Tuesday, January 16, 2018

எங்கும் இலக்கணம் - தேவை இக்கணம்!

நம் அன்றாட வாழ்வில் தமிழ் இலக்கணம் சார்ந்து நாம் பேசுகிறோமா? இல்லையா? என்ற எனது கேள்விக்கு பிறந்த பதில்தான் இந்தக் கட்டுரை.  அவ்வாறு என்னுள் எழும் கேள்வி அலைகளில் நீந்தி வந்த வார்த்தைகளை அள்ளி எடுத்து, கற்பனை தொடுத்து எழுதும் இக்கட்டுரையும் தமிழ் இலக்கணம் சார்ந்ததுதான். வழக்கம்போலவே, நான் எழுதும் இக்கட்டுரையில் பிழைகள்/குறைகள்  இருக்கலாம், இருந்தாலும் எனக்கு  சரியென தெரிந்ததை எழுதுகிறேன்.

இலக்கண நடைமுறையானது, இலக்கிய பதிப்புகளுக்கு மட்டும்தான் இருக்க வேண்டுமா? அது ஏன் நமது அன்றாட நடைமுறை பேச்சோடு இருக்கக் கூடாது? நடைமுறையில் அவ்வாறாக ஓரளவிற்கு ஒத்துப் போகின்ற சில இலக்கணங்களை பற்றித்தான் இந்தப் பதிவில் எழுதுகிறேன்.

தமிழ் இலக்கணத்தில் மிக முக்கிய இடம் வகிப்பது "அணி". இந்த அணியானது பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அதில் எனக்கு பரிட்சயமான நமது அன்றாட வாழ்க்கை நடைமுறையோடு ஒத்துப் போகின்ற சில அணிகளை பற்றிப் பார்க்கலாம்.

தற்குறிப்பேற்ற அணி - இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும்.
எ.கா:

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட
                               சிலப்பதிகாரம்

பொருள்: கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.

இதை நமது நடைமுறையில் பெரும்பாலான இடங்களில் நாம் கண்டிருப்போம். இதை மேலோட்டமாக சொன்னால் "Build-up" செய்வது என்று கூட நாம் கூறலாம். காக்கை உக்கார பனம்பழம் விழுந்தது என்பது இந்த ரகம்தான். கவிஞர்கள் - ஒரு சில பெருந்தலைவர்கள் இறக்கும்போது, திடீரென மழை பொழிந்தால் "வானம்கூட கண்ணீர் வடித்தது" என்று சொல்வதும் இந்த ரகம்தான் (Build-up). மொத்தத்தில் "Build-up" செய்யும் பெரும்பாலானவை இந்த அணிவகையினையே சாறும்.

எடுத்துக்காட்டு உவமையணி - நேர்ப்பொருளில் வெளிப்படையாகச் சொல்வது. உவமையும் உவமேயமும் தனித்தனித் தொடர்களாக வரும். உவம உருபு வெளிப்பட வருவதில்லை.
எ.கா:

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு

பொருள்: மணற்கேணியானது எவ்வளவு ஆழமாகக் தோண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும். அதே போல மனிதர் எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களது அறிவு பெருகும். இங்கு மணற்கேணி தோண்டப்படுவது உவமையாகும். மனிதர் கற்பது உவமேயம் ஆகும். போல என்னும் உவம உருபு வெளிப்பட வரவில்லை.

அழகர் மலை படத்தில் - வடிவேலுவை உடனடியாக குடியை நிறுத்த வேண்டுமென்று கதாநாயகன் சொல்வர். அதற்கு வடிவேலு அவர்கள் கொடுக்கும் விளக்கம் இந்த வகையினையே சார்ந்தது.


குடியை நிறுத்தணும்னா "Full" அ "Half" ஆக்கணும், அப்புறம் "Half" அ "Quarter" ஆக்கணும். பிறகு "Quarter" அ "Cutting" ஆக்கணும், பிறகு அதை தீர்த்தம் மாதிரி உறிஞ்சி குடிச்சி "Slow" ஆ "Land" ஆகணும்னு சொல்வர். "Slow Landing" என்பதுதான் இங்கு உவமை - அதாவது ஒரு "Flight" எப்படி தரையில் இறங்கும்போது அதன் வேகத்தை படிப்படியாக குறைத்து தரையில் நிதானமாக இறங்குகிறதோ அது மாதிரிதான் குடியையும் நிதானமாக நிறுத்த வேண்டும் என்று சொல்வார். ஆக, "Slow Landing" என்பது உவமையாகவும், குடியை நிறுத்துவது என்பது உவமேயமாகவும் அமைகின்றது.

இரட்டுற மொழிதல் - ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுறமொழிதல் அணி எனப்படும். இதனைச் சிலேடையணி என்றும் அழைப்பர்.

அபூர்வ சகோதரர்கள் படத்தில் வாலி அவர்கள் எழுதிய ஒரு பாடலை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
"கன்னி பொண்ணா நெனச்சு கார தொடணும்
கட்டினவன் விரல் தான் மேல படனும்
கண்டவங்க எடுத்த கேட்டுபோயிடும்
அக்கு அக்கா அழகு விட்டு போயிடும்
தெரிஞ்சவந்தான் பாபா பபபபா
ஓட்டிடன்னும் பாபா பபபபா
திறமையெல்லாம் பாபா பபபபா
அவன் காட்டனும் பாபா பபபபா
"
பெண்ணையும் காரையும் அவர் ஒப்பிட்டு இதில் எழுதியிருப்பார். ஒரே சொற்றோடர்தான் ஆனால் இருவேறு பொருள்.

ஆனந்தம் படத்தில் கதைநாயகர்களின் கடையினை இடித்த பிறகு, அவர்களுக்கு பெண் தருவதாக சொன்னவர் "இப்போதைக்கு என்னுடைய பெண்ணைக் கொடுக்க முடியாது, முதலிலேயே இது புறம்போக்கு இடம் என்று தெரிந்து இருந்தால் நான் முதலிலேயே மறுத்திருப்பேன்" என்பார். இதில் புறம்போக்கு என்ற ஒரே வார்த்தையில் அவர் - மணமகன் வீட்டாரையும், இடிக்கப்பட்ட இடத்தையும் சேர்த்து கூறுவார். இரட்டுற மொழிதலினுக்கு இது ஒரு மிக சிறந்த உதாரணம்.


சொல் பின்வருநிலையணி -  செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளிலோ அல்லது வேறு ஒரு பொருளிலோ பின்னரும் பலமுறை வருவது.

பஞ்சதந்திரம் படத்தில் வரும் ஒரு காமெடி காட்சியினை இதற்கு உதாரணமாக்கலாம். கதைநாயகர்கள் காரில் இருக்கும்போது, காவல் அதிகாரியிடம் உரையாடும் "முன்னாடி, பின்னாடி" வார்த்தைகள் ஒவ்வொரு இடத்த்திலும் அதன் பொருள் மாறும். சில இடங்களில் "முன்னாடி" என்பது "பின்னாடி"யாகவும், "பின்னாடி" என்பது "முன்னாடி"யாகவும் பொருள் மாறிக்க கொண்டே இருக்கும்.

அதே காமெடியில் முதலில் நாகேஷ் அவர்களிடம் போலீஸ் "ஊது, ஊது" என்று சொல்வார். அதற்கு நாகேஷ் அவர்கள் "ரொம்ப இலைச்சுட்டேன்ல" என்று சொல்வார். அவர் கேட்கும் அர்த்தம் வேறு, இவர் சொல்லும் அர்த்தம் வேறு. இதுவும் ஒரு வகையில் இரட்டுற மொழிதான் (என்னைப் பொறுத்தவரையில்)

வஞ்சப்புகழ்ச்சியணி - புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வதும், இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும்.

நமது அன்றாட வாழ்க்கையில் இதை அடிக்கடி பயன்படுத்தியிருப்போம். 23-ஆம் புலிகேசி படத்தில், பாணபத்திர ஓணாண்டி புலவர் அரசரை நோக்கிப் பாடப்படும் பாடல் சிறந்த உதாரணம்.
"அரசியலில் நீ தெள்ளியதோர் முடிச்சவிக்கி
தேடிவரும் வறியவர்க்கு மூடா
நெடுங்கதவு உன் கதவு
என்றும் மூடாமல் நீ உதவு
எதிர்த்து நிற்கும் படைகளை நீ புண்ணாக்கு
"
இப்படியாக பாடப்பெறும் அக்கவிதையினைக் கேட்டதும் அரசர் கோபம் கொள்வதும் அதற்கு புலவர், வேறு பதில் உரைப்பதுமாக வரும்.

சமீபத்தில் "Impotent" வார்த்தையினை வைத்து பிரச்சனை எழுந்தது. இதற்கு அப்படியா அர்த்தம் என்றார்கள்? ஒரு தரப்பு; அப்படித்தான் நான் கூறினேன் என்றது மற்றோரு தரப்பு. அதற்கு என்ன அர்த்தம்/இலக்கணம்? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

எப்படிப் பார்த்தாலும் நாம் இலக்கணத்தோடு இணக்கமாகத்தான் இருக்கிறோம் என்றெண்ணும்போது மகிழ்ச்சி மேலிடத்தான் செய்கிறது.

உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே!!!

No comments: