Monday, January 24, 2011

கோணிக் குடை

"பூவும் நாரும்"-போல
"காணியும் கோணியும்"
எங்கள் கிராமத்தில்...

விதை நெல்லும்,
விளவித்த நெல்லும் - இதனுள்;

கோடையென்றால் தரையிலும்,
மழையென்றால்
தலையிலும்,
தவழ்ந்திடும்...

தரை விரிப்பும்
தலைக்
கவசமாகும் - மழைக்
காலத்தில்,
... கோணிப் பை!!!

Sunday, January 23, 2011

அறுவடை நாள்

எனது நிறுவனத்தில் இருந்து நான் வெளியேறியபோது, எமது நண்பர்களுக்கு நான் அனுப்பிய மடல்...

அன்பர்களுக்கு வணக்கம்,



கல்யாணத்தைப்போலவே, இந்த நிறுவனத்தில் என்னுடைய பணிக்காலமும் ஆயிரம் காலத்துப் பயிர்தான்..."பயிர் என்றாலே என்றேனும் அறுவடையும் உண்டு"- என்பது போல, இந்தப்
பயிருக்கு இன்று அறுவடை நாள். அதிக விளைச்சல் இல்லாவிட்டலும் கூட, தரமான விளைச்சல்...

விளைந்ததையெல்லாம்
விளைந்த இடத்தில் மட்டுமே
விளைவிக்க வேண்டும் என்று எந்த
விதியும் இல்லையாமையால்...

இங்கு விளைந்த பயிர்களைக் கொண்டுதான் நான் அடுத்து பயிரிடப் போகிறேன்...

விளைச்சல் என்பது - விளைவிப்பவரை மட்டுமே சார்ந்தது அல்ல...
விதை நிலத்தையும் சாரும்;
விதையினையும் சாரும்...

நல்ல விதை கொடுத்தமைக்கு மிக்க நன்றி...

இதுவரை என்னோடு
இயைந்தவர்களுக்கும்;

என்னோடு தங்கள்
எண்ணங்களைப் பங்கிட்ட
எண்ணப் பங்கீட்டாளர்களுக்கும்;

சிறு புன்னகையில்
மட்டுமே, நட்பை
மயிரிழையில் இதுவரை
மடியாது
வைத்திருக்கும்
பண்பாளர்களுக்கும்;

"தட்டினால் திறக்கப்படும்" - போல
"என்னவென்றால்? இன்னவென்று"
ஓரிரு
வாக்கியங்களில், எம்மோடு
பழக்கம் வைத்திருக்கும்
பண்பாளர்களுக்கும்;

ஆயிரம்
வணக்கங்களோடு
விடைபெறுகிறேன் - இங்கிருந்து
வீழ்கிறேன் -விதையாக...


...உஙகள் எதிர்காலம் சிறக்க எனது வாழ்த்துக்கள்...

Tuesday, January 18, 2011

முத்தடச் சாயம்


"துவைக்க துவைக்க"
சாயம் வெளுக்குமாம் -
யார் சொன்னது...?

"துவைத்து துவைத்தே"
சாயம் போடுகின்றன -
நம் இதழ்கள்...!!!

Saturday, January 8, 2011

மழைக்கு வாடும் நெருப்பு


காய்கறிக் கடையில்
காய் வாங்கும்போதும்
என்னவளின் ஞாபகம்...

என்னவளின் பிஞ்சு
விரல் பற்றி
விரல் சொடுக்கிடும்
ஓசையும்...

பிஞ்சு வெண்டைக்காயினை
வாஞ்சையுடன் பற்றி,
நுனியினை-
நுனிப்புல் மேய்வதுபோல்
பட்டும் படாமல்,
மெலிதாய் ஒடிக்கையில்
ஒலிக்கும் ஓசையும்
ஒத்திருந்தால் வாங்கி வருகிறேன்...

இன்று
வெறுங்கையில் திரும்பினேன்... ஆம்
வெறும் கையில்,
அவளோ அவள் வீட்டில்,
நானோ என் வீட்டில்;

அன்பே வா, உன்மேல்
பற்றுள்ள என்னைப்
பற்றி
படர...

பசலையில்
பற்றி
எரியும் ஏக்க
நெருப்பை நெருப்பாய்
வந்து
அணைத்துச் செல்ல...

என்னை
அணைத்து அணைத்து
அணைத்துச் செல்லடி...

எரிகின்ற நெருப்பில்
முத்த மழை
பொழிந்து...
நெருப்பை இன்னும்
நெருக்கமாக்கடி...

உன் வாச
மழைக்கு வாடுதடி
என் ஏக்க நெருப்பு...