Monday, January 13, 2020

நம்ம ஊரு நாட்டாமைகள்

இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் வரும் கதாப்பாத்திரங்கள் ஆகட்டும், நமது மன்னர் ஆடசிக் காலத்தில் ஆகட்டும் - பெரும்பாலும் பலரும், தர்ம நெறியில் வாழ்வு மேற்கொண்டதை நமக்கு   எடுத்துச் சொல்கின்றன.

"நம்முயிர்க்கு மேல - மான மரியாதை
மானம்  இழந்தாலே - வாழத் தெரியாதே"

உயிருக்கு மேலாக தமது மனத்தை பெரிதாய் கருதி வாழ்ந்தோர், வாழ்வோர் பலர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம்கூட நஞ்சுதான். அதுபோலத்தான் இந்த மானப் பிரச்சினையும், அதீத கட்டுப்பாடானது - வறட்டு  கௌரவம் இன்னும் பல பிரச்சினைகளுக்கு வித்திட்டுவிடுகிறது. தான் செய்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு, அதை மீற முடியாது போனதால்தான், அவையில் கட்டுண்டு கிடந்தார் பீஷ்மர், அன்றவர் - எது தர்மம் ( சூழ்நிலைக்கேற்றாற்போல) என்று அறிந்து - அவையில் வெகுண்டிருந்தால், பாரதப் போரொன்று நிகழாது போயிருக்கும். இந்த மானப் பிரசினைதான் பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கும் காரணம் என்பதை மறுதலிக்க இயலாது. நான் இதை பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் எழுத எத்தனிக்கவில்லை.  இப்படிப்பட்டவர்கள் இன்னும் நம்மோடு இருக்கிறார்களா என்ற எனது கேள்வியே இக்கட்டுரையின் கரு.

சற்றே நிதானித்து யோசித்துப் பார்த்தால் - ஏன் இல்லை, என்ற பதில் என்னுள் விழுந்தது. சிறு வயதில், நாம் விளையாடும் பல போட்டிகளுக்கும் நடுவர் என்று ஒருவர் இருந்தே தீர வேண்டும். உதாரணத்திற்கு கிரிக்கெட் போட்டியை எடுத்துக் கொள்வோம். அப்படி நடுவராக இருப்பவரை எப்படித் தேர்வு செய்வோம், அதுவும் இரண்டு ஊர்களுக்கு இடையில் நடக்கும் போட்டியென்றால்?


இருதரப்புக்கும் பொதுவான ஒருவரைத்தான் தேர்வு செய்வோம். அவர் இருவருக்கும் பொதுவாகத்தான் இருப்பார். சில நேரங்களில் அவர் நமது எதிரணியினை சார்ந்தவராகக் கூட இருப்பார். இருந்தாலும் எந்நிலையிலும் நடுநிலை தவற மாட்டார். நடுவர் என்று இல்லை, விளையாடும் நபர்களில்கூட சிலர் இப்படித்தான் நியாயமாக நடந்து கொள்வர். அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் நீதிடா... நேர்மைடா... நியாயம்டா... அவ்வளவுதான்.

நண்பர்கள் இருவருக்குள்ளோ, அல்லது பிடிக்காத இருவருக்குள்ளோ ஒரு பிரச்சனை என்றாலும் நடுநிலை செய்வதற்கு ஒருவர் இருப்பார். அவர் பெரும்பாலும் இருவரின் நண்பராகவும் இருப்பார்.  அவர் மத்தியஸ்த்தம் செய்து வைத்தால் இருவரும் அமைதியாக ஏற்றுக் கொள்வார்கள். அந்தளவிற்கு அவர் மீது நம்பிக்கை வைத்து இருப்பார்கள், அதற்கு மிக முக்கிய காரணம் அவருடைய நடுநிலையாகத்தான் இருக்கும், மேலும் இருவர் மீதும் அவர் கொள்ளும் அக்கறையாகவும் இருக்கும்.

தன்னுடைய செயல் பிறரை காயம் செய்யக்கூடாது என்றெண்ணும் ஒவ்வொருவரும் நம்ம ஊர் நாட்டாமைகள்தான்...

நான் முன்பிருந்த இடத்தில், ஒருவர் ரிக்ஸா ஒட்டி பிழைத்துக் கொண்டிருந்தார், அவருக்கு ஒரு  கை இருக்காது. இருந்தாலும் அவர் எவர் தயவையும் நாடாது, தானாக உழைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அவரைப் பார்த்தாலே ஒரு "Energy" கிடைக்கும். அந்த அளவிற்கு அவர், சந்தோசமாக, தைரியமாக,  தெனாவெட்டாக, திமிராக தனது வழியில் வாழ்ந்து கொண்டிருப்பார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். எவரைப் பற்றியும் வீணாக பேச மாட்டார். ஒய்வு நேரத்தில், இருக்கும் ஒரு கையில் பீடியை இழுத்துக் கொண்டு, தானாக சந்தோசமாக பாடி கொண்டிருப்பார்.

"நான்தான்டா என் நாட்டுக்கு ராஜா" அந்த மாதிரி இருப்பார். தன்மானம் இழக்காது அடுத்தவர் உழைப்பை சுரண்டாது வாழும் ஒவ்வொருவரும் "நம்ம ஊர் நாட்டாமைகளே".

எனது பேருந்து பயணத்தின்போது நான் சந்தித்த ஒரு நடத்துனர் என்னை வெகுவாகக் கவர்ந்தார். படியில் நிற்பவர்களை உள்ளே வர சொல்லிக் கொண்டேயிருந்தார், ஒவ்வொரு நிறுத்தத்திலும் "மெதுவாக இறங்குங்கள், பஸ் நின்ன பிறகு இறங்குங்க" என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். இது எல்லாரும் செய்வதுதான் - இவர் இதை சொல்லும்போது பலரும் அவரை சட்டை செய்யவில்லை, இருந்தாலும் அவர் அவரது பணியில் கவனமாக இருந்தார், ஒருமுறைகூட எவரிடமும் கடிந்து கொள்ளவில்லை. அவரது வார்த்தையில் ஒரு கனிவு இருந்தது.

பயணத்தின்போது தவறவிட்ட பணத்தை திரும்ப ஒப்படைத்த நபர் என்று அவ்வபபோது செய்திகளில் அடிபடும்போது "இன்னும் நல்லோர் இருக்கிறார்கள்"  என்று மனம் ஆனந்தம் கொள்ளும்.


சில போக்குவரத்து காவலர்களை உற்று நோக்கினால் அவர்கள் எவ்வாறு தங்களது பணியில் மெனக்கெடுகிறார்கள் என்பது விளங்கும். நான் பயணித்த சாலைகளில் என்னை சிலர் கவர்ந்து இருக்கிறார்கள். ஒரு சிலர், ஒழிப்பு பெருக்கி வைத்துக் கொண்டு "நிதானமாக செல்லுங்கள், "Signal" பார்த்து அதற்கு மதிப்பளித்து செல்லுங்கள், வேகம் அதிகரிக்கும்போது உங்கள் வீட்டை நினைத்துப் பாருங்கள். "Helmat" தலையில் போடுவதற்குத்தான், "Petrol Tank"-கிற்கு அல்ல" என்பதை மணிக்கணக்காக சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஒரு சில  காவலர்கள்,  "Signal" இல்லாத இடங்களில், நடனமாடுவது போல செய்து போக்குவரத்தை கட்டுப்படுத்துவார்கள்.

தன் தொழிலை ஆத்மார்த்தமாக செய்யும் எவரும் ஒரு வகையில் "நம்ம ஊர் நாட்டமைதான்". அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் நீதிடா... நேர்மைடா... நியாயம்டா... அவ்வளவுதான்

No comments: