Friday, October 4, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்...


மிஷ்கின் - இவரது இயக்கத்தில் வெளிவந்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்துபோன ஒரு படம்தான் - 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்'. திரைக்கதையினை அற்புதமாக செதுக்கி இருக்கிறார்; காமெடி இல்லையென்று சொன்னால்கூட, திரையரங்கில் பலரும் சில காட்சிகளில் சிரிக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக ஒரு போலீஷ்காரர் கொல்லப்படும்போது. இப்பொழுது யோசித்துப் பார்த்தால் - 'அவரின் நிலையில் இருந்து அதை யோசிக்கத் தவறியதற்காக வருத்தம் மேலிடுகிறது'. பாடல்கள் இல்லாமல் வெளிவந்த வெகுசில தமிழ் படங்களில் இதுவும் ஒன்று. அது என்னவோ தெரியவில்லை பாடல்கள் இல்லாமல்,வெறும் பின்னணி இசையினை மட்டுமே நம்பி படம் எடுக்கும்போது (தமிழில்) எப்போதும் அந்தப் பின்னணிக்கு முன் நிற்பவர் நம்ம ராசாதான். அருமையாக பதிவு செய்து இருக்கிறார். இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு நடிகனாகவும் மிஷ்கின் வெற்றி பெற்று இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்ததாக இசை, இரவென்றாலே அமைதிதான். அந்த அமைதியின் கண்ணியம் சிறிதும் குறையாமல், குழையாமல், அச்சுப் பிசகில்லாமல் இரவோடு இரவிற்கு இசை சேர்த்து இசையென்ற ஒன்றை மறந்து நம்மைக் கதையோடு உறங்கச் செய்திருக்கிறார் இளையராஜா அவர்கள். இசையால் மழை வருவதைக் கண்டதில்லை, இசையால் கண்ணீர் வருமென்பதை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். இந்தப் படத்திலும்தான்.

படத்தில் நிச்சயமாக ஒரு "Flash back" உண்டு என்று எண்ணிப்பார்த்துக் கொண்டிருக்கொம்போது, மிஷ்கின் இந்தப் படத்தின் தலைப்போடு சிறு கதையினை (இப்படத்தின் நாடி) எடுத்துக்கூறும்போது அப்ளாஷ் அள்ளுகிறார். மேலும் படம் முடிந்தபிறகு பெயரோடு காரணப்பெயர்களை இணைத்திருப்பது அருமை...


தமிழில் இதுபோன்ற படங்கள் மேலும் மேலும் வந்து இந்த சினிமாவினை அலங்கரிக்க வேண்டும்... :)