Saturday, April 13, 2024

சாப்பாட்டு ராமன் - தொடர் கட்டுரை

ஏற்கனவே சாப்பிட்டு ராமன் தலைப்பில் நான் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன், அதன் தொடர்ச்சியினை இங்கு பார்ப்போம்.

இந்த கட்டுரை எழுதுவதற்கு மிக முக்கிய காரணம், என்னுள் எழுந்த கேள்விதான். அது என்னவெனில், சமீப காலமாக மிக அதிகமான அளவில் அதிகரித்து வரும் பலதரப்பட்ட உணவு வகைகள்தான் அது. இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், ஒவ்வொரு உணவினையும், வெவ்வேறுவிதமான கலவையாக கொடுப்பதில் பல உணவகங்களும் தற்போது முனைப்பு காட்டி வருகின்றன, அது உணவின் தரத்தினையும், நமது ஆரோக்கியத்தினையும் பாதிக்காத வகையில் இருந்தால் நலம். ஆனால் , பார்க்கும் பல்வேறு புதிய உணவு காம்போக்களும் சற்று பயமுறுத்துவதாகத்தான் இருக்கிறது. 

அன்றாடம் நாம் உண்ணும் இட்லியில் இருந்து அதன் வேறு ஒரு பரிணாமத்தை கொடுத்துக் கெடுத்துக் கொண்டிருப்பதாக எண்ணுகிறேன். அதாவது அந்த இட்லியினை மேற்கத்திய கலாச்சார உணவுகளின் சுவையினையும் பிணைத்து கொடுப்பது. உதாரணமாக, இட்லி-பர்கர் மாதிரியான முயற்சி. நான் ஏற்கனவே கூறியது போல, அந்தந்த இடங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதிலும் குறிப்பாக அந்தந்த பகுதிகளுக்கென சிறப்பு உணவுகள் உண்டு. அது அந்த வட்டார மக்களுக்கும் அவர்களின் வாழ்வு முறைக்கும் ஒத்துப் போவதாலும் பிடித்துப் போவதாலும் அது அவர்களுக்கென ஒரு உணவாகிறது. அதை எல்லோருக்குமென மாறுவது சற்று கடினம்தான், இருந்தாலும் சற்று முயற்சித்தால் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. 

இருப்பினும், இந்த முயற்சிகள், மிக நல்ல முறையில் இருப்பின் உணவு ருசி பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான். புதுப்புது உணவுகளை சுவைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அவ்வாறு சொல்கிறேன். 

எனக்கு பிடித்த ஒரு தொலைக்காட்சி தொடரில் வரும் ஒரு பகுதியினை குறிப்பிட விரும்புகிறேன். அந்த நிகழ்ச்சியானது உணவினை பற்றியது. வாரம்தோறும் ஒரு ஒளிபரப்புவதால் அதை ஒரு தொடர் எனவும் சொல்லலாம். அந்த நிகழ்சியில் வரும் புகழ் பெற்ற சமையல் கலைஞர், அவர் தேடி சென்று பல இடங்களில் கிடைக்கும் அற்புத உணவுகளின் வரலாறு, அதன் மூலப்பொருட்கள், செய்யும் முறை என பலவற்றையும் விரிவாக சொல்வார். அந்த பகுதி முடிந்த பிறகு, அவருடைய சமையல்கூடத்திற்கு வந்து, அவரது ரசனையில் அவர் சமீபத்தில் தெரிந்து கொண்ட அந்த உணவில் சிறு வித்தியாசத்தை புகுத்தி அதை செய்து காண்பிப்பார். அப்படிப்பட்ட நிகழ்வுகளைத்தான் நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புவது, முயற்சியானது நல்லதொரு ஆரோக்கியமான சிந்தனையில் இருந்து வந்தால் அது நிச்சயம் வெற்றி பெரும். நான் குறிப்பிட்டு யாரையும் குறை சொல்லவில்லை, 

அதேநேரம் ஒரு மாற்றத்திற்கான முயற்சியானது எந்தவொரு இடத்தில் இருந்தும், யாரிடம் இருந்தும் வரலாம். அது சிறிய ஒரு உணவகம் ஆக இருக்கலாம், அல்லது பெரிய சமையல் நிபுணரிடம் இருந்து வரலாம். எப்படி இருப்பினும், அதற்கு முறையான வரவேற்பு இருந்தால் மட்டுமே அது அடுத்த கட்டத்த்தை நோக்கி செல்ல முடியும்.

இதில் அடுத்து ஒரு முக்கியமான ஒரு காரணியை சொல்லியே ஆக வேண்டும், அது "தேவை". ஒருவருடைய அல்லது பலரது தேவையினை பூர்த்தி செய்தாலும்கூட அந்த உணவு மிக விரைவில் அனைவரிடமும் மிக முக்கிய இடத்தைப் பிடித்துவிடும். அதற்கு மிக சிறந்த உதாரணம், சென்னையில் அநேக இடங்களில் பிரபலமாக இருக்கும் "வடகறி". இதன் ஆரம்பம் எதுவாக இருக்கும் என்பதை, நம்மால் மிக எளிதாக கணிக்க முடியும். மீந்து போன வடையினை வீணாக்க விரும்பாமல், அதில் ஒரு முயற்சி செய்ததன் விளைவுதான் தற்போதைய "வடகறி". இது முற்றிலும் "தேவை" என்பதற்காக விளைந்த ஒரு உணவு பதார்த்தம்தான். இந்த வரிசையில் கொத்து ப்ரோட்டா போன்ற உணவுகளையும் அடக்கலாம். ஒருவருடைய தேவையினை மட்டும் வைத்து ஒரு உணவின் பரிமாணத்தை அளவிட முடியாது, அது அநேகம் நபர்களால் தேடப்படும் ஒரு உணவாக இருந்தால் மட்டுமே அதற்கான சாத்தியம் சாத்தியப்படும். 

ஒருவருடைய ருசியின் பசிக்கு பலவித புது உணவுகள் கிடைக்க கூடும். இருப்பினும் அது பலராலும் விரும்பப்பட்டால் மட்டுமே அது அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என்பதில் திடமான நம்பிக்கை உள்ளது. மீண்டும் அடுத்த பதிவில் பார்க்கலாம், அதுவரை ருசியின் பசியோடு காத்திருங்கள்.  

Saturday, February 17, 2024

வானொலி... நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பது - அன்பன் வலைதளம் !!!

சமீபத்தில் குடும்ப நண்பர் ஒருவரை சந்தித்த போது, அவர் பகிர்ந்து கொண்ட ஒரு விஷயத்தின் தாக்கம்தான் இந்தக் கட்டுரையினை நான் எழுத தூண்டுகோலாக இருந்தது. அவர் IT-இல் நல்லதொரு பணியில் இருக்கும் நண்பர். அவரது அலுவலகத்தில், அவரது பரிந்துரையில் வேலைக்கு சேர்ந்த ஒருவர், சில மாதங்கள் கழித்து இவரிடமே சில வேலை-ரீதியிலான அரசியலை நிகழ்த்தியிருக்கிறார். இத்தனைக்கும் இவர் மிகுந்த அனுபவம் மிக்கவர், கம்பெனியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் ஒருவர்கூட. இவரும் அதை எதுவும் பெரிதுபடுத்தாமல் இன்று வரை பொறுமை காத்து வருகிறார். மிக முக்கிய பொறுப்பில் இருந்தாலும், அவர் அந்த நபரை எதுவும் செய்ய விரும்பவில்லை. அதற்கு அவர் கூறிய காரணம் இதுதான். 

சிறுவயதில் அவர் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கேட்ட குட்டி கதையின் தாக்கம்தான் அது. அதாவது, துறவி ஒருவர் தான் செல்லும் பாதையில், தேள் ஒன்று தண்ணீரில் தத்தளித்து உயிருக்குப் போராடுவதை பார்க்கிறார். உடனே அதைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் இருந்து கைகளில் எடுக்கிறார். இருப்பினும் அது அவரைக் கொட்டிவிட்டு மீண்டும் தண்ணீரிலேயே விழுந்துவிடுகிறது. தேள் கொட்டிய பிறகும், அவர் மீண்டு அதே போல முயற்சித்து மீண்டும் கடி வாங்குகிறார். 

இதைப் பார்த்து, அருகில் இருக்கும் நபர் அந்த துறவியிடம், "அது கொட்டும் என்று தெரிந்த பிறகும் ஏன் அதை காப்பாற்ற முயற்சி செய்கிறீர்கள்?" என்று கேட்கிறார். அதற்கு அந்த துறவி "கொட்டுவது அதன் குணம்,  உதவுவது எனது குணம். அது கொட்டுகிறது என்பதற்காக நான் எனது நல்ல குணத்தை விட விரும்பவில்லை" என்று முடிக்கிறார். இதை மனதில் வைத்தே தான் அவ்வாறு இருப்பதாக அவர் தெரிவித்தார். ஒரு வானொலி நிகழ்ச்சி எப்படி ஒருவரது வாழ்வில், நீங்கா இடம் பிடித்து அவரை நல்ல ஒரு திசையில் பயணிக்க வைத்திருக்கிறது என்று எண்ணும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறாக, எத்தனை எத்தனை பேர் பயனடைந்து இருப்பார்கள்? 

