Friday, October 4, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்...


மிஷ்கின் - இவரது இயக்கத்தில் வெளிவந்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்துபோன ஒரு படம்தான் - 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்'. திரைக்கதையினை அற்புதமாக செதுக்கி இருக்கிறார்; காமெடி இல்லையென்று சொன்னால்கூட, திரையரங்கில் பலரும் சில காட்சிகளில் சிரிக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக ஒரு போலீஷ்காரர் கொல்லப்படும்போது. இப்பொழுது யோசித்துப் பார்த்தால் - 'அவரின் நிலையில் இருந்து அதை யோசிக்கத் தவறியதற்காக வருத்தம் மேலிடுகிறது'. பாடல்கள் இல்லாமல் வெளிவந்த வெகுசில தமிழ் படங்களில் இதுவும் ஒன்று. அது என்னவோ தெரியவில்லை பாடல்கள் இல்லாமல்,வெறும் பின்னணி இசையினை மட்டுமே நம்பி படம் எடுக்கும்போது (தமிழில்) எப்போதும் அந்தப் பின்னணிக்கு முன் நிற்பவர் நம்ம ராசாதான். அருமையாக பதிவு செய்து இருக்கிறார். இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு நடிகனாகவும் மிஷ்கின் வெற்றி பெற்று இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்ததாக இசை, இரவென்றாலே அமைதிதான். அந்த அமைதியின் கண்ணியம் சிறிதும் குறையாமல், குழையாமல், அச்சுப் பிசகில்லாமல் இரவோடு இரவிற்கு இசை சேர்த்து இசையென்ற ஒன்றை மறந்து நம்மைக் கதையோடு உறங்கச் செய்திருக்கிறார் இளையராஜா அவர்கள். இசையால் மழை வருவதைக் கண்டதில்லை, இசையால் கண்ணீர் வருமென்பதை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். இந்தப் படத்திலும்தான்.

படத்தில் நிச்சயமாக ஒரு "Flash back" உண்டு என்று எண்ணிப்பார்த்துக் கொண்டிருக்கொம்போது, மிஷ்கின் இந்தப் படத்தின் தலைப்போடு சிறு கதையினை (இப்படத்தின் நாடி) எடுத்துக்கூறும்போது அப்ளாஷ் அள்ளுகிறார். மேலும் படம் முடிந்தபிறகு பெயரோடு காரணப்பெயர்களை இணைத்திருப்பது அருமை...


தமிழில் இதுபோன்ற படங்கள் மேலும் மேலும் வந்து இந்த சினிமாவினை அலங்கரிக்க வேண்டும்... :)

Thursday, July 11, 2013

நெஞ்சில் நின்றவை


சமீப காலங்களிலெல்லாம் நல்ல தரமான குறும்படங்கள் அதிகமாகவே வருகின்றன, அவற்றில் பார்க்கக் கிடைத்த சிலவற்றுள் என்னை வெகுவாகக் கவர்ந்த ஒரு குறும்படம்தான் இது.




இதில் நடித்திருக்கும் பெரியவர் என்று சொல்வதற்குப் பதில் இதில் பதிந்திருக்கும் அந்தப் பெரியவரின் ஒரு நாள் வாழ்க்கை என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அவர் சிறப்பாக அந்தக் கதாப்பாத்திரத்தோடு ஒன்றிப் போய்விட்டார்.

இதில் ஒரு காட்சியினைக் குறிப்பிட்டுச் சொல்லியேதீர வேண்டும். வேலை முடிந்ததும் அந்தப் பெரியவருக்கு உணவுப் பொட்டலம் கொடுத்து அனுப்புவார் அந்தக் கடைக்காரர். அதை வாங்கியபிறகு என்னதான் அவர் அந்த வேலை செய்யக் கடினப்பட்டாலும், வேலைக்கு கூலியினை பெறும்போது மிகவும் பவ்வியமாக வாங்குவார்,மேலும் ஒரு வணக்கமும் செய்வார்.

"அன்பிற்கேது மொழி? உணர்விற்கேது மொழி?", இதனால்தான் என்னவோ இயக்குனர் இந்தப் படத்திற்கு வசனம் என்று தனியாக எதையும் வைக்கவில்லை. மாறாக நம்மையே வசனகர்த்தாவாக ஆக்கிவிட்டார்.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்

சாலமன் பாப்பையா உரை: அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்

::காட்சிகளே கவிதையாய் - குணா::

சில படங்களில் நல்ல கவிதைகள் கொண்ட பாடல்கள் தனியாய் தெரியும், சில படங்களில் பாடல்கள் ஏன் இருக்கிறது என்று தோன்றும். வெகு சில மட்டுமே அந்தப் படமே கவைதையாய் தெரியும். நல்ல படமென்றால் எப்பொழுதும் பார்க்கலாம், அதுவே நல்லவொரு கவிதையென்றால் பார்க்கும்போதெல்லாம் ரசிக்கலாம்,இலயிக்கலாம். அப்படி சமீபத்தில் பார்த்து ரசித்து, இலயித்த கவிதைதான் "குணா"...

இந்தப் படத்தைப் பார்க்கும்போதெல்லாம் என் மனதில் ஓடும் பாடல் இதுதான்; "பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க, காத்திருந்த காட்சி இங்கு காணக்கிடைக்க..."


இயல் இசையாய் ஒலித்ததும் இந்தப் படத்தில்தான், இசை இயலாய் மாறியதும் இந்தப் படத்தில்தான்...

தனக்கென ஒரு தேவதை போன்ற தெய்வப் பெண் துணையாய் வருவாள் என்று நம்பிக்கையூட்டப்பட்ட, மன நலம் பாதிக்கப்பட்ட (?) ஒருவரின் பைத்தியகாரத்தனமான காதல்தான் இந்தக் கதையின் கரு, மன்னிக்கவும் கவியின் கரு. குழந்தைக்கும்,வளர்ந்த பெரியவர்களுக்கும் உள்ள வித்தியாசமே அவர்கள் நடந்துகொள்ளும் விதமும், சூழலுக்குத் தக்கவாறு தங்களை பாதுகாத்துக் கொள்வதும்தான். அப்படி இல்லாவிட்டால் சிறு வயதில் குழந்தையென்பர், வள்ர்ந்தபின்னும் அப்படியே இருந்தால் "மன நலம் குன்றியவர்" என்பர். அப்படிப்பட்ட ஒருவரது காதல்தான் இந்தக் கதையின் கரு.


சிலையும் சரி, கவிதையும் சரி ஒவ்வொரு அடியிலும் சிற்பியின் கைவண்ணம் இருக்கும், அடி அடியாக செதுக்கி இருப்பார்கள். அப்படித்தான் இந்தப் படமும், ஒவ்வொரு காட்சியும் செதுக்கி இருப்பார்கள். இது கலைமேல் கொண்ட காதலா? அல்லது காதல் மேல் வளர்த்த கலையா என்பது எனக்குத் தெரியாது. இந்தப் படம் முழுதும் என்னைக் கவர்ந்த பல காட்சிகள் இருக்கின்றன, அதில் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லவே இந்தப் பதிவு...


..காட்சியமைத்தவருக்கும் சரி, இசையமைத்தவருக்கும் சரி, வசனகர்த்தாவிற்கும் சரி அந்த சிவகாமியின் அருள் இருந்திருக்கத்தான் வேண்டும் (அவரவர் பணிமீது தீரா காதல்)...


சிட்டுக்குருவியையும் ஒரு பாத்திரமாக்கி அதனோடு பேசுவதும் கவிதைதான்.



மருத்துவ உதவிக்கு அழைத்துவரும் மருத்துவர், மலைக்கு வந்ததும் இவரைத் தாக்கிவிட்டு கதா நாயகியை அழைத்துச் செல்ல முற்படுவார். ஆனால் அவள் அதற்கு மறுக்கவே அவனைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிடுவார். அப்போது அவன்(குணா) சொல்லும் அந்த ஒற்றை வரியும் கவிதைதான்...


"எல்லாரும் என்னை அடிக்கிறாங்க..." என்று அழும்போது அவள் சொல்வாள் "... அவங்க பைத்தியக்காரங்க..." என்று...
ஒரு காட்சியில், நம்ம ரெண்டு பேருக்கும் இடையில ஒன்னும் இல்லை என்பார் கதா நாயகி. உடனே கமல் " நம்ம ரெண்டுபேருக்கும் இடையில் ஒன்னும் இல்லைன்னா, நீ ஏன் எனக்கு லட்டு கொடுத்த?அந்த வழிகாட்டிப் பலகை ஏன் உன்னைக் கை காண்பித்தது? இதெல்லாம் எழுதப்பட்ட விதி" என்பார். இதைத் தனித்துப் பார்த்தால், "ஏன்டா, லூசாடா நீ" என்றுதான் சொல்லத்தோன்றும். ஆனால், அப்படியே சில காட்சிகளுக்கு முன்னே சென்று பார்த்தால்,

அந்தக் கோவிலில் முதன் முதலாக கமல், கதாநாயகயியைப் பார்க்கும்போது இளையாராஜா கொடுத்திருக்கும் அந்த இசையினைக் கேட்கும்போது அப்படியே மனம் லயித்துப் போய்விடுகிறது. அந்த இடத்தில் அந்தக் கதாநாயகனது மனநிலை எப்படியிருந்திருக்கும், ஆனந்தக் கூத்தாடியிருக்கும் என்பதை இசையில் கொண்டு வந்திருப்பார். "இதுதான் இலை மறை காயோ?" என்றால் கண்டிப்பாக இல்லை, ஏனென்றால் இசை அவ்வளவு இனிமையாக இருக்கும் அதனால் இது "இலைமறை கனி".


அந்த இசையோடு நம்மையும் கைபிடித்து கோவிலின் கற்ப கிரகம்வரை நம்மை அழைத்துச் சென்றுவிடுவார் நம் "ஜேசுதாஸ்" அவர்கள் "பார்த்த விழி, பார்த்த வழி பூத்து இருக்க..." என்ற பாடலின் மூலமாக.


கதாநாயகி கையிலிருக்கும் கத்தியினைப் பறிக்க முயற்சித்து கையில் காயம்பட்டிருக்கும் கமல், ஆவேசமாக கை நீட்டிப் பேசுவார். அப்போது அவரது கையிலிருந்து ஒரு துளி ரத்தம் அவளின் நெற்றியில் படிந்து வழியும். அப்போது அவளை, அவளின் நெற்றியினைப் பார்ப்பார் பாருங்கள்... "ஆகா, கவிதை கவிதை..."


"கண்மனி அன்போட காதலன் நான், நான் எழுதும் ..." இந்தப் படத்தைத் தெரியாதவர்கள்கூட இருக்கலாம் ஆனால் இந்தப் பாடல் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு ஒரு ஈர்ப்பு உண்டு இந்தப் பாடலில்.


இந்தப் பாடல் உருவானவிதம் எப்படியென்று இந்த "Links"-இல் கேட்கவும்



http://www.starmusiq.com/tamil_movie_songs_free_download.asp?MovieId=692 (listen Kanmani Anbodu - (Speech))


என்னடா இவன், நிறைய காட்சிகள் இருக்குன்னு சொல்லிட்டு ஒன்றிரண்டிலேயே முடிக்கிறான்னு நினைக்கிறீங்களா? இதற்கு இந்தப் படத்தோட சில வசங்களையே உவமையாக்கிக் கொள்ள விரும்புகிறேன்.

"இந்தப் படத்தோட ரசனை முழுதும் உள்ள இருக்கு, எழுத்தெல்லாம் வெளிய இருக்கு".

“எனக்குப் பிடித்த காட்சிகள் என்னன்னு சொல்ல சொல்ல, ரொம்ப இழுத்துகிட்டே போகுது, நான் இழுத்து அதை நீங்க படிக்காம போயிடுவீங்களோன்னு நினைக்கும்போது இழுக்கும் எழுத்துக்கள்கூட நின்னு போகுது.”

Wednesday, July 10, 2013

ஜிம்பளங்கு கொட்டு

எமது கிராமத்து பகுதிகளில் புகழ்பெற்று விளங்கும் ஒருவித மேள வாத்தியம்... "ஜிம்பளங்கு கொட்டு". வழக்கம்போல, இந்த வருட திருவிழாற்கும் இந்த மேளதாளம் இடம்பெற்று இருந்தது.அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கிவிடும் அளவிற்கு மிகவும் அற்புதமாக அமைத்துவிடுவார்கள்.

கால்களில் சலங்கைகளைக் கட்டிக் கொட்டு இவர்கள் மேளத்துடன் நடனமும் ஆடுவார்கள். பொதுவாக ஐந்தாறு இசையமைப்புகள் செய்வார்கள், அதில் ஒன்றிரண்டு இங்கிருக்கிறது...



பகுதி-2


Tuesday, July 9, 2013

நுங்கு வண்டி


நாமிருவர்
நமக்கிருவராய்,
காய் விட்டுக்கொண்ட
கவட்டைக் குச்சியுடன்
பழம் விட்டுக் கொண்ட
பனங் கூடே;
எதிரும் புதிருமாய்
நீவிர்
நின்றாலும்,
ஏறிச் செல்வதென்னவோ
நேர் திசையில்தான்;

விழி பறித்தோர் முன்
விழிக்கிறாய் மீண்டும்,
விளையாட்டுத் தோழனாய்,இதை
விதியென்பதா?
இல்லை,
உம் பாரம் குறைத்தவர்களுக்கு
நீயிடும் பாசம் என்பதா?

கண்ணிழந்தபின்
பயணத்திற்குத் தயாராகும்
உன்னை,
உண்ணும்போது நுங்கென்பர்;
உண்டபின்
உன்னை எங்கென்பர்;
உன்னைக் கண்டதும்,
காளைகளைப் போல் பூட்டிக்
கடைக் கோடி முதல்
தெருக்கோடிவரை
இட்டுச் செல்வர்...
பணம் கூடாது,
பனங் கூட்டால்
படைப்பர் உன்னை,
பனை நுங்கு வண்டியாய்...

தடியெடுத்தவனெல்லாம்
தண்டல்காரனல்ல - உன்னிலிருந்து
விளைந்த விசயம்தானோ?
செய்வது எளிது,
செல்வதும் எளிது,
செய்ததையும்,
சென்றதையும்
மறப்பது மட்டும் கடினம்...

Friday, June 28, 2013

மாயக் கண்ணாடி


கண்ணாடியில்
தெரியும் தன் பிம்பத்தை,
'தான்'தான் அதுவென்று
தெரியும்முன், கைவைத்தவாறு முத்தமிட்டும்,
தெரிந்தபின், சிரித்துக் கொண்டே
வெட்கத்தோடு தன் பெயரைச்
சொல்லும் அக்
குழந்தையோடு நானும்
குழந்தையாய் மாறிப்போவதன் மாயம் என்ன?

Wednesday, June 26, 2013

கருத்தம்மா


பொத்தி பொத்தி
வளர்த்தவர்கள் பலர்,
பொத்தி பொத்தி
வளர்பவள் நீ...

உன்
நாணம் கலைக்க,
உன்னைச்
'சுற்றியவனைச் சுற்றுகிறாய்',
காலை முதல் மாலைவரை
நாணம் கலைந்தபின் நீ ...

பக(ல்+அ)வன் வழி
பழகுபவள் நீ,
பக(ல்+அ)வன் வழி
தொடர்பவள் நீ...
அவன் செல்லும்
திசையையே,
திண்ணமாய் உன்
எண்ணமாய் கொண்டவள் நீ...

பூப்பெய்தியதும் நாணம்
கொள்பவர்கள் மத்தியில்,
மூப்பெய்தியதியபின் நாணம் கொள்பவள் நீ...

மஞ்சள் நிறத்தவனுக்காக
மஞ்சள் நிறத்திலேயே
மகுடம் சூடிக் கொள்பவள் நீ...

அவன் முகம் பார்த்து,
அவன் பார்த்து வளர்பவரெல்லாம்
கருத்திட,
அவனைப் பாராததால்
கருத்திடும்
கருத்தம்மா நீ...சூரிய காந்தி!!!

Monday, June 24, 2013

நினைவாணிகள் - பாகம் பத்து


மழைக்காலம்

நம்முடைய பழைய நினைவுகளை நினைவூட்டுவதில் இசைக்கு எப்படி முக்கியமான பங்கு உள்ளதோ அதைவிட சற்று அதிகமாகவே நாம் சுவாசிக்கும் 'வாசதிற்கு' உண்டென்பதில் திடமான நம்பிக்கை கொண்டவன் நான். உதாரணத்திற்கு எங்கோ எவரோ வைக்கும் சாம்பாரின் மணம் என் அம்மாவின் சமையலை நினைவூட்டுவதாகட்டும், சில நேரங்களில் என் நாசியில் ஏறி என் மனதைத் தொடும் அந்த மல்லிகையின் வாசனையானது அன்றொரு நாள் எங்கள் வீட்டுத் தெருவில் சைக்கிளில் 'உதிரி மல்லி, உதிரி மல்லி' என்று கூவி கொண்டு வந்த அந்த வயதானவரையும் அவரிடம் நானும் என் அக்காவும் கையில் முறத்தினைக் கையில் வைத்திருக்க அதில் அந்தப் பெரியவர் அவர் வைத்திருக்கும் தராசில் அளந்து முறத்தில் கொட்டும்போது நுகரப்பட்ட வாசனையினை நினைவுபடுத்துவதாகட்டும். அவ்வப்போது இப்படியொரு நினைவூட்டல் இல்லையென்றாலும் எப்பொழுதாவது உண்டு அப்படியொரு நினைவூட்டலுக்கான பதிவுதான் இது.



அதுவொரு மழைக்கால மாலை நேர ஞாயிற்றுக்கிழமை. காலை முதல் மெதுமெதுவாய் தூரித் தாலாட்டிக் கொண்டிருந்த மழை, மாலையானதும் என்ன நினைத்ததோ தெரியவில்லை, கொட்டோ கொட்டென்று கொட்டத் தொடங்கியிருந்தது. எனக்குத் தெரிந்தவரை மழைக்கு இடி வருகிறதோ இல்லையோ மின்வெட்டு மட்டும் கண்டிப்பாக வந்து விடும், அன்றும் அப்படித்தான். அப்படிப்பட்ட அன்றைய மாலை நேரத்தில் ஆறு மணிக்கெல்லாம் இருள் கவ்வியிருந்தது, வீட்டில் என் அம்மாவும் மண்ணெண்ணை விளக்கினை ஏற்றிவைத்துவிட்டு அடுக்களைக்குள் சென்று விட்டார். நான், என் அண்ணன், அக்கா, தங்கை என அனைவரும் வாசலில் இடித்துக் கொண்டு மழையினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அவ்வப்போது யாரேனும் சென்று வெளியில் ஓடு வழியாக வழிந்து கொண்டிருக்கும் தண்ணீரைப் பிடிப்பதற்காக குடத்தை வைத்துவிட்டு வருவோம். சற்று நேரத்திற்கெல்லாம் எங்கள் அம்மா, சூடாக அரிசியினை வறுத்தெடுத்து அதை முறத்தில் வைத்து கொண்டு வந்தார். இளஞ்சூடாக இருந்த அதை அந்த நேர்த்தில் அந்த மழைப் பொழுதில் உண்ண அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். கையில் நொறுக்குத்தீனியுடன் வாசலில் பரப்பியிருகும் மூன்று சாக்குப் பைகளின்மீது கததப்பாக அமர்ந்து கொண்டு மீண்டும் அந்த மழையினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

வெளியிலிருந்து வரும் குளிர் காற்றை ரசிக்க வேண்டுமென்றால்,அதற்கு கதகதப்பாக நம்மை வைத்துக் கொண்டால் மட்டுமே முடியும் என்பதால் பெரிய போர்வைக்குள் சுருண்டு அமர்ந்திருந்தோம்.



இந்த நேரத்தில் ஒரு இசை கச்சேரியும் நடக்கும், அது எதுவெனில்,

மழை வீட்டின் ஓடுகளின் மீது பட்டு, கடம்போல் ஒலிக்க, பக்க்த்து வீடுகளில் அவ்வப்போது கேட்கும் பாத்திரம் உருட்டும் ஒலி மேளமாகவும் இடி ஒரு தாளமாகவும் அமைந்து ஒரு இசைக் கச்சேரியே நடக்கும். இதற்கெல்லாம் ஒத்து ஊதுவது போல, வாயில் மெல்லும் அரிசியின் ஓசை இருக்கும்.
அப்படி வாயசைந்த நேரம் அசந்து போகும்போது, அந்த மழைச் சாரலின் இசை ஒத்திற்கு மாற்றாகிவிடும். இந்த நேரத்திற்கெல்லாம் வாயிலிருந்த அரிசி காலியாகிவிடவே, தம்ப்ளரை எடுத்து ஓடுகளின் வழியாக ஓடி வரும் நீரைப் பிடித்துக் குடிக்க தாகம் சற்றென்று அடங்கும். நேரம் ஏறக்குறைய எட்டைத் தொட்டுவிடவே, மீண்டும் எனது அம்மா இரவு உணவை தயார் செய்ய அடுக்களைக்குள் சென்றுவிட்டார் இதை அடுப்படியிலிருந்து வரும் மதியம் செய்த வெந்தயக் குழம்பு உறுதி செய்தது, ஆமாம் அவர் அதை சூடுபடுத்திக் கொண்டிருந்தார்.

"யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே" என்பதுபோல, 'வாசம் வரும் முன்னே, வாசத்தின் அசல் வரும் பின்னே' என்பது உணவிற்கு நான் வைத்த புதுமொழி.
குழம்பினை இறக்கிவைத்து விட்டு வீட்டிலிருந்த சீனி அவரைக்காய் வற்றலை (சென்னையில் இதன் பெயர் கொத்தவரங்காய்) வறுத்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து தட்டில் சோற்றைப் போட்டு, ஊறுகாய் மற்றும் சீனி அவரைக்காயினைத் தொட்டுக் கொள்ள எடுத்து வந்தார். அன்று எனக்கு சாப்பிட ரொம்ப சோம்பேறியாக(?!) இருந்தது. எனவே அம்மாவிடம், தட்டு முழுதும் உருண்டை பிடித்துத் தரச் சொன்னேன். ஏன் ஊட்டிவிடச் சொல்லவில்லையென்றால், நான் என் சவுரியத்திற்கு உக்கார்ந்து கொண்டு சாப்பிட முடியும், அதற்காகத்தான். அவரும் தட்டு முழுதும் உருண்டை பிடித்துத் தர, நான் அதை வாங்கிக் கொண்டு கட்டில்மீதேறி உக்கார்ந்து கொண்டு, முதுகுக்கு வசதியாக தலையணையினை அண்டக் கொடுத்துவிட்டு (கிட்டத்தட்ட படுத்துக் கொண்டு) ஒவ்வொன்றாக லபக்கிக் கொண்டிருந்தேன்.

உண்ட மயக்கம்தான் உண்டு, ஆனால் அன்றைக்கு உண்ண உண்ண மயக்கம், காரணம் அந்த சுவையான சாப்பாடும், அந்த அற்புதமான பருவ நிலையும்தான்.
 சாப்பிட்டு முடிக்கும்போதே சொல்லிவிட்டேன் எனக்கு பால் வேண்டாமென்று. (இன்னிக்கு தப்பிச்சாச்சுடா சாமி என்று எனக்குள்ளே சொல்லி கொண்டேன்). வழக்கம்போல் அம்மாவும் அப்பாவுக்காக சாப்பிடாமல் காத்திருந்தார்.

சிறிது நேரம் கழித்து படுப்பதற்கு பாய் விரிப்பதற்கும், பக்கத்து ஊரில் மளிகைக் கடை வைத்திருக்கும் எங்கள் அப்பா கடையினை அடைத்துவிட்டு வருவதற்கும் சரியாக இருந்தது. கடையடைத்துவிட்டு என் தாத்தாவும் அப்பாவும் தனித் தனி சைக்கிளில் வருவார்கள். என்னதான் மழை பெய்தாலும் மெதுவாகத்தான் வருவார்கள்.அந்த அடை மழையிலிருந்து நனையாதிருக்க என் அப்பாவும் என் தத்தாவும் பயன்படுத்துவதென்னவோ சாக்குதான் (கோணிப் பை). அதுதான் சைக்கிளில் வரும்போது வசதியாக இருக்கும். அப்பா, வந்ததும் எல்லோரையும் சாப்பிட்டீங்களா என்பார்.


என்னயும் என் அண்ணனையும் "என்னய்யா? சாப்பிட்டீங்களா?" என்பார். நாங்களும் அதற்கு "...ம்ம்ம்.." என்று மட்டும் சொல்லிவிட்டு போர்வைக்குள் ஐக்கியமாகிவிடுவோம். அ நேகமாக என் தங்கையும் அ ந் நேரத்திற்கு தூங்கி இருப்பாள். நாங்கள் சொன்னாலும், என் அம்மாவிடம் மீண்டும் கேட்பார் "என்னத்தா? தம்பிங்க சாப்பிட்டாய்ங்களா?" என் தங்கையினை "அம்மா சாப்பிட்டாளா?" என்று கேட்பார். அதற்கு எங்கள் அம்மா 'ஆம்' என்று பதில் சொன்னால்தான் கேட்பதை நிறுத்துவார். வெளியில் என்னவோ மழை கொட்டிக் கொண்டுதான் இருந்தது, ஆனால், உள்ளே, இங்கே என் பெற்றோர் கொட்டும் பாச மழைக்கு ஈடு இணையேது...

முடிந்தால், மீண்டும் மழையோடு வருவேன்,பிடித்தால் என்னோடு சேர்ந்து நனையுங்கள், இல்லையென்றால் குடையோடு காத்திருங்கள்...

--- "நினைவாணிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் நினைவுகள் தொடரும்"

Friday, June 21, 2013

மனதோடு மழைக்காலம்-I


இன்று பள்ளிக்கூடம்
இருக்காது என்று என்னதான்
அம்மா சொன்னாலும்,
அடம்பிடித்து
அண்ணனும் நானும் சைக்கிளில்
ஒரு குடையில் இருவர் சென்று,
அந்த அறிவிப்புப் பலகையினைப்
பார்த்து திரும்பிய அந்தவொரு மழைக்காலம்...

குடையுடன் நனையும்
காளான்போல் நனைந்து கொண்டே
வீடு திரும்புகையில்,
சாலையின் குழியில்
வேண்டுமென்றே
வேகமாய் செல்லும்போது,
தெரித்துவிழும் அந்த மழை
தேங்கிய தண்ணீர்,
இன்னும் என் நெஞ்ச்சோடு
தேங்கித்தான் கிடக்கிறது...

இரவு முழுதும்
கொட்டிய மழையை,
கொட்டித் தீர்ப்பதென்னவோ
விடுமுறைவிட்ட பின்புதான்,
மழைக்குப் பூக்கும் காளான்போல்,
மழை நிற்க
மனம்
காத்து காத்துப்
பூத்துப்போனதொரு காலம்...

ஓடுவழி வழியும்
நீர் சொட்ட,
கொட்டும் மழைக்குப்
பிடிக்கும் குடையை-இந்தச் சொட்டும்
நீருக்குப் பிடித்ததொரு காலம்...

அவ்வப்போது
அடுப்பின் அருகில் சென்று குளிர்காய்ந்துவிட்டு,
மழைக்கால வரவான,
முறுக்கினை-பெரிய தகரப்
பெட்டியிலிருந்து எடுத்து உண்ணும்போது,
வாயில் எழுந்த
இடி சப்தம்
இன்னும் என் காதுகளில்
ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது...

மழை முடிந்து
மழை தள்ளாடி விழும்போது,
துள்ளிக் குதித்தோடி,
தொடர் மழையைத்
தொடர்ந்து,
ஓடிவரும் ஓடையில்
குச்சிகளையும், இலைதளையும்
வீசியெறிந்து
விளையாடி மகிழ்ந்த காலங்கள் என
இன்னும் என் மனதோடு
தூரிக் கொண்டுதான் இருகின்றன...

அதுவொரு அடை மழைக்காலமெனில், இது
மனதோடு அடைபட்ட மழைக்காலம்,
மனதோடு மழைக்காலம்...!!!

Wednesday, June 19, 2013

என்னோடு பயணியுங்கள்...

எங்களது ஊரில் இருக்கும் சில கோயில்களில் ஒரு சாமிக்கு மட்டும் இரண்டாண்டுகளுக்கொருமுறை திருவிழா எடுப்பது வழக்கம். இந்தமுறை அதற்காக ஊருக்குச் சென்று இருந்தேன். இந்தத் திருவிழாவனது எங்களது ஊரிலேயே வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரு கோவில் திருவிழாவாகும். கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு நடக்கும். கடைசி இரண்டு நாள் கொண்டாட்டத்துக்காக சென்று இருந்தேன். வெளியூருக்குச் சென்று வேலைபார்க்கும் பலரும் ஊருக்குத் திரும்பி இருந்ததைக் காண்கையில் மகிழ்ச்சியாக இருந்தது. பலரும் பல நாள்களுக்குப் பிறகு சந்திப்பதால் ஒருவரையொருவர் குசலம் விசாரித்துக் கொண்டோம்.



வழக்கமாக இருக்கும் மேள தாளங்களோடு இந்த வருடம் 28000 ருபாய் செலவழித்து செண்டை மேளமென்னும் கேரள வரத்தும் இருந்தது. ஊரெல்லாம் இதே பேச்சுத்தான், "என்னப்பா இது, செண்டை மேளம்னு சொல்லிபோனா, நல்லாவே இல்லைன்னு". அதாவது எங்களது ஊரில் ஒரு வழக்கம் உண்டு, மேள தாளங்களானது எங்களது ஊரின் மடத்திற்கு அருகில் இரவு ஒன்றிரண்டு மணிவரை கச்சேரி நடக்கும். அனைவரும்கூடி நின்று ரசித்து,லயித்துப் பார்ப்பது வழக்கம். அப்படிப் பார்க்கையில்தான் இந்தப் புலம்பல்.ஆனால் ஊரிலிருக்கும் பெரியவர் ஒருவர் சொன்னார் "மாட்டை விரட்டித் திரிஞ்ச நம்ம பயலுகளுக்கு நம்ம ஊரு கொட்டு(மேளம்)த்தான் சரி, அதை விட்டுட்டு திடு திப்புன்னு செண்டை மேளம், கொண்டை மேளம்னு சொன்னா புடிக்குமா? இன்னும் ரெண்டு மூனு வருசம் போச்சுன்னா பழகிடுவாங்க" என்றார். எனக்கும் அதுதான் சரிதான் என்று பட்டது. நாமெல்லாம் பேசிப்பேசியே பழகியவர்கள், நாம் ரசித்த கலைவாணரும், பாலய்யாவையும், கவுண்டமணியும் விடுத்து திடுதிப்புன்னு "சார்ளி-சாப்ளின்" பார்க்கச் சொன்னால் நமக்கு உடனே பிடிக்குமா என்ன?


பின்பு இரண்டு நாட்கள் முடிந்து, திரும்பவும் சென்னைக்குத் திரும்பும்போது வழக்கம்போல மனது கணக்கத்தான் செய்தது. ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்தேன், "Train"-இல் டிக்கெட் இல்லாததால் இந்த முறை பேருந்தில் பயணிக்க வேண்டியதாகிவிட்டது. மதுரையில் எனக்கு 11.30 மணிக்குத்தான் பேருந்து. எங்கள் ஊரில் இருந்து 8 மணிக்கு கிளம்பினாலே மதுரை-பெரியார் பேருந்து நிலையத்தை குறித்த நேரத்தில் அடைந்து விடலாம். இருந்தாலும் மதுரையில் இருக்கும் என் நண்பன் கார்த்திகேயனைச் சந்தித்துவிட்டுப் போகலாமென்று முடிவெடுத்து ஆறு மணிக்கெல்லாம் ஊரிலிருந்து பேருந்தில் பயணப்பட்டேன். நம்ம ஊரு தனியார் பேருந்தைப் பற்றிச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? சும்மா ‘ஜிகு ஜிகு’ன்னு விளக்குகளைப் போட்டுக் கொண்டு, உள்ளே அதிக ஒலியுடன் பாடல்களைப் போட்டுக் கொண்டு செல்வார்கள். அன்றும் அப்படித்தான். ஆரம்பித்திலேயே "ஊருவிட்டு ஊரு வந்து, காதல் கீதல் பண்ணாதீங்க..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. "அட என்னப்பா, யாரைச் சொல்றீங்க? நல்லாத்தான போகுது, இது எங்க ஊருப்பா… ஆகா, ஆகா.. இதோ உக்காந்துட்டேன்... போடுங்கப்பா பாட்டை" என்று தயார்படுத்திக் கொண்டேன் என்னை, அடுத்து ஒலிக்கவிருக்கும் ஒரு மணி நேர பாடல்களைக் கேட்க... அன்றைக்கு அருப்புக்கோட்டை செல்லும்வரை, இளையராஜா பாடலகளைப் போட்டு கொளுத்திவிட்டார்கள். ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.

"செவிக்கு உண்வில்லாதபோது சிறிதளவு உணவு வயிற்றுக்கும் ஈயப்படுமாம்". சரியென்று, அருப்புக்கோட்டை வந்திறங்கியதும் வழக்கமாக இளனீர் சாப்பிடும் கடைக்குச் சென்று இளனீர் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், அப்போது நடுத்தர வயதுள்ள ஒரு பெண் வந்தார், அவரும் ஒரு இளனீர் என்றார். கடைக்காரர் கடையில் இருக்கும் இன்னொரு பையனிடம் " டேய், அக்காவுக்கு சீனித்தண்ணியில விளைஞ்ச இளனியா பார்த்து கொடு, இல்லைன்னா, தண்ணி உப்பா இருக்குன்னு சொல்லுவாங்க" என்றார். "சரிதான், ஆக இந்த அம்மையார், ஏற்கனவே இங்கு ஒருமுறை உவர்ப்பாக இருப்பதாக சொல்லியிருக்கிறார். நமமாளுங்க நக்கலுக்கு ஈடு இணை இல்லப்பா " என்று எனக்குள் சொல்லிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து மதுரைப் பேருந்தில் ஏறிக் கொண்டு மதுரைப் பயணப்பட்டேன்.




மண்டேலா நகரில் இறங்கி பெரியார் செல்லும் பேருந்தில் ஏறி, வில்லாபுரத்தில் இறங்கிக் கொண்டேன். இறங்கியதும் அங்கு காத்திருந்த நண்பனும் நானும் அருகிலிருக்கும் டீக்கடைக்குச் சென்றோம். அந்தக் கடையினைப் பார்த்தால் நமக்கே ஒரு ஆசைவரும், அப்படி ஒரு கடை வைக்க வேண்டுமென்று. அவ்வளவு நேர்த்தியாக அழகாக,சுத்தமாக இருந்தது. சுடு தண்ணீரில் கண்ணாடித் தம்ளர்களைக் கழுவி பின்னர் அதில் டீ போட்டு தருவார்கள். தரும் முன்பு அந்த தம்ளரின் அடிப்பாகத்தை ஒரு சிறிய தண்ணீர் உள்ள வாயன்ற பாத்திரத்தில் வைத்துத் தந்தார்கள். மேலும் கடைக்கு வெளியில் சில மரப் பலகைகளை வைத்து இருப்பார்கள், அதில், தம்ப்ளர் செல்லும் அளவிற்கு சிறிய ஓட்டையும் இருக்கும். அதில்தான் நாம் அந்த தம்ப்ளர்களை வைப்போம். எனவே, அது கீழே விழும் வாய்ப்பும் இல்லை. டீயும் அருமை... மதுரையில் பெரும்பாலான கடைகளும் இப்படித்தான் இருக்கும்.


பின்னர் சிறிது நேர அளவளாவலுக்குப் பிறகு, இருவரும் அங்கிருந்து 10.30 மணியளவில் பெரியார் சென்றோம். நேராக கோனார் கடைக்கு முன்பாக வண்டியினை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றோம். இம்முறை நேரம் கடந்துவிட்டதால் "AC" அறைக்குப் போகச் சொன்னார்கள். சரியென்று மேலே சென்றால், அத்தனை மணிக்குக் கூட அவ்வளவுபேர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். "அடப்பாவிகளா?" இது எதுக்குன்னா, நமக்கு இருக்குமா? என்றுதான். அமர்ந்ததும், ஒரு பையன் வர, அவசரமாக "தம்பி, கறி தோசை இருக்க?" என்றேன். அவன் “இருக்குண்ணே” என்றதும், இரண்டு என்று சொல்லிவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டேன் "அப்பாடா" என்று.




கொஞ்சம் மாவில் ஊத்தாபம் இடுவதுபோல ஒரு வட்டமிட்டு, அதன்மீது ஒரு முட்டை யினை உடைத்து ஊற்றி, அது வெந்து கொண்டிருக்கும் சமயத்தில், அதன் அருகிலேயே மட்டன் சுக்கா செய்து, அந்த தோசையின்மீது அந்தச் சுக்காவினைப் பரப்பி அப்படியே வேகவைத்து எடுத்து வந்ததுதான் தாமதம் என் வயிற்றுக்குள் சென்றுவிட்டது. நாக்கிற்கு பிறவிப் பயனை அடிந்துவிட்டதுபோல அப்படி ஒரு சந்தோசம். நிறைந்த வயிற்றுடன் மட்டுமல்ல, நிறைந்த மனதுடனும் காசைக் கொடுத்துவிட்டு, தனியார் பேருந்து நிற்குமிடத்துச் சென்றோம், சரி இன்னும் கால் மணி நேரம் இருக்கிறதே என்று மீண்டும் ஒரு டீ சாப்பிடலாம் என்று பெரியார் நிலையத்தின் எதிரில் இருக்கும் 24 மணி நேர பால் சேவை கடைக்குச் சென்றோம்.


எனக்குத் தெரிந்தவரை அந்தக் கடையானது 24 மணி நேரமும் திறந்து இருக்கும். இதில் இன்னொரு விசயம் என்னவென்றால், சரியாக 11 மணி அளவில் கடைக்கு வெளியில், பெரிய வாயன்ற கடாயில் பாலினை ஊற்றி மசாலா பால் தயார் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஆக, அந்தக் கடையினைப் பொறுத்தவரை அந்த நேரம்தான் அவர்களுக்கு அன்றைய ஆரம்பமா, அல்லது அந்தாதியா? இன்றுவரை என்க்கு விடை தெரியவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம், மதுரை - தூங்கா நகர் என்பதில் எள்ளளவும் எனக்கு ஐயமில்லை.


அருமையான காபியினைக் குடித்து முடிப்பதற்கும் பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது.

Tuesday, February 5, 2013

மதம் கொள்வோம்



மனிதன் மறந்த,
மனிதம் மறுத்தே,
மனிதம் மறத்த,
மனிதம் வளர்க்க;
'மனிதம்' எனும்
மதம் கொள்வோம் - இம்
மதம் கொண்டே,
மனிதன் கொண்ட
மதம் கொல்வோம்,
மனிதன் கொன்ற
மனிதம் கொள்வோம்...!


Tuesday, January 29, 2013

கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை...



அது என்னப்பா நம்மவங்கமீது ஏதாவது வழக்கு தொடரப்பட்டால், "என் மீது தொடரப்பட்டிருக்கும் வழக்குகளை, சட்டப்படி சந்திப்பேன்" என்கின்றனரே.


என்னோட கேள்வி என்னன்னா "சட்டப்படிதான் சந்திக்கனும், வேறு ஏதாவது வழி இருக்கா? சொல்லுங்களேன் நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்."

இந்த சாலையினைக் கடக்கும்போது, “One Way” என்றால்கூட இரண்டு பக்கமும் பார்த்துச் செல்ல வேண்டியிருக்கிறது. அப்படி நாம் பார்க்காமல் செல்லும்போது, தவறுதலாக வருபவர்கள் நம்மை வசைபாடிவிட்டுச் செல்வார்களேதவிர, அவர்களது தவறை உணரவே மாட்டார்கள்.

என்ன கொடுமை சார் இது?


பத்தினி
பெய்யனச் சொன்னதும்
பெய்யுமாம் மழை,

இவர்-
பெய்யும் என்றதும்
பெய்யாது
பொய்த்துப் போகுமாம் மாமழையும்...

[சென்னையில் இன்று வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்படும், தமிழகத்தின் ஒரு சில இடங்க்களில் இலேசானது முதல் ..., ஆம் அவரேதான்]



சாலையோரங்களில் சாலையினை ஆக்கிரமித்து கடை வைத்து இருப்பவர்கள், காவலர்கள் அவர்களை காலி செய்யச் சொல்லும்போது, "இவனுகளுக்கு மாமூல் கொடுக்கலைன்னா, இப்படித்தான் ஏதாவது சொல்லி மிரட்டுவது. ரொம்ப அநியாயம்பா இது" என்பார்கள். சாலையினை ஆக்கிரமிப்பதே ஒரு அநியாயம் என்பது இவர்களுக்குத் தெரியாதா என்ன?

*************************************************

இளநீர் கடையில் இளநீர் வாங்கும்போது, விலை எவ்வளவு என்று கேட்டால், பெரும்பாலும் இரண்டு விலையினைச் சொல்வார்கள். இரண்டிற்கும் 5 ரூபாய் வித்தியாசம் இருக்கும். பொதுவாகவே, அந்தக் கடையில் நல்ல பல காய்களும், சொறி பிடித்ததுபோல சில காய்களும், பெரிய காய்களும், சிறிய காய்களும் இருக்கும். அந்த கெட்ட அல்லது சிறிய காய்களைத் தவிர்ப்பதற்காக நாம் அதிக விலை சொன்ன காயினைக் கொடுக்கச் சொன்னால், அவர்கள் செய்யும் முதல்வேலை என்ன தெரியுமா?

விலைபோகாதிருக்கும் காய்களைத்தான் எடுப்பார்கள், அதை வெட்டும்வரை வாங்குபவர் ஒன்றும் சொல்லாவிட்டால் அதை அவர்கள் தலையில் கட்டிவிடுவார்கள். நல்லதைக் காட்டி கெட்டதை வியாபாரமாக்குவது தவறென்பதை எப்போதுதான் உணர்வார்களோ? பல கடைகளில் இருக்கும் கெட்ட காய்களுக்குக் காரணம், அவர்கள் அவை நன்றாக இருக்கும்போது வியாபாரிக்காததே.

அதிகமான வறட்சியினைப் பார்க்கும்போது மட்டும் நாம் அனைவரும் வருத்தப்படும் அதே நேரம், அதிகமான குளிர்சியினைப் பார்க்கும்போது மட்டும் ஏன் சந்தோசப்படுகிறோம்?.இன்னும் சொல்லப்போனால், அதிகமான குளிர்சியினால் பனி பொழிந்தால், அதில் அநேகமாக நாம் புகைப்படம் எடுப்பதை விரும்பாமல் இருப்பதில்லை.

*************************************************

சாலையோரங்களில் இருக்கும் பல பதாகைகளும் இதைத்தான் சொல்கின்றன. "வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்; மரம் மழையின் உயிர் நீர்". இவ்வாறாக இருக்கும் அந்தப் பதாகைகளுக்கு முன் அந்த இடத்தில் இருந்தது என்னவோ வானுயர்ந்த மரங்கள்தான். மரமழிப்பதால் மரம் வளர்க்கவேண்டிய சுழல் நமது.

*************************************************

தாய் நாடிலிருக்கும்போது அந்நிய மொழியும், அந்நிய நாட்டிலிருக்கும்போது தாய்மொழியும் பேசுவது எதனால்?

*************************************************

முதிர்ச்சியிடையும் பலவும் 'பழம்' என்றுதான் அழைப்பார்கள். இதிலிருந்து விதிவிலக்காக இருப்பது 'ஊறுகாய்'

*************************************************

"Lift"-காக காத்திருக்கும்போது, நிற்கவில்லையென்றால் வரும் கோபமும்; நாம் செல்லும்போது பல இடங்களில் நின்று செல்லும்போது வரும் கோபமும் ஒன்றாகவே உள்ளது.

இதைத்தான் ஒரு காமெடியில் சொல்லியிருப்பார்களோ.

கேள்வி: "ஏன் தம்பி, நம்மூர்ல இருந்து பக்கத்து ஊருக்கு எத்தனை கிலோமீட்டர்"

பதில்: "ரெண்டு கிலோமீட்டர்"

கேள்வி: "அப்ப, அந்த ஊர்ல இருந்து நம்ம ஊருக்கு எவ்வளாவு?"

ரெண்டும் ஒன்னாத்தானே இருக்கனும்? அதனால இப்படிக் கோபம் வருவது தவறல்ல. அப்படியா?

Wednesday, January 23, 2013

நாயறிவு நமக்கில்லை...



தலைவனில்லா தனிமையில்,
தலைவனின் வீட்டிலிருக்கும்,
நாய்,
நடு நிசியில்,
தனனை நோக்கி,
தனித்து வருபவரை,
தனித்து நின்று பார்த்து குரைக்கின்றது....

பார்த்ததால் குரைக்கின்றதா,
பார்ப்பதற்காகக் குரைக்கின்றதா?
பார்த்தாலும் பிடிபடுவதில்லை
-'நாயறிவு நமக்கில்லை'

யாரோ,
கண்டவரென்பதாலோ - தன்னால்
கண்டவரென்பதாலோ - தான்
கண்டவர் - கண்டவரென்பதாலோ,
கண்டபடி குரைக்கின்றது,
கண்டபடி எண்ணத் தோன்றுகிறது
-'நாயறிவு நமக்கில்லை'

வருபவர் இதற்குமுன்
வந்தவரா? எப்போதேனும்
வந்து செல்பவரா?
வந்து வந்து செல்பவரா?
எதுவும் தெரியாது - இன்னும்
கண்டபடி குரைக்கின்றது நாய்,
-'நாயறிவு நமக்கில்லை'

வந்தவர் அருகில்
வந்ததும்
தாவிப்பாய்கிறது...
இன்னும் குரைக்கிறது,
நன்றியோடு
தன் தலைவன் கைகளுக்குள் இருந்துகொண்டு...

காணயொளி கிடைக்கும்வரை,
காட்சிக்குப் புலப்படும்வரை,
காட்டுத்தனமாய் குரைத்தது,
நாயல்ல - குழம்பிய மனமென்று விளங்கியது...
-'நாயறிவு நமக்கில்லை'

Wednesday, January 9, 2013

பூ


இறப்பிற்கும், பிறப்பிற்கும்,
இதரபிற சடங்குக்குமென,
இடத்தைப் பொருத்து,
இயற்றப்படுகிறது இதன் விதி – பூ!

சேரும் இடத்திற்கேற்ப
நிறம் மாறிக் கொள்ளுமாம் நீர்;
சேரும் இடத்திற்கேற்ப
நிறம் மாறாமல்,
பெருமையும் சிறுமையும்படுகின்றது - பூ!

நிறம் ஒன்றுதான்,
நிகழ்வுகள்தான் பல,
உருமற்றாமில்லாமலே பல்வேறாக
உருவகப்படுத்தப்படுகின்றது – பூ;

நீரின்றி அமையாது உலகு;
பூவின்றி அமையாது உணவு;

Tuesday, January 8, 2013

அண்ணே! ஃபிரெஸ்ஸா ஒரு ஜூஸ் போடுங்க


இது
நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகி இருக்கும். அப்போது நானும்,என் நண்பனும் "MBA" தேர்வுக்காக கோயம்பேட்டிலிருக்கும் ஒரு கல்லூரிக்குச் சென்று தேர்வு எழுதிவிட்டு பின்பு மதிய வேளையில் திரும்புவது வழக்கம். தேர்வானது சனி, ஞாயிறுகளில் மட்டுமே நடக்கும். அன்றும் அப்படித்தான், தேர்வு எழுதிவிட்டு, கோயம்பேட்டில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தோம். நாங்கள் செல்ல வேண்டியது தரமணிக்கு, ஆகவே "M70"-க்காக காத்திருந்து, நேரம்தான் வீணானது. நமக்குத்தான் எந்த வண்டிக்குக் காத்திருக்கிறோமோ அந்த வண்டி மட்டும் கண்டிப்பாக வருவதில்லையே.

அன்றும் அப்படித்தான், வண்டி வந்தபாடாக இல்லை. அப்போது சென்னையின்பேர் சொல்லும் காலமான, வெயில் காலம்வேறு. சரியான தாகமாக இருந்தது. எவ்வளவு தண்ணி குடிச்சாலும் அந்த வெயில்காலங்களில் சரிப்படாது. ஒன்று வீட்டுக்குள்ளேயே அடங்கிவிடனும்; அப்படி இல்லையா, அடிக்கடி தண்ணீரைச் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். எங்களது அன்றைய நிலையும் அப்படித்தான். சரி கிண்டியில் இறங்கினால் அங்கொன்றும், இங்கொன்றுமாக சாத்துக்குடி கடைகளும், கரும்புச் சாறு கடைகளும் இருக்கும். சரி, வந்த வண்டியிலாவது சென்றால் கிண்டியில்போய் ஏதாவது குடித்துவிட்டு, காத்திருக்கலாமே என்று, D70-யில் ஏறிப் பயணப்பட்டோம்.



கிண்டியில் இறங்கிவிட்டு எதை முதலில் குடிப்பது என்று முடிவெடுப்பதில் குழப்பம் வந்தது. எங்களது பழக்கம் எப்படின்னா, டீ குடித்து முடித்த கையோடு(வாயோடு), பழச் சாறும் குடிப்போம். அதாவது சாப்பிடும் விசயத்தில் நாங்கள் யாரையும் எதற்காகவும் ஒதுக்கி வைப்பதில்லை. ஒருவர் இருக்கிறார் என்பதற்காக மற்றொருவரை ஒதுக்கி வைக்க மாட்டோம், அந்த அளவிற்கு பரந்த மனப்பான்மையாளர்கள் நாங்கள். அன்றும் அப்ப்டித்தான், முதலில் கரும்புச் சாறு அருந்திவிட்டு பிறகு, சாத்துக்குடி குடிக்கலாம் என்று முடிவெடுத்து கரும்புச்சாறு அருந்தச் சென்றோம்.

அதையும்
அவ்வளவு சுலபமாக குடிப்பதில்லை, கரும்புச் சாற்றில் இரண்டு ரகம் உண்டு, ஒன்று புதிதாக அப்பொழுதுதான் போடுவார்கள். மற்றொன்று ஏற்கனவே போட்டு வைத்ததைத் தருவார்கள். அப்படி பழையது இருந்தால் எப்பொழுதும் முதலில் அதன் நிறத்தைப் பார்ப்போம் நல்ல வெளிர் பச்சை நிறத்தில் இருந்தால் மட்டுமே வாங்குவோம், இல்லையென்றால் திரும்பிவிடுவோம்.சில நேரங்களில், ஏற்கனவே போட்டுவைத்திருக்கும் சாறானது-கெட்டுப்போய் சற்று கருப்பு நிறத்தில் மாறிவிடும். அதைக் குடித்தால் "உவ்வே...", கேவலமா இருக்கும். ஆகவே சரியானதை மட்டுமே தேர்வு செய்வோம். இதை எப்படிச் சொல்லவேண்டுமென்றால் "தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பிக் கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்பட்டது" என்று காபி விளம்பரத்தில் சொல்வார்களே, அதைப் போல சொல்ல வேண்டுமென்றால், "தேர்ந்தெடுக்கப் பட்ட உணவுகளை மட்டுமே எமது வாய்க்கு உணவாக்குகிறொம்" என்றுதான் சொல்ல வேண்டும்.


அன்று அப்பொழுதான் சாறினைப் பிழிந்தார்கள், சரியென்று ஆளுக்கொன்று வாங்கிக் குடித்துவிட்டு, அடுத்ததாக சாத்துக்குடி கடைக்குச் சென்றோம். இந்த சாத்துக்குடிச் சாறைக் குடிப்பதிலும் ஒரு முறையுண்டு எங்களிடம். அதாவது சற்று பெரிய கடைகளுக்குச் சென்று இதைக் குடித்தால், அவர்கள் என்ன செய்வார்கள், சாறினைப் பிழிந்து, குடுவையில் வைத்து,சர்க்கரை சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து விடுவார்கள். இப்படிச் செய்வதால், அந்த சாத்துக்குடியின் உண்மையான தன்மையே போய்விடும். மேலும் நுரை, நுரையாக வேறு இருக்கும். எனவே, பெரிய கடைகளுக்குச் சென்றால் இன்றுவரை சாத்துகுடி மட்டும் வாங்குவதில்லை. இப்படி தள்ளுவண்டியில் வைத்து பிழிந்து கொடுக்கும் கடைகளில் மட்டுமே சாப்பிடும் பழக்கம் இன்றுவரை உள்ளது.

அன்றும் அப்படித்தான், ஒரு சிறிய தள்ளுவண்டிக் கடையில் வயதான பெரியவர் ஒருவர் விற்றுக் கொண்டிருந்தார். எப்போதும் வயதானவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நாங்கள் அன்றும் அதே போல அந்தப் பெரியவர் கடைக்கே சென்றோம். அப்போது மதியம் மணி 2 இருக்கும். அவரிடம் விலை எவ்வளவு என்றோம், அவரும் 10 ரூபாய் என்றார். சுட்டெரிக்கும் அந்த வெயிலில் அவர 10 ரூபாய் என்றதும் ஜில்லென்றாகிப் போனோம். மற்ற கடைகளில் 20 அல்லது 15 ரூபாய், இங்கு மட்டும் இவ்வளவு விலைக் குறைப்பால், மட்டற்ற மகிழ்ச்சியடைந்ததால் நானும் அந்த ஏழுகோடி பச்சைத் தமிழர்களில் ஒன்றென்பதை உணர்ந்து கொண்டேன். சரி "இரண்டு கொடுங்கள்" என்று சொல்லிவிட்டு காத்திருந்தோம்.



வழக்கமாக எல்லாக் கடைகளிலும் இருப்பதைப் போல, ஒரு சட்டியின்மேல் சல்லடையினை வைத்து இருந்தார். பிழியும் சாறினைப் பிடித்து இந்தச் சட்டியில் ஊற்றுவதற்காக ஒரு சிறிய சட்டியும் வைத்து இருந்தார்.


அவர், சரியாக ஒரு 10 பழங்களை எடுத்து நறுக்கி, அந்த சாறு பிழியும் கருவியில் வைத்துப் பிழிந்துகொண்டே இருந்தார். எங்களுக்கு ஆச்சரியத்திற்குமேல் ஆச்சரியம், எப்படி இவருக்கு கட்டுப்படியாகிறது என்று ஒரே வியப்பாக இருந்தது. பிறகு, கொஞ்சம் "ஐஸ்" போடுங்கள் என்று சொன்னதும் அவர். இந்த வெயிலுக்கு அதைச் சேர்க்கக்கூடாது என்று சொன்னார். உடனே நாங்கள் "என்னே ஒரு கரிசனம்" என்று எங்களுக்குள் எண்ணிக் கொண்டோம்.
சரியான வெயில், செவுளில் அறைந்ததுபோல வெயில் அடித்துக் கொண்டிருந்தது. இவரிடம் ஏதாவது கேட்கப்போய் இவர் அரை மணி நேரத்திற்கு அறுத்துவிட்டால் என்ன செய்வதென்று பயந்து "ஐஸ்" இல்லாமல் குடிப்பதற்குத் தயாரானோம்.

அவர் டம்ளரில் ஊற்றும்போது அதன் நிறத்தைக் கவனித்தால், தண்ணீராக இருப்பது உணர்ந்து கொண்டோம். பிழியும்போது இருந்த நிறத்திற்கும், தற்போதைய நிறத்திற்கும் நிறைய வேறுபாடு இருப்பதை உணர்ந்துகொண்டோம். சரி, நிறம்தான் இப்படி இருக்குமென்று குடித்தால் சுவை படு கன்றாவியாக இருந்தது, அதாவது "சப்பென்று" இருந்தது. என்னவோ இவர் கோல்மால் பன்னுவதாகவே நினைத்துக் கொண்டு அவ்விடத்தைவிட்டுச் சென்றோம்.


மறு நாளும் வழக்கம்போல கோயம்ப்பேட்டிலிருந்து கிண்டி வந்து செல்வதாக முடிவெடுத்து கிண்டியில் இறங்கினோம். சரி, இவர் என்ன செய்கிறார், எப்படி நிறம் மாறுகிறது என்பதை இன்று கண்டுபிடித்தே தீர வேண்டுமென்று எண்ணி, சற்று தூரத்தில் நின்று கொண்டு இவரையே வேவு பார்த்துக் கொண்டிருந்தோம். முந்தைய தினத்தைப் போலவே, இருவர் வந்தார்கள்; அவர்கள் சொன்னதும், ஆகப்பட்ட பழங்களைப் பிழிந்து ஊற்றுகிறார் அந்த சல்லடை மூடிய கிண்ணத்தில். ஊற்றும்ப்போது நல்ல நிறத்தில் இருக்கிறது. பிறகு குடிப்பதற்காக டம்ளரில் ஊற்றும்போது நிறம் மாறியிருந்தது. "என்னடா இது? எப்படி இது சாத்தியமாகும்" அப்படின்னு யோசிச்சிக்கிட்டு இருந்தா, அப்பத்தான் அந்த சூட்சமத்தக் கண்டுக்கிட்டோம். அவர் என்ன செஞ்சாருன்னா, முதலில் அந்தப் பெரிய சட்டியில் பாதி அளவிற்கு தண்ணீரை நிரப்பி வைத்து விடுகிறார். அதன்பிறகு, அதன்மீது, சல்லடையினை வைத்து மூடி வைத்து விடுகிறார். பிறகு யாராவது வந்து கேட்கும்போது, அவர்களை நம்ப வைப்பதர்காக, அவர்கள் கண் முன்னாடியே பல பங்களைப் பிழிவதுபோல படம் போடுகிறார். 'அடக் கிழட்டுப் பயலே... உன்னைப் போயி நல்லவன்னு நினைச்சிட்டோமே'ன்னு நொந்துகிட்டோம்.

"என்ன ஒரு வில்லத்தனம்?" "உக்கார்ந்து யோசிப்பாங்களோ?"... “நம்ம மூஞ்சியப் பார்த்ததும் உரண்டை இழுக்கனும்னு தோணுமோ?”


சொன்னா நம்ப மாட்டீங்க, இப்போ அந்தக் கடைக்கு இரண்டு சிறியவர்களை வேலைக்கு வைத்து அந்தக் கடையினை நடத்திக் கொண்டிருக்கிறார். அந்த தள்ளுவண்டிக் கடைக்கு பெயர் பலகைகூட வைத்துவிட்டார். இடம்: கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிலையம்; "" பேருந்து நிறுத்தம். எங்க ஊருப் பக்கமெல்லாம், இந்த அளவுக்கு, யோசிச்செல்லாம் ஏமாத்தாமாட்டாங்கடா சாமி...
"வருசா வருசம் நம்ம ஒரு கிருக்கன்கிட்ட மாட்டிக்கிறோமே"

அட அங்க ஒரு ஜூஸ் கடை இருக்கு; "அண்ணே, நம்ம பசங்களுக்கு, ஃபிரெஸ்ஸா ஒரு ஜூஸ் போடுங்க..."

Wednesday, January 2, 2013

பொறுமை(யால்)பட்டவர்கள்...



"பொறுமை கடலினினும் பெரிது". "பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு" என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியா, அதையும்தான் பார்த்து விடுவோம்...



பொறுமையால்
பொறுமைப்பட்டவர்களிவிட,
'பொறுமையால் பட்டவர்களே' அதிகம்;


பொறுமையாய்
பொறுமையிழப்பவர்களைவிட,
பொறுமையற்று,
பொறுமையிழப்பவர்களால்
பொறுமையிழப்பவர்களே அதிகம்;


பொறுமைப்பட்டவர்களின்
பொறுமையால் கூட,
பொறுமையிழந்தவர்களும் உண்டு;
பொறுமையே இல்லாத
பொறுமைசாலிகளும் உண்டு...


பொறுமையோடு,
பொறுமைக்காக எழுதிய இதை,
பொறுமையோடு படிததவர் எத்தனையோ - இந்தப்
'பொறுமையால் பட்டவர்கள்' எத்தனையோ?
பொறுமைப்பட்டவர்கள் எத்தனையோ???