Wednesday, December 16, 2009

நினைவாணிகள் பாகம் நான்கு



பள்ளிப் பருவம்

"பள்ளிப் பருவம் என்பது காத தூரம்தான்" - என்பது எங்களது ஊரில் பொதுவாக உள்ள பேச்சு. வலது கையினை வானவில் போல வளைத்து, அவர்களது இடது காதைத் தொட வேண்டும், அங்கனம் தொட்டால் அவர்கள் ஒன்றாம் வகுப்பிற்குப் படிக்கத் தகுதியாகிவிட்டார்கள் என்று அர்த்தம். இல்லாவிட்டால், பால்வாடிக்குச் செல்ல வேண்டும்.


எங்கள் கிராமத்தில் 5வது வகுப்பு வரை மட்டுமே பள்ளி உள்ளது. அனைத்து வகுப்பிற்கும் சேர்த்து மொத்தம் இரண்டு வாத்தியார்கள்.பால்வாடிக்கென்று ஒருவர், ஆக மொத்தம் மூவர் மட்டுமே. பால்வாடியில் பயின்ற போது, வாரம் ஒரு முறை முட்டை கொடுப்பார்கள், பால்வாடி (அரைக் கிளாஸ்) என்பதாலோ என்னவோ, அரை முட்டை மட்டுமே
கொடுப்பார்கள்.


என்னுடைய அப்பா எங்களைப் பக்கத்து ஊரான பெருநாழியில் சேர்த்து படிக்க வைத்தார். என்னையும்,என்னுடைய அண்ணனையும் எங்கள் அப்பா சைக்கிளில் வைத்து பள்ளிக்கு அழைத்துச் செல்வார். எங்களது மளிகைக் கடையும் அந்த ஊரில்தான் இருக்கிறது. பள்ளிக்குக் கொண்டு செல்லும் பையானது ஒன்று மஞ்சள் பை அல்லது நரம்பு பை அல்லது சோல்னா போன்ற தோற்றமுடைய பை - இவற்றில் ஏதேனும் ஒன்றாகத்தானிருக்கும்.
நாங்கள் அந்தப் பையில் எங்கள் தட்டினை வைக்கும் விதமே தனிதான். தட்டினை சிலேட்டினைப் பொத்தியவாறு வைப்போம், எழுதிய வீட்டுப் பாடம் அழியாதிருக்க. இதற்கும் அனுபவம் வேன்டும்.மாலை சென்றதும் எழுதி முடித்த வீட்டுப்பாடம், மாயமாகிப் போனதென்ன? தயக்கத்துடன் ஆசிரியரிடம் கண்பித்தேன், அழிக்கப்பட்ட எனது பதிவை...


அவரோ,
விதைத்த நெல்லை மண் தின்றிடுமா என்ன?
என்பது போல, வசைபாடி விட்டார்.
திருடனுக்குத் தேள் கொட்டினால் சரி,
திருடுபட்டவனுக்குக் கொட்டினால்?
வலிமேல் வலிதானே???
சுரீரென்று இருந்தது, அவரின் அடியும், கவனமற்ற எனது செயலும்.


"நாலும் இரண்டும் சொல்லுகுறுதி"
நாவின் சொல் - தன்மானத்திற்கு உறுதி...
பயின்றேன் அனுபவம் - ஓரடியில் இருந்து,
பிஞ்சிலே பழுத்தேன் - பழுத்த என்
காயதிலிருந்து...
அன்று முதல், கவனித்துக் கொண்டேன் எனது கவனங்களை, எனது சிலேட்டினையும்தான்...


காலையில் ராஜாவாக அப்பாவுடன் மாலையில் நட-ராஜாவாக நண்பர்களுடன். எனது கால்களின், தாளத்துக்கு எற்ப இசையிடும் எனது குச்சி டப்பாவும், சிலேடும் - தட்டும் முத்தமிட்டுக் கொள்ளும் ஓசையும், இவை இரண்டுமே நான் அறிந்த முதல் இசை.


புளியம்பழம் - "சுட்ட பழம்"
"தான் என்றும் சுடும் பழம்" என்பதை
இருமுறை சுட்டிக் காட்டியது.
ஒன்று - நான் எடுத்து மண் ஊதியபோது;

மற்றொன்று - அதிகம் தின்று நாவினைச் சுட்டுக்
கொண்ட போது. ஆசை காட்டி மோசம் செய்தது.
வெந்தும் தணியாதிருந்தது - புளி ஆசை...



இணை கோட்டில் செல்லும்
இரயில் கண்டிடாத போதும்,
எங்கள் ஊரின்,
நனைந்த தார் சாலையில் காணும்,
கருப்பு நிற இரயில் வண்டியினைத் (பூச்சியினை)
தூக்குவதென்றால்
அது ஒரு சுகம்...

மாலையில்,
5மணி ஜெயவிலாஸ் வண்டியின் ஓட்டுனருக்கு,
"டாட்டா" காண்பிப்பதென்றால்,
அது ஒரு சுகம்...
கடந்து செல்லும் அந்த வண்டியின்
கொய்யாப் பழ வாசனையினைக்
கொய்வதென்றால்,
அது ஒரு சுகம்...
ஒரே கல்லில்,
பல புளியம்பழங்களைக்
கொய்வதென்றால்,
அது ஒரு சுகம்...
கொய்த பழத்தை,
ஓட்டுடன் உண்பதென்றால்,
அது ஒரு சுகம்...
குண்டும் குழியுமான,
தார் சாலையினில்
தேங்கிய நீரைக்
சீத்தி (உதைப்பது)
அடிப்பதென்றால்,
அது ஒரு சுகம்...
ஒரு மைல்கல் தொலைவில் இத்தனை
சுகங்கள் கிடைத்ததென்றால்
அது மிகப் பெறும் சுகமே...


---"நினைவாணிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் இனிய நினைவுகள் தொடரும்"---

Monday, December 14, 2009

விழி(ழு) நீர்?:


விழி(ழு) நீர்?:
-----------
வழியின்றி
வழிகிறது அதன்
வழியில்...
விண்ணில் இருந்து
மண்ணில் விழும் மழைத் துளி...!!!

உதிரிப் பூக்கள்

வார்த்தைகள்:
-----------------
உதிர்பவை அனைத்தும்
முதிர்ந்தவையாக இருக்கட்டும்...
முதிர்வன மட்டும்
உதிரட்டும்...

குறள்:
-------
சொல்லுக சொல்லைப் பிரிதோற் சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் என்மை அறிந்து