Thursday, November 29, 2012

எனக்குள் நானே தொலைகிறேன்…


தொலைந்து போன
நாட்கள் அனைத்தும்
தொலைந்துதான் போயின…
நித்தம் நித்தம் தொலைகின்றன – தொலைந்ததெல்லாம்
நிசப்தமாகத்தான் உள்ளன…

நித்தம் நித்தம் தொலைந்தது
நாட்கள் மட்டுமல்ல
நானும்தான்…

என் முன்னே,
எனக்குள் நானே தொலைகிறேன்…



பழக்கத்தால் வந்த புலக்கம்…

                                                
கைகளில் வெயில்பிடித்து
மகிழ்ந்த காலம்
மறைந்து,
நாளு(லு)ம் இதழில் [நாழிதழ்]
வெயில் பார்த்து
வெறுத்துப் போனது…

நாட்கள்
புலப்படுகிறதே தவிர
பொழுதொன்றும்
புலப்படுவது இல்லை – தற்போது
குளுகுளு அறையில்
குடியமர்த்திக் கொள்வதால்…
ஞாயிறுகளில் மட்டுமே
ஞாயிறோடு
பழக்கத்தில் உள்ளது – எனது
புலக்கம்; – இது
புலக்கத்தில் வந்த பழக்கமல்ல -
பழக்கத்தால் வந்த புலக்கம்…



Wednesday, November 28, 2012

நில்... கவனி... செல்...

பாலில் கலந்த தண்ணீரைக்கூடப் பிரித்து விடலாம், ஆனால் சென்னையிலிருந்து போக்குவரத்து நெரிசலை மட்டும் பிரிக்கவே முடியாது. தினம் தினம் "தீபாவளி" வந்தால் மட்டுமே இது சாத்தியம். அந்த அளவிற்கு இங்கு போக்குவரத்து நெரிசல் மிக மிக அதிகம். இதற்காகப் பலவாறாக சென்னை மாநகராட்சி மெனெக்கெடுகிறது, இருந்தும் ஒரு பயனும் இல்லை. சென்னைக்கு வரத்து அதிகம் என்பதால், இந்த நெருக்கடியும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. பல இடங்களில் தானியங்கி விளக்குகள் வைத்துப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள், சில இடங்களில் போக்குவரத்து காவல்துறையினரே நேரடியாக ஈடுபடுத்தப்படுகிறார்கள்.






எனது பகுதியில் இருக்கும் - "Signal"-க்கு போக்குவரத்துக் காவல் துறையினர்தான் ஈடுபடுத்தப் படுகிறார்கள். நான் சாபிடும் கடைக்கு மிக அருகில்தான் இந்த "Signal" உள்ளது. நான் சாபிட்டு விட்டு "Signal"-கு மிக அருகில் இருக்கும் ஒரு கடையில் "டீ" குடிப்பது வழக்கம். அப்போதெல்லாம் இந்த "Traffic Police"-ஆர், எப்படிஅதைச் செய்கிறார் என்று கவனிப்பது வழக்கம்.அப்படி நான் கவனித்ததால் எனக்குள் ஓடிய எண்ண ஓட்டங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இதோ உங்கள் முன்னால்...

பொதுவாக ஒருவர் மட்டுமே பணியமர்த்தப்படுகிறார் - காலை முதல் மாலை வரை ஓய்வின்றி அவர் அதைச் செய்து கொண்டிருக்கிறார், சில நேரங்களில் இருட்டும்வரைகூட அவரது பணி தொடர்கிறது. அவர்களால் நிம்மதியாக ஒரு "டீ" கூட சாபிட முடிவதில்லை, அப்படி அவர்கள் ஓய்வாக "டீ" அல்லது ஏதாவது நொறுக்குத்தீனி சாப்பிட்டாலும் - ஒருவித பதட்டத்துடன்தான் இருக்கிறார்கள். பெரும்பாலும் இவர்கள் நின்றுகொண்டேதான் வேலை செய்ய வேண்டும்.எனது பகுதியில் இந்தப் பணியில் இருக்கும் ஒருவரிடம் இதைப் பற்றி ஒரு நாள் கேட்டேன். "ஏன் சார், நீங்கள் ஒருவரே காலையில் இருந்து சாயங்காலம்வரை இருக்கிறீர்களே, இடையில் யாரேனும் "Shift"-க்காக வருவார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை - என்னை ஒரு, முறை முறைத்துவிட்டு - "இல்லை" என்று மட்டும் சொன்னார். அதன்பிறகு எனக்கு ஒரே குழப்பம், என்ன கேட்டுவிட்டோம் என்று - நம் மீது கடுப்பாகிறார் என்று யோசித்துக்கொண்டெ நின்று கொண்டிருந்தபோதுதான் எனக்கு ஒன்று விளங்கியது.




இவர் போக்குவரத்தைச் சரி செய்யும்போது, பலர் இவர் கட்டளைக்கு மாறாகத்தான் நடக்கிறார்கள். சிலர் இவர் கண் முன்னேயே இவரைப் பார்த்து - ஒரு நக்கலான சிரிப்பு சிரித்து விட்டு செல்கிறார்கள். இப்படி இவர் காலையில் இருந்து எத்தனை பேரை இதைப் போல் பார்த்து இருப்பாரோ என்பது அவரிடம் வந்து வெறுப்பான பதிலில் இருந்து "மிக அதிகம்" என்பது விளங்கியது. போக்குவரத்துக் காவலரும் ஒரு மனிதர்தான் - அவரது கட்டளைக்கு கட்டுப்பட்டால் [குறிப்பாக “Signal”-இல்] அது அவருக்குப் பேருதவியாக இருக்க்ம், அது நமக்கும் நன்மை பயக்கும் என்பது என் எண்ணம். ஆகவே தயவு செய்து இனிமேல் "(Automatic)Traffic Signal"-ஐ அவமானப்படுத்துவதுபோல அல்லாமல், அங்கு ஒரு மனிதர் [போக்குவரத்துக் காவலர்] இருந்தால் அவரது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்... இதில் நாம் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லையே...

நில்... கவனி... செல்...

Tuesday, November 27, 2012

ஒரு முத்தமிட்டுச் செல்...

வெட்கத்தால் முகம் சிவக்குமாம் -
நம்பவில்லை
நானும் - வெட்கம் தின்று
வளர்ந்திருக்கும்
உன் இதழ்களைக் காணும்வரை...


வெட்கம் தின்று வளர்ந்தவளே - என்
முத்தம் தின்று - உன்
வெட்கங்ககளை என் இதழ்களில் கொடு;


ஈரிதழ் முத்தம் தவிர்த்து - நம்
ஈரிதழ்களால் முத்தமிடலாம்...

'உயிர்'-வரின் 'உ'-க்குரல் மெய்விட்டோடுமாம் - என்
இதழ்வரின் உன் வெட்கம் உன்னை விட்டோடும்...
எவ்வளவுதான் வெளுத்தாலும்
வெளுக்காத சாயம் உன் இதழ் சாயமடி...
வெளுக்க வந்த இதழ்கள் - சாயம் பட்டுத் திரும்பிகின்றன...

இறுதியாக, முத்தமிட்டதைத் துடைத்துவிட -
ஒரு முத்தமிட்டுச் செல்...

Monday, November 26, 2012

நினைவாணிகள் - பாகம் ஒன்பது

நினைவாணிகள் - பாகம் ஒன்பது



                                                         தேங்காய்

சிறு வயதில் தேங்காய் இட்லி செய்ததில் இருந்து, இன்று தேங்காய் மிட்டாய் சாப்பிடுவது வரை, தேங்காய் பற்றி என்னுள் தேங்கி இருக்கும் நினைவுகள் ஏராளம். அவற்றில் சில இதோ உங்கள் முன்னால் சிதறுகின்றன, சிதறு தேங்காய் போல...


சிதறு தேங்காய்:


நமது ஊர்களில் இன்றளவும் இருக்கும் வழக்கங்களில் இதுவும் ஒன்று. எங்கள் ஊரிலும் இது உண்டு. எங்கள் ஊரில் ஒரு வழக்கம் உண்டு. எனது ஊரில் - புதிதாகத் திருமணமானவர்கள் திருமணம் முடிந்து முதல் நாள் எங்கள் ஊருக்கு வரும்போது, அவர்கள் எங்கள் ஊரில் உள்ள துர்க்கை அம்மன், பெருமாள் மற்றும் குச்சாரி அம்மன் கோயில்களுக்குச் சென்று வழிபட்டுவிட்டு பின்னரே வீட்டுக்குச் செல்வார்கள். கிட்டத்தட்ட ஒரு ஊர்வலம் போலத்தான் இது இருக்கும். அப்படி ஒவ்வொரு கோயிலுக்கும் செல்லும்போதும் அந்தக் கோயிலில் ஒரு தேங்காயினை உடைப்பர்கள். அதைப் பொறுக்குவதற்காகவே சில சிறுவர்கள் அந்தக் கூட்டத்தில் வருவார்கள். அந்தக் கூட்டத்துடன் நானும் எப்போதாவது கலந்து கொள்வதுண்டு.


முதலில் துர்க்கை அம்மன் கோயிலுக்குச் செல்வார்கள். நான் ஏற்கனவே கூறியதுபோல - ஒரு பெரிய முண்டுக்கல்லும் அதன் ஓரத்தில் இரு தூண்களில் தொங்க விடப்பட்ட மணியும்தான் கோயில். தேங்காய் உடைக்க அந்தத் தூண்களைத்தான் பயன்படுத்துவார்கள், அதாவது அந்தத் தூண்களில் எரிந்து, தேங்காயினைச் சிதறடிப்பார்கள். அப்படிச் சிதறுவதை என்னைப் போன்ற சிறுவர்கள் எடுத்துக் கொள்வார்கள். அதன் பிறகு பெருமாள் கோயில், இந்தக் கோயிலானது ஒரு சிறிய அறை அளவில் இருக்கும். இதற்கு வெளிப்புறச் சுவர் இருப்பதால் அந்தச் சுவற்றில் அடித்து சிதற விடுவார்கள். அடுத்ததாக குச்சாரி அம்மன் கோயில். இதுவும் துர்க்கை அம்மன் கோயில் போலத்தான், வெளிப்புறச் சுவர் கிடையாது. ஆயினும் இங்கே, எந்தத் தூணிலும் தேங்காயினை உடைக்க மாட்டர்கள், மாறாக ஒன்று - சாமியாக வழிபடும் கல்லின் மீதே உடைப்பார்கள், அல்லது அதன் அருகில் இருக்கும் வீட்டின் சுவற்றில் எரிந்து விடுவார்கள்.


இன்றளவும் எங்கெல்லாம் சிதறு தேங்காய் சிதறுகின்றதோ, அதைக் காணும்போதெல்லாம் என்னுடய சிறுவயது நினைவுகளும் சிதறுகின்றன.


தேங்காய் - இட்லி:
தேங்காயில் சட்னி - உண்டு, அதென்ன தேங்காய் இட்லி? பொதுவாக மழை பொழிந்து முடிந்ததும் நாங்கள் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றுதான் - தேங்கய் இட்லி. அதாவது, கிடைக்கும் சிரட்டையினைக் கொண்டு [கொட்டாங் குச்சி], அதில் ஈர மணல் நிரப்பி, இட்லி வடிவில் மணல் மேடு எழுப்புவதுதான் - தேங்காய் இட்லி.இதை மழை பெய்யாத நாட்களில் விளையாடுவது சற்றுக் கடினம், ஏனென்றால் அப்பொழுதெல்லாம் ஈர மணலுக்கு சற்று குழி தோண்ட வேண்டும். சில நேரங்களில் - போட்டியும் உண்டு; யார் அதிகமாக செய்கிறார்கள், யாருடைய இட்லியின் அளவு அழகாக வந்துள்ளது என்றெல்லாம் போட்டி நடக்கும். கடைசியாக - செய்து வைத்த அனைத்தையும் காலால் உதைத்துக் கலைப்பதும் நல்ல வேடிக்கையாகத்தான் இருக்கும்.

மறு சுழற்சியினை அப்போதே செய்திருக்கிறோமோ?

