காதுகுத்து, சடங்கு,
கல்யாணம்,
கருமாதியென
ஏதாவதொன்று வராதா? என்று
'ஏங்கிக் கிடைக்கும் அன்றொரு நாளில்'
அம்மாவிடம் 50 பைசா வாங்கிக் கொண்டு
கடலை பருப்பும்,
பட்டாணியும் வாங்கி வைத்தும் தின்னாமல்;
'நான்கு படத்தில் முதல்படமெது' என்று கேட்கும்போது
எதிர்பார்க்கும் படமென்றால்,
அந்த இரவில் கூட,
அமாவாசை இரவென்றால்கூட,
முகம் பலிச்சிட்டுவிடும்;
மழைவேண்டா யாகம்செய்து,
புழுதி பறக்க மண் நிரப்பி,
எஞ்சோட்டுப் பசங்களுடன் கூடி அமர்ந்து,
அந்தப் பட்டாணியையும் கடலையையும்
கைகளில் தேய்த்து வைத்து,
நம்ம ராசாவின் இசையில் படம் ஆரம்பிக்கையில்,
கைகளில் இருந்து பருப்பில்லாமல்
ஊதித் தள்ளி மகிழ்ந்தபோது கிடைத்த சுகம் - தற்போது இல்லை;
முதல் படத்திற்கு பட்டாணியும்,
இரண்டாவது படத்திற்கு கடலையுமென
பிரித்து பிரித்து உண்டதை எண்ணும்போது
இவையெல்லாம் எனக்காகவா அல்லது
படத்திற்காகவா என்ற கேள்விக்கு இன்னும் பதில் தெளியவில்லை...
ஏங்கிக் கிடைத்த அந் நாளை எண்ணி
ஏங்கிக் கிடக்கிறேன்...!
No comments:
Post a Comment