இதற்கு முந்தைய பதிவில் ஒரு சில படங்களில் இருந்து சில காட்சிகளை பற்றி எழுதி இருந்தேன். இந்தப் பதிவிலும் அதுபோல சில காட்சிகளை பார்க்கலாம்.
நான் சென்ற பதிவில் சொன்னமாதிரி, இது எமது வாழ்க்கையினை பிரதிபலிப்பதாக சொல்லி இருந்தேன். சேரன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த "வெற்றிக் கொடிகட்டு" படத்தில் பலகாட்சிகள் அப்படித்தான் இருக்கும். அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒன்று என்றால், அது வடிவேலு அவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி, ஒருவருடன் பேசிக்கொண்டே வரும்போது பார்த்திபன் அவர்களை பார்த்ததும், இறங்கிய பேருந்திலேயே மீண்டும் ஏறி செல்வதுபோல படமாக்கப்பட்டிருக்கும். இதை மேலோட்டமாக பார்த்தால் நல்ல நகைச்சுவை காட்சியென்று எளிதாக கடந்துவிடலாம். இதில் ஏதேனும் காட்சிப்பிழையென்று பார்க்க நேர்ந்தால், இந்தக் காட்சியானது கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் வரும். அவ்வளவு நேரமாக பேருந்து எப்படி அங்கேயே நிற்கும் என சிலருக்கு சந்தேகம் எழக்கூடும்.
இதை எமது பகுதியில் நடக்கும் நிகழ்வோடு ஒப்பிட்டு விளக்கினால் அதுவும் சரியென்று படும். எமது ஊருக்கு அருப்புக்கோட்டையிலிருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்படும் ஜெயவிலாஸ் பேருந்தானது ஒரு மணிநேர பயணத்திற்கு பிறகு பரளச்சி எனும் ஊரினை வந்தடையும். அங்கு வந்ததும் பேருந்தை அணைத்துவிட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் டீ கடைக்கு டீ அருந்த சென்று விடுவார்கள், அதோடு வடைகளும் அடங்கும். அவர்களோடு சேர்ந்து பேருந்தில் பயணித்த ஒருசிலரும்
செல்வார்கள். கிட்டத்தட்ட பத்து நிமிட இடைவேளைக்கு பிறகு மீண்டும் பயணம் ஆரம்பிக்கும். அதே காட்சியினைத்தான் இந்தப் படத்திலும் எடுத்து இருப்பார்கள். சற்று, அந்தக் காட்சியின் பின்னால் தெரியும் காட்சிகளை உற்று நோக்கினால் அது விளங்கும். வடிவேலு அவர்கள் இறங்கியவுடன் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் இறங்கி டீ கடைக்கு செல்வதை தெளிவாகக் காண முடியும். இது ஒரு காமெடி காட்சிதானே, ஏன் இதற்கு மெனக்கெடனும் என்று இல்லாமல், அவ்வளவு கவனம் செலுத்தி படமாக்கி இருப்பார்கள். இந்தப் படத்தை அடுத்த முறை பார்க்கும்போது, பின்னால்
தெரியும் கதாப்பாத்திரங்களையும், காட்சிகளையும் உற்றுப் பாருங்கள். அவ்வளவு அழகாக எதார்த்தமாக படமாக்கி இருப்பார்கள். குறிப்பாக, பார்த்திபன் அவர்கள் "Given & take Policy" என்று சொல்லும் அந்தக் காட்சியினைப் பாருங்கள், பின்னால் தெரியும் "மாட்டு வண்டியினைப் பழுது பார்ப்பது" மற்றும் காட்சியில் தெரியும் அனைத்தும் அத்தனை யதார்த்தமாய் இருக்கும்.
காட்சியில் முன்னிலையில் வரும் நடிகர்களுக்கு மட்டுமல்ல அந்தக் காட்சி முழுவதும் வருபவர்களுக்கும் அவர்கள் எந்த நேரத்தில் எப்படி நடிக்க வேண்டுமென்று சொல்லிக்கொடுப்பது எவ்வளவு சிரமம், அதற்கு ஏற்றாற்போல அந்த நேரத்தில் நடிப்பதும் சிரமம்தான்.அடுத்து நான் குறிப்பிட விரும்புவது, சில கலைஞர்களுக்காவே வைக்கப்படும் காட்சிகள். திரைத்துறையில் வாய்ப்பு என்பது வெகுசிலருக்கு மட்டுமே கிடைக்கும், கிடைக்கும் அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொள்பவர்கள் மேலே வருகிறார்கள்,பிறர் மீண்டுமொரு வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். அப்படி வாய்ப்பு கொடுப்பதற்கும் ஒரு மனம் வரவேண்டும், அப்படி மனம் இருந்தாலும் அதற்கான காட்சி வேண்டும், அப்படி இல்லாவிட்டாலும் தனியாக ஒரு காட்சியினை வைப்பதைப்பற்றி யோசிக்க வேண்டும், அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இப்படி பல உள்ளன, அந்த வரிசையில் நான் சுட்டிக் காட்ட விரும்புவது, அதிசய பிறவி படத்தில் வரும் ஒரு காட்சிதான்.
இந்தக் காட்சியில் காமெடி நடிகர் கிங் காங்க் என்று அழைக்கப்படும் ஷங்கர் அவர்கள், திறம்பட பிரேக் டான்ஸ் ஆடி இருப்பார். இப்பொழுது யோசித்துப் பார்த்தால், தனது உருவத்தினைப் பற்றிய கிண்டல் கேலிகளைத் தாண்டி தனக்கான ஒரு திறமையினை வளர்த்துக் கொள்வது எவ்வளவு பெரிய விஷயம். மேலும் இந்தக் காட்சியினை இவருக்காக மட்டுமே இயக்குனர் வைத்து இருக்கவேண்டும். ஏனென்றால் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வரும் இந்த காட்சியில் வேறு ஒன்றும் இருக்காது, ஒரு கலைஞனை வளர்த்துவிடமென்று எடுக்கப்பட்ட காட்சியாகத்தான் எனக்கு இது தோன்றுகிறது. இது போல், நிறைய இருக்கலாம், எனக்கு ஞாபகம் இருப்பதால் இதனை இந்தப் பதிவில் எழுதுகிறேன்.
அடுத்து ஒன்றே ஒன்றை மட்டும் பதிவு செய்து நிறைவு செய்கிறேன். ஒவ்வொரு படத்தையும் திரைக்கதை எழுதி அதை படமாக்கும்போது, அவர்கள் நினைத்தபடி வரவில்லையென்றாலோ, வேறு மாதிரி எடுக்க நினைத்துவிட்டாலோ எடுத்த அனைத்தையும் நீக்கிவிட்டு மீண்டும் முதலில் இருந்து எடுப்பார்கள், வெகு சிலர் மட்டுமே இவ்வாறு செய்கிறார்கள். அந்த வரிசையில், கமல் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள் அடங்கும். முதலில், கிராமத்து பின்னணியில் ஒரு கதாப் பாத்திரத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதனை, சென்னையில் ஒரு சேரி கதாப்பாத்திரமாக மாற்றி இருப்பார்கள். முதலில் அந்த கிராமத்து பாத்திரத்தில் காந்திமதி அவர்கள் நடித்து இருப்பார்கள், பின்னாளில் மனோரமா அவர்களை நடிக்க வைத்து படமாக்கி இருப்பார்கள். முதலில் எடுக்கப்பட்ட காட்சியில் எத்தனை புது கலைஞர்கள் வாய்ப்பு கொடுக்கப்பட்டும் திரையில் காணாது போயினரோ? இப்படி எவ்வளவோ கடினப்பட்டு படம் எடுத்தாலும், பல நேரங்களில் எதிர்பார்த்ததுபோல அமையாது போய்விடக் கூடும். இதையெல்லாம் தாண்டித்தான் மீண்டும் மீண்டும் புதிய வார்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. நல்ல முறையில் எடுக்கப்படும் அனைத்துப் படங்களுக்கும் அதற்கான மரியாதையினை கொடுத்தாக வேண்டும்.
இதே மாதிரியான முந்தைய பதிவு # https://anbanvinoth.blogspot.com/2020/04/blog-post_17.html