நேற்று, இரவு உணவிற்காக, வழக்கமாகச் சாப்பிடும் கடைக்குச் சென்றேன். நான் உள்ளே சென்று அமர்ந்தவுடன் எனது எதிரில், இன்னொருவர் கையில் பெரிய பையுடன் வந்தமர்ந்தார். எங்கோ வெளியூரிலிருந்து வந்திருக்கிறார் என்பது நன்றாகவே தெரிந்தது.
சப்ளையரிடம் நான் “ஒரு தோசை” என்று சொல்லிவிட்டேன்.
எனது அருகில் இருப்பவரோ, "புரோட்டா இருக்கா?" என்றார்.
சப்ளையரும் “இருக்கு, எத்தினி (எத்தனை)?” என்று சொல்ல,
அடுத்ததாக "எவ்வளவு?" என்றார் அவர்.
சப்ளையரும் "20 ரூபாய்" என்றார்.
மீண்டும் அவர் "ஒரு செட்டா அல்லது ஒன்னு 20 ரூபாயா?" என்றார்.
சப்ளையரும் சற்று கடுப்பாகி "ஒன்னு 10 ரூபாய், ரெண்டு 20 ரூபாய், உங்களுக்கு எத்தனை வேணும்?" என்றார் சற்றே காட்டமாக.
மீண்டும் அவர் "குருமாவுக்கு தனியா காசு இல்லியே?" என்றார்.
அவ்வளவுதான் சப்ளையர் ரொம்பவே கடுப்பாகிப் போனார் "இல்ல சார், குருமாவுக்கு எல்லாம் காசு இல்லை, உங்களுக்கு எத்தனை புரோட்டா வேணும்?" என்று கத்தவே அவரோ "மூன்று புரோட்டா" என்று சொல்லிவிட்டு, யாரேனும் தன்னைக் கவனிக்கிறார்களா என்று நோட்டமிட்டார்.
ஒருவர்கூட, அவரைத்தவிர வேறு யாரையும் கவனிக்கவில்லை என்பதை அறிந்தபிறகு, அருகில் இருந்த என்னிடம் "இல்லீங்க, நேத்து இப்படித்தான், Egmore-ல ஒரு கடையில சாப்பிட்டப்ப, குருமாவுக்கு தனியா காசுன்னு சொல்லிட்டாங்க அதான்" என்றார் சற்றே வழிந்து கொண்டு. அவர் அப்படிச் சொன்னதும் எனக்கு நான் பட்ட அனுபவம் நினைவில் வந்து சென்றது.
பெரும்பாலும் இரண்டு மாதத்திற்கொருமுறை எனது சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். பெரும்பாலும் "Train"-இல் செல்வேன்,அப்படிக் கிடைக்காத பட்சத்தில் அல்லது அவசரமாக கிளம்ப வேண்டிய சூழலில் பேருந்தைத் தேர்வு செய்வது வழக்கம். அன்றும் அப்படித்தான், எனது நண்பனின் அண்ணன் திருமணத்திற்காக மதுரை வரை செல்ல வேண்டியிருந்தது. சென்னையில் இருந்து நானும் எனது மற்றொரு நண்பனும் பேருந்தில் சென்றோம். நாங்கள் சென்றது அரசுப் பேருந்து. நாங்கள் ஏறியது சுமாராக 8.40 மணி இருக்கும், வழக்கம் போல கோயம்பேட்டில் எடுத்து, தாம்பரம் வருவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது. தாம்பரத்திற்கு வண்டி வந்து சேருவதற்கே மணி 10 ஆகிவிட்டது. தாம்பரம் வந்ததும், கடலை, காரப்பொறி, பலாப்பழம் எனப் பலவும் விற்றுக் கொண்டிருந்தார்கள். பசி வேறு, என்ன செய்ய? நான் என் நண்பனிடம் “ஏதாவது வாங்கலாமா?” என்று கேட்டேன் அதற்கு அவனோ, இன்னும் 1 மணி நேரம்தான், நாம் சாப்பிட்டே விடலாம் என்று சொல்லவே நானும் தலையாட்டித் தொலைத்துவிட்டேன்.
வண்டியும் போகுது.... போகுது.... போகுது.... போய்க்கிட்டே இருக்கு. மனுசனுக்கு கொலைப் பசியாகிவிட்டது.
நானும் பசிக்காத மாதிரியே எவ்வளவு நேரம்தான் இருக்கிறது. அவனிடம் சொல்லியே விட்டேன், “முதல்ல அடுத்து எங்க நிறுத்தினாலும் சரி, எதாவது வாங்கிச் சாப்பிடனும்” என்று சொன்னதுதான் தாமதம், அவனும் “ஆமாண்டா, எனக்கும் வயிறு - காரு காருன்னு கத்துது, அதனால கண்டிப்பா சாப்பிடனும்னா” சொன்னான். "அடப் பாவி, என்ன மாதிரியே நினைச்சிக்கிட்டு இருக்கியேடான்னு” உள்ளுக்குள்ளேயே சிரிச்சிக்கிட்டேன். ஆனா நாங்க நினைச்ச மாதிரி, வண்டி எங்கையும் நிற்கவே இல்ல. நேராக விக்கிரவாண்டியில் வந்து நின்றது. "வண்டி 10 நிமிசம் நிக்கும், சாப்பிடுறவங்க சாப்பிடுங்க"ன்னு கேட்டதும்
"அப்பாடா, ஒரு வழியா ஒரு முடிவுக்கு வந்து நிறுத்திட்டானுக, நிம்மதியா சாப்பிட வேண்டியதுதான்" என்றெண்ணிக் கொண்டு நேராக கடைக்குச் சென்றோம். சரி புரோட்டா சாப்பிடலாமே என்று ஆளுக்கொரு புரோட்டா செட் சொல்லிவிட்டு காத்திருந்தோம். புரோட்டாவும் வந்தது, அதனுடன், சால்னாவும் தனியாக ஒரு கின்னத்தில் வந்தது. "பரவா இல்லையே, தேவைக்கதிகமாகத்தான் சால்னாவும் இருக்கும்போல" என்றெண்ணிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன். வழக்கம்போலவே முதலில் புரோட்டாவைப் பிய்த்துப் போட்டு அதன்மீது சால்னாவை ஊற்றி ஊறவைக்கலாம் என்றெண்ணி, புரோட்டாவைப் பிய்த்துப் போட முயற்சித்தேன்.
சென்னையை விட்டு இன்னும் தூரமாகப் போகவில்லைங்கிறதை அந்த புரோட்டாவில இருந்து தெரிஞ்சிக்கிட்டேன். பிறகு என்ன, அந்த புரோட்டா கூட சண்டைபோட்டுத்தான் சாப்பிடனும்னு முடிவி பண்ணி, கடினப்பட்டுப் பிய்த்துச் சாப்பிட்டேன். "அடக் கடவுளே, இவனுக, புரோட்டாவ மாவுல செஞ்சானுகளா, இல்லை ரப்பர்ல செஞ்சானுகளா" என எனக்குள்ளேயே நொந்து கொண்டு சாப்பிடாமல் இலையினை மூடிவிட்டு எழுந்து விட்டேன். பொதுவாக, சாப்பாட்டை வீணாக்க விரும்பாத எனது நண்பன் சாப்பிட்டு கொண்டிருந்தான். நான் கை கழுவிவிட்டு திரும்பி வருகிறேன், அவனும் கை - கழு வந்து விட்டான். "அடப் பாவி, இதை எப்படிடா இவ்வளவு வேகமா சாப்பிட்ட?" எனக்குள் நொந்து கொண்டு பில்லுக்காக மீண்டும் சாப்பிட்ட இடத்துக்கு வந்து பாத்தா, அவனும் சாப்பிடாம எழுந்திட்டான்னு தெரிஞ்சது. சப்ளையர் வந்து பில் கொடுத்தா அது 120 ரூபாய்னு இருக்கு.
“நான் அப்படியே சாக் ஆயிட்டேன்".
“என்னங்க, ஒரு புரோட்டா எவ்வளவு?” என்று கேட்க அவரோ, "புரோட்டா செட் 30 ரூபாய், குருமா (சால்னா) 30 ரூபாய் என்றார்".
சரி தொலையுதுன்னு 150 ரூபாயினை அவரிடம் கொடுத்துவிட்டு மீதி சில்லறைக்காக காத்திருந்தோம். வந்தவர் வழக்கமாக பில் கொடுக்கும் சிறிய தட்டில், சீரகம் நிரப்பி மீதி சில்லறையினைக் கொண்டு வந்தார். அதில் இரண்டு 10 ரூபாய் தள்கள் மட்டும்தான் இருந்தது, சரியென்று அதை எடுத்துக் கொண்டு, மீதி எங்கே என்று அவரிடம் கேட்கலாம் என்று வாயெடுக்கும் முன்னே அந்த சப்ளையர் "Thank You Sir" என்றவாறு, என் கையிலிருந்து அந்தத் தட்டை பிடித்து இழுக்க முயற்சித்தார். அப்புறம்தான் தெரிந்தது, அந்த சீரகத்திற்கு உள்ளே இரண்டு 5 ரூபாய் "Coin"-களை மறைத்து வைத்திருக்கிறார் என்று.
"அடப்பாவி, டிக்கெட்டு 5 ரூபாய், மல்லிகைப்பூ 50 ரூபாயா?" என்ற வடிவேலு காமெடிதான் ஞாபகத்திற்கு வந்தது.
“நாங்க 5000 ரூபாய்க்கு சாப்பிட்டாவே 10 ரூபாய்தான் கொடுப்போம், இப்ப நாங்க சாப்பிடவே இல்ல அதுக்கு ஒனக்கு காசா" என்று எனக்குள்ளேயே நொந்து கொண்டு, அவரைக் கடிந்து கொண்டு அந்த மீதிச் சில்லறையும் எடுத்துக் கொண்டு வந்தோம். அன்றிலிருந்து இன்றுவரை பயணத்தின்போது, வெளியில் எங்கு சாப்ப்பிட்டாலும் குறிப்பாக இது போன்ற கடைகளில், முதலில் விலையைக் கேட்ட பிறகுதான் சாப்பிடுகிறேன்.
ஆகவே “நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க”...
1 comment:
அறுவடை நாள்: இந்த கட்டுரையை படித்தேன். உடனே அதில் காட்டியுள்ள படத்தை பற்றி ஒரு பாராட்டு சொல்ல வேண்டும் என நினைத்தேன். ஏதோ ஓர் கோளாறு காரணமாக அந்த வளை பக்கம் எனக்கு வரவில்லை. அதனால் இதில் அந்த கருத்தினை பதிவு செய்கிறேன். கட்டுரையை விட அதற்காக தேர்ந்தெடுத்த படம் மிகவும் அருமை. எப்படித்தான் இப்படியெல்லாம் பிடிக்கிறீர்களோ. சிந்தனைக்கும் முயற்சிக்கும் பாராட்டுகள்
Post a Comment