தேங்காய் தண்ணீர்:

முன்பெல்லாம் எங்களது வீட்டில், தற்போதுபோல பொருட்களைக் கெடாமல் வைக்க "Fridge" வசதியெல்லாம் கிடையாது. எனவே தேங்காய் போன்ற விரைவாகக் கெட்டுவிடக்கூடிய பொருட்களைத் தேவைக்கேற்ப அவ்வப்போது வாங்கிக் கொள்வோம். மேலும் தற்போது போல, "Mixer Grinder" - உம் எங்கள் வீட்டில் அப்போது இல்லை. அப்போதைய காலங்களில் - சமையலுக்கு எனது அம்ம என்னை கடைக்குச் சென்று தேங்காய் வாங்கி வரச் சொல்லுவார்கள். சில நேரங்களில் நான் சென்று கேட்கும்போதுதான் கடைக்காரர் புதிய தேங்காயினை உடைப்பார். அப்படி இருந்தால் - ஒரே மகிழ்ச்சிதான், ஏனென்றால் அந்தத் தேங்காய் தண்ணீரை சிறுவனான எனக்கு கொடுத்து விடுவார்கள். அந்தத் தேங்காயினை அவர் உடைக்கும் அழகே தனிதான். முதலில் அதன் குடுமியினைப் பிடித்து அந்த நார்களை எல்லாம் எடுத்து விடுவார். அதன்பிறகு, அந்தத் தேங்காயினை இடது கையில் இலாவகமாகப் பிடித்து, தேங்காய் எடுக்க உதவும் சற்று கணமான இரும்பால் அதை ஒரு அடி அடிப்பார். பின்னர் தேங்காயினை சற்று சுழற்றி மீண்டும் ஒரு முறை அடிப்பார். தேங்காய் உடைந்துவிட்டது என்பதை அது எழுப்பும் சப்தத்தைக் கொண்டே கணித்து விடலாம். பின்னர் அது உடையும் தருவாயில் இருக்கும்போது, என்னிடம் கொடுத்து குடிக்கச் சொல்லுவார். அதை இரு கைகளில் பிடித்து, மெதுவாக, தேங்காயினை இரண்டாகப் பிழந்தால் இரு மழையின் நடுவில் இருந்து வீழும் அருவி போல, மெதுவாக வழியும். ஆகா, என்னே ஒரு ஆனந்தம் நான் ரசித்த/ருசித்த - முதல் தேனருவி - இதுதான் தேங்காய் தண்ணீர்...




வாங்கி வந்த தேங்காயினை, சட்னி செய்வதற்குத் தயாராகும்போது, சில நேரங்களில் நானும் பங்கெடுத்துக் கொள்வேன். அம்மியின் நடுவில் - பொறி கடலை, சிறிதளவு உப்புக் கல், மிளகாய் வைத்து அதனுடன் ஒன்றிரண்டு தேங்காய் சில்களையும் வைத்து விடுவார் என் அன்னை. பிறகு அம்மிக் குழவி எடுத்து இலாவகமாக அரைக்க ஆரம்பிப்பார். சில சமயஙளில், தேங்காய் மட்டும் நழுவிக் கொண்டு ஓடும். அதைப் பிடித்து மீண்டும் வைத்து அரைப்பார். அப்படி பாதி அரைபட்ட நிலையில் இருக்கும் தேங்காய் தனிச் சுவையுடன் இருக்கும். அதன் தோல்கள் பாதி நீக்கப்பட்டு, அதனுடன் உப்பு, மிளகாய் கூட்டணி அமைத்து ,அதன் சுவையினைக் கூட்டியிருக்கும். இதற்காகத்தான் என்னுடைய பங்கேற்பு...




கோயில்களில் தேங்காய்களை உடைத்து, அதை அபிசேகத்திற்குப் பயன்படுதாமல், வீணாகப் போகும் அந்தத் தண்ணீரைக் காணும்போதெல்லாம், அன்றிலிருந்து இன்றுவரை, அந்தத் தேங்காயினைப் போல எனது மனதும் தான் உடைந்து போகிறது. அதை நமக்குக் கொடுத்தால் என்ன? என்றுதான் கேள்வி எழுகிறது.



கார்த்திகை தீபம்:


கார்த்திகை தீபத்தை விளக்கில்தான் ஏற்ற வேண்டுமா? ஏன் சிரட்டாயில் [கொட்டாங் குச்சியில்] ஏற்றக் கூடாதா?


கார்திகை தினத்தன்று இரவு - நான் மற்றும் என் நபர்களுடன் சேர்ந்து, சிரட்டையில் ஒரு மெழுவர்த்தியினை வைத்துக் கொண்டு, தெரு முழுக்க வலம் வருவோம். அளவில் சிறியதான மெழுகுவர்த்தியினை - சிரட்டையின் ஒரு ஓரத்தில் வைத்துக் கொண்டு -அதை சைக்கிளின் டைனைமோ மாதிரி ஆக்கி கையில் எடுத்துச் செல்வோம். காற்றின் அளவு மிக மிகக் குறைவாக இருந்தால், சிரட்டையின் மேலும்கூட ஒரு மெழுகுவர்த்தியினைக் கொழுத்திக் கொள்வோம். இரு கைகளாலும் அந்தச் சிரட்டையினைப் பிடித்துக் கொண்டு, காற்று வந்து மெழுவர்த்தியினை அணைத்துவிடாதவாறு நாங்கள் அந்த சிரட்டையினை அணைத்துக் கொள்வோம். அப்போது அதில் வெளிப்படும் சூடானது மெல்லிய ஒரு சந்தோசத்தைக் கொடுக்கும்.

இன்றெல்லாம் காபி அருந்துபோது, இரு கைக்களாலும் பிடித்துக் கொண்டு குடித்தால், எனக்கு இந்த நினைவுகள்தான் நெஞ்சில் ஓடும்.





கட்டியணைத்து - உன்னை
அணைக்க வருகிறது - காற்று,
... உன்னை அணைக்க;
கட்டியிவனைத் தட்டிவிட்டு - உன்னை
அணைக்கிறேன் - நீ அணையாதிருக்க...



--- "நினைவாணிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் நினைவுகள் தொடரும்"

பயணத்தில் ரசித்தது...

பயணத்தில் ரசித்தது [அருப்புக்கோட்டை பேருந்து நிலையம்]



நம்ம ஊரு நக்கலுக்கு - ஓர் உதாரணம்


பேருந்து நிலையத்தில் - கொய்யாப்பழம் விற்கும் ஒரு அம்மா "சீனி கொய்யா, சீனிக் கொய்யா" என்று கூவிக் கூவி விற்கிறார். அவரிடம் பெரியவர் ஒருவர் சென்று விலை எவ்வளவு என்று விசாரிக்கிறார். அதற்கு அவர் ஒரு விலை சொல்ல- வாங்க வந்தவரோ - என்னம்மா இவ்வளவு விலை என்று கேட்கிறார். அதற்கு பழம் விற்கும் அந்த அம்மா - "அண்ணே, வாங்கிச் சாப்பிடுங்க - சீனி மாதிரி இனிக்கும் என்கிறார். உடனே வாங்க வந்தவர், "அதற்கு நான் சீனியவே ரேசன் கடையில வாங்கிக்குவேனே - விலையும் இந்தப் பழத்தைவிட கம்மி"? என்று நக்கல் செய்கிறார். பிறகு சிரித்துக் கொண்டே, ஒரு சிறிய கொய்யாப் பழத்தை எடுத்து சாபிடுகிறார்; சாப்பிட்டுக் கொண்டே ஒரு கிலோ பழம் வாங்கிச் செல்கிறார்.


எதையோ இழந்து கொண்டிருக்கிறோமோ என்று மனதோரம் வழிக்கிறது...

நீ வருவாயென...




திருமணமான - மறு
தினமே - மறு

திருமணத்திற்காகக் காத்திருக்கிறேன் -

திருமண மண்டபம்.

Wednesday, November 21, 2012

அப்படியென்றால்...


தமிழனாக இருப்பது அடையாளம் -ஆனால்

சாதிகளாகப் பிரிவது அவமானம்.


இதைப் படித்தவுடன் - என் மனதில் ஆயிரம் கேள்விகள். அவை இதோ - இங்கே...






அப்படியென்றால், [சாதிகளாகப் பிரிவது தவறெனில் - மொழிகளாகப் பிரிவதும் ஏன் தவறில்லை]


இந்தியனாக இருப்பது அடையாளம் -ஆனால்

மொழிகளாகப் பிரிவது அவமானம். [இது சரியாகத்தானே இருக்கும்]



அப்படியென்றால் [மொழிகளாகப் பிரிவது தவறெனில் - நாடுகளாகப் பிரிவதும் ஏன் தவறில்லை]


பிரபஞ்சம் என்பது நம் அடையாளம் -ஆனால்
நாடுகளாகப் பிரிவது அவமானம். [இது சரியாகத்தானே இருக்கும்]


என்னைப் பொறுத்தவரை...
மனிதம் என்பது நம் அடையாளம் - மனித உணர்விலிருந்து பிரிவது அவமானம்