Monday, April 13, 2020

நான் ரசித்தவை - Tumbbad (2018)

"ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் நிறைய நேரம் கிடைப்பதால் அதை குடும்பத்துடன் செலவிடும் நேரம்போக மீதமிருக்கும் நேரங்களில் நல்ல படங்கள் பார்ப்பதற்கும் பயன்படுத்திக் கொள்கிறேன்". இப்படி எழுத வேண்டுமென்றுதான் ஆசை, ஆனால் நிலைமை தலைகீழ், சராசரி நாட்களைக் காட்டிலும் அதிக நேரம் அலுவலக வேலை பார்க்க வேண்டி உள்ளது. என்னதான் வீட்டில் தனித்து இருந்தாலும், அலுவலகப் பனி இருப்பதால் வழக்கமான நாட்களாகத்தான் செல்கின்றன பெரும்பாலான வார நாட்கள். வார இறுதியில் கிடைக்கும் நேரத்தில்தான் கொஞ்சம் இதுபோன்ற படங்களுக்கும், கட்டுரைகளுக்கும் நேரம் ஒதுக்க முடிகிறது. அந்த வகையில் நான் ஏற்கனவே பார்த்து ரசித்த படங்களும் அடங்கும். அவ்வாறு என்னை வெகுவாக கவர்ந்த ஒரு படத்தைப் பற்றித்தான் இந்த பதிவில் எழுதுகிறேன். 2018-ஆம் ஆண்டு "Hindi" மொழியில் வெளிவந்த "Tumbbad" படம்தான் அது. பேராசை பெரு நஷ்டம் என்ற மையக்கருவை தாங்கி வந்த படம் இது.

இந்தப் படம் எவ்வாறு உருவானது என்பது பற்றிய தகவல் சுவாரசியமானது, இந்த கதையினை எழுதியவர் அவருடைய நண்பரிடம் இருந்து ஒரு சிறு குறிப்பாக அவருடை பதின்வயதில் கேட்டு இருக்கிறார். பின்னர் அதை மெதுவாக மெருகேற்றி பல வருட கோர்ப்புகளுக்குப் பிறகு அதை ஒரு திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார். பின்னர் அதற்கு சரியான தயாரிப்பாளரை அணுகி அதை படமாக்கி பார்த்தும் திருப்தி அடையாமல், மீண்டும் கதையினை மெருகேற்றி கடைசியாக உருத்தரித்திருக்கும் படம்தான் இந்த "Tumbbad". தன்னுடைய கதையினை ஒரு ரசிகனாக அமர்ந்து பார்த்து திருப்தி ஆகாமல், மீண்டும் படைக்கப்பட்ட படம் இது. ஒரு படைப்பாளியிடம் இருந்து வரும் படைப்புகளானது, படைப்பாளியின் கோணத்தில் இருந்து மட்டும் பார்க்காமல் அதை காண்பவராது/ரசிப்பவரது கோணத்திலும் பார்த்து அதை வார்த்தால்தான் அந்த படைப்பானது முழுமை பெறும்.

ஒரு படைப்பாளிக்கு, அவருடைய எண்ணங்களை அவருடைய விருப்பம்போல செய்யவிட்டால் அதற்கு பலனாக இதுபோன்றதொரு அற்புத படைப்புகள் கிடைக்கும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது இந்த படம். 

இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் அத்தனை தெளிவாக, அழகாக படம் பிடிக்கப்பட்டு இருக்கும். இந்தப் படத்தின் மிகப் பெரிய ஒரு சொத்து என்று சொன்னால் அது ஒளிப்பதிவுதான், அத்துணை அழகாக இருக்கும். ஒளிப்பதிவிற்கு எடுத்துக்காட்டாக பலவற்றைக் கூறலாம், அந்த சின்னஞ் சிறு வீட்டில், கைவிளக்கு ஒளியில் அற்புதமாக படமாக்கியிருப்பார்கள். அந்த முதியவர் இறப்பை காட்சிப்படுத்தியிருப்பது, ஓடத்தில் பயணம் செய்வது, நகரத்து தெரு என் அடுக்கி கொண்டே போகலாம். கதைக்களமானது சுதந்திர இந்தியாவிற்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக அவர்கள் அமைத்திருக்கும் காட்சி அமைப்புகள், அதனை ஒளிப்பதிவு செய்த விதம் - ஆகா அத்தனை பிரமாதம். இசையும் குறிப்பிடத்தக்க அளவில் பெரும்பங்காற்றி இருக்கிறது, இவை எல்லாவற்றையும் ஒரு அழகிய மாலையாக உருவாக்கிய பெருமை திரைக்கதை மற்றும் இயக்குனரை சேரும்

இந்த படத்திற்கு அவர்கள் எடுத்திருக்கும் இடம் மிக அற்புதமாக இருக்கும், சபிக்கப்பட்ட கிராமத்தில் எப்போதும் மழை பெய்து கொண்டே இருக்கும், அந்த கிராமத்துக் கடசிகளைக் காணும்போது, நம் மீது மழை பொழிவது போல இருக்கும். அந்த அளவிற்கு, கதையினையும் காட்சியினையும் வைத்து இருப்பார்கள். நான் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்ததால் இதுபோன்ற மழை காட்சிகளை அதிகம் ரசிப்பதுண்டு (தாகம் அதிகம் :)).
ஆனால், மழையே பெய்யாதிருப்பது எப்படி ஒரு சாபமோ, அதுபோல மழை பொழிந்துகொண்டே இருப்பதும் ஒரு சாபம்தான். 
குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதிர் பருவம் என மூன்று காலங்ககளிலும் கதையினை நகர்த்தியிருப்பர். படத்தின் இறுதிக் கடசியில் தன்னுடைய தவறை உணரும் நேரத்தில் கதைநாயகன் எடுக்கும் முடிவும், அதன் பிறகு அவரது மகன் எடுக்கும் முடிவும் மிக அற்புதம். கதையில் வரும் அத்தனை கதாப்பாத்திரங்களுக்கும் ஆடை வடிவமைப்பும் அவ்வளவு பிரமாதமாக இருக்கும். மொத்தத்தில் அனைவரும் பார்த்து ரசித்து வரவேற்க வேண்டிய ஒரு அற்புத படம்தான் இந்த "Tumbbad"

ஒளிப்பதிவு, திரைக்கதை, காட்சி அமைப்பு, இசை, இயக்கம் மற்றும் நடிப்பு என அனைத்து தரப்பும் தத்தமது பணிகளைச் செவ்வனே செய்து அற்புதமாக வந்துள்ளது. படக்குழுவினருக்கு என்னுடைய பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் இது போன்றதொரு படைப்பை அவர்களிடம் இருந்து எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவன்.  பேராசை பெரு நஷ்டமாகாத்திருக்க வேண்டும்!!! :) 

No comments: