நேற்று இரவு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "சூப்பர் சிங்கர் T20"-யினைப் பார்த்தேன். சிறப்பு அழைப்பாளராக நடிகர் கமல் அவர்கள் பங்கு பெற்றதால் நிகழ்ச்சியினை முழுமையாகப் பார்த்தேன்.அப்போது, போட்டியின் முதல் பாடலாக "சலங்கை ஒலி" திரைப் படத்திலிருந்து ஒரு பாடல் பாடினார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பாடலைக் கேட்டதும் என்னுடைய பழைய நினைவுகள் நினைவுக்கு வந்தன.
இந்தப் பாடலை அடிக்கடி கொடைக்கானல் பண்பலையில் கேட்டதுதான் ஞாபகம் வருகிறது. அதுவும் இரவு நேரங்களில் இந்தப் பாடலைக் கேட்டால் ஏதோ ஒரு இனம்புரியாத ஒரு சுகம் கிடைக்கும். அப்பொழுதெல்லாம் எங்களது ஊரில் இரவு நேரங்களில், எதாவது பழுது காரணமாக மின்சாரம் தடைபட்டால் அவ்வளவுதான். மறுநாள் வரைக் காத்திருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட நேரங்களில், எனது வீட்டுத் திண்ணையில், கைகளையே தலையணையாக்கி படுத்திருக்கும்போது, நிசப்தமான அந்த இரவில் பக்கத்து வீட்டு ரேடியோவில்-ஒளிபரப்பு, மெல்லியதாக என் காதுகளில் கேட்கும்.
அதில் பேசுபவரும் அவ்வள்வு மெல்லியதாகப் பேசுவார். அப்போது அவர், "இது கோடைப் பண்பலை வானொலி நிலையம். அடுத்து வரும் பாடல், இளையராஜாவின் இசையில், சலங்கை ஒலி திரைப்படத்திலிருந்து... ஜானகி மற்றும் S.P. பாலசுப்ரமணியம் குரலில்" என்று சொல்லிவிட்டு அந்தப் பாடல் ஒளிபரப்பாகும்; அந்த நினைவுகள், இன்னும் என் நினைவுகளில் நிழலாடிக் கொண்டுதான் இருக்கிறது.
பாடல் ஆரம்பமே படு தூளாக இருக்கும். யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே எனபது போல, இந்தப் பாடலினைப் பற்றி துதி பாடுவதாகவே முதல் சில நிமிடங்களுக்கு இசை ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த இசையோடு பயணித்துக் கொண்டே நம் ஜானகி அவர்கள், இசையோடு இசைந்து பாடுவார்கள்.முதலில் சில நொடிகளுக்கு மெல்லியதாக இசை மட்டுமே இருக்கும், பின்பு ஒலிக்கும் அந்த வரிகள்...
"இது மெளனமான நேரம் "
முதல் வரியினை ஜானகி அவர்கள் பாடுவதே மிகச் சிறப்பாக இருக்கும்.
"இது மெளனமான நேரம் " என்பதை சற்றே ஏற்ற இறக்கத்தோடு பாடுவார். குறிப்பாக மூன்று வார்த்தைகளுக்கும் ஒவ்வொருவிதமான ஏற்ற இரக்கங்களோடு பாடும்போது, அந்த ஒலிக்கேற்றாற்போல மெல்லியதாக தாளாட்டு பாடுவதுபோல நம்ம ராசா இசை கொடுத்திருப்பார்.எப்படி அய்யா இப்படி இசை அமைத்தீர்கள் என்றுதான் வியக்கத்தோன்றுகிறது எனக்கு.
அவ்வப்போது இடையிடையே வரும் "குக்கூ குக்கூ..."என்று குயிலின் ஓசையினைப் போல வரும் அந்தப் புல்லாங்குழலின் இசை உயர் ரகமான ரசனை.
இசையே, இவரைப் பார்த்து "என்னைப் பெத்த ராசா" என்று சொல்லி எத்தனை முறை தன்னைத் தானே சுத்திப் போட்டுச்சோ தெரியவில்லை. ஆகா, ரஜா ராஜாதான்.
அந்தப் பாடலை அவ்வளவு அற்புதமாக உருவாக்கியிருப்பர்கள். அந்த இசையிலேயே அந்தப் பாடலின் உள் அர்த்தம் விளங்கிவிடும் அளவிற்கு பாடலுக்கேற்ற இசையினைக் கோர்த்து இருப்பார் நம் "இசை ராஜா, இசை இன்னிசை இம்சை அரசன் - இளையராஜா". தாளத்திற்குப் பாடலா அல்லது பாடலுக்கு தாளமா என்பதை கண்டே-பிடிக்க முடியாத அளவிற்கு அவ்வளவு அற்புதமான ஒரு கலவையாக இருக்கும் அந்தப் பாடல்.
நம்ம ராசா சொன்ன மாதிரி "இந்த இசையென்று ஒன்று இல்லாமல் போயிருந்தால் மனித குலம் என்னவாகியிருக்கும்?" என்ற கேள்விதான் என்னுள் எழுகிறது. இந்தப் பாடலின் ஆரம்பித்தில், முதல் வரிக்கும் அடுத்த வரிக்கும் சிறிது இடைவெளி இருக்கும், இசையிலும்தான். ஆனால், இந்த இடைவெளியினைக்கூட ஒரு இசையாக மாற்றிய பெருமை இவரைத்தான் சேரும். அவர் பாடப் பாட அப்படியே அந்தப் பாடலில் இலயித்துபோய் விடுவேன்.
அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த கமல் அவர்களும் ராஜாவினை ஏகமாகப் புகழ்ந்தார் "அவர் ஒரு இசை ராட்சசன்" என்று.
" இது மெளனமான நேரம்... இள மனதில் என்ன பாரம் " இந்தப் பாடலின் வரிகள்தான் தற்போது என் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
1 comment:
மௌனமான நேரம்: கட்டுரையைப் படித்தேன். வினோத் எனது நெருங்கிய நண்பர் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எனக்கு அவர் பழக்கம். அவர் ஒரு நல்ல இசை ரசிகர் என்பது தெரியும். நல்ல கவிதைகள் எழுதுவார் என்பதும் தெரியும். இந்த கட்டுரையை படித்த பின்பு இன்னும் அவரை சரியாக தெரிந்துகொள்ளவில்லை என்பது தெரிகிறது. அவரை ஓர் பத்திரிகையாளனாகவும் விமர்ஸகராகவும் இந்த கட்டுரை எனக்கு காட்டுகிறது. அவருடைய கட்டுரையைப் படிக்கும்போது ஒரு தரமான தமிழ் பத்திரிகையை வாசிப்பது போல் இருந்தது. இசை,திரை இரண்டிலும் அவருடைய ரசணையின் ஆழம் தெரியும். இப்போது தான் கண்டுகொண்டேன் இயலிலும்.
Post a Comment