இன்னவென்று அறியும் முன்னே
இழுத்துச் செல்லப்பட்டேன்;
எங்கோ
கட்டுண்டுள்ளேன்,
கட்டும் கயிறு நானளித்தது,
கட்டியது நானல்ல…
எங்கோ இருக்கிறேன்,
ஏன்,
எதற்கு,
எப்படி என்று கேள்விகள்
எழவில்லை…
காணும் காட்சிகள் அனைத்தும்
தெளிவில்லாது இருக்கின்றன,
தெளிவில்லாத பிம்பங்கள்தான் என்று
தெள்ளத்
தெளிவாகத் தெரிகின்றன,
தெரிந்தும் – தெளியவில்லை
தெளிவில்லாத என்
எண்ணங்களும், தெளிவில்லாத பிம்பங்களின்
வண்ணங்களும்…
பட்டப் பகலாகட்டும்,
நட்டநடு நிசியாகட்டும்,
பலர் இருக்கிறார்கள்,
இதற்கென்று இல்லாமல் எதற்கோ
இருக்கிறார்கள்,
பலர் இருந்தும்,
கண்ட
காட்சிகள் அனைத்திற்கும்
நான் மட்டுமே சாட்சியாகிறேன்;
முடிவில்லாத ஒன்றாகவே எப்போதும்,
ஆரம்பம் என்று ஒன்று இல்லாதிருப்பதாலா?
ஏன், எதற்கு, எப்படி
என்று
எண்ணத்தோன்றவில்லை – நான் வீடு திரும்பும்வரை,
நான்
கனவு கலைந்து எழும்வரை !?!?!?
No comments:
Post a Comment