக்குக் கொடுத்தால் என்ன? என்றுதான் கேள்வி எழுகிறது.



கார்த்திகை தீபம்:


கார்த்திகை தீபத்தை விளக்கில்தான் ஏற்ற வேண்டுமா? ஏன் சிரட்டாயில் [கொட்டாங் குச்சியில்] ஏற்றக் கூடாதா?


கார்திகை தினத்தன்று இரவு - நான் மற்றும் என் நபர்களுடன் சேர்ந்து, சிரட்டையில் ஒரு மெழுவர்த்தியினை வைத்துக் கொண்டு, தெரு முழுக்க வலம் வருவோம். அளவில் சிறியதான மெழுகுவர்த்தியினை - சிரட்டையின் ஒரு ஓரத்தில் வைத்துக் கொண்டு -அதை சைக்கிளின் டைனைமோ மாதிரி ஆக்கி கையில் எடுத்துச் செல்வோம். காற்றின் அளவு மிக மிகக் குறைவாக இருந்தால், சிரட்டையின் மேலும்கூட ஒரு மெழுகுவர்த்தியினைக் கொழுத்திக் கொள்வோம். இரு கைகளாலும் அந்தச் சிரட்டையினைப் பிடித்துக் கொண்டு, காற்று வந்து மெழுவர்த்தியினை அணைத்துவிடாதவாறு நாங்கள் அந்த சிரட்டையினை அணைத்துக் கொள்வோம். அப்போது அதில் வெளிப்படும் சூடானது மெல்லிய ஒரு சந்தோசத்தைக் கொடுக்கும்.

இன்றெல்லாம் காபி அருந்துபோது, இரு கைக்களாலும் பிடித்துக் கொண்டு குடித்தால், எனக்கு இந்த நினைவுகள்தான் நெஞ்சில் ஓடும்.





கட்டியணைத்து - உன்னை
அணைக்க வருகிறது - காற்று,
... உன்னை அணைக்க;
கட்டியிவனைத் தட்டிவிட்டு - உன்னை
அணைக்கிறேன் - நீ அணையாதிருக்க...



--- "நினைவாணிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் நினைவுகள் தொடரும்"

பயணத்தில் ரசித்தது...

பயணத்தில் ரசித்தது [அருப்புக்கோட்டை பேருந்து நிலையம்]



நம்ம ஊரு நக்கலுக்கு - ஓர் உதாரணம்


பேருந்து நிலையத்தில் - கொய்யாப்பழம் விற்கும் ஒரு அம்மா "சீனி கொய்யா, சீனிக் கொய்யா" என்று கூவிக் கூவி விற்கிறார். அவரிடம் பெரியவர் ஒருவர் சென்று விலை எவ்வளவு என்று விசாரிக்கிறார். அதற்கு அவர் ஒரு விலை சொல்ல- வாங்க வந்தவரோ - என்னம்மா இவ்வளவு விலை என்று கேட்கிறார். அதற்கு பழம் விற்கும் அந்த அம்மா - "அண்ணே, வாங்கிச் சாப்பிடுங்க - சீனி மாதிரி இனிக்கும் என்கிறார். உடனே வாங்க வந்தவர், "அதற்கு நான் சீனியவே ரேசன் கடையில வாங்கிக்குவேனே - விலையும் இந்தப் பழத்தைவிட கம்மி"? என்று நக்கல் செய்கிறார். பிறகு சிரித்துக் கொண்டே, ஒரு சிறிய கொய்யாப் பழத்தை எடுத்து சாபிடுகிறார்; சாப்பிட்டுக் கொண்டே ஒரு கிலோ பழம் வாங்கிச் செல்கிறார்.


எதையோ இழந்து கொண்டிருக்கிறோமோ என்று மனதோரம் வழிக்கிறது...

நீ வருவாயென...




திருமணமான - மறு
தினமே - மறு

திருமணத்திற்காகக் காத்திருக்கிறேன் -

திருமண மண்டபம்.

Wednesday, November 21, 2012

அப்படியென்றால்...


தமிழனாக இருப்பது அடையாளம் -ஆனால்

சாதிகளாகப் பிரிவது அவமானம்.


இதைப் படித்தவுடன் - என் மனதில் ஆயிரம் கேள்விகள். அவை இதோ - இங்கே...






அப்படியென்றால், [சாதிகளாகப் பிரிவது தவறெனில் - மொழிகளாகப் பிரிவதும் ஏன் தவறில்லை]


இந்தியனாக இருப்பது அடையாளம் -ஆனால்

மொழிகளாகப் பிரிவது அவமானம். [இது சரியாகத்தானே இருக்கும்]



அப்படியென்றால் [மொழிகளாகப் பிரிவது தவறெனில் - நாடுகளாகப் பிரிவதும் ஏன் தவறில்லை]


பிரபஞ்சம் என்பது நம் அடையாளம் -ஆனால்
நாடுகளாகப் பிரிவது அவமானம். [இது சரியாகத்தானே இருக்கும்]


என்னைப் பொறுத்தவரை...
மனிதம் என்பது நம் அடையாளம் - மனித உணர்விலிருந்து பிரிவது அவமானம்

Monday, April 9, 2012

என்ன கொடுமை இது???

‎6am to 9am12pm to 3pm6pm to 6.45pm7.30pm to 8.15pm9pm to 9.45pm... 10.30pm to 11.15pm12am to 12.45am1.15am to 2am2.30 am to 3.15am4.45 am to 5.30 amவரவு எட்டணா - செலவு பத்தணா....மின்சாரம் இருக்கும் நேரத்தைவிட இல்லாத நேரமே மிக அதிகமாக் இருக்கிறது.எங்கள் ஊரில் தற்போது இருக்கும் மின்வெட்டு நேரம் இது... எங்கள் ஊரும் தமிழகத்தில்தான் இருகிறது. எங்களுக்கு மட்டுன் ஏன் இந்த பாரபட்சம்? அது என்ன சென்னைக்கு மட்டும் இரண்டு மணி நேரம் மின்வெட்டு. நாங்கள் என்ன ஒதுக்கப்பட்டவர்களா? அப்படியென்றால் எங்களிடம் ஏன் வரி வசூலிக்க வேண்டும்?சென்னைக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என்று என் நண்பர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது "சென்னை ஒரு தொழில் நகரமாம்". அப்படியென்றால் எங்கள் பகுதி மக்கள் எல்லாம் பிச்சையா எடுக்கிறர்கள்? ஏதோ ஒரு நாட்டில் தமிழ் பேசுபவர்கள் பாத்திக்கப்படுகிறார்கள் என்று போராட்டத்தில் குதிக்கும் பலர் - நம் தமிழகத்தில் எங்களுக்கு இழைக்கப்படும்/மறுக்கப்படும் சம உரிமையினைப் பற்றி ஏன் பேசுவதில்லை?எல்லாவற்றிலும் உள்ள இட ஒதுக்கீடு போல மின்சரம் வழங்குவதிலும் ஒதுக்கிவிட்டார்கள்போலும்... என்ன கொடுமை இது???

Tuesday, March 13, 2012

தொழில் நுட்பம்

அனபர்களுக்கு வணக்கம்,

சமீபத்தில் "அம்புலி" படம் பார்த்தேன். தொழில் நுட்பத்தில் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதைக் கண்கூடாகக் காண முடிந்தது. அருமையான 3D பதிவுகள். அந்தப் படத்தின்போது இடைவேளையின்போது "கர்ணன்" படத்தின் "Trailer" ஒளிபரப்பினார்கள். அப்போது எனக்குள் நீண்ட நாட்களாக இருந்த எண்ணத்தை எண்ணிப்பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது... இப்படிப்பட்ட தொழில் நுட்பங்கள் இருக்கும் போது நாம் ஏன் நம்முடைய புராண இதிகாசங்களைப் படமாக மீண்டும் உருவாக்கக் கூடாது?




"Horry Potter" போன்ற கர்ப்பனைக் கதாப்பாத்திங்கள் கொண்ட படங்களை நாம் விரும்பிப் பார்க்கும்போது, நவீன தொழில் நுட்பம் கொண்டு நம் இதிகசங்களை "Troy" போலவும், "Harry Potter" போலவும் நாம் ஏன் எடுக்கக் கூடாது?

இன்னும் நாம் அந்த முயற்சியினை எடுக்காவிட்டால் - வெளி நாட்டவர் எடுத்து நாம் பார்க்க நேரிடும். அப்போது, அதில் சில தவறாகவும் படலாம். அப்போது அந்தப் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் கூட நடத்த நேரிடலாம். நமக்குள் உள்ள நல்லவற்றை வைத்துக் கொண்டு இந்த உலகை ஏன் நம்மால் திரும்பிப் பார்க்க வைக்க இயலாது?