Friday, November 21, 2014

கோழிக் குஞ்சும் கோடீஸ்வரனும்

சில நாட்களுக்கு முன்பாகவே இதைப் பற்றி ஒரு பதிவு எழுத வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தேன். எனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் எதேச்சையாக இதைப் பற்றிய ஞாபகம் வரவே இதனை இப்போது பதிவு செய்கிறேன். தற்போது அலைபேசி மற்றும் தனக்கென தனியாக மின்னஞ்சல் வைத்து இருக்காதவர்கள் எவரும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தொழில் நுட்பமானது சாமானிய மக்களைச் சென்றடையும் வகையில் தன்னுடைய பொருளாதாரத்தை தளர்த்திக் கொண்டுள்ளது. "எங்களது லாட்டரியில், உங்களது பெயருக்கு லட்சுமியே காட்சி தந்து இருக்கிறார்.ஆகவே உங்களுக்கு அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டப் போகிறார். உங்களுக்கு 100000 ருபாய் கிடைக்க உள்ளது, தொடர்புக்கு... " என்று ஒரு முகவரியும் கொடுத்து நமக்கு அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து இதுபோன்ற மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் வரக்கூடும். அநேகமாக எல்லோரும், இதனைப் பெற்று இருப்போம் என்று எண்ணுகிறேன். இது எவ்வளவு பெரிய மோசடி வேலை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இது ஒருபுறம் என்றால், சில தொலைக்காட்சி நிகழ்ச்சியில், இப்படியாக ஒரு போட்டி நடக்கும். அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொன்னால், அவர்கள் அதற்குப் பரிசாக பணம் தருவார்கள்.

கேள்வி: ஒன்றோடு பூஜ்ஜியத்தைக் கூட்டினால் எவ்வளவு?

Option A: ஒன்னு
Option B: பன்னு
Option C: திண்ணு

(இந்த கேள்வி - பதில் உபயம்: நண்பர் வீரா)

இதற்கு நமக்கு விடை தெரிந்தால், அவர்களைத் தொடர்பு கொண்டு பதிலைச் சொல்லி பரிசை அள்ளலாம். இதில் வேடிக்கை என்னவென்றால், தொடர்பு கொள்ளும் எண்ணுக்கு நிமிடத்திற்கு 10 ரூபாய் வரை வசூல் செய்வார்கள். மேலும், தொடர்பானது உடனே கிடைத்து விடாது, கிட்டத்தட்ட 10, 15 நிமிட காத்திருப்பிற்குப் பிறகுதான் கிடைக்கும். பரிசுத் தொகையின் மதிப்பைவிட, நமது செலவு கூடுதலாகச் சென்றுவிடும் சில நேரங்களில்.

டிக்கெட்டு 5 ரூபாய், பூ 50 ரூபாய்... நல்லா ஓட்டுங்கய்யா உங்க வண்டிய...

இதை 'நூதனத் திருட்டென்று' சொல்வதா, அல்லது 'வியாபார காந்தம்' என்று சொல்வதா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சற்று இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான், எனக்கு பட்டென்று ஒன்று உரைத்தது. எனது சிறு வயதில், இதே போன்றதொரு வியாபாரத்தை கண்டது நினைவுக்கு வந்தது.

எனது சிறு வயதில், எமது ஊரின் கடைத் தெருவின் மையத்தில் ஒரு மிதி வண்டியில் நான்கைந்து கூடைகளில் பல வண்ணங்களில் கோழிக் குஞ்சுகளை எடுத்துக் கொண்டு வந்து விற்றுக் கொண்டிருப்பார்கள். அப்போது, தனியாக ஒரு கோழிக் குஞ்சினை விலைக்கு வாங்கினால் அதன் விலையானது வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே. அதைக் குறைந்த விலைக்கு வாங்குவதற்கு இன்னொரு வழியும் உண்டு. அதை, அதை விற்பவரே செய்வார். ஒவ்வொன்றும் 25 பைசா மதிப்புள்ள 5 ரூபாய் அளவிற்கு சீட்டுக்கள் (சிகரெட் அட்டையில், எண்கள் எழுதப்பட்டிருக்கும் அட்டை) கொடுப்பார். அனைத்து சீட்டுக்களும் விற்று முடிந்தவுடன் அவர், அந்த சீட்டுக்களையெல்லாம் ஒரு டப்பாவில் போட்டு குலுக்கி ஒரு சீட்டினை எடுப்பார். (அவரிடம் தனியாக அதே எண்களுடைய சீட்டுக்கள் இருக்கும்). அப்படி எடுத்த சீட்டின் எண்ணானது யார் வைத்து இருக்கிறாரோ அவருக்கு ஒரு கோழிக் குஞ்சினைக் கொடுத்துவிடுவார். வாங்கியவருக்கோ இலாபம், விற்றவருக்கோ கொள்ளை இலாபம். ஓ... இதுதான் கொள்ளை இலாபமோ?

வாங்கியவருக்கும் மகிழ்ச்சி, விற்றவருக்கும் மகிழ்ச்சி... பின்ன என்ன 'உடனே... வித்திடு...'

இப்பொழுது மேற்சொன்ன நிகழ்வையும் முன்னர் சொன்ன நிகழ்வையும் உங்களால் பொருத்திப் பார்க்க இயலும் என்றெண்ணுகிறேன். இப்பொழுது இந்தக் கொள்ளை இலாபத்தைப் பாருங்கள்...

"கோடிகளை" பரிசாகத் தரும் நிகழ்ச்சியில் பங்குபெற வேண்டுமென்றால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு நமது கைபேசியிலிருந்து பதில் அனுப்ப வேண்டும். அதற்கு தனியாக, அதிகமான ரூபாயானது நமது கைபேசியின் இருப்பிலிருந்து கழியும். இந்த நிகழ்வினில் சில கோடி மக்கள் பங்கு பெறுவதற்காக முற்பட்டால், மொத்தப் பணமும் எவ்வளவாக இருக்கும் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்? மேலும், பலதரப்பட்ட விளம்பரங்களிலிருந்தும் அவர்களுக்குப் பணமானது கிடைக்கும். இந்தப் பணத்தின் ஒரு சிறு தொகையினையே பரிசாகக் கொடுப்பர். ஒருவரிடம் வாங்கி மற்றொருவரிடம் கொடுப்பது (முழுவதையும் அல்ல). எதுவாயினும் அவரும் மகிழ்ச்சி, இவரும் மகிழ்ச்சி. ஆனால் இதற்கு உபயோகிக்கப்பட்ட யோசனையானது அந்தக் கோழிக் குஞ்சுகளை விற்றவரைப் போலவே இருக்கிறது என்றால் அது மிகையல்ல...

No comments: