Wednesday, January 8, 2020

அட ஞான சூனியம்

இசையினைப் பற்றிய எனது புரிதல் மிகக் குறைவுதான், அதை  ரசிப்பது மட்டுமே எனக்கு தெரிந்த விஷயம், அதுவும்   எனது  மனதிற்கு  பிடித்திருந்தால்  மட்டுமே . இசையறிவு இருந்தால்தான் இசையினை ரசிக்க வேண்டுமென்பதில்லை, ரசிப்பதற்கு பல வழிகள் உள்ளது, அதற்கு முதலாவதாக ரசிப்பதற்கு நாம் செவி சாய்த்தாலே போதும்.இந்தக் கட்டுரையில், இசை பற்றிய புரிதல் இல்லாமல் நான்  ஏதாவது எழுதியிருந்தால்  சுட்டிக்  காட்டவும். எனக்கு  மிகப் பிடித்த  பாடல்கள்  பலவற்றுக்கும், பாடல்  வரிகள்  வெகு சிலவற்றிற்கு மட்டுமே முழுதாகத் தெரியும்,  மற்ற பாடல்களுக்கெல்லாம்  வெறும்  இசை  மட்டும்தான்  நினைவில் இருக்கும். மிகப்  பிடித்தமான பாடல்களுக்கே அப்படியென்றால் , பிற  பாடல்களைச்  சொல்லவே  வேண்டாம்.

பாடல்களை  ரசிக்கும்  எனது  நண்பர்களில் பெரும்பாலோனோர், அவர்கள்  மனதுக்கு  நெருக்கமான  பாடலின் அனைத்து  வரிகளையும்  நினைவில்  வைத்து இருப்பதைக்  கண்டு ,எனக்கு  நானே  கேட்கும்  கேள்வி  இதுதான். நாம் பாடல்களை ரசிப்பேன்  என்று  சொல்வது உண்மைதானா? அப்படியெனில், ஏன் நம்மால் பாடல் வரிகளை நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை? ரசிகன் என்று சொல்லிக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோமா? அல்லது, இசையினை மட்டுமே ரசிக்கும் பழக்கம் உள்ளதா? நான் ரசிப்பது  இசையையா ? அல்லது  பாடல்  வரிகளையா ? அல்லது  இரண்டும்  கலந்ததா? சரி நிதானித்து யோசித்துப் பார்த்தால், இவை அனைத்தும்தான் எனது பதிலாக வந்தது, இதைத்தான் இந்தக் கட்டுரையில் நான் கொடுத்திருக்கிறேன். அதாவது  சில  பாடல்கள்  அதன்  வரிகளுக்காகவும், சில இசைக்காகவும்  சில இரண்டிற்காகவும்தான்.

மனதிற்கு நெருக்கமான பாடல்கூட, வரி மறந்து போகும்போது, அந்த இசையோடு "லா லா லா" என்று முணுமுத்து பாடலை நிறைவு செய்யும்போது தோன்றுகிறது - பாடகரும் ஒருவித இசைக் கருவிதான் என்று, அதனால்தான் பாடகர் பற்றி இந்தக் கட்டுரையில் எழுதவில்லை. பெரும்பாலான பாடல்களுக்கு உயிர்ப்பினைக் கொடுப்பவர்கள் பாடகர்கள்தான் என்றாலும், என்னை பொறுத்தவரை இசையினை முன்னதாகவும், பாடகரை அதற்கு அடுத்த இடத்திலும் வைக்கிறேன்.

ஒரு  சில  பாடல்களை , அது  பாடப்பட்ட  ராகத்தில்  (முறையில் ) இருந்து  வேறு  ஒரு  பாணியில், வேறு ஒரு முறையில், பாடினால் கூட ரசிக்கத்தக்கதாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கு , சதி  லீலாவதி  படத்தில்  கமல் அவர்கள் பாடுவது மாதிரி
மாறுகோ  மாறுகோ  மாறுகையி...
அடி ஜோருகோ ஜோருகோ..ஜோறுகயி
ஒரு சில ராகங்கள் மனதோடு லயித்துப் போகும்போது , அப்படி மனதோடு படுத்தூடும் பாடல்களுக்கு வேறு  சில வார்த்தைகளை  போட்டு  பாடும்  வழக்கமும்  உண்டு, என்னைப் போல் பலருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன் . உதாரணமாக நாம் பார்க்கும் வாசகங்கள்கூட அந்தப் பாட்டாக பாடும் தருணங்களும் வருவதுண்டு. சாலையில் வாகனத்தில் செல்லும்போது அறிவிப்புப் பலகையில் காணும்  "பாலங்களில்  (நீங்கள்)  முந்தாதீர் , வளைவுகளில்  (நீங்கள்)  முந்தாதீர் " வாசகங்கள், "காலங்களில்  அவள்  வசந்தம்" பாடலாக பாட வைக்கிறது இந்த வாசகங்கள்.

அடுத்த பாடலுக்கான(குறளுக்கான) ராகம்/தாளம் மட்டும் கொடுத்துள்ளேன், அது என்ன பாடல் என்று தெரியவில்லை, தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர்  புருசல் தரும்
 
பாடல் ராகம்/தாளம்#
தண்-ணென்ன-நன்னா.....-தன்-னண்ணா....-நன்-னா
தன்னா....நா-னென்னா

இந்தக்  கட்டுரையில்  குறிப்பிட்டு  சொல்ல  வேண்டிய  ஒன்று , மிகப்  பிடித்த  பாடலை  வேறு ஒரு வாத்திய கருவியில் (பாடுபவரையும் சேர்த்துதான்) கேட்கும்போது  அது  ஒரு  புது  விதமான  ஒரு ஈர்ப்பினை தருகிறது. இதில் , மேலும் குறிப்பாக சொல்வதென்றால் , ஒரு  சில இடங்களில்  சில ஏற்ற இறக்கங்களோடு கேட்டாலும்  அத்தனை  இனிமையாக இருக்கும். உதாரணத்திற்கு சில பாடல்களின் இணைப்பினை கொடுத்திருக்கிறேன்.

"தென்றல்  வந்து  தீண்டும்  போது"# 
"சங்கத்தில்  பாடாத  கவிதை" #

பல இன்னிசைக் கச்சேரிகளில் பாடுபவர் அவருடைய ரசிப்பிற்கு ஏற்ப சில பாடல்களில், சில இடங்களில் பாடுவதுண்டு. இதற்கு சிறந்த உதாரணமாக விளக்கு வச்ச நேரத்துல என்ற பாடல் எவ்வாறு உருவானது என்பதைக் கேட்டுப்பாருங்கள், பாக்கியராஜ் அவர்கள் கொடுக்க நினைத்த ஒன்றை, இளையராஜா அவர்கள் எவ்வாறு மாற்றிக் கொடுத்திருப்பார் என்பது புரியும்.


எந்தவொரு பாடலையும் அதன் உயிர்ப்பு குறையாது பாடினால் நிச்சயமாக ரசிக்கலாம். அதைவிடுத்து, பாடலை வேறு மாதிரி பாடுகிறேன்/ இசைக்கிறேன் என்று கொல்ல கூடாது. பழைய பாடல்களை இப்போதைய "Trend"கு மாற்றி பாடி/இசைத்து கொல்லும் சில பாடல்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இதுபோல பல பாடல்களை உதாரணமாக சொல்லலாம், ஒவ்வொரு பாடலுக்கும் அத்தனை மெனக்கெடல்கள் உண்டு. ஒரே பாடலை பலவிதமாக ஒரே படத்தில் கொடுத்து அசத்தி இருப்பார் நம்ம அவர்கள். சொன்னால்தான் காதலா படத்தில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வடிவில் கொடுத்திருப்பார்.
சொன்னால்தான் காதலா ... (மூன்று விதமாக)
தளபதியில் வரும் "சின்ன தாய் அவள்",வள்ளியில் வரும் "என்னுள்ளே  என்னுள்ளே" போன்ற என் மனதோடு நெருக்கமான பாடல்களை , மிக  மெதுவாக , அதுவும்  சிறிது  இடைவெளி  விட்டு  பாடும்போதோ, அதை  அப்படிக் கேட்கும்போதோ கூடுதலாக ஒருவித  உணர்வு  வருகிறது.

சில பாடல்களுக்கு "Humming" மட்டும் போதுமானது. அவதாரம் படத்தில் வரும் "தென்றல்  வந்து  தீண்டும்  போது" பாடலுக்கு "தன்ன-நன-நான-நான-நான-நான-நா......., தனன--நா" என்று முணுமுணுத்தாலே போதும், அந்த உயிர்ப்பு வந்துவிடும்.

பாடகரையும்/பாடலாசிரியரையும் இசையமைப்பாளரையும்  வேறுபடுத்தி காட்ட வேண்டுமென்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. உடல்மேல்  உயிர்  வந்து ஒன்றுவது இயல்பே  எனும் விதிப்படி  - இசையும் , வரிகளும் ஒன்றோடொன்று கலந்தால்தான் அதற்கு  மதிப்பு  வலுப்படும். இதில் உயிரெது, மெய்யெது என பிரிப்பது அவரவர் ரசனையினைப் பொறுத்தது.

பி .கு:  என்னதான் சிறந்த இசையாய் இருந்தாலும், சிறந்த வரிகள் இருந்தாலும், பாடும்விதத்தில்  பாடினால் ,இசைக்கும் விதத்தில்  இசைத்தால்  மட்டுமே  ரசிக்க  முடியும்-இல்லையெனில்  வெறுத்து  விடும். ஒருவேளை  இந்தக்  கட்டுரையும் , நான் எழுத  வேண்டிய  விதத்தில்  எழுதாமல்  வேறு  விதத்தில்  எழுதியிருந்தால்  உங்களுக்கு  ஏற்படும்  அந்த  உணர்வுதான்  "அட  ஞான சூனியம்".

1 comment:

Unknown said...

Yes true...myself listening music only not lyrics thanks....