Wednesday, August 3, 2011

நிணைவாணிகள் - பாகம் எட்டு

வேட்டையாடு விளையாடு - "துள்ளித் திரிந்த காலம்"


துள்ளித் திரிந்த காலம் என்று எல்லோருக்கும் உண்டு. அந்த காலங்களை எண்ணும்போதெல்லாம் எண்ணிக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது. அப்போதெல்லம் விடுமுறை என்றால் நாலைந்து பேர் சேர்ந்து கொண்டு வெளியே கிளம்பி விடுவோம். அப்படிச் செல்வது இலந்தைப் பழத்திற்காகவோ, தேனுக்காகவோ, மஞ்சனித்திப் பழத்திற்காகவோ, கள்ளிப் பழத்திற்காகவோ அல்லது புளியங்கயிற்காகவோ இருக்கலாம்.

இலந்தைப் பழம்:

இலந்தை பழத்திற்காகவென்றால் ஆளுக்கொரு குச்சியினை எடுத்துச் செல்வோம், அப்பொழுதுதான் அந்தச் செடியின் அடியில் விழுந்து கிடக்கும் பழங்களை எளிதாக எடுக்க முடியும். அப்படி அவைகளைச் சேகரிக்கும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அந்தச் செடியில்தால் "செங் குளவிகள்" அதிகமாக வசிக்கும். எனவே அந்தச் செடியினை நெருங்கிய உடன், அதில் ஏதேனும் குளவி குடி கொண்டு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது மிக அவசியம். அப்படிப்பட்ட நேரங்களில் நாங்கள் கொண்டு செல்லும் குச்சிகள் பேருதவியாக இருக்கும்.

முதலில் அந்தச் செடியினை மெதுவாக அசைத்துப் பார்ப்போம், பிறகு அதன் மேல் சற்று பலமாக அடிப்போம். இப்படிச் செய்யும்போது அதில் ஏதேனும் குளவி இருந்தால் உடனே வெளிவந்து விடும். அப்படி அவை வெளிவந்தால் நாங்கள் அந்தச் செடியினை விட்டு வேறு செடிக்குப் போய் விடுவோம், இல்லையென்றால் வீணாக அவைகளிடம் மாட்டிக்கொண்டு கடிபட நேரிடும். இப்படியாக செடிகளைத் தேர்வு செய்வதில் கவனமாக இருப்போம். அப்படித் தேர்ந்தெடுத்தச் செடியினில் இருக்கும் பழத்தின் தன்மையினைப் பொறுத்து எங்களது அணுகு முறையும் மாறுபடும்.


அந்தச் செடியினில் பழுத்த, பழுக்கின்ற பழங்கள் அதிகமாக இருந்தால் அதனை உலுக்கி அதிலிருக்கும் பழங்களைப் பிரிப்பதென்பது இயலாத காரியம். ஏனென்றால் அப்படிப் பிரித்தால் அதனால் சேதம் அடைவது அந்தப் பழங்களும் அந்தச் செடியும் தான். என்வே இப்படிப்பட்ட செடிகளில் நாங்களே முனைந்து அதிலிருக்கும் பழங்களை எங்கள் கைகளால் எடுப்போம். அப்படிப் பரிக்கும்போது சில இடங்களில் முட்களின் தாக்கம் இருக்கக் கூடும், ஆனாலும் அதைத் திண்ணும் ஆசையில் அதையும் பொருட்படுத்தாமல் அதைப் பரிப்போம். அந்த காயத்தின் வடுவானது சில நாட்கள் இருந்து பின் மறைந்து விடும்.




ஒருவேளை
அந்தச் செடியினில் அதிகமாக காய்ந்த பழங்களே அதிகம் என்றால் எங்களது வேலை எளிதாக இருக்கும். அப்படிப்பட்ட செடிகளை மெதுவாக உல்லுப்பினாலே அதிலுள்ள பழங்கள் எல்லாம் உதிர்ந்துவிடும். அதன் பிறகு கீழே விழும் பழங்களை எளிதாக சேகரித்துவிடலாம்.

இப்படியாகச் சேகரிக்கும் பழங்களை இருவிதமாக உண்போம். ஒன்று அப்படியே சாப்பிடுவது, மற்றொன்று சேகரித்த பழங்களை உரலில் இட்டு நன்றாக இடிக்க வேண்டும், அதை ஓரள்வு இடித்தவுடன் அதனுடன் "வெள்ளக்கட்டி" அல்லது "சீனி" அல்லது "கருப்பட்டி" சேர்த்து மீண்டும் இடிக்க வேண்டும். நன்றாக இடித்த பிறகு எடுத்து சாப்பிடுவோம். இதன் சுவையே தனிச் சுவைதான். எனக்குப் பிடித்தது கருப்பட்டி சேர்த்து செய்வதுதான்.


மஞ்சனித்திப் பழம்:


இந்த மரங்கள் எங்களது பகுதியில் பரவலாக காணப்படும். இதன் பழச் சுவை சற்றே வித்தியாசமாக இருக்கும். ஒரு வித காரமான இனிப்புடன் சற்று புளிப்பாக இருக்கும். நாங்கள் சாம்பலில் பழுக்க வைத்த பழங்கள் இரண்டுதான். அதில் ஒன்று புளியம் பழம் மற்றொன்று மஞ்சனித்தி பழம். இந்தப் பழமும் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். ஒரு ஒளுங்கற்ற வடிவத்தில் சற்று உருண்டையாக இருக்கும். இதன் பழம் கருப்பு நிறமாகவும், காயானது பச்சையாகவும் இருக்கும்.
இது பழுத்துவிட்டால் அதன் தோலானது மிக மெருதுவாக மாறிவிடும் மேலும் அதைத் தொடும்போது சற்று வெதுவெதுப்பாகவும் இருகும். இந்தப்பழமானது மரத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டால் சித்றிவிடும். அப்படிச் சிதறும் பழங்களானது கீழே இருக்கும் கரிசல் மண் படிந்து திடமாகிவிடும். நாங்கள் அதனை எடுத்து அந்த மண்போக அதனை ஊதிவிட்டும் மீதியினைச் சாப்பிடுவோம். இதுவே எமக்கு "சுட்ட பழம்". அதுவே "சுடாத பழம்" எனில் நாங்கள் அந்த மரத்தில் ஏறிச் சென்று பறிக்க வேண்டும். அதைச் சுவைக்கும்போது சற்று வெதுவெதுப்பாக இருக்கும். மேலும் சாப்பிட்டவுடன் நாக்கின் நிறம் கருப்பாக மறிவிடும்.


புளியங் காய்:


சாதாரணமாக நாங்கள் புளியம் பழங்களை மட்டுமே சாப்பிடுவோம். பள்ளி செல்லும் நேரங்களில் கல் எறிந்து பழங்களைக் கொய்து அவற்றைச் சாப்பிடுவோம். விடுமுறை நாட்களின்போது சில நேரங்களில் புளிங்காய்களைச் சேகரிக்கக் கிளம்பிவிடுவோம். நாலைந்துபேர் சேர்ந்து கொண்டு கைகளில் "துண்டு"களைக் கொண்டு சென்று விடுவோம். ஒருவர் அல்லது இருவர் மரங்களில் ஏறி காய்களைப் பறித்து கீழே போடுவார்கள். அதனை மற்றவர்கள் சேகரித்து துண்டுகளில் வைத்துக் கொள்வோம். இவ்வாறாக சேகரித்த புளியம் பிஞ்சுகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றுவிடுவோம். அங்கு எங்கள் வீட்டில் இருக்கும் அம்மியில் வைத்து அவற்றை அரைத்துவிடுவோம். அப்படி அரைக்கும்போது தேவைக்கேற்றாற்போல சீனியினைச் சேர்த்துக் கொள்வோம். இறுதியாக அவற்றை அரைத்து ஒரு கிண்ணத்தில் வைத்து மறுபடியும் அனைவரும் கூடி நின்று சாப்பிட்டு விடுவோம். இன்னும் அந்த வாசனை நாசியினைத் துளைத்துக் கொண்டுதான் இருக்கிறது.


கள்ளிப் பழம்:


எங்கள் பகுதியில் பரவலாகக் காணப்படும் மற்றுமொரு செடி கள்ளிச் செடி. நாங்கள் அவ்வப்போது உண்ணும் பழங்களில் இதுவும் ஒன்று. இந்தப் பழங்களைப் பரிப்பதற்கும், உண்பதற்கும் சற்று பழக்கம் இருக்க வேண்டும். இல்லையென்றால் அதன் முட்களால் கொஞ்சம் அவதிப்பட வேண்டி இருக்கும். முதலில் பழங்களை அடையாளம் காண வேண்டும். அதன் பழமும் காயும் ஒரே மாதிரித்தான் இருக்கும். சற்று உற்று நோக்கிப் பார்த்தால் வித்தியாசத்தை உணரலாம். பழமாக இருந்தால் அதன் கழுத்து ஓரத்தில் சற்று சிவப்பாக இருக்கும். அப்படி பழங்களை அடையாளம் கண்டபிறகு அவற்றைப் பறிக்க வேண்டும். சில நேரங்களில் அந்தப் பழங்கள் செடியின் நடுப்புரத்தில் கைக்கு எட்டாத தூரத்தில் இருக்கக் கூடும். அப்படிப்பட்ட சமையங்களில் நாங்கள், கொண்டு வந்திருக்கும் குச்சியினால் குறி பார்த்து அதன் அடியினை வேகமாக அடித்து அந்தப் பழத்தையும் குச்சியோடு வரும்படி செய்து விடும். பெரும்பாலும் இதற்கு நாங்கள் "பனை மட்டைகளைப்" பயன்படுத்துவோம், இது எங்களது வேலைகளை எளிதாக்கிவிடும். இவ்வாறாக சேகரித்த பழங்களை சற்று சுர சுரப்பான இடத்தில் வைத்து அதைச் சுற்றியுள்ள முட்களை தரையில் உரசி நீக்கி விடுவோம். பிறகு அந்தப் பழத்தைப் பிதுக்கி அதன் ஓரத்தில் இருக்கும் நட்சத்திர வடிவ முள்ளையும் நீக்கி விடுவோம். இல்லையென்றால் அந்த முள்ளானது தொண்டையில் சிக்கிக் கொள்ளும் அபாயம் ஊண்டு. அப்படிச் சாப்பிட்ட பிறகு எங்களது நாக்கும் சற்று வெளிரிய சிவப்பு நிறத்தில் மாறிவிடும்.



தேன் வேட்டை:



தேன் வேட்டை என்பது ஒரே நாளில் முடிந்து விடுவதல்ல. அமாவாசை காலங்களில் தேனீக்கள் தேனைப் பருகிவிடும் என்பதால் அமாவாசைக்குப் பிறகு சிறிது நாட்கள் நாங்கள் தேன் எடுக்கச் செல்வது இல்லை. அப்படியே அவற்றைப் பார்த்தாலும் சிறிது நாட்கள் கழித்துத்தான் எடுப்போம். அப்படி எடுக்கும்போது ஆளுக்கொரு வேலைகளைப் பிரித்துக் கொள்வோம். தேன் எடுப்பவர் ஒருவர், அதை இழுப்பவர் இருவர், விழுந்த தேனை இழுத்துக் கொண்டு ஓடுபவர் ஒருவர் என அவரவர்க்கு ஒரு வேலை இருக்கும். முதலில் தேனை எடுப்பதற்குத் தேவையான "கத்திக் கம்பினை" எடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் சுமாரான உயரம் கொண்ட கம்புகளையே எடுத்துச் செல்வோம், நீளமாக இருந்தால் அவற்றை கையாளுவது மிகக் கடினமாக இருக்கும். தேன் அடையினை பார்த்துவிட்டல் அதை எப்படி நெருங்குவது என்று முடிவு செய்து கொண்டு அதற்கான வழிகளை செய்வோம்.


எங்கள் பகுதியில் கருவேல மரங்கள் அதிகம் என்பதால் பெரும்பாலும் அவை இந்த மரத்தில்தான் கூடு கட்டும். எனவே முள் மரம் என்பதால் அதைச் சுற்றிலும் முட்கள் அதிகமாக இருக்கும். எனவே நாங்கள் எங்கள் வசதிக்காக தேவையற்ற முட்களை வெட்டிவிடுவோம் அல்லது சுருட்டிப் பிடித்துக் கொள்வோம். இல்லையென்றால் தேனை எடுப்பது மிகக் கடினம், மேலும் தேன் குழவிகள் வருவதும் தெரியாது-போய் அவற்றிடம் கடி வாங்க நேரிடும். எனவே இவற்றை மிகக் கவனமாக கையாள்வது மிக அவசியம்.
அப்படி செய்த பிறகு தேன் அமைந்திருக்கும் கிளையினை ஆராய்ந்து அதன் கிளை நுனியில், பட்டும் படாமல் கதிக்கம்பினை வைத்துவிடுவோம். பிறகு நேரம் பார்த்து அந்தக் கிளையினை அறுத்துவிட்டு கம்பினை வேகமாக இழுத்துவிடுவோம், அப்படிச் செய்யும்போது அந்தக் கம்புடன் சேர்ந்து தேன் அடையும் வந்து விடும். சிறிது நேரத்தில் அந்த கிளையானது கம்பில் இருந்து விடுபட்டு தரையில் விழுந்து விடும். அப்போது ஒருவர் கீழே விழுந்த கிளையினை கையில் பிடித்துக் கொண்டு வேகமாக ஓடி விட வேண்டும். இப்படியாகச் செய்யும் போது அந்தத் தேனீக்களின் தாக்கத்திலிருந்து தப்பித்து விடலாம், மேலும் தேன் அடையினில் இருக்கும் தேவயற்ற பகுதியானது கீழே விழுந்து விடும், மீதமிருக்கும் தேன் மட்டும் அந்தக் கிளையினில் தங்கி விடும். பிறகு நாங்கள் அனைவரும் பங்கிட்டு அதனை உண்போம், அப்படி உண்ணும்போது கடைசியாக இருக்கும் கிளையினில் ஒட்டிக்கொண்ட தேனை உண்பதற்கு பலரும் ஆர்வம் காட்டுவது உண்டு. ஏனென்றால் அந்தக் கிளையோடு அந்தத் தேனை உண்டவருக்குத்தான் அதன் அருமை தெரியும். சில நேரங்களில் அதிகமாக தேன் கிடைத்துவிட்டல் நாங்கள் அதைச் சேகரிப்பதும் உண்டு, இப்படி தேனைச் சேகரிக்கும்போது சில சமயங்களில் தேனீக்களிடம் கடிபடுவதுண்டு. அப்படிக் கடித்து விட்டால் உடனே அது பதித்துச் செல்லும் முள்ளைப் பிடிங்கு விடுவோம், அப்படிப் பிடிங்கி விட்டால் வலியும், வீக்கமும் சிறிது நேரம்தான் இருக்கும். அப்படி அதனை பிடுங்க முடியவில்லையென்றால் சேற்றினை எடுத்து கடிபட்ட இடத்தில் பூசி கொள்வோம், இது மிக ஆறுதலாக இருக்கும். அந்த இடத்தில் சேறு கிடைக்கவில்லையென்றால் எங்களது சிறு நீரால் சேற்றை உருவாக்கி அந்த மண்ணை எடுத்துப் பூசிக்க் கொள்வோம்.

--- "நினைவாணிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் நினைவுகள் தொடரும்"