Wednesday, July 20, 2011

நினைவாணிகள் - பாகம் ஏழு



அறுவடை:




எங்கள் ஊரில் இன்று வரை வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே விவசாயம் செய்கிறோம், அதவது ஒரு முறை மட்டுமே அறுவடை நடைபெறுகிறது. எங்கள் காட்டில் வழக்கமாக நாங்கள் மிளகாய், உளுந்து ஆகியவற்றை முதன்மைப் பயிராகவும்; வெங்காயத்தை ஊடு பயிராகவும் விதைப்பது வழக்கம். இது தவிர வரப்பு ஓரங்களில் பாகற்காய், சுரைக்காய், பூசணிகாய், துவரை போன்றவைகளையும் பயிரிடுவோம்.





உளுந்தைப் பிரித்தெடுக்க பொதுவாக சாலையினையும், இதற்காகவே ஒதுக்கப்படும் களங்களையும் நாடுவது எங்களது வழக்கம்.
சாலையினை பிரதானமாக தேர்வு செய்தால் மிக அதிமாக ஒன்றும் வேலை இருக்காது, வந்து செல்லும் பேருந்துகளில் சிக்கி அவையெல்லாம் பிரிக்கப்படும். அவ்வாறு இல்லாமல் களத்தினைத் தேர்வு செய்தால் அதற்கு மூன்று சோடி மாடுகளும், அதை ஓட்ட ஆட்களும் தேவை, கிட்டத்தட்ட இரவு பகலாக இவ்வேளை நடைபெறும்.




ஆனால் மிளகாயினைப் பொறுத்தவரை இந்த முறைகளைப் பின்பற்ற இயலாது. ஆகவே பரித்த மிளகாய் பழங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் பரப்பி வைத்து அவற்றைப் பக்குவப்படுத்துவார்கள். பரிக்கப்பட்ட பழங்களானது அந்தந்த இடங்களில் சில நாட்கள் காய்ந்து கொண்டிருக்கும். அப்போது அதில் பல சோடைகளாகிப் போகும். அவ்வாறு மாறும் சோடை வற்றல்களைத் தனியாகப் பிரிக்க வேண்டும். அதற்காக பலர் அங்க் வேலை செய்வார்கள். பெரும்பாலும் இதற்கு யாரையும் கூலிக்கு அமர்த்துவது கிடையாது. அதற்குரிய குடும்பத்தவர்களே வேலை செய்வார்கள். நானும் பள்ளி முடிந்து திரும்பியவுடன் எங்களது மிளகாய் பழங்களுக்காக, மாலை சிறிது நேரம் அங்கு சென்று அவ்வாறாக வேலை செய்வதுண்டு. அப்படி வேலை செய்யும்போது ஆளுக்கொறு ஓலைப்பெட்டி [கொட்டான் என்று அழைப்போம்] கொடுத்து விடுவார்கள். அதில் சோடை வற்றலை சேகரிக்க வேண்டும். இவ்வாறாக சேகரிக்கும் வற்றல்களை தனியாக சாக்கு [கோணிப் பை] மூட்டைகளில் சேகரித்து அதையும் விற்று விடுவோம்.



அவ்வாறு காய்ந்து கொண்டிருக்கும்போது, சில சமயங்களில் மழையின் இடையூறு இருக்கக் கூடும். அது இரவாகக் கூட இருக்கலாம். அவ்வாறு இரவு நேரங்களில் செல்லும் போது, அங்கு எந்தவிதமான வெளிச்சமும் இருக்காது. அந்த இரவு நேரத்தில் கிடைக்கும் மின்னல் ஒளியினையும், கொண்டு செல்லும் சிறு விளக்கிலிருந்து வரும் ஒளியில் கிடைக்கும் ஒளியினை மட்டும் கொண்டு வேலை செய்வோம். வீட்டிலிருந்து பல கோணிப் பைகைகளை இரண்டு சைக்கிள்களில் வைத்து எடுத்து வருவோம். அதனுடன் பல சிறிய அல்லது பெரிய பெட்டிகளையும் [காய்ந்த ஓலையினால் முடையப்பட்டது] கொண்டு செல்வோம். காய்ந்து கொண்டிருக்கும் அந்த மிள்காய்களை எங்களது கைகளால் அள்ளி அணைத்து, வாரி வாரி நாங்கள் கொண்டு சென்ற பெட்டிகளில் அள்ளிப் போடுவோம். அவ்வாறு அள்ளும்போது மண் சேர்ந்திடாதவாறு பார்த்துக்கொள்வோம். அப்படி அள்ளி பெட்டியில் சேகரித்த மிளகாயினை, கொண்டு வந்திருக்கும் கோணிப் பைகளில் நிரப்புவோம்.







அப்படி நிரப்புவதற்கு இராண்டு பேர் தேவை. ஒருவர் அந்தக் கோணியினை பிடித்துக் கொள்ள வேண்டும், மற்றொருவர் அதில் கொட்ட வேண்டும். முதலில் அந்தக் கோணியின் வாய்ப் பகுதியினை நன்றாக சுருட்டிக் கொள்ள வேண்டும். பிறகு அந்தக் கோணி நிரம்ப நிரம்ப, சுருட்டிய பகுதியனை விடுவிக்க வேண்டும். அவ்வப்போது அந்தக் கோணியின் இரு பக்கமும் பிடித்துக் கொண்டு, மேலே தூக்கி தரையினில் பக்குவமாக அடிக்க வேண்டும். இவ்வாறாக செய்யும்போது அந்தக் கோணியினுள் இன்னும் கொஞ்சம் நிரப்ப முடியும். அவ்வாறு நிரம்பியவுடன் அதன் வாயினைப் பெரிய ஊசி [கோணூசி என்போம் எமது ஊரில்] மற்றும் தடித்த சணல் கொண்டு தைத்து விடுவோம். பொதுவாக இந்த வேலையினை எனது தாத்தா அல்லது எனது அப்பாதான் செய்வார்கள், நான் இதுவரை அந்த வேலையினைச் செய்தது இல்லை.அவ்வாறாக பழங்களை அள்ளும்போது அந்த மண் வசையுடன் கலந்து அதனுடன் வரும் அந்த மிளகாய் பழ வாசனை இன்னும் என் நாசியினைத் துளைத்துக் கொண்டுதான் இருக்கிறது.





இறுதியாக கட்டப்பட்ட மூட்டைகளை [சாக்கு மூட்டைகள்] சைக்கிளில் வைத்து வீட்டிற்கு கொண்டு சென்று விடுவோம். மறு நாள் மழை நின்ற பிறகு மீண்டும் அவற்றை காய வைக்கும் நிகழ்வு தொடரும்.


"காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" - என்பதைப் பார்த்து வளர்ந்தவர்களில் நானும் ஒருவன்.





சாலை குண்டும் குழியாக இருக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்ட காலங்களை எண்ணும்போது மனதில் மகிழ்ச்சி மெல்ல மேலிடுகிறது.





அன்றிலிருந்து இன்றுவரை, எங்கள் ஊரில் அறுவடைக் காலத்தில் அறுவடை செய்த கம்பு, உளுந்து, சூரியகாந்தி போன்றவற்றை சாலைமீது பரப்பி வைத்து அந்த தானியங்களைப் பிர்த்தெடுப்பார்கள். அவ்வாறாக சாலை மீது பரப்பி வைத்துவிட்டால் சலையில் செல்லும் பேருந்துகளின் சக்கரங்களில் அழுந்தி அவை எல்லாம் செடிகளில் இருந்து பிரிந்து சாலையில் விழும். இப்படி இருக்கும்போது சாலையில் குழிகள் அதிகம் இருந்தால் அதைச் சேகரிப்பது கடினம். எனவே என்னைப் போன்ற சிறுவர்களுக்கு அது ஒரு வரவேற்கத்தக்க ஒரு நிகழ்வு. ஏனென்றால் நாங்கள் அந்த குழிகளில் விழுந்த, [எஞ்சிய] தானியங்களை சேகரித்து, தூசியெல்லாம் நீக்கி அவற்றை உண்பது வழக்கம். அதற்காகவே சாலை முழுவதும் அதிக குழிகள் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்வோம்...





அறுவடை காலஙளில் இந்த ஒரு மகிழ்ச்சியென்றால், மழைக் காலங்களில் வேறுவிதமான மகிழ்ச்சி. மழை பொழிந்து சாலையில் உள்ள குழிகளில் சேரும்போது அதைக் கால்களால் சீத்தி அடிப்பது மிக மகிழ்ச்சியான ஒரு தருணம்.


இது போன்று சாலைகளில் உள்ள குழிகளை நிரப்புவதற்கு, அவ்வப்போது ஒரு வண்டியில் "தார்" உற்றிச் செல்வார்கள். முதலில் இந்த தாரானது சலையின் ஓரத்தில் உள்ள, ஏற்கனவே அதற்காகவே வெட்டப்பட்ட குழி ஒன்றில் ஊற்றப்படும். அவ்வாறு ஊற்றப்பட்ட தாரினை, சாலை சீரமைக்கும் தொழிலாளர்கள் எடுத்து தேவையான இடங்களில் ஊற்றி சாலையினைச் சரி செய்வார்கள். அப்போது, புதிதாக ஊற்றப்பட்ட தாரானது சற்று மென் தன்மையுடன் இருக்கும். அவ்வாறு இருக்கும் அதன் மீது, நாங்கள் எங்களது கை மற்றும் கால் தடங்களைப் பதிய வைப்போம்...




--- "நினைவாணிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் நினைவுகள் தொடரும்"