Friday, June 27, 2014

It-அதுBut-ஆனால்What-என்ன?

தமிழ் சொற்கள் தற்போதைய தொழில் நுட்பத்தை, எவ்வாறு இணைக்கின்றன என்ற என் கேள்விக்குப் பதிலாய் பிறந்தது இந்தப் பதிவு,


கவிதை - ZIP Files
கட்டுரை - UnZip Files
களவும் கற்று மற - Temple Run App
கற்றது கையளவு - Smart Phone

உழுதுண்டு வாழ்வாரே - Hay Day App
உடையது விளம்பேல் - Don't share your ATM Pin with others

சொன்னைதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை - Talking Tom App
யாதும் ஊரே யாவரும் கேளீர் - Roaming Free

Wednesday, June 25, 2014

செத்துப் பிழைப்பவன்


நொடியினில் பிறந்து,
நொடியினில் வாழ்ந்து,
நொடிகையில் பிரசவித்து,
நொடிதனில் நொடிந்திடும்,
நொடிக்கு நொடி செத்துப் பிழைத்திடும்,
இறக்கையில் பிறந்திடும் நொடியே...

Tuesday, June 24, 2014

தூக்கம் எரிந்த இரவு


அன்றொரு நாள் இரயில் பயணத்தில்,
மணி இரவு பத்தினை நெருங்கிய வேளையில்,
அவரவர் இருக்கைகளில் - அவரவர்கள்,
அரைநாள்
அமரராகத் தயாராகிய வேளையில்,
ஏற்கனவே எனக்கென
ஒதுக்கப்பட்ட தாழ்தளப் படுக்கையினை,
உயர்வயதுப் பயணிக்கு
ஒதுக்கிவிட்டு,
அப்பொழுதான் உணவுண்ண
ஆரம்பித்த அந்தப் பெரியவர்களுக்கு மத்தியில்,
நடுத் தளத்தினை எழுப்பி,
நான் துயில்கொள்ள
நடு நிசியாகிவிடுமோவென்று,
எம் பகுதியில் மட்டும்,
எம்மையே வெறித்துப் பார்த்தபடி
எரிந்துகொண்டிருந்த விளக்கோடு,
என் தூக்கமும் எரிந்து கொண்டிருந்தது...

Monday, June 23, 2014

இதையெல்லாமா எழுதுவாய்ங்க?


முன் குறிப்பு: இந்தப் பதிவானது உங்களுக்குள்ளேயே இருக்கட்டும், வெளியில் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம், படித்தவுடன் மனதிலிருந்து அழித்து விடவும்.

சில நேரங்களில் ஒரு கட்டுரை அல்லது ஒரு நிகழ்வினைப் பற்றி எழுதும்போது, நமக்கு சில சந்தேகங்கள் வந்துவிடும் இதைப் பற்றி நாம் எழுதலாமா வேண்டாமா என்று? இதை எழுதினால், யாராவது கவனிப்பார்களா? அப்படியே கவனித்தாலும் இது அவர்களுக்குப் பிடித்தமான ஒன்றாக இருக்குமா? என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் மனதிற்குள் எழும். எனக்கும் அப்படித்தான் இந்த பதிவினை எழுதும் முன், மிகப் பெரிய விவாதமே என் மதிற்குள் நடந்துவிட்டது. ஒரு வழியாக, இந்தக் கேள்விகளையெல்லாம் சரிகட்டிவிட்டு எழுத ஆரம்பித்தேன்.

"காற்றுக்கும், கருத்துக்கும்தான் வேலியே இல்லை என்று", இதனை எழுதியேதீர வேண்டுமென்று, எழுதுவதற்கு முன்பிருந்த தீவிரமான மன நிலையானது, எழுதும்போது சாந்தமடைகிறது, தீவிரமடைய மறுக்கிறது. ஆரம்பித்தவுடன்தான் எனக்குக் குழப்பமாக இருந்தது இதை எப்படி, எதிலிருந்து ஆரம்பிப்பது என்று. சரி, ஆனது ஆகிவிட்டது இன்னும் ஐந்தாறு வரிகள்தானே, எழுதித் தீர்த்துவிடலாம் என்றால் மனமானது இலேசாக பயம் கொள்கிறது. ஏனென்றால், இதைப் படித்துவிட்டு, இதைப் பற்றி வெளியில் யாரிடமும் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்றொரு குழப்பமான மன நிலை வேறு. பிறகுதான் யோசித்துப் பார்த்தால், இந்த வளைதளமானது பலரும் பார்த்துச் செல்வதுதானே. பின்னர் இதில் எப்படி இரகசியம் காக்கப்படுமென்று உரைத்தது. இருந்தாலும் பரவாயில்லையென்று, இந்தப் பதிவினைப் பதிவு செய்துவிட்டேன். இனிமேல் இந்த இரகசியம் காக்கப்படுவது உங்களது கைகளில்தான் உள்ளது.

இதைப் படித்துவிட்டு பிறரிடம் சொல்லிவிடாதீர்கள், அடித்துக் கேட்பார்கள், அப்பொழுதும் சொல்லிவிடாதீர்கள்... 

Friday, June 20, 2014

என்ன ஒரு வில்லத்தனம்?


இன்று  (20-06௨014) நடந்த சம்பவம் இது. நானும் எனது அலுவலக நண்பரும், "மதிய விருந்து உணவினை" முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் அலுவலகம் திரும்பி கொண்டிருந்தோம். மதிய வெயில் மண்டையினைப் பிழந்தது, 'உண்டே களைத்திருந்த' எங்களுக்கு மிகுந்த தாகமாகிவிட்டது. சரி, அலுவலகத்தின் எதிரிலிருக்கும் பழச்சாறு கடைக்குச் சென்று ஒரு 'எலுமிச்சை சோடா' சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம் என்று அந்தக் கடைக்குச் சென்றோம். எனது நண்பர், தனக்கு எதுவும் வேண்டாமென்று சொல்லிவிட்டார்.

"ஒரு Lime சோடா with Salt" என்று சொன்னேன், அதற்கு அவர், "கரண்ட் இல்லா" என்றார்.

"சரிங்க, எனக்கு "Ice வேண்டாம்" என்று சொன்னேன்.

அதற்கு அவர், "கரண்ட் இல்லா, சோடா இல்லா" என்றார்.

"அட ராமா, இவருக்கு தமிழ் வேற தெரியாதா? சோடா இல்லைன்னு சொல்றதுக்கே இவ்வளவு இழுவையா" என்று மனதுக்குள் முனுமுனுத்துக் கொண்டு, "சரி, ஒரு "Sweet Lime போடுங்க, அத, 'Ice' இல்லாம போடுங்க" என்றேன். சரியென்று மண்டையினை ஆட்டிவிட்டுச் சென்றார். பொதுவாக, சாத்துக்குடி சாப்பிடுவது, "மிக்சியில்" அடித்து குடிப்பதைவிட, அதைப் பிழிந்து சர்க்கரை சேர்த்து கலக்கிக் குடித்தால் அதன் சுவையும், மணமும் மாறாமல் இருக்கும். மாறாக மிக்சியில்அடித்துவிட்டால், அது நுரைத்துவிடும். அதன் மணமும், சுவையும் குறைந்துவிடும். எல்லா பெரிய பழச்சாறு கடைகளிலும், மிக்சியில் அடித்துத்தான் இதனைக் கொடுப்பார்கள். சில தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே இதனை இது போன்ற கடைகளில் குடிப்பதுண்டு. இன்று, இதற்கான நேரமென்று நொந்து கொண்டேன்.

கிட்டத்தட்ட 10 நிமிட இடைவேளைக்குப் பிறகு, "Juice" வந்தது. தொட்டுப்பார்த்தால் அவ்வளவு குளிர்ச்சியாக இருந்தது. அதை அவரிடம் காண்பித்து, "Ice இல்லாமத்தான் கேட்டேன்" என்றேன். அதற்கு அவர், "ஓ, 'Ice' இல்லாம இன்னொன்னோ?" என்றார்.

"இல்லீங்க, நான் கேட்டது ஒன்னே ஒன்னுதான், அதனால, "Cooling இல்லாம போட்டு கொண்டுவாங்க" என்றேன். அதை நேராக எடுத்துச் சென்று, மீண்டும் "மிக்சியில்" ஊற்றி சிறிது நேரம் ஒடவிட்டுக் கொண்டிருந்தார்கள். பின்னர், அதை ஊற்றி எடுத்துக் கொண்டுவந்து தந்தார்கள் "இப்போ, "Cooling" இருக்காது" என்று சொன்னார் அவர். அதற்கு நான் "இதை நீங்களே, வச்சிக்குங்க" என்று கடுப்பாக சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டேன். நம்மல ரோட்டுக் கடையிலதான் எமாத்துறான்னா இவனுமா என்று நொந்து கொண்டேன்.  நல்லவேளை, அப்படியே வாயுக்குள்ள வச்சிக்கிட்டு, "Cooling" போன பிறகு குடிக்கச் சொல்லாம போனானுவளே" என்று எண்ணிக் கொண்டு இடத்தைக் காலி செய்தேன்.

"'Sir'க்கொரு ஊத்தாப்பம் " நகைச்சுவை காட்சிபோல ஆகிவிட்டது இன்றைய எனது நிலை. கடை நடத்துகிறார்களாம் கடை... 

Thursday, June 19, 2014

ஏனென்று இன்றுவரை விளங்கவில்லை...


'லிஃப்டில்' ஒருவர் இறங்கியவுடன்,
சில நொடிகள்
தாமதத்திற்குப் பின்,
தானாக மூடிக்கொள்ளும்,
தானியங்கிக் கதவுக்குக்கூட காத்திராமல்,
தானாக இயக்கி,
நொடிகளை நொடியாக்க
முயற்சிக்கும் முயற்சி,
ஏனென்று இன்றுவரை விளங்கவில்லை...

கால்கடுக்க பேருந்துக்காக
நிற்கையில், நிறுத்தத்தில்
நிற்காமல் செல்லும்
பேருந்துகளை வசைபாடும் நான்,
பேருந்தில் அமர்ந்து செல்கையில்,
அவசரமாகச் செல்லவேண்டிய சூழலில்,
ஒவ்வொரு நிறுத்தமாக, நின்று செல்லும்
பேருந்தை வசைபாடுவது,
ஏனென்று இன்றுவரை விளங்கவில்லை...

ஒருவழிப் பாதையில்,
எதிர்திசையில்
எதிர்வருபவரைக் கண்டு
மனதிற்குள் வசைபாடும் நான்,
சுற்றிச்சென்றால், கால விரயமென்று
ஒருவழிப் பாதையில் - எதிர்திசையில்
ஒருஓரமாகச் செல்லும்
என்னை முறைத்துப் பார்ப்பவர்களை
மனதிற்குள் திட்டிக்கொள்ள்வது,
ஏனென்று இன்றுவரை விளங்கவில்லை...

உண்ணும் உணவின் விலை-அதன்
உற்பத்தி விலையினைவிட
பன்மடங்கு அதிகம் எனத்
தெரிந்தும், உறபத்தியினைப்பற்றி
சிந்திக்க மனம் மறுப்பது,
ஏனென்று இன்றுவரை விளங்கவில்லை...

செடியோ,கொடியோ வளர்த்தால்
எம் வீட்டிற்கு உணவாகும்;
மரம் வளர்த்தால்,
என் சந்ததிக்கும்
வலு சேர்க்கும் - இவையெல்லாம் தெரிந்தும்,
கண்ணிற்கு மட்டும் அழகாய் காட்சிதரும்,
சீமைச் செடிகளை வளர்ப்பது,
ஏனென்று இன்றுவரை விளங்கவில்லை...

தவறெனத் தெரிந்தும்,
தவறுகளைத் தவறாமல்
செயவது,
ஏனென்று இன்றுவரை விளங்கவில்லை...

Wednesday, June 18, 2014

எல்லை தாண்டும் "பயங்கர வாதம்"


வாதமானது, வாக்குவாதம், விதண்டாவாதம், பக்கவாதம் என்று பலவாக வகைப்பட்டிருந்தாலும், இந்தப் பதிவில் நான் பதிய இருப்பது 'பயங்கர வாதம்' பற்றியது. இது 'பயங்கரவாதம் பற்றியது அல்ல, "பயங்கர-வாதம்" பற்றியது. ரஜினி ஒரு படத்தில் சொன்னதுபோல, தமிழனுக்குத்தான் பேசப்பிடிக்குமே. எனவே, நம் அனைவருக்குமே இது பரீட்சயமான ஒன்றுதான்.

பொதுவாக ஒருவரைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டுமெனில், அவருடைய நண்பனைப் பற்றிச்சொல் என்பார்கள். ஏனென்றால், ஒருமித்த எண்ணங்களைக் கொண்டவர்களே நண்பர்களாக இருப்பது வழக்கம். ஆனால், இந்த 'வாதம்' விசயத்தில் அது சற்றே தவறானதாகும். பொதுவாக ஒரு நண்பர் கூட்டமென்றால், ஒருவர் பேசுவதற்கு காசு கேட்பார், ஒருவரோ அவருடைய பேச்சை நிறுத்துவதற்கு காசு கேட்பார், ஒருவர் அளவோடு அளவளாவுவார். இப்படி, 'பல வாதங்களும்' கலந்த கலவையாகத்தான் அந்தக் கூட்டம் இருக்கும். வாக்குவாதம் என்றால், நம்மவர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.


இதுபொதுவாக, ஒரே நண்பர்கள் கூட்டத்திற்குள்தான் அதிகம் காணப்படும். பொதுவாக, ஒருவனிடம் எப்படிப் பேசினால் அவன் கடுப்பாவானோ, அப்படிப் பேசித்தான் இந்த வாக்குவதததை ஆரம்பிப்பார்கள். இதைப் பெரும்பாலும், பொழுது போவதற்காகவேச் செய்வார்கள் உதாரணத்திற்கு, கிரிக்கெட்டில் ஒருவருக்கு சச்சின் அதிகம் பிடிக்குமென்றால், மற்றவருக்கு, ட்ராவிட்டைப் பிடித்திருக்கலாம். அன்றைய போட்டியில், எவரேனும் ஒருவர் அதிக ரன் எடுக்காமல் அவுட்டாகிவிட்டால்போதும்;. உடனே, அவர்களை வெறுப்பேற்றுவதற்கு, அந்த விளையாட்டுவீரரை மட்டம் தட்டுவர். உடனே நம்மவர்களும் பொங்கிவிட ஒரு அருமையான வாக்குவதாம் நடந்துவிடும்...அவரவர் பொறுமைக்கு எல்லையுண்டு, அந்த எல்லையினைமீறி வரம்பு மீறி வாக்குவாதம் செய்யும்போதுதான் இது 'எல்லை தாண்டும் பயங்கர-வாதமாகிறது'.

எங்கெல்லாம் இந்த 'எல்லை தாண்டும் பயங்கர வாதம்' நிகழ்கிறது என்பதை ஒன்றொன்றாகப் பார்ப்போம்.


குழாயடிச் சண்டை: பெண்கள் இந்த 'பயங்கர-வாதத்திற்கு' பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து இருப்பார்கள் என்றே எண்ணத்தோன்றும் அளவிற்கு இவர்களது குழாயடி சண்டையிருக்கும். யாராவது ஒருவர், வேறொரு தெருவிலிருந்து, இந்தத் தெருவிற்கு தண்ணீர்பிடிக்க வந்துவிட்டால் போதும், சும்மா கிடந்த வாய்க்கு அவுள் கிடைத்த மாதிரி சும்மா வசைந்து தள்ளிவிடுவார்கள். சும்மா சொல்லக்கூடாது, என்னமா 'வாதம்' செய்கிறார்கள் இந்தப் 'பயங்கர-வாதிகள்'???

நாய்கள் இராஜ்ஜியம்:

தெருவிலிருக்கும் நாய்கள் இருக்கிறதே, இவை மனிதர்களைக் காட்டிலும் எல்லைச் சண்டையில் சிறந்தவர்கள். அதுவும் குறிப்பாக, இரவு நேரத்தில் சொல்லவே வேண்டாம். அடுத்த தெருவிலிருக்கும் நாயானது இரவு நேரத்தில், பக்கத்துத் தெருவிற்குச் சென்றுவிட்டால் போதும். உடனே அந்தத் தெருவிலிருக்கும் அனைத்து நாய்களும் ஒன்றுகூடி அதை நோக்கிக் குரைக்க ஆரம்பித்துவிடும். அது நாயாக மட்டுமல்ல, நாமாக இருந்தாலும் இதே கதிதான்.


இரவு நேரங்களில், அவைகளுக்கு ஏதோ அடிமை சிக்குவதுபோல, எவரேனும் தனியாகச் சிக்கிவிட்டால் போதும், அப்படியே குரைத்து, குரைத்து அவர்களை ஒருவழியாக்கிவிடும். இவற்றில் சில நாய்களுக்கு கொஞ்சம் குசும்பு அதிகம், அவை, அப்படிச் சிக்கியவர்களைத் துரத்துவது போலவே பாவலா காட்டிக் கொண்டிருக்கும். அப்பொழுதெல்லாம் அவருடைய மனதில் இதுதான் ஓடிக் கொண்டிருக்கும் "நான் அப்படியே சாக் ஆயிட்டேன்." என்னமோ இதைப் பற்றி யோசிக்கும்போதெல்லாம், வடிவேலுவின் ஒரு காமெடிதான் நினைவுக்கு வரும்; நாம அடிச்ச டீக்கடைக்காரன், இருக்கானா, இல்லையான்னு பாருன்னு சொல்வார். அந்த டீக்கடைக்காரர் இவருக்குப் பயந்து, ஓட்டமெடுப்பதைப் பார்த்ததும் சொல்வார், நமக்கும் ஒரு அடிமை சிக்கிட்டான்டா... அதயேதான் இவைகளும் பின்பற்றுகின்றனவோ என்னவோ?

சரி, நாய்களுக்குத்தான் 'எல்லை தாண்டிய பயங்கர-வாதம்' என்றால், பேய்களுக்குமா? அட, ஆமாங்க. நம்ம ஊர்ல கேட்டுப்பாருங்க, டேய், அந்தக் கிணத்துல குளிக்காத, அங்கதான் அவரோட ஆவி சுத்துதுன்னு சொல்லுவாங்க; அடப்பாவிங்களா, உயிரோட இருக்கும்போதுதான் எல்லைக்குப் பிரச்சனை பன்றானுங்கன்னா, செத்த பிறகுமா? நடத்துங்கடா,,,


பேருந்து நிறுத்தச் சண்டைகள்:

மதுரையில் ஆரப்பாளையம் பேருந்து நிலையம், திண்டுக்கல்லில் மதுரை மார்க்க பேருந்து நிறுத்தங்களில், நீங்கள் இதை சர்வ சாதரணமாகப் பார்க்கலாம். பெரும்பாலும் அரசுப் பேருந்துக்கும், தனியார் பேருந்துகளுக்கும் இடையேதான் இந்தச் சண்டை நடக்கும். இளசுகள் பெரும்பாலும், தனியார் பேருந்தைத்தான் விரும்புவார்கள். அதனால், பெரும்பாலானோர், அரசுப் பேருந்தைத் தவிர்த்து, அதற்கு அடுத்துப் புறப்படத் தயாராக இருக்கும் தனியார் பேருந்தில் ஏற முயர்சித்துவிட்டால் போது. உடனெ இரு பெருந்து நடத்துனர்களுக்கும் இடையே பெரிய களேபரம் ஆகிவிடும். அப்பொழுதுதான், அவர்கள் நொடிகளைக் கண்க்கிட்டுச் சொல்வார்கள். "இன்னும் 30 நொடிகள் இருக்கு, அதுக்குள்ள நீ ஏன் வண்டியில் ஆள் ஏஏற்றுகிறாயென்று". சீரியசாகச் சண்டையிட்டுக் கொள்ளும் அவர்களைப் பார்த்தால், எனக்கு என்னவோ சிரிப்புதான் வரும். இது, நேரத்திற்கான, 'எல்லை தாண்டும் பயங்கர-வாதம்'.


சாலையோரங்களில் எல்லைதாண்டும் பயங்கர-வாதம்:

சமீபத்தில், அருப்புக்கோடடை அருகிலிருக்கும் இருக்கன்குடி கோயிலுக்குச் சென்று திரும்புகையில் ஒரு நுங்குக் கடையில் வண்டியினை நிறுத்தினோம். மழைக்கு ஆங்காங்கே காளான் முளைப்பது போல, வெயிலுக்கு ஆங்காங்கே நுங்கு, பழரசக் கடைகள் முளைக்கின்றன; நுங்குகளை வெட்டச்சொல்லிவிட்டு, அவரிடம், "எத்தனையென்று கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்" என்றேன். அவரோ, "நீங்களே எத்தனை சாப்பிடுகிறீர்கள் என்று கணக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்றார், கடின வேலைதான் எனக்கு.


அவர் ஒவ்வொன்றாக சீவித்தர, அப்படியே எடுத்து வாயில் இலபக்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர் வந்து, அவரிடம் வாக்குவாதம் செய்தார். என்னவென்று கவனித்தால், அவர் 100 அடி தூரத்தில், கரும்பு சாறு கடை வைத்து இருக்கிறாராம், அதனால் இவரது கடையினை இன்னும் பல அடிதூரம் தள்ளிவைத்து கொள்ளச் சொல்கிறார். சரிதான், இங்கேயுமா இந்த எல்லைப் பிரச்சினை என்று காசை கொடுத்துவிட்டு நகர்ந்தேன். இதுவும் ஒரு "எல்லை தாண்டும் பயங்கர-வாதம்தான்".

இப்படியாக, எல்லை தாண்டும் பயங்கர-வாதங்கள் பலவாக இருந்தாலும், எல்லாவற்றையும் இந்தப் பதிவில் இட இயலாது எனபதாலும், அப்படி நான் நிறுத்தவில்லையெனில், உங்களுக்கும் எனக்கும் இந்தப் பதிவில் எல்லைதாண்டும் பயங்கர-வாதம் வந்துவிட்டும். என்பதாலும், இந்த வாதத்தினை இத்தோடு முடித்துகொள்கிறேன்...

இந்த Blog-ஐத் தாண்டி, நானும் வரமாட்டேன், நீங்களும் வரக்கூடாது. "Comments-reply" ஆகத்தான் இருக்கனும்... வர்ர்ட்டா???

Tuesday, June 17, 2014

இரண்டாம் உலகம்


இவ்வுலகில் பிறந்த அனைவருக்கும் பிறப்பென்பது முதல் உலகமென்றால், இறப்பென்பது இரண்டாம் உலகம்தான். இது உயிர் கொண்ட ஜீவராசிகளுக்கு மட்டுமல்ல உயிரற்ற பொருள்களுக்கும் பொருந்தும். என்னதான், இந்த உலகம் ஒரே மாதிரி இருந்தாலும், சிறுவர்களின் உலகமே தனிதான், அவர்களது உலகத்தில்தான் பலபொருள்களும் தமது இரண்டாமவது உலகத்தை அடைகின்றன. இந்தப் பதிவானது, நான் என் சிறு வயதில் அனுபவித்த பல பொருள்களைப் பற்றிய தொகுப்பே ஆகும், அனேகமாக இது நம் அனைவருக்கான பதிவாக இருக்கும் என்பது என் எண்ணம். நான் பிறந்து வளர்ந்தது கிராமம் என்பதால், எமது பகுதியில் இருந்த சிறுவர்களின் இரண்டாம் உலகம் பற்றியே இந்தப்பதிவு.

சைக்கிள் டயர்:




துள்ளித்திரிந்த அந்தக் காலத்தில், சிறுவர்கள் இருக்கும் எல்லோரது வீட்டிலும் கதவின் ஓரமோ, வீட்டின் பின்புறமோ இந்த சைக்கிள் டயரானது கண்டிப்பாக இருக்கும். பொதுவாக, இது ஒவ்வொரு சிறுவனின் அடையாளமாக்வே இருக்கும். ஒருசிலர், மிக உறுதியான சைக்கிள் டயர் வைத்து இருப்பார்கள். சிலர், இலகுவான சைக்கிள் டயரும், சிலரோ இரு டயர்களை இணைத்து ஒன்றாக வைத்தும் இருப்பார்கள். காலையில் அதை உருட்டிக் கொண்டு சென்றால் வீடு திரும்பும்வரை அதை வைத்துக் கொண்டுதான் பல வேலையும், விளையாட்டுக்களும் அரங்கேறும். அந்தந்த டயருக்கு ஏற்றவாரு அதைச் செலுத்துவதற்கு ஒரு குச்சியினையும் தயார் செய்து வைத்திருப்போம். தவில்காரனுக்கு எப்படி தவிலும், குச்சியும் இரு கண்களோ அது மாதிரி எங்களுக்கு இவ்விரண்டும் இரு கண்கள். யாருடைய டயர் வலுவானது என்பதைக் காட்ட போட்டிகள் நடக்கும். அதில் முதன்மையானது, ஒன்றோடொன்று மொதச் செய்வது. போட்டியிடும் இருவர் எதிரெதிராக நின்று கொண்டு அவர்களது டயர்களை எதிரில் நிற்பவரது டயரை நோக்கிவிட வேண்டும், எதிரில் இருப்பவரும் அவ்வாறே செய்வார். அப்போது ஒன்றோடொன்று மொதிக்கொண்டு, யாருடைய டயரானது கடைசியில் கீழே விழுகிறதோ, அந்த டயர் வெற்றிபெற்றதாகக் கருதப்படும். சேவல் சண்டையே எங்களது விளையாட்டைப் பார்த்துத்தான் வைத்திருக்கக் கூடும். டயரினை வைத்துக்கொண்டு ஓட்டப்பந்தயம் நடக்கும், அதற்கு முன்பாக அனைவரும் டயரினைப் பிடித்துக் கொண்டு தரையில் வேகமாகத் தேய்க்கும்வண்ணம் அதைப் பின்னோக்கி இயக்குவோம். அப்போது அதைப் பார்ப்பதற்கு எதோ மிகப்பெரிய கார் ரேசில் டயர்கள் உரசிக்கொளவது போல இருக்கும். இப்படிப்பட்ட இந்த டயரானது எங்கள் கைகளில் கிடைப்பதே ஒரு வேடிக்கைதான், ஏதாவதொரு சைக்கிள் கடைக்கு அருகில் தூக்கியெறியப்பட்ட எதேனும் ஒரு பழைய டயர்தான் இப்படி எங்களிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும். முதல் உலகத்தில் உழைத்ததோ இல்லையோ எங்களது இரண்டாம் உலகத்தில் நிறையவே உழைத்திருக்கிறது...

சிகரெட் அட்டை:

காலியான சிகரெட் அட்டையினைக் கொண்டு ஒரு விளையாட்டு விளையாடியது உண்டு. ஒவ்வொரு அட்டைக்கும் ஒவ்வொரு மதிப்புண்டு. வெளிப்புற அட்டையானது அதிக மதிப்புடையாதாக இருக்கும். உதாரணமாக, "Wills" வெளிப்புற அட்டையின் மதிப்பு 20, "Panama"என்ற சிகரெட் அட்டையின் மதிப்பு 40, மஞ்சள்நிற சிகரெட் அட்டையின் மதிப்பு 10.


அட்டையினை ஒரு சதுர வடிவமாக செய்து கொள்வோம். பின்னர், ஒருவட்டம் வரைந்துகொண்டு, பந்தயத்திற்கு இத்தனையென்று ஆளாளுக்கு அந்த வட்டத்தில் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிக் கொள்வோம். பின்னர் 15 அடியளவிலிருக்கும் எல்லைக்குச் சென்று ஒரு செதுக்கிக் கல்லால் அந்த வட்டத்தை நோக்கி வீச வேண்டும். அப்படிவீசும்போது அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் அட்டைகளானது, எத்தனை வெளியேறுகிறதோ அவை அத்தனையும் அவருக்குச் சொந்தம். இதைத் தடுப்பதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. அது வீசியவரது கல்லினை, எவராவது எல்லைக் கோட்டிலிருந்து அவரது கல்லால் தொடும்படிச் செய்துவிட வேண்டும். இதற்கு சொட்டி போடுவது என்று பெயர். அப்படிச் செய்துவிட்டால், அவர் எடுத்த அத்தனை அட்டைகளையும் அந்த வட்டத்திற்குள் மீண்டும் வைத்துவிட வேண்டும். இப்படி எல்லோரும் கற்களைக் கொண்டு எறிந்தபிறகு, வட்டத்திலிருந்து அதிகமான தூரத்தில் எவரது கல் உள்ளதோ அவர் முதலில் மீண்டும் அந்த இடத்திலிருந்து அந்த அட்டைகளை அடிக்க வேண்டும். இப்போது திரும்பப்பெரும் வாய்ப்பு கிடையாது. அவரது ஒருமுயற்சி தோற்கும்வரை அல்லது கட்டத்திலுள்ள அட்டைகள் காலியாகுவரை அவருக்கு வாய்ப்பு உண்டு. அப்படி எல்லாரும் முயற்சித்தபிறகு மிஞ்சிடும் அட்டைகளை மீண்டும் அடுக்கிவைத்து எல்லையிலிருந்து மறுபடியும் ஆரம்பிப்போம். இந்த விளையாட்டுக்காக, ஒவ்வொருவரும் செதுக்கிக் கல்லினைத் தேடி அழைவோம், நல்ல நண்பனைப் போன்றது, உறுதியான ஒரு செதுக்கிக் கல்.

அநேகமாக இப்போதெல்லாம் இந்த விளையாட்டு முற்றிலும் விளையாடப்படுவதில்லை என்பது எனது திடமான நம்பிக்கை.இந்த எண்ணங்களை மட்டுமே இப்போது என்னால் திரும்பப் பெற முடிகிறது...

சலசலக்கும்...ஓலை:

இப்போதெல்லாம் ஓலையென்று சொன்னால் அது என்னவென்று பலரும் கேட்கும் நிலை வந்துவிட்டது. அப்போதெல்லாம், எங்களோடு மிகவும் ஒட்டி உறவாடிய ஒன்றுதான் இந்த பனைஓலை. அனைத்து ஓடைகளின் இருபுறங்களிலும் இவை இருக்கும். எமது ஊரானது வறட்சிக்கு பிடித்தமான இராமனாதபுரம் மாவட்டத்திலுள்ளது, இங்கு பனைமரங்கள் மிக அதிகம்.


கோடை காலம் வந்துவிட்டால், காலை ஏழுமணிக்கெல்லாம் சைக்கிளில் பதனீர் கொண்டுவந்து விற்க ஆரம்பித்துவிடுவார்கள். பதனீருக்குச் சுவையூட்டுவதும் அழகூட்டுவதும் அந்தப்பனை ஓலைதான். ஒரு கீற்று பனைஒல்லையினை மடித்து, அதன் நடுவில் செம்பு நிறைய பதனீர் ஊற்றித்தருவார்கள். அப்படிக் குடித்துமுடித்த பனை ஓலைகளைக் கொண்டு காத்தாடி, கைக்கடிகாரம் என விளையாட்டுப்பொருள்களைச் செய்துகொள்வோம். இதன் ஆயுட்காலம் என்னவோ அன்றைய நாள் மட்டும்தான். ஏனென்றால், பனை ஓலை சீக்கிரமாகக் காய்ந்துவிடும். காத்தாடியென்றால், + போன்று வடிவம் வருவதற்காக நாட்டுக் கருவேல மரத்தின் முள்ளினை நடுவில் வைத்து பினைத்துவிடுவோன். பின்னர் அந்த முள்ளின் கொண்டைப்பகுதியினைப் பிடித்துக் கொண்டு வேகமாக ஒடுவோம், அப்போது அந்தக் காத்தாடியானது வேகமாகச் சுழலும், மேலும், சுழலும் வேகமனாது நம் கைகளில் உணர முடியும்...

புளிய முத்து:

முன்பெல்லாம் சாலையின் இருபுறமும் வெயில்படாத அளவிற்கு புளிய மரங்கள் அடர்த்தியாகவும் அதிகமாகவும் இருக்கும். பள்ளி சென்று திரும்பும்போதும், விடுமுறை நாட்களிலும், வேறு எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் புளியம்பழங்களைச் சுவைக்க முடிந்தது.


அப்படிச் சாப்பிட்டுவிட்டு கீழே போட்டுவிட்டுச் செல்லும் புளியங் கொட்டைகளைச் சேர்த்து வைத்துக் கொள்வோம், விளையாட்டிற்காகத்தான். எங்கள் பகுதியில் புளியங்கொட்டையினை, புளியமுத்தென்றே அழைப்போம். ஆகவே நானறிந்த முதல் முத்து இந்தக் கருப்பு முத்துதான். தாயம் விளையாடுவெதன முடிவு செய்துவிட்டால், சிமெண்ட் தரையிருக்கும் வீடுதேடிச் சென்று, சொற சொறப்பான இடத்தில், குதிங்காளில் அந்த கொட்டையினை வைத்து தேய்த்துக் கொள்வோம். சில சமயங்களில், ஒற்றையா, இரட்டையா என்று கைகளுக்குள் புளியமுத்துக்களை வைத்து விளையாடுவோம், எதிரில் இருப்பவர் அதைச் சரியாகக் கணித்துவிட்டால் அது அவருக்குச் சொந்தம். இப்படியாகச் சேர்த்த புளியமுத்துக்களை அவ்வப்போது சிறிது உப்பு போட்டு தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டுவிடுவோம். பெண்கள் விளையாடும் பல்லாங்குழி மரப்பழகையில் இந்த முத்துக்கள்தான் அலங்கரித்திருக்கும்

சிங்கி:

எமது பருவத்தில், எமது பகுதியில் சோடா பாட்டில் மூடியினை சிங்கி என்றுதான் அழைப்போம். இது எல்லா நாட்களிலும் எளிதாக கிடைக்கும் பொருளென்பதாலோ என்னவோ நாங்கள் இதை அவ்வப்போதுதான் கண்டுகொள்வோம். பெரும்பாலும் இதை வைத்து உடைந்த பலூனைக் கொண்டு விசில் செய்துவிளையாடிக் கொள்வோம். ஈர மணலில், இட்லி செய்வதற்கு, இது மிகவும் சரியான தேர்வு. மினி இட்லி என்று நாம் தற்போது உண்பதெல்லாம், இந்த விளையாட்டில் விளைந்ததாகத்தான் இருக்கும். கார்த்திகை மாத்ததில் மெழுவர்த்தி வைப்பதற்கு இதைப் பயன்படுத்திக் கொள்வோம். அங்கொன்றும், இங்கொன்றுமாகக் கிடைக்கும் உருகிய மெழுகுகளைச் சேர்த்து இந்தச் சிங்கியில் வைத்து உருக்கி, அதில் திரி வைத்து ஒரு விளக்காக மாற்றுவோம். வாழ்விழந்தவற்கு வாழ்வழித்த பெருமையினைத் தேடிக்கொண்டோம். இதில் வேடிக்கை என்னவென்றால், பல நிற மெழுகுகளும் சேர்ந்து இருப்பதால், இது புதுவித நிறத்தில் ரம்மியமாக காட்சி அளிக்கும். அப்படி உருக்கும்போது, கைகளில் தெரித்து விழும் அந்த உருகிய மெழுகில், என் நினைவுகளும் உருகிக் கொண்டுதான் இருக்கிறது....

சிற்பியின் கைபட்டால் கல்லானது ஒரு சிலையாகத்தான் ஆகும், ஆனால் சிறுவர்களின் கைகளில் கிடைக்கும் பொருளுக்கு புது உலகமே கிடைத்துவிடுகின்றது... "இரண்டாம் உலகம்"...!

Sunday, June 15, 2014

சாயமிழக்குமா?


என் தாத்தா
விவசாயம் செய்தார்,
என் அப்பா
விவசாயத்தைக் கவனித்துக் கொள்கிறார்,
நான் என் அப்பா
விவசாயம் செய்வதைப் பார்க்கிறேன்,
என் மகன்???

படிப்பிற்கேற்ற வேலையென்பதையே
படிப்பினையாகக் கொண்டு
விவசாயம் - தன்மீது
படிந்திடாமல்,
பன்னாட்டுவேலையென்று அரிதாரம் பூசிக்கொண்டு
கழுத்தில் டையினைக் கட்டிக்கொண்டு
"Officer" என்று கூறிக் கொண்டு
உள் நாட்டிலோ, அல்லது
வெளி நாட்டிலோ,
என் தாத்தா செய்த
வேலையின் ஒருபகுதிமட்டும்,
கப்பல்மேல் இருந்து
கணினி கொண்டு
களையெடுத்துக் கொண்டிருப்பானோ?

...விவசாயம் - சாயமிழக்குமா?