நல்லதொரு வானொலி நிகழ்ச்சியும் நல்லதொரு புத்தகம் கொடுக்கும் அனுபவத்தை கொடுக்க தவறியதில்லை என்றால் அது மிகையல்ல.
தொலைக்காட்சி மக்களின் அன்றாட வாழ்வில் கோலோச்சுவதற்கு முன்னாள் தோற்றுவிக்கப்பட்ட ஒரு அற்புத ஊடகம்தான் "வானொலி". தமிழில் இதன் பெயரை சொல்லும்போது எவ்வளவு அழகாக இருக்கிறது (பெயர் காரணத்தால்தான் என்னவோ). மக்களை பிணைக்க தபால், தந்தி, நாளிதழ், தொலைபேசி, தொலைக்காட்சி என பல வழிகள்/ஊடகங்கள் உள்ளன. அதில் வானொலிக்கும்  தொலைக்காட்சிக்கும் எப்போதும் மிக சிறந்த இடம் உண்டு. ஏனென்றால் இதில் பல முக்கிய விஷயங்கள் இருக்கின்றன, குறிப்பாக கலையின் மூலம் பல கருத்துக்களை மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்க முடியும். ஊடகத்தின் தாக்கம் அறிந்தோர் பலர், இன்று இந்த மாதிரி ஊடகத்திற்கென்றே பிரத்யேகமான பிரிவும் எல்லோரது அரசியல் கட்சிகளிலும் இருப்பதை பார்த்தே, இந்த ஊடகத்தின் தாக்கம் என்ன என்பது நமக்கு விளங்கும். பாடல்களைத் தொகுத்து ஆக கேட்கும் பழக்கத்திற்கு அடிக்கோடிட்டது இந்த வானொலிதான் என்றால் அது மறுக்கமுடியாத உண்மைதான். 

நண்பர் பகிர்ந்து கொண்ட அந்த நிகழ்ச்சி "இன்று ஒரு தகவல்", அதை தொகுத்து வழங்கியவர் - தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்கள். அனேகமாக, வானொலி கேட்கும் பழக்கம் உள்ள அனைவருக்கும் மிகப் பிடித்தமான ஒரு நிகழ்த்தியும்கூட. இரண்டு முதல் ஐந்து நிமிடங்களுக்குள்ளாகவே முடிந்துவிடும் அந்த நிகழ்ச்சிக்கு இத்தனை பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார் என்றல் அவரது திறமையினை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். பயனுள்ள கருத்துக்களும், நகைச்சுவைகளையும் அள்ளித் தெளித்துவிடுவார். குறிப்பாக எல்லோருக்கும் புரியும்படி அழகாக சொல்வர், அதுதான் தனி அழகு. எல்லோருக்கும் சொற்களை கையாள்வதில் அவ்வளவு எளிதில் வல்லமை வந்துவிடாது.

என்னதான் பிரமாண்டமான கணினி, தொலைக்காட்சி மற்றும் Smart Phone தற்போது பரவிக் கிடந்தாலும், இந்த வானொலிக்கென்று இன்றும் தனி ரசிகர் பட்டாளம் உண்டென்றால் அது மிகையல்ல. அந்த பட்டாளத்தில் நானும் ஓர் அங்கம் என்பதும் உண்மை. முன்பு போல, அடிக்கடி வானொலி கேட்கும் வாய்ப்பு மற்றும் பழக்கம் இல்லாவிட்டாலும், நெடுந்தூர பயணத்தின் போது, காரில் செல்லும் நேரங்களில் மனமானது தானாக அந்த வானொலியை நாடுகிறது. வானொலியினை கேட்டுக் கொண்டிருக்கும்போதெல்லாம், நம்முடன் நமது நண்பர் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதுதான் இந்த வானொலியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். 

தற்போதைய சூழலில், விளம்பரத்தை பிரதானமாக நம்பி இயங்கும் பல அலைவரிசைகள் உள்ளன. இருந்தாலும், நமது கோடைப் பண்பலை  மற்றும் ஆகாச வாணி போன்ற மத்திய/மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் வானொலி நிலையங்களின் தாக்கம் அதிகம் தான். மற்ற தனியார் நிறுவன வானொலிகளை போல மிக இரைச்சலாக இல்லாமல், பின்னால் எந்தவொரு இசைக்கோர்வையும் இல்லாமல் மிக அமைதியான ஒரு சூழலில் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் பேசுவதை கேட்கவே அவ்வளவு அற்புதமாக இருக்கும். அதற்காக மற்ற வானொலிகளை முற்றிலும் குறை கூறுவதாக நினைக்க வேண்டாம். பெரும்பாலான வானொலிகளில், இரவு நேரங்களில் வரும் பல நிகழ்ச்சிகளில் எந்தவொரு இரைச்சலும் இல்லாமல் தான் இருக்கும்.  

செவிக்குணவில்லாதபோது சிறிது உணவு வயிற்றுக்கும் ஈயப்படும் என்பதற்கேற்ப, நமது வானொலியினைத்தான் சொல்லியிருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

நம்மில் அநேகம் பேருக்கு, இந்த வானொலி நினைவுகள் நிச்சயமாக இருக்கும். அப்படி எனக்கான சில நினைவுகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பின்னால் செல்கிறேன். தொலைக்காட்சி பெட்டியானது எல்லோருடைய வீடுகளிலும் ஒரு அங்கம் வகிக்காத அந்தக் காலத்தில், ரேடியோவானது அந்த இடத்தை நிரப்பி இருந்தது. சிலரது வீடுகளில் மின்சாரம் மூலமாகவும், பலரது வீடுகளில் பேட்டரி (பேட்டரி கட்டை என்று சொன்னால் மிக சரியாக இருக்கும்) மூலமாகவும் இயங்கிக்கொண்டிருந்தது. நான் குறிப்பிடுவது நான் பிறந்து வளர்ந்த எனது கிராமம் போன்ற பகுதிகளை பற்றியது. அப்போதைய நகரத்து சூழல் என்னவென்று எனக்கு தெரியவில்லை.

கிராம பகுதிகளில், அப்போதைய சூழலில் மின்சார தடை என்பது ஒரு வழக்கமான ஒரு நிகழ்வுதான். அதுவும், இரவு நேரங்களில் ஏதேனும் பழுது என்றால் மறுநாள் வரை காத்திருக்க வேண்டியது வாடிக்கையான ஒன்று. அவ்வாறான நேரங்களில், கிட்டத்தட்ட இரவு 8 மணிக்கெல்லாம் பெரும் நிசப்தமாக இருக்கும். பெரும்பாலும் எல்லோரும் உறக்க நிலைக்கு சென்று கொண்டிருப்பார்கள். இவ்வாறான சூழலில், சிறிது நேரம் ரேடியோ கேட்டுக் கொண்டே தூங்கும் பழக்கம் வெகு சிலருக்கு இருக்கும். என்னதான் அவர்கள் அந்த ரேடியோவின் ஒலி அளவை குறைத்து வைத்திருந்தாலும், அந்த இரவின் நிசப்தத்தில் காற்றோடு கலந்து எனது செவிகளில் விழுவதுண்டு. மேலும் அந்த ரேடியோ நமது பக்கத்து வீட்டில் இருந்து வந்தால், மிகத் தெளிவாக கேட்க முடியும். இப்பொழுது இருப்பது போன்று, பல அலைவரிசைகள் அப்போது இருந்ததில்லை. எனவே, ரேடியோவை ஆன் செய்து விட்டால் அப்படியே கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான். இருப்பினும் அது அவ்வளவு சுகமாக இருந்தது. அப்படிப்பட்ட அந்த இரவு நேரத்தில், நமது கோடை பண்பலையில் இருந்து வரும் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் பேசும் வார்த்தைகள் - அப்படியே நமது தலையினை வருடி, தாலாட்டுவது போல இருக்கும். இதற்கு ஒரு படி மேலாக, அதிலிருந்து ஒலிக்கும் பாடல் அவ்வளவு அற்புதமாக இருக்கும். பெரும்பாலும் நல்லதொரு பாடல் கோர்வையினை கொடுப்பார்கள். சில நேரங்களில், நேயர் விருப்பம் ஒளிபரப்பாகும்.

இது கோடைப் பண்பலை, நிகழ்ச்சியில் அடுத்து வரும் பாடல் ... படத்தில் இருந்து ... இணைந்து பாடியது. 

பள்ளி நாட்களில், எப்பொழுதாவது மதிய உணவிற்கு பரோட்டா கடையில் சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கும். அப்பொழுது சரியாக மதியம் 12:40 மணியளவில் ஒளிபரப்பாகும் அந்த செய்தி தொகுப்பு. "ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் சுவாமி" இந்த குரலுக்கென தனி ரசிகர்கள் உண்டு, அதில் நானும் ஒருவன். கிரிக்கெட் விளையாட்டின் ஸ்கோர் கேட்பதும் இதில்தான். அந்தக் குரலை அந்த வானொலியில் கேட்பது அலாதி இன்பமாக இருக்கும். எந்தவொரு அதிரிபுதிரி இசை இல்லாமல், "பிரேக்கிங் நியூஸ்" மியூசிக் இல்லாமல் கேட்ட அந்த செய்திகளில்தான் எத்தனை அமைதி?

பேட்டரி கொண்டு இயங்கும் வானொலி பெட்டிகளில் ஒலியின் சப்தத்தை வைத்து அதன் பேட்டரியினை மாற்றும் காலம் அறிந்து மாற்றுவது. "பேட்டரி கட்டை மாத்தனும் போல" என்று சொன்னது இப்போது கேட்டது போல இருக்கிறது. இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம், 

இதற்கான எண்ண அலை, மனதில் வரிசையாய் வந்து கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் இந்த உரையினை இத்துடன் முடிக்கிறேன், நீங்களும் உங்களது வானொலி நண்பனின் அந்நாள், இந்நாள் நினைவுகளோடு ஒப்பிட்டு பாருங்கள். 

"வானொலி எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கது சேதி தரும்" என்று பாட தோன்றுகிறது எனக்கு. 

Saturday, February 3, 2024

மன்னிப்பு

என் மனதில் நீண்ட நாட்களாகவே இதை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டுமென்று எண்ணிக்கொண்டிருந்தேன். "மன்னிப்பு" என்பது வெறும் ஒற்றை வார்த்தை என்று பொத்தாம்பொதுவாக நாம் கடந்து சென்றுவிட முடியாது. அது எதனால் என்பது இந்த பதிவினைப் படித்தால் உங்களுக்கும் விளங்கும் என்பது எனது எண்ணம். 

தமது தவறுகளுக்காக நியாயம் கற்பிப்பதும், அதுவே பிறர் செய்த தவறெனில் அதை எப்படி பூதக்கண்ணாடி கொண்டு பார்த்து  பெரிதாக்குவதும் பலரது இயல்பு. இது ஒரு பொதுவான மனித குணம் என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது. அப்படியெனில், எவரும் தத்தமது தவறுகளை உணரவோ, அதை பிறர் அறியவோ விரும்புவதில்லை. இதில் சிக்கலான விஷயம் என்னவென்றால், அது மேலும் பல தவறுகளுக்கு அஸ்திவாரம் ஆகிவிடுகிறது

பொதுவெளியில் சொல்லப்படும் கதைகளில் பெரும்பாலும் மூன்றாவது நபர்களை வைத்தே அவர் செய்த தவறிலிருந்து எப்படி நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம் என்பதாக இருக்கும். வெகு சிலர் மட்டுமே, அவர்கள் செய்த தவறை தைரியமாக சொல்லி, நான் அந்த தவறிலிரிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதை சொல்வர். மேலும், சிறு வயதில் அறியாமையில் செய்த சிறிய திருட்டுகளை  ஒத்துக்கொள்வதற்கும் ஒரு மனம் வரவேண்டும். 

அப்படி நான் படித்த சமீபத்திய வார இதழின் வாசகர் பகுதியில், அவர் சிறு வயதில் பள்ளியில் சிறுபிள்ளைத்தனமாக செய்த சிறு திருட்டை எழுதி, அந்த பழக்கத்திலிருந்து மீண்டு வர அவரது ஆசிரியர் உதவியதை நன்றி உணர்வோடு குறிப்பிட்டு இருந்தார். இதில் இரண்டு விஷயங்களை குறிப்பிட வேண்டும், ஒன்று இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது, இப்போது அவர் நலமாக இருக்கிறார் - இருப்பினும் சிறு வயதில் செய்த தவறை இப்போதும் அதை தரு என உணரும் அந்த மனம் மிகப்பெரியது. மற்றொன்று  இன்று அவர் ஒரு நல்ல பதவியில் இருக்கும் ஒரு ஆசிரியர். இப்படிப்பட்டோருக்கு கொடுக்கும் மன்னிப்பிற்கு மிகப்பெரிய மதிப்பு உண்டு, மேலும் அந்த மன்னிப்பை அவர்கள் ஒரு தண்டனையாகத்தான் கருதுவார்கள்.இதை மனதில் வைத்தே நமது வள்ளுவர் இந்தக் குறளை எழுதி இருக்கக்கூடும் 

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

பெரும்பாலானோர் தமது தவறுகளுக்கு எத்தனை வருடங்கள் ஆனாலும் நியாயம் கற்பித்துக் கொண்டிருப்பர் - அவர்களுக்கு மன்னிப்பு என்பது ஒரு பொருட்டே அல்ல. இதை பறைசாறுவதாக உள்ளது நாம் சிறுவயதில் படித்த மனுநீதி சோழன் கதை


ஆக, இரு வேறு கருத்துக்கள் உலா வருகின்றன. ஒன்று மன்னிப்பை ஆதரிப்போர், மற்றோரு தரப்பு மன்னிப்பை நிராகரிப்போர். இருப்பினும், சூழல் சார்ந்து எடுக்கும் முடிவெய் மிகச்சரியாக இருக்கும். 

ரமணா படத்தில் வரும் அந்த பிரபலமான "மன்னிப்பு, தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை" என்று அழுத்தமாக பதிவு செய்து இருப்பார்கள் நமது மனுநீதி சோழன் மாதிரி. 

அன்பே சிவம் படத்தில் "ஒருத்தன கொல்லணும்னு வந்துட்டு, அவனை கொல்லாம அவன்கிட்ட மன்னிப்பு கேக்கிற மனசு இருக்கே - அது கடவுளுக்கு சமம்" என்று மன்னிப்பின் பெருமை பேசி இருப்பார்கள். அப்படி கடவுளுக்கு இணையாக சொல்லும் அளவிற்கு அவ்வளவு பெரிய விஷயமா என்றால் - ஆம் அது மிகையல்ல. விருமாண்டியில் வரும் ஒரு கட்சியில் மன்னிப்பு கொடுப்பவரைவிட, மன்னிப்பு கேட்பவரை ஒருபடி மேலே வைத்துதான் சொல்லி இருப்பார்கள். 

மன்னிக்கிறவன் மனிதன், மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனிதன்
என்று.

மேலும் மனிதன் என்பதைகூட உடன்பாடு இல்லாமல், மன்னிப்பு கேக்கிறவன் "மன்னிப்பு கேக்குறவன் வீரன்" என்று அந்த கதாப்பாத்திரத்தை காட்டி இருப்பார்கள். அந்த அளவிற்கு நமது மனங்களில் நாம் செய்த தவறை ஒப்புக்கொள்வதில்லை அப்படியொரு பிடிவாதம் இருக்கிறது. அதாவது நாம் செய்த தவறை ஒப்புக்கொண்டு நாம் பெரியமனிதன் ஆனால் கூட, அது நமக்கு அவமானம் என்று கருதும் அளவிற்கு அந்த "மன்னிப்பு" என்னும் வார்த்தைக்கு அவ்வளவு ஒரு வலிமை இருக்குமெனில் மன்னித்துவிடுவதென்பது எளிய விசயம்தானா என்றால் அதற்கும் ஆயிரம் விஷயங்களை அடுக்கலாம். ஒருவர் மன்னிப்பு என்று சரணாகதி அடைந்துவிட்டால், அவருக்கான மரியாதையும் தண்டனையும் "மன்னிப்பு" மட்டுமே என்பதுதான் நாம் காலங்காலமாக பார்த்துவருவது. எந்தவொரு போருக்கு முன்னும், சமாதானம் எனும் பெயரில் நடததப்படும் பேச்சு வார்த்தையும் இதில் அடங்கும். ஒருவேளை, இருவரும் ஒரு சமரசத்திற்கு வரும்போது ஒருவர் கீழே இறங்கி (மன்னிப்பு வேண்டுவது) வருவதும், அதை மறறொருவர் அங்கீகரிப்பதும் (மன்னிப்பு வழங்குவதும்) என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.  

எது எப்படியோ, நான் இந்தப் பதிவில் ஏதேனும் தவறாக எழுதியிருந்தால் மன்னிப்பு ஒரு வீரனாக 😆 கேட்டுவிட்டு பெரிய மனுஷனாக மாறிக்கொள்கிறேன், நீங்கள் எப்படி - மன்னித்து விட்டு மனிதராகிறீர்களா😁?