Monday, April 13, 2020

மொட்டைக்கும் முழங்காலுக்கும் - பாகம் இரண்டு

வயதிற்கும், நமது அணுகுமுறைக்கும், எண்ணங்களுக்கும் சம்பந்தம் உண்டா என்பது தெரியவில்லை. ஒருவேளை, நமக்கு கிடைக்கும் அனுபவங்களை பொறுத்தே, இவை அனைத்தும் அமைகிறதா? எது எப்படியோ, இந்தக் கட்டுரையானது சில கருத்துக்கள் பற்றி, பலரும் ஒரேயொரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்க எனது மனம் மட்டும் வேறுமாதிரியான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக எண்ணி எழுதப்பட்ட ஒன்று. அதனால், இது தவறெனத் தெரிந்தால், படித்தவுடன் உங்கள் மனதிலிருந்து அழித்து விடவும்.

இருபத்தொன்றாவது நூற்றாண்டில் இருக்கும் நம்மில் பலரும், சாதியினைப் பற்றி பேசுவதோ, அதில் பாகுபாடு பார்ப்பதோ மிகப் பெரும் பாவமாகவும், அதே வேளையில் பிற்போக்கான சிந்தனை உடையவர்களாகவும் பார்க்கும் மனநிலையில் இருப்பதாகவே எண்ணுகிறேன். நாம் உண்மையில் அப்படித்தான் இருக்கிறோமா?, சற்று எனது மனதின் கேள்விகளை இங்க வைக்கிறேன்.


நாம் உண்மையில் அப்படி  பார்க்காமல்தான் இருக்கிறோமா? என்று எண்ணுகையில், ஒரு கேள்வி எனக்கு மனதில் பட்டது. காலையில் பல் துலக்கும்போது நாம் பயன்படுத்தும் தண்ணீரானது "Wash Basin"-இல் இருக்கும் குழாயில் அல்லாமல், கழிப்பறையில் கழிவறையின் அருகில் இருக்கும் குழாயில் இருந்து என்னால் வாய் கொப்பளிக்க முடியுமா? என்றால், அதற்கு என்ன விடை சொல்வதென்று தெரியவில்லை. இரண்டும் ஒரே தொட்டியிலிருந்து வரும் தண்ணீர்தான் என்றாலும், அதை மனது ஏன் ஏற்க மறுக்கிறது? சுத்தம், சுகாதாரம், நாகரிகம் என்று பல காரணங்களை அடுக்கலாம், ஒரு உதாரணத்திற்குத்தான் இதை எடுத்துரைத்தேன். அட, தண்ணீர் வேண்டாம், கழிவறையில் பயன்படுத்தும் "Cup" ஐ எடுத்து அதில் தண்ணீர் நிரப்பி முகம் கழுவகூட மனம் ஏன் ஏற்க மறுக்கிறது? மொட்டைக்கும் முழங்களுக்கும் முடிச்சு போடுகிறேனோ? அவரவற்கு அவரவர் கருத்து நியாயமாய்படுகிறது.

சாதியத்தை வெறுக்கிறோம் என மார்தட்டும் அனைத்து ஊடகங்களும் விளம்பர இடைவெளியில் ஒளிபரப்புவது என்னவோ "சாதி தாங்கிய "" விளம்பரங்களைத்தான். அந்த விளம்பரங்களை எடுத்தவர்களும்,அதில் நடித்தவர்களும், அதை வியாபாரமாக்கியவர்களும் என யாவரும் நவயுக நாயகர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக எதையும் நான் உயர்த்திப் பிடிக்கச் சொல்லவில்லை. தீவிர பற்று கூடாது, அப்படியே இருந்தாலும் அது பிறரைப் பாதிக்கக் கூடாது. ஒன்றை தீர்க்கமாக எதிர்ப்பதால் மட்டுமே நாம் நம்மை ஒரு தெளிவான சிந்தனை கொண்டவர்களாக, தொலைநோக்கு பார்வையாளர்களாக கருத்தாக கூடாது என்பதுதான் எனது வாதம். ஒவ்வொருவருடைய பார்வையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்.

சாதி / மதம் என்று இன்னும் பெயரிடப்படாத பல பாரபட்சங்களை நாம் நம் அன்றாட வாழ்க்கையில் கடந்துகொண்டுதான் இருக்கிறோம். அதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

காலத்திற்கு ஏற்ப மக்களும் அவர்களது பழக்கவழக்கங்களும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. சிலர் அவர்களாக மாறுகிறார்கள், பிறர் காலப் போக்கில், மாற்றம் அடைவது தெரியாமலே மாறிவிடுகின்றனர். இப்பொழுது சரியென்றுப்டுவது, பின் வரும் காலங்களில் தவறாகாது தெரியலாம். அதுபோல இப்போது தவறாகபடுவது பின்னாளில் சரியாகப்படலாம். ஆகவே, வாழும் காலத்தில் மனதிற்கு பிடித்தபடி, பிறரை நோக செய்யாது வாழ்வதே பெரு வாழ்வாக இருக்கும். சக மனிதர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே மதிக்கவும், அன்பு பாராட்டவும் கற்றுக் கொள்ள சொல்கிறேன்.

இதே மாதிரியான முந்தைய பதிவு # https://anbanvinoth.blogspot.com/2014/11/blog-post_11.html

No comments: