Monday, November 26, 2012

நினைவாணிகள் - பாகம் ஒன்பது

நினைவாணிகள் - பாகம் ஒன்பது



                                                         தேங்காய்

சிறு வயதில் தேங்காய் இட்லி செய்ததில் இருந்து, இன்று தேங்காய் மிட்டாய் சாப்பிடுவது வரை, தேங்காய் பற்றி என்னுள் தேங்கி இருக்கும் நினைவுகள் ஏராளம். அவற்றில் சில இதோ உங்கள் முன்னால் சிதறுகின்றன, சிதறு தேங்காய் போல...


சிதறு தேங்காய்:


நமது ஊர்களில் இன்றளவும் இருக்கும் வழக்கங்களில் இதுவும் ஒன்று. எங்கள் ஊரிலும் இது உண்டு. எங்கள் ஊரில் ஒரு வழக்கம் உண்டு. எனது ஊரில் - புதிதாகத் திருமணமானவர்கள் திருமணம் முடிந்து முதல் நாள் எங்கள் ஊருக்கு வரும்போது, அவர்கள் எங்கள் ஊரில் உள்ள துர்க்கை அம்மன், பெருமாள் மற்றும் குச்சாரி அம்மன் கோயில்களுக்குச் சென்று வழிபட்டுவிட்டு பின்னரே வீட்டுக்குச் செல்வார்கள். கிட்டத்தட்ட ஒரு ஊர்வலம் போலத்தான் இது இருக்கும். அப்படி ஒவ்வொரு கோயிலுக்கும் செல்லும்போதும் அந்தக் கோயிலில் ஒரு தேங்காயினை உடைப்பர்கள். அதைப் பொறுக்குவதற்காகவே சில சிறுவர்கள் அந்தக் கூட்டத்தில் வருவார்கள். அந்தக் கூட்டத்துடன் நானும் எப்போதாவது கலந்து கொள்வதுண்டு.


முதலில் துர்க்கை அம்மன் கோயிலுக்குச் செல்வார்கள். நான் ஏற்கனவே கூறியதுபோல - ஒரு பெரிய முண்டுக்கல்லும் அதன் ஓரத்தில் இரு தூண்களில் தொங்க விடப்பட்ட மணியும்தான் கோயில். தேங்காய் உடைக்க அந்தத் தூண்களைத்தான் பயன்படுத்துவார்கள், அதாவது அந்தத் தூண்களில் எரிந்து, தேங்காயினைச் சிதறடிப்பார்கள். அப்படிச் சிதறுவதை என்னைப் போன்ற சிறுவர்கள் எடுத்துக் கொள்வார்கள். அதன் பிறகு பெருமாள் கோயில், இந்தக் கோயிலானது ஒரு சிறிய அறை அளவில் இருக்கும். இதற்கு வெளிப்புறச் சுவர் இருப்பதால் அந்தச் சுவற்றில் அடித்து சிதற விடுவார்கள். அடுத்ததாக குச்சாரி அம்மன் கோயில். இதுவும் துர்க்கை அம்மன் கோயில் போலத்தான், வெளிப்புறச் சுவர் கிடையாது. ஆயினும் இங்கே, எந்தத் தூணிலும் தேங்காயினை உடைக்க மாட்டர்கள், மாறாக ஒன்று - சாமியாக வழிபடும் கல்லின் மீதே உடைப்பார்கள், அல்லது அதன் அருகில் இருக்கும் வீட்டின் சுவற்றில் எரிந்து விடுவார்கள்.


இன்றளவும் எங்கெல்லாம் சிதறு தேங்காய் சிதறுகின்றதோ, அதைக் காணும்போதெல்லாம் என்னுடய சிறுவயது நினைவுகளும் சிதறுகின்றன.


தேங்காய் - இட்லி:
தேங்காயில் சட்னி - உண்டு, அதென்ன தேங்காய் இட்லி? பொதுவாக மழை பொழிந்து முடிந்ததும் நாங்கள் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றுதான் - தேங்கய் இட்லி. அதாவது, கிடைக்கும் சிரட்டையினைக் கொண்டு [கொட்டாங் குச்சி], அதில் ஈர மணல் நிரப்பி, இட்லி வடிவில் மணல் மேடு எழுப்புவதுதான் - தேங்காய் இட்லி.இதை மழை பெய்யாத நாட்களில் விளையாடுவது சற்றுக் கடினம், ஏனென்றால் அப்பொழுதெல்லாம் ஈர மணலுக்கு சற்று குழி தோண்ட வேண்டும். சில நேரங்களில் - போட்டியும் உண்டு; யார் அதிகமாக செய்கிறார்கள், யாருடைய இட்லியின் அளவு அழகாக வந்துள்ளது என்றெல்லாம் போட்டி நடக்கும். கடைசியாக - செய்து வைத்த அனைத்தையும் காலால் உதைத்துக் கலைப்பதும் நல்ல வேடிக்கையாகத்தான் இருக்கும்.

மறு சுழற்சியினை அப்போதே செய்திருக்கிறோமோ?

தேங்காய் தண்ணீர்:

முன்பெல்லாம் எங்களது வீட்டில், தற்போதுபோல பொருட்களைக் கெடாமல் வைக்க "Fridge" வசதியெல்லாம் கிடையாது. எனவே தேங்காய் போன்ற விரைவாகக் கெட்டுவிடக்கூடிய பொருட்களைத் தேவைக்கேற்ப அவ்வப்போது வாங்கிக் கொள்வோம். மேலும் தற்போது போல, "Mixer Grinder" - உம் எங்கள் வீட்டில் அப்போது இல்லை. அப்போதைய காலங்களில் - சமையலுக்கு எனது அம்ம என்னை கடைக்குச் சென்று தேங்காய் வாங்கி வரச் சொல்லுவார்கள். சில நேரங்களில் நான் சென்று கேட்கும்போதுதான் கடைக்காரர் புதிய தேங்காயினை உடைப்பார். அப்படி இருந்தால் - ஒரே மகிழ்ச்சிதான், ஏனென்றால் அந்தத் தேங்காய் தண்ணீரை சிறுவனான எனக்கு கொடுத்து விடுவார்கள். அந்தத் தேங்காயினை அவர் உடைக்கும் அழகே தனிதான். முதலில் அதன் குடுமியினைப் பிடித்து அந்த நார்களை எல்லாம் எடுத்து விடுவார். அதன்பிறகு, அந்தத் தேங்காயினை இடது கையில் இலாவகமாகப் பிடித்து, தேங்காய் எடுக்க உதவும் சற்று கணமான இரும்பால் அதை ஒரு அடி அடிப்பார். பின்னர் தேங்காயினை சற்று சுழற்றி மீண்டும் ஒரு முறை அடிப்பார். தேங்காய் உடைந்துவிட்டது என்பதை அது எழுப்பும் சப்தத்தைக் கொண்டே கணித்து விடலாம். பின்னர் அது உடையும் தருவாயில் இருக்கும்போது, என்னிடம் கொடுத்து குடிக்கச் சொல்லுவார். அதை இரு கைகளில் பிடித்து, மெதுவாக, தேங்காயினை இரண்டாகப் பிழந்தால் இரு மழையின் நடுவில் இருந்து வீழும் அருவி போல, மெதுவாக வழியும். ஆகா, என்னே ஒரு ஆனந்தம் நான் ரசித்த/ருசித்த - முதல் தேனருவி - இதுதான் தேங்காய் தண்ணீர்...




வாங்கி வந்த தேங்காயினை, சட்னி செய்வதற்குத் தயாராகும்போது, சில நேரங்களில் நானும் பங்கெடுத்துக் கொள்வேன். அம்மியின் நடுவில் - பொறி கடலை, சிறிதளவு உப்புக் கல், மிளகாய் வைத்து அதனுடன் ஒன்றிரண்டு தேங்காய் சில்களையும் வைத்து விடுவார் என் அன்னை. பிறகு அம்மிக் குழவி எடுத்து இலாவகமாக அரைக்க ஆரம்பிப்பார். சில சமயஙளில், தேங்காய் மட்டும் நழுவிக் கொண்டு ஓடும். அதைப் பிடித்து மீண்டும் வைத்து அரைப்பார். அப்படி பாதி அரைபட்ட நிலையில் இருக்கும் தேங்காய் தனிச் சுவையுடன் இருக்கும். அதன் தோல்கள் பாதி நீக்கப்பட்டு, அதனுடன் உப்பு, மிளகாய் கூட்டணி அமைத்து ,அதன் சுவையினைக் கூட்டியிருக்கும். இதற்காகத்தான் என்னுடைய பங்கேற்பு...




கோயில்களில் தேங்காய்களை உடைத்து, அதை அபிசேகத்திற்குப் பயன்படுதாமல், வீணாகப் போகும் அந்தத் தண்ணீரைக் காணும்போதெல்லாம், அன்றிலிருந்து இன்றுவரை, அந்தத் தேங்காயினைப் போல எனது மனதும் தான் உடைந்து போகிறது. அதை நமக்குக் கொடுத்தால் என்ன? என்றுதான் கேள்வி எழுகிறது.



கார்த்திகை தீபம்:


கார்த்திகை தீபத்தை விளக்கில்தான் ஏற்ற வேண்டுமா? ஏன் சிரட்டாயில் [கொட்டாங் குச்சியில்] ஏற்றக் கூடாதா?


கார்திகை தினத்தன்று இரவு - நான் மற்றும் என் நபர்களுடன் சேர்ந்து, சிரட்டையில் ஒரு மெழுவர்த்தியினை வைத்துக் கொண்டு, தெரு முழுக்க வலம் வருவோம். அளவில் சிறியதான மெழுகுவர்த்தியினை - சிரட்டையின் ஒரு ஓரத்தில் வைத்துக் கொண்டு -அதை சைக்கிளின் டைனைமோ மாதிரி ஆக்கி கையில் எடுத்துச் செல்வோம். காற்றின் அளவு மிக மிகக் குறைவாக இருந்தால், சிரட்டையின் மேலும்கூட ஒரு மெழுகுவர்த்தியினைக் கொழுத்திக் கொள்வோம். இரு கைகளாலும் அந்தச் சிரட்டையினைப் பிடித்துக் கொண்டு, காற்று வந்து மெழுவர்த்தியினை அணைத்துவிடாதவாறு நாங்கள் அந்த சிரட்டையினை அணைத்துக் கொள்வோம். அப்போது அதில் வெளிப்படும் சூடானது மெல்லிய ஒரு சந்தோசத்தைக் கொடுக்கும்.

இன்றெல்லாம் காபி அருந்துபோது, இரு கைக்களாலும் பிடித்துக் கொண்டு குடித்தால், எனக்கு இந்த நினைவுகள்தான் நெஞ்சில் ஓடும்.





கட்டியணைத்து - உன்னை
அணைக்க வருகிறது - காற்று,
... உன்னை அணைக்க;
கட்டியிவனைத் தட்டிவிட்டு - உன்னை
அணைக்கிறேன் - நீ அணையாதிருக்க...



--- "நினைவாணிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் நினைவுகள் தொடரும்"

No comments: