Friday, July 25, 2014

உள்ளம் கேட்குமே 'more'!

'வேலை தெரிஞ்சவன்டா, வேலை இல்லாதவன்டா...' என்னடா இவன் பாட்ட மாத்திப் பாடுறேன்னு நினைக்கிறீங்களா? நிலைமைக்குத் தக்கவாறுதான பாட முடியும். இப்படித்தாங்க சில நேரங்களில் நமது/எனது நிலைமை இருக்கிறது. கணிணித் துறையில் மட்டுமல்ல, அநேகமாக எல்லாத் துறைகளிலும், தொழிகளிலும்கூட சில நாட்களுக்கு வேலை இல்லாமல் இருக்கும்.

நாம அடிச்ச 'code' இவ்வளவு நல்லாவா வேலை செய்யுதுன்னு, சில நேரங்களில் நமக்கே சந்தேகம் வரும் அளவிற்கு, Client-கிட்ட இருந்து ஒரு mail-ம் வராத நேரங்களில் எனது/நமது பொழுது போக்குகளைப் பற்றிய பதிவு இது.

நானும் எவ்வளவு நேரம்தான் வலைதளத்திலேயே சிக்கிக் கொண்டிருக்க முடியும், முக வலைதளத்தில், புதிய பதிவுகளை எதிர் நோக்கி, Refresh பட்டன் அழுத்தி,அழுத்தி அந்த பட்டனே சோர்ந்து போய்விடும் அளவிற்கு பார்த்துக் கொண்டே இருக்க முடியாது. சில நேரங்களில் பயங்கர Bore அடிக்கும், சில நேரங்களில் Bore பயங்கரமா அடிக்கும்.

ஆனா இந்த நேரத்துல, "உங்களுடைய சேவை எங்களுக்குத் தேவை" என்று யாராவது வந்து கேட்டுவிட்டால் போதும். "வாயா மகராசா, உன்னைதான் தேடிக்கிட்டு இருந்தேன், இதோ வந்திட்டேன்...' என்று கிளம்பிவிட வேண்டியதுதான்.

Mail-க்கு வேலையில்லாதபோது, சிறிது நேரத்தை பாட்டிற்கும் கொடுப்பது எனது வழக்கம்.

நான் இப்படி நேரத்தினைப் போக்குவதற்காக காதில் Head phone மாட்டிக் கொண்டு பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், அருகிலிருக்கும் மற்றொரு Team-இல் இருப்பவரிடம் பலர் கூடுவார்கள். அதிலிருந்தே தெரிந்து போகும், எதோ பிரச்சனை என்று. அவருக்கு வருவது, கொஞ்சம் இங்கு வந்தால் என்ன என்று மனம் இலேசாக அடித்துக் கொள்ளும். அவர்கள் ஒரே பரபரப்பாக இருக்கும் அந்த நேரத்தில் நான் மட்டும், ஜாலியாக, பாடல் கேட்டுக் கொண்டும், ஏதோ ஒரு வலைதளத்தைப் பார்த்துக் கொண்டும் இருப்பதைக் கவனிப்பார்கள். அப்பொழுது அவர்கள் மன நிலை எப்படி இருக்கும் தெரியுமா? நாட்டாமை படத்தில் கவுண்டமணி அவர்கள் கேட்பது போலத்தான் இருக்கும்

"யாருடா இவன், இவ்வளவு அமளி துமுளி நடக்குது, இங்க உட்கார்ந்து இப்படி ஜாலியா பாட்டு கேட்டுட்டு இருக்கான்னு"  நினைத்துக் கொள்(ல்)வார்கள்.

"சத்திய சோதனை. அது ஒன்னும் இல்லீங்க, எங்க Manager-தான், எங்க Project-க்கு 'AD Support' இல்லைன்னு சொல்லிவிடக் கூடாதுன்னு, எனக்கு பில்லிங்க் கொடுத்து இந்த Project-ல வச்சிருக்காங்கன்னு" அவங்ககிட்ட எப்படிச் சொல்வேன்.

இப்படிப்பட்ட நிலைமைகளில், கவுண்டமனி அவர்கள் ஒரு படத்தில், கலயாண வீட்டில், "டேய் யாராவது சண்டைக்கு வாங்கடா" அப்படிங்கிற மாதிரியான நிலைமையில், எனக்கு' "யாராவது ஒரு defect சொல்லுங்க, யாராவது ஒரு Mail அனுப்புங்க' அப்படின்னு உள்ளம் கேட்குமே more.

Thursday, July 24, 2014

விதைக்குதவா விதைகள்

சமீப காலமாக அதிகரித்து வரும் BT ரக விதைகளை பற்றிய பதிவுதான் இது. இந்த வகை ரகங்களிலிருந்து கிடைக்கும் விதைகளைக் கொண்டு புதிய செடியையோ, மரத்தையோ வளர்த்திட இயலாது. இந்த விதைகளை, வியாபாரம் செய்யும் கம்பெனிகளிடம் மட்டுமே இவை கிடைக்கும்.

 

ஆயிரமாயிராய் கனிகள் தரலாம்,
ஆயிரமாயிராய் வணிகம் தரலாம்,
ஆயினும்
ஒரு மரமேனும்
ஒரு செடியேனும்
விளைந்திட
விதை தந்திடுமா இந்த ரகம்?

அதை மாற்றி இதை மாற்றி
அன்னத்திலும் மாற்றம் செய்து,
சோற்றினில் விசம் வைக்க
சேற்றினில் வீசப்படுகின்றன விதைகள்...

அடுத்த தலைமுறைக்கு விவசாயம் இருக்காது,
அடுத்த தலைமுறைக்கு விவாசாயி இருக்க மாட்டார்கள் - என்று
அறுதியிட்டு சொல்லிக் கொள்ளும் வரிசையில்,
'அடுத்த தலைமுறைக்கு
விதைகூட கிடைக்காது' என்ற
வரிகளிலும் சேர்ந்திடுமோ?

விளைந்து வளர ஒரு
விதையேனும்
பற்றிப் படர ஒரு கொடியேனும்
கிடைக்காது போகும்
காலம் முன்னே விழித்துக் கொள்வோம்!

Tuesday, July 22, 2014

ஹே ராம்...

மு.கு: ஹே ராம் - இந்தப் படத்தின்மீது எனக்கு இருக்கும் ஈர்ப்பின் நூற்றில் ஒரு பங்கினைத்தான் இங்கே ஒரு துரும்பாகப் பதிவு செய்கிறேன். 'ஹே ராம்' எனும் படத்தினைப் பற்றிய பதிவுகளில் ஒரு துரும்பாகவேனும் எனது இந்தப் பதிவு இருக்க வேண்டுமென்று இந்தப் பதிவினை நான் பதிவு செய்கிறேன். ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும், திருத்திக் கொள்வேன்...

2000 - பிப்ரவரி மாதம், அந்த சமயத்தில் இந்தப் படம் வெளிவந்தது கூட பலருக்குத் தெரியாது. அந்தள விற்குப் படம் பயங்கரத் தோல்வியடைந்தது. அப்பொழுது எங்கள் பகுதியில், புதுப் படங்களைப் பார்க்க வேண்டுமென்றால் வெகுதூரம் செல்ல வேண்டும், என்னால் அப்போது அப்படத்தைப் பார்க்க இயலாமல் போனாலும் அந்தப் படத்தின் பாடல்களைக் கேட்கும் வாய்ப்பிருந்தது. அந்தப் படத்தின் பாடல்களைக் கேசட்டில் பதிவு செய்து அவ்வப்போது கேட்பதுண்டு, அந்தப் படத்தின் ஒவ்வொரு பாடல்களுக்குமே தனித்தனியாக பல பதிவுகளை எழுதலாம் உருகி, உருகி... இந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட முன்றாண்டுகளுக்குப் பிறகே என்னால் இந்தப் படத்தைப் பார்க்க முடிந்தது.


இந்தப் படத்தினை டீவியில் ஒளிபரப்பினால், பைத்தியக்காரனாய்ப் பார்க்கும் சில ரசிகர்களில் நானும் ஒருவன். படத்தின் நீளத்தைக் கேட்டவுடனே பலரும் படம் பார்க்கும் ஆவலைக் குறுக்கிக் கொள்ளும் அளவிற்கு இந்தப் படமானது கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ஓடக்கூடியது.

படத்தின் ஆரம்பக் காட்சியானது, வயது முதிர்ந்த 'சாகேத் ராமின்'  இறுதி கால கட்டத்திலிருந்து தொடங்கும். அவரின் பின்னோட்டமாக நமக்கு முன்னால் படம் விரிந்து செல்லும். ஒவ்வொரு காட்சியிலும் கமலது முயற்சி மட்டுமல்ல, இந்தப் படத்தில் பங்கு பெற்ற எல்லோரது முயற்சியும் தெரியும் அளவிற்கு அத்தனை நேர்த்தியாக படமானது பயணிக்கும். குறிப்பாக அந்தப் படத்திற்கெனப் பயன்படுத்தப்பட்டிருக்கும் கலர், ஆடைகள், இடங்கள், ஆட்கள் என அனைத்தும் அழகாக,ஆழமாக இருக்கும்.. மெதுவாகச் சென்று கொண்டிருக்கும் படமானது, சாகேத் ராமின் முதல் மனைவியின், மரணத்திற்கு முன்னும் பின்னும், படுவேகத்தில் பயணிக்கும். அந்த வேகத்திற்கு அணை போட்டு தடுப்பது போல, சாகேத் ராமிற்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் நடக்கும்.

இதனிடையே இரண்டு பாடல்களைப் படமானது கடந்து வந்திருக்கும், அதிலும் குறிப்பாக,
 நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,
 நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி...
 அயராத இளமை சொல்லும் நன்றி, நன்றி...
ஆகா, எவ்வளவு ஒரு அற்புதமான பாடல். அப்படியே, ஒரு சோக இழை பின்னூட, காதல் ரசம் சொட்ட சொட்ட, விரக தாகம் தவிக்க தவிக்க, இசையினைக் கொட்டி, பாட்டாய் வடித்து... அடப் போங்க ராசா சார், உங்களை இந்தப் பாடல் இசை அமைத்ததற்கு பாரட்ட எனக்குத் தெரியவில்லை என்பதை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை... ஒன்றுமில்லை, ஒரேயொரு இசைக் கருவி கொண்டு பட்டையினைக் கிளப்பியிருப்பார்.

முதல் மனைவியின் மரணத்திற்குக் காரணம் அடுத்த மதத்தவர்களே, என்று மூளை சலவை செய்யப்படுவார் மேலும் இதற்கெல்லாம் ஆணி வேர் காந்தியென்றும் துண்டிவிடப்படுவார். பின்னர் காந்தியினைக் கொல்வதற்கும் மூளைச் சலவை செய்யப்பட்டு, அந்தக் கூட்டத்தினரின் சேர்கையோடு படம் நகர்ந்து கொண்டிருக்கும்போது, ஒரு ராம நவமியில், அடுத்ததாக வரும் அந்தப் பாடல்.
இசையில் தொடங்குதம்மா.. விரக நாடகமே,
வசந்தம் கண்டதம்மா, வாழும் வாலிபமே...
ஆனால் படத்தோடு பார்க்கும்போது, அப்படி ஒரு பாடல் வருவதாகவே தெரியாது, அது அந்தப் படத்தோடு ஒன்றிப் போய்விடும். இந்தப் பாடலைத் தனியாகக் கேட்கும்போது, இதற்காக இளையாராஜாவும், இந்தப் பாடலையும் பாடிய அஜய் சக்கரவர்த்தியும் எப்படி இந்தப் பாடலோடு ஒன்றிப் போனார்கள் என்பதை உணர முடியும். எனக்கு, இந்தப் பாடலைப் பாடியவரைப் பற்றிய வேறு விவரம் தெரியாது, ஆனால், இந்தப் பாடலை இவரைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு உயிரோட்டமாகப் பாடியிருக்க இயலாது. மயக்கும் குரலில், மயங்கடித்திருப்பார் இவர். சில இடங்களில் பாடல் பாடுபவர் இசைக்காகப் பணிந்து போவார், சில இடங்களில் பாடுபவருக்காக இசையானது பணிந்து போகும். குறிப்பாக இந்த வரிகளில்
தேய்ந்து வளரும் தேன் நிலாவே
மடியில் வா
தேய்ந்திடாத தீ குழம்பாக ஒளிர வா
இசைக்கும் வாயுண்டு என்பது இந்தப் பாடலைக் கேட்டால் புரியும். பிச்சுட்டீங்க ராசா சார்.

இதற்குப் பின்னர் சாகேத் ராம், தனது மனைவியிடமிருந்து பிரிந்து செல்லும்போது ஒரு கடிதம் எழுதி விட்டுச் செல்வார். அந்தக் கடிதம்கூட ஆயிரம் கவிதை சொல்லும், அதிலும் குறிப்பாகக் கடைசி வரிகள்... எப்படித்தான் இப்படியெல்லாம் முடியுதோ
 நீ எனக்கு வாய்த்தது, நான் செய்த புண்ணியம் என்றும்...
 நான் உனக்கு வாய்த்தது நீ என்றோ செய்த பாவம் என்றும் கொள்க...
பின்னர், அவர் தன் பூணூல் அறுத்து, காந்தியினைக் கொல்ல முனைவதும், பின்னர் நடக்கும் மற்றுமொரு மதக் கலவரத்தில் தன் மதத்தவராலேயே, தனது ஆறுயிர் நண்பன் கொல்லப்படுவதைக் கண்டதும் இது நாள்வரை, அடுத்த மதத்தவர்கள் மட்டும்தான் இந்த மாதிரி செயல்களில் ஈடுபடுவார்கள் என்ற எண்ணத்திலிருந்து மாறுபடுகிறார். காந்தியினைக் கொல்லும் எண்ணத்திலிருந்தும் விடுபட்டு அவரிடம் மன்னிப்பு கேட்கச் செல்லும் முன் காந்தி கோட்சேயால் சுட்டுக் கொல்லபடுகிறார்.

இத்தோடு, படமானது பின்னோட்டத்திலிருந்து நிகழ் காலத்திற்கு மீண்டும் பயணிக்கிறது. அப்போதும் அங்கு கலவரம்தான் இரு பிரிவினருக்கிடையே. நோய் வாய்ப்பட்டுக் கிடக்கும் சாகேத் ராம், அந்தக் கலவரத்தால், மருத்துவமனை செல்ல இயலாமல் இறந்துபோக, கலவரமும் கட்டுக்குள் வருகிறது. இறுதியாக, அந்தக் கலவரத்தை கட்டுப்படுத்துவது தன் நாட்டிற்காகப் பாடுபடும் ஒரு முஸ்லீம் அதிகாரி என்பதை அவரின் பெயர் என்னவென்று சொல்வதோடு அந்தக் கலவரக் காட்சி நிறைவு பெறும். இந்திய ஒருமைப்பாட்டை இதைவிட நாசூக்காகக் காடுவது எப்படி?

படம் முடியும் தருவாயில், அவரது சேகரிப்புகளை, காந்தியின் பேரன் பார்வையிடுவதோடு படம் முடிவடையும், அப்போது அந்தப் பாடலானது ஒலிக்கும், கமலும் அவரது மகள் ஸ்ருதியும் பாடியிக்கும் அந்தப் பாடல்...

... ராம் ராம்... ராம் ராம்
நடந்ததை நினைத்திடு
நல்லதை தொடங்கிடு
இழந்ததை உணர்ந்திடு
இருப்பதை காத்திடு
அன்பெனும் ஓர் சொல் இது
ஆத்திகம் சொல் இன்பமாய்
இங்கே யாரும் இல்லையே

Monday, July 21, 2014

உன் குத்தமா? என் குத்தமா?

சில பொருட்கள் வாங்குவதற்காக அருகிலிருக்கும் ஒரு சூப்பர் மார்கெட்டிற்குச் சென்றிருந்தேன், அநேகமாக பல சூப்பர் மார்க்கெட்டுகளிலும் MRP விலையினை விடக் குறைவாக விற்பது கிடையாது. வெகு சிலப் பொருட்களை மட்டுமே அவர்கள் குறைத்து விற்பார்கள். அந்தப் பொருட்கள் என்னவென்று அறிந்து வாங்குவது என் வழக்கம். மற்ற பொருட்களை எங்கள் பகுதியிலிருக்கும் சிறிய கடையிலேயே வாங்கிக் கொள்வேன்.

அன்றும் அப்படித்தான், சரி வெளியில் செவ்வாழை 15 ரூபாய் அளவில் விற்பதால், இங்கு என்ன விலையென்று பார்க்கலாம் என்று தேடினேன். அப்பொழுதான் பழ வகைகள் எல்லாம் வந்து கொண்டிருந்தன. எனவே, அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணிடம், "செவ்வாழை இருக்கா?" என்று கேட்டேன். அதற்கு அந்தப் பெண், "என்னண்ணா?" என்றார். நானும் "செவ்வாழைப் பழம் வந்திருச்சா?, எங்க இருக்கு?" என்றேன். உடனே அவர், அருகிலிருக்கும் மற்றொரு பெண்ணிடம், "ஏண்டி, செவ்வாழைன்னா, என்னது டீ" என்று கேட்க, அவரும், "அதான்டீ 'Red Banana' என்று சொல்லிக்கொண்டே என்னிடம் "அதானண்ணா?" என்று கேட்க நானும் ஆமென்று தலையாட்டினேன்.
அவர் கேட்டது எனக்கு "STD-ன்னா வரலாறுதான?" என்பதுபோல இருந்தது. :(
கடைக்கு முதலாளியாய் இருக்கும் அந்த அம்பானிக்கு செவ்வாழையென்றால் என்னவென்றுத் தெரிய வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் இது அவரது மொழியல்ல. ஆனால் கடையில் வேலை செய்யும் நமது இந்த அம்மணிக்குத் தெரிந்திருக்க வேண்டுமல்லவா?

எனக்குத் தமிழில் சில வார்த்தகளைப் பேசுவது, சொல்வதென்றால் அவ்வளவு பிடிக்கும். அப்படிப்பட்ட ஒரு வார்த்தையும், வாழை ரகத்தில் ஒன்றுமான செவ்வாழையினை என்னவென்று தெரியாத அவரை நினைத்தால் வருத்தம்தான் வருகிறது. சச்சினைத் தெரியாதுன்னு சொன்ன மாதிரி இதுவும் நமக்கொரு/எனக்கொரு பெரிய பிரச்சனையாகவேபட்டது.

மனதுக்குள்ளே 'உன் குத்தமா? என் குத்தமா? யார நானும் குத்தம் சொல்ல' என்ற பாடல் வரிகள்தான் ஓடிக் கொண்டிருந்தது.

Friday, July 18, 2014

ரிசல்ட் எப்போ வரும்? ...வருமா?

மூன்று தினங்களுக்கு முன்பு (15-07-2014), அதிகாலை(?) சரியாக 6.45 மணிக்கு என்னுடைய அலைபேசியில் நான் ரிங்க் டோனாக வைத்திருக்கும் பாடல்களில் ஒன்றான, காதல் பரிசு படத்திலிருந்து அந்தப் பாடலின் இசை ஒலித்தது "ஏ..ய்.. உன்னைத்தானே..... ஏ..ய் உன்னைத்தானே"... மறுமுனையில் அழைத்தது எனது நண்பன் ரமேஷ்.

கால் அட்டென்ட் செய்து அந்த செல்போனை, எனது காதுகளில் படுக்க வைத்துக் கொண்டே"சொல்றா" என்றேன்.

ரமேஷ்: "என்னடா தூங்குறியா?"
நான்: "ம்ம்ம்... இல்ல... -----" சென்சார் கட்.
தூங்குறவன நடுவுல எழுப்புறவனக்கூட விட்டுறலாம், ஆனா, எழுப்பி விட்ட பிறகு "என்ன தூங்குறியா?"ன்னு கேக்குறவன மட்டும் விடக் கூடாது. அதாவது, "தீயினால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு". இங்கு வள்ளுவர் புண் என்று 'எழுப்புவதையும்', வடு என்று "தூங்குறியா?"ன்னு கேட்பதையும் குறிப்பதாக சொல்கிறார் என்று நாம் கொள்ளவேண்டும்.
ரமேஷ்: "சரி, தம்பி, எங்க அக்காவுக்கு "TRB Result" பார்க்கனும், உடனே பார்த்து சொல்லு"
நான்: " 'TRB யா? அப்படின்னா?"
ரமேஷ்: "TRB - Teachers Recruitment Board. வெப் சைட் அட்ரெஸ் சொல்லவா?" (Apprentice -- a.. p.. p. அந்த மாதிரி இருந்தது)
நான்: "அதெல்லாம் வேண்டாம், நான் பார்த்துட்டு சொல்றேன்". 'எல்லாம் அந்த 'Google' இருக்கானே அவன் பாத்துக்குவன்னு நினைச்சிக்கிட்டேன்'.
ரமேஷ்: "டேய், தூங்கிறாத..." மறுபடியும் அழுத்தினான்.

நான் "சரிடா, சரிடா"ன்னு சொல்லிட்டு அப்படியே, செல்போனை காதுல வச்சிட்டே தூங்கிட்டேன். கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் கழித்து, "டேய், சோனமுத்தா, எந்திரிடா,எந்திரி"ன்னு என்னுடைய உள்ளுணர்வு எழுப்பிவிட்டது. எழுந்து சென்று லேப் டாப் எடுத்துவரச் சோம்பேறிப்பட்டுக் கொண்டு, மொபைலிலேயே பார்க்க முயற்சித்தேன்.

அந்த தளத்திற்கு சென்றால், எல்லாம் பழைய ரிசல்ட்டாகப் பட்டது. கண்ணுக்குத்தெரிந்தவரை, 2014ஐப் பார்க்க முடியவில்லை. சரியென்று, கடந்த ஆண்டாக இருக்கக்கூடும் என்றெண்ணி, 2013 என்று குறிப்பிடப்பட்ட "Link"ஐ கிளிக் செய்து உள்ளே சென்றால் ஒன்றும் வரவில்லை. 'சரி, இது வேலைக்காகாது என்றெண்ணி எனது லேப்டாப்பை எடுத்து வந்து, அமர்ந்து தேடத் தொடங்கினேன்.

எப்படியோ ஒருவழியாக மதிப்பெண் பட்டியல்வர, அவனுக்கு போன் செய்து விவரம் சொன்னால், அவன் சொன்னான் "டேய், அது போன வருச ரிசல்ட்". அதுக்கு நான் சொன்னேன், "டேய், வேற எதுவும் 2014ன்னு போட்டு ரிசல்ட் இல்லடா". உடனே அவன் சொன்னான், "அடப்பாவி, அந்த தளத்தில், 'Direct Recruitment of B.T. Assistant 2012-2013 இருக்கான்னு பாரு' என்றான்.

நான்: "ஆமாடா, இருக்கு, ஆனா 2012ன்னு இருக்கே".
ரமேஷ்: "அதுலதான், பார்த்துச் சொல்லு"

சரியென்று அதில் சென்று, அவனுக்கு விவரத்தைப் பார்த்துச் சொல்லிவிட்டு போனை வைத்தேன். 2012க்குப் பிறகு, 2013, 2014ன்னு ரெண்டு வருசம் வந்திருச்சே. 2012க்கே இப்போதான் ரிசல்ட் வருதுன்னா, இந்த வருசத்துக்கு எப்போ வரும்னு ஒரு நிமிடம் மலைத்துப் போய்விட்டேன். ...இந்த வேகத்துல போனா விளங்கிடும்... ரிசல்ட் எப்போ வரும்? ...வருமா?

Thursday, July 17, 2014

கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை-2

நான்கு நாட்களாக, "Online"-இல் எனது "Account"லிருந்து தவறுதலாக கழிக்கப்பட்ட பணத்தை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன், இன்னும் வந்தபாடில்லை. எது எதற்கோ கட்டுப்பாடும், விதிமுறைகளும் வரையறுக்கிறார்கள். இந்த மாதிரியான, பணப் பரிவர்த்தனைகளுக்கும் ஏன் தெளிவான, எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விதிமுறைகளை விதிக்கக்கூடாது. அவர்களுக்கு பணம் செலுத்துவது மட்டும், சில நிமிடங்களில், ஏன் சில நொடிகளில் முடிந்துவிடுகிறது. ஆனால், அதில் ஏதேனும் தவறு ஏற்பட்டுவிட்டால், அந்தத் தவறானது அவர்களுடையாதாகவே இருந்தாலும் (உதாரண்மாக "Server" பழுதடைவது) நமக்குத் திருப்பித் தருவதென்றால் பல நாட்கள் இழுத்தடிப்பது.
இதில், நாம் "Online"-இல் பேருந்துக்கு முன் பதிவு செய்யும்போது ஏதேனும் தவறு ஏற்பட்டுவிட்டால் அவ்வளவுதான், நமக்கு வரும் பதில் என்ன தெரியுமா? "இன்னும் 21 பணி நாட்களுக்குள் உங்களது பணம் உங்களது "Account"-இல் திரும்பச் செலுத்தப்படும்" என்பதுதான். அடப்பாவிகளா?, என்னடா இது கொடுமை?

ஒருவேளை, நமது "Account"-இல் இருப்பதே ஒராயிரம்தான் என்கிறபோது, அத்தகைய சூழலில், வேறேதேனும் டிக்கெட்டினை நம்மால் பதிவு செய்ய முடியாமலே போய்விடும் அல்லவா? அந்தக் குறிப்பிட்ட நாட்களுக்குள் ஒருவேளை நாம் அவர்களைத் தொடர்பு கொண்டால் அதற்கு அவர்கள், "எங்களது பக்கத்தில் இருந்து நாங்கள் உங்களது பணத்தினை திரும்பச் செலுத்துவதற்குத் தேவையானதைச் செய்துவிட்டோம், அது உங்களது "Account'-இல் வருவது உங்களது வங்கியினைப் பொறுத்து" என்பார்கள். அப்படியென்றால், அந்த இடைப்பட்ட நாட்களில் அந்தப் பணமானது எங்கு செல்கிறது. எது எதற்கோ, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்கள், இதற்கும் தொடர்ந்தால் தகும். இதற்காக ஒரு "" நாம் பதிவு செய்தால் நமக்குத் தகவல் கிடைக்குமா என்பது சந்தேகமே?
"Low Speed Internet"-ல கூட "Ticket book" செய்து விடலாம். ஆனால், நம்முடைய பணத்தை திரும்பப் பெற "High Speed Internet" வச்சிருந்தாலும் முடியாது. :)
இப்பொழுது நாவல் பழம் சீசன் என்பதால், அநேகமாக எல்லாப் பழக் கடைகளிலும் இந்தப் பழங்களைக் காண முடிகிறது. இன்றைய பழங்களைப் பார்த்தால் எதோ அந்த நாவல் பழத்திற்கு "obesity" வந்தது போல இருக்கின்றன. ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு, இரட்டைக் குழல் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் தோட்டவினைப் போலவே தோற்றமளிக்கின்றன. அதிலும் குறிப்பாக எந்தவொரு பழமும் அழுகிய நிலையில் இருப்பதில்லை (எத்தனை நாட்கள் ஆனாலும் இப்படியேதான் இருக்குமோ?) "மின்னுவதெல்லாம் பொன்னல்ல" என்பதற்குப் பொறுத்தமாக இந்தப் பழங்களைச் சொல்லலாம். ஆமாம் இப்பொழுது வருவெதல்லாம் முற்றிலும் மரபு மாற்றப்பட்ட நாவல் பழங்களே, எனக்கு அதில் என்னென்ன தீமை இருக்கிறது என்றெல்லாம் தெரியாது, ஆனால் கண்டிப்பாக சுவை கிடையாது. இப்படியே இதனை நாம் தொடர்ந்து ஊக்குவித்தால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பெரிய மஞ்சள் வாழைப் பழம் தமிழகத்தில் வேரூன்றிய நிலைதான் இந்தப் பழத்திற்கும் ஏற்படும்.

ஆடி மாதம் ஆரம்பமாகிவிட்டது, அந்தத் தள்ளுபடி, இந்தத் தள்ளுபடியென்று ஆளாளுக்கு விளம்பரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், உண்மையான தள்ளுபடி எதுவென்று சில-பெரு நிலக் கிழார்களைக் கேட்டால் விளங்கும். வருடா வருடம், ஆடித் தள்ளுபடி வேண்டுமென்றால் பொய்த்துப் போகலாம், ஆனால், விவசாய்க் கடன் தள்ளுபடி மட்டும் பொய்த்துப் போகாது. என்ன செய்வது, உதவி, உண்மையில் தேவைப்படுகின்ற ஒரு விவசாயிக்கு உதவ வேண்டுமென்றால் 10இல் 9 பேருக்கு தாராளம் காட்டித்தான் ஆகவேண்டும். விவசாய நிலங்களுக்கு, மின்சாரம் இலவசமாகக் கிடைக்கின்றது. கிணற்றுத் தண்ணீருக்கு மோட்டார் பொருத்திக் கொள்ள மானியம் கிடைக்கிறது. இப்படிக் கிடைக்கும் இலவசங்களையும், மானியங்களையும் பெற்றுக் கொள்ளும் சில பெரு நிலக் கிழார்கள், அந்தத் தண்ணிரை வயலுக்குப் பாய்ச்சுகிறார்களோ இல்லையோ, அதை விற்றுக் காசாக்கிவிடுகிறார்கள்.

எல்லாம் பண மயமாகிவிட்ட இந்தச் சூழலில், ஏதாவது ஒன்றை நாம் சந்தைப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு மிக முக்கியமானது அதைப் பற்றிய விளம்பரம். அவர்களது நிகழ்ச்சி முதல், அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் வரை, எல்லாத்தையுமே விளம்பரம் செய்யும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கும்போதே இப்படித்தான் ஆரம்பிப்பார்கள். "Welcome back to ... Presents.. Co-presented... powered by..." அப்பப்பா தாங்கமுடியல, நிகழ்ச்சிக்கு இடையில் வந்து சென்ற விளம்பரங்களிலிருந்து மாறி, விளம்பரத்திற்காகவே நிகழ்ச்சி என இன்றைய நிலையானது மாறிவிட்டது. "Marketing boss, marketing... Packaging boss packaging..."

சில தொலைக்காட்சிகளில், "Hidden Camera" வைத்துக் கொண்டு பொது மக்களைக் கலாய்த்துக் கொள்வதைப் பதிவு செய்து, பின்னர் அதை "Edit" செய்து மொக்கை வாங்கியவர்கள் எனத் தனித்தனியாக பிரித்து அதற்கெனெ "Music" கொடுத்து ஒளிபரப்புகிறார்கள். எதுவும் அடுத்தவர் மனம் புன்படாதவரைப் பிரச்சனையில்லை. இது தற்போதெல்லாம் எல்லைமீறிச் சென்று கொண்டிருக்கிறது. உதாரணமாக ஒரு நிகழ்வு " நிகழ்ச்சியில் பங்குபெறும் ஒருவர், வழியில் வரும் ஒருவரிடம், அவர் அவசரமாக "Phone" செய்ய வேண்டுமென்று அவரிடம் "Phone"-ஐப் பெற்றுக் கொண்டு பின்னர் யாருக்கோ "Phone" செய்து அவரையும் கலாய்த்துக் கொண்டிருந்தார். அவனவன் ஆயிரத்தெட்டு வேலையாகச் செல்லும்போது, அடுத்தவருக்கு உதவவேண்டுமென்ற நல்ல எண்ணத்தில் கொடுத்து உதவினால், இது போன்ற மொக்கையர்கள், அவர்களை மொக்கையாக்கினால், பின்னாளில் உண்மையாகவே எவரேனும் ஒருவருக்கு உதவி தேவைப்பட்டால் அவர் ஒரு கணம் யோசிக்கத்தானே செய்வார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இதைக் கவனத்தில் கொண்டால் தகும். (இதையே அடிப்படையாக வைத்து பார்த்திபன் அவர்கள் "குடைக்குள் மழை" எடுத்தது அனைவரும் அறிந்ததே).

வருடா வருடம் சம்பள உயர்வை எதிர்பார்க்கும் மனது, மற்ற விலைவாசிகளின் விலை உயர்வினை மட்டும் குற்றம் சொல்வது எதனால் என்பது விளங்கவில்லை. விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்த வேண்டியது மத்திய, மா நில அரசுகளின் கடமைதான். ஆனால், இந்த அரசுகளின் கட்டுப்பாடுகளில் இல்லாத, தவிர்க்க முடியாத சில,பல காரணங்களுக்காக விலை உயர்த்தப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ரயில் கட்டணம் உயர்ந்த அதே வேளையில்தான், இரயில்வே ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்ந்திருக்கும், இங்கிருந்து எடுத்து அங்கே கொடுப்பதுதான். "எது இன்று உன்னுடையதோ, நாளை அது மற்றவராகிறது". இதுக்குப் பேருதான் போட்டு வாங்குறதோ?.


அது என்னன்னு தெரியல, "Visibility" இந்த வார்த்தை என்னுடைய காதுகளுக்கு எட்டும்போதெல்லாம் எனக்கு கரகாட்டக்காரன் படத்தில் வரும் அந்தக் காட்சிதான் நினைவில் வந்து செல்கிறது.

"....அதுவும் அந்தத் தவில்காரர் காதுல விழுற மாதிரி சொல்லு..." (இப்போ நினைச்சாலும் சிரிப்பு பொத்துக்கிட்டு வருது)

ஆடி ஒன்னு

...என் தாத்தாவின் நினைவாக இந்தப் பதிவு...



இன்னாரின் பேரன் என்று,
உன் பெயரை முன்னிறுத்தியே,
ஊரார்க்கு அடையாளப்படுத்தப்பட்டோம்...

நம் பரம்பரையின் - கோவணம்
தாங்கிய கடைசி வாரிசு நீதான்,
கடைசியாய் ஏர் கொண்டுழுதவனும் நீதான்...

உன் ஆயுள் முடியும் முன்னே,
எம்மை ஆயுள் கைதியாக்கி,
மாலையும் கழுத்துமாய் பார்க்க தீராத
ஆசை கொண்டாய் - உனக்கென்ன
அவசரமோ, மாலையினை
உன் உடல்மேல் சூட ஆசைகொண்டு,
உறங்கச் சென்றாயோ
உறவுகள் விட்டு,
உடல் விட்டு,
மண் தொட்டு விண் தொட - எம்
கால்கட்டுப் பார்க்காமல்,
கால்கட்டிச் சென்றாயே...

ஆண்டு ரெண்டு
ஆகிப்போச்சு,
ஆடி ஒன்னில் ,
ஆக்கி வைத்த
ஆட்டுக் கறி நீ தின்னு
ஆழ்ந்த உறக்கம் சென்று,
ஆடியில் ஆடித்தான்போனோம்,
ஆனபோதும் மனம்
ஆர்ப்பரிக்கிறது உனை மீண்டும் காண
ஆசை கொண்டு...

Tuesday, July 15, 2014

விளையாத விலை


வான் பார்த்து,
மண் பார்த்து, நல்
விதை பார்த்து,
விளைந்துவரும் பயிர் பார்த்து,
வீணாய் வளர்ந்திடும்,
களை பெயர்த்து,
காலம் பார்த்து அறுத்த
கதிர்களை - நல்
களம்
பார்த்து பயிர் பிரித்து - இங்கனம்,
பார்த்துப் பார்த்து
விதை வைத்து
விளைவிக்கத் தெரிந்தவனுக்கு,
விலை வைத்து
விற்கத் தெரியவில்லையே...

Monday, July 14, 2014

உயிர் மெய்யின் கற்பனையாய்


புது வரவான,
உறவினை வரவேற்க - பழைய
உறவுகளுக்கெல்லாம்,
தலைமுறை தழைத்ததென,
தகவல் சொல்லி
வந்தோரெல்லாம்,
வயிற்றில் நத்தையினைபோல்,
சுமை கொண்ட உன்
கைகளில் மேலும்
சுமை சேர்த்து - சொல்லாமல்
வந்தவர்கூட சொல்லிக்கொண்டு
செல்ல - சாங்கியமாய் நீ மட்டும்,
சொல்லாது சென்ற அந்த நாள் முதல்,
பசலை நோய்கொண்டு,
தனிமையில் நாம்
தனித்திருந்த நாட்களையெல்லாம் - இன்று
நான் மட்டும் தனித்திருந்து,
நாம்
கூடிக் கழித்த அந் நாட்களையெல்லாம்
கூட்டிக்கழித்து,
எந்நாள் உன்முகம் காண்போம் என்று,
நாட்காட்டி கிழித்துப் பழகி,
முபோழுதும்
உயிர்மை தாங்கிய,
உயிர் மெய்யின் கற்பனையாய் இருக்கிறேன்...

Tuesday, July 8, 2014

உதிரிக் கவிகள்


என் 'இதழ் பிடித்த' கவி,
என் இதழில் படிந்த கவி,

படிக்கின்ற இதழ்கள்-
பிடித்திட்ட கவி,

பிடித்திட்ட விரல்கள்
பற்றிய கவி,

பற்றிக் கொண்ட
நெஞ்சங்களின் கவி,

நெஞ்சங்களின்
நெஞ்சார்ந்த
மோகங் கொண்ட கவி,

மோகத்தில் தாகம்
தணித்த கவி,

தணிந்தும்
தணியாதிருந்த
கூடல் கொண்ட கவி-எனக்

கவியணைத்தையும் சேர்த்திட்ட,
உதிரிக் கவிகள்...

Thursday, July 3, 2014

உச்சத்தின் மிச்சம்


அந்திப்போர்
அன்றாடம் புரிந்து,
அன்றென்றும் இறவாத
ஆசையில்,
அன்றென்றும் பிறவாத
சலிப்பினில்,
இழந்தும் பெற்ற,
பெற்றும் இழந்த
களிப்பினில்,
கல்விகொண்டு கற்காத
கலவியினை,
மோகத்தில் கொஞ்சம்,
தாகத்தில் கொஞ்சம்,
நெஞ்சங் கொண்ட
காதலில் கொஞ்சம்,
அங்கம் கொண்ட
காமத்தில் கொஞ்சம்-என
கலந்துண்டு கற்று,
முதுநிலை தொட்டு,
சந்திப்(பு) பிழையில்லாது,
அந்திப்போரின் அந்தமாய்,
அங்கப் பிணைவின்
அங்கமாய்,
உச்சத்தின் மிச்சம்,
தங்கப் பேழையில்,
தங்கித் தழைத்ததென்ற
தகவலில், மனம்
தங்கித் திளைத்திட்டது...

Tuesday, July 1, 2014

நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க-III

"நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க" - இதன் மூன்றாவது (III)  பாகத்திற்கு இந்தப் பதிவு மிகப் பொறுத்தமாக இருக்குமென்பதால், இதனை இப்போது பகிர்ந்து கொள்கிறேன். பிரம்ம முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்த அந்த இளங்காலைப் பொழுதில், நானும் எனது நண்பன் சுப்ரமணியும் கீழ் திருப்பதியிலிருக்கும் அலிபரியிலிருந்து மேல் திருப்பதிக்கு மெல்ல மெல்ல வேகமெடுத்து படியேறிக் கொண்டிருந்தோம். காலை நான்கு மணிக்கெல்லாம் ஆரம்பமாகிவிட்டது எங்களது இந்த பாதயாத்திரை. ஆங்காங்கே இருந்த சில சுவாமி சிலைகளுக்கு அருகில், சிலர் ஆரத்தித் தட்டுக்களை வைத்துக் கொண்டு இருந்தனர், சிலர் அவர்களிடம் சென்று திலகமிட்டுக் கொண்டு காசுகளை இழந்து வந்தனர். அதுதான் நாங்கள் முதன் முதலாக, திருப்பதிக்கு கீழிருந்து நடந்து செல்வது. எத்துனை தூரமென்பதும் தெரியாது, எத்துனை படிகள் என்பதும் தெரியாது.
தெரியாமல் ஒரு செயலில் நாம் இறங்கும்போது, அது எப்போது நிறைவு பெறும் என்ற கேள்வியானது நமது முதுகில் ஏறிக் கொண்டுவிடும். அன்று மலையேறும்போதும் இந்தக் கேள்வியானது எங்களது முதுகில் ஏறிச் சவாரி செய்தது. 
ஆரம்பத்தில் வேகமெடுத்த எங்களது கால்கள் சிறிது நேரத்திற்கெல்லாம், "இதெல்லாம் உனக்குத் தேவையா" என்பது போல, வலி கொடுக்க ஆரம்பித்துவிட்டது. அதனால், பத்து நிமிடங்கள் நடந்தும் சில நிமிடங்கள் உட்கார்ந்தும் சென்று கொண்டிருந்தோம். ஒரு வழியாக 500 படிகளைக் கடந்து விட்டோம், பின்பு வந்த வரலாற்றை எங்களது கைப்பேசிகளில் படங்களாகப் பதிவு செய்து கொண்டோம். சரி, இன்னும் 500 அடி தூரம்தான் இருக்குமென்று எங்களுக்குள் சமாதானப்படுத்திக் கொண்டு, மீண்டும் தொடங்கினோம். கிட்டத்தட்ட 750 அடிகள் கடந்ததும் நாங்கள் மிகவும் கலைத்துவிட்டோம். பின்னால், திரும்பிப் பார்த்தால், கீழ் திருப்பதியானது, வெள்ளியினைப் பூமியில் கொட்டியது போல மின்னிக் கொண்டிருந்தது. முன்னோக்கிப் பார்த்தால், படிகள் எல்லாம் வளைந்து,உயர்ந்து சென்றது, கண்ணுக்கெட்டிய தூரம்வரை, அதன் முடிவு தெரியவில்லை.

மெதுவாக மனதினைத் தேற்றிக் கொண்டு, மெது மெதுவாக பயணத்தைத் தொடங்கினோம். திடீரெனெ, முன் சென்ற பலரும் வேகமெடுத்தனர், "ஆகா!, நெருங்கிவிட்டோமென்ற" மகிழ்ச்சியில் நாங்களும் வேகமெடுத்தோம். அங்கே, அனைவரும் டிக்கெட் கொடுக்கும் இடத்தினை மொய்க்கத் தொடங்கியிருந்தார்கள். சிலர், தண்ணீர் குடித்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார்கள். நாங்களும் வேகமாகச் சென்று வரிசையில் நின்று எங்களுக்கான டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டோம். பிறகுதான் தெரிந்தது, இந்த இடத்திலிருந்து (காளி கோயில்) இன்னும் பல மைல்கள்கள் செல்லவேண்டுமென்று., அப்போது மணியானது ஆறினை நெருங்கிக் கொண்டிருந்தது.

காளி கோயிலைத் தாண்டும்போது, நீண்ட வரிசையில் பல உணவகங்கள் இருந்தன, எல்லாம், திரைச் சீலைகளையும், தார்ப்பாய்களையும் மேல் தளங்களாகக் கொண்டிருந்த, திறந்த வெளிக்கடைகள்தான். அங்கே, அநேகமாக எல்லாக் கடைகளிலும், ஆவி பறக்க இட்லி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த ஆவி பறக்கும் இட்லியினைக் கண்டவுடன், வயிறு கிறங்க ஆரம்பித்துவிட்டது. சரி, அப்படியே சில பல இட்லிகளைச் சாப்பிட்டுவிட்டுச் செல்ல முடிவெடுத்து ஒரு கடையினில் நுழைந்தோம், மன்னிக்கவும் அமர்ந்தோம்.

என்ன விலையென்றெல்லாம் கேட்காமல் 'இட்லியென்று' மட்டும் சொல்லிவிட்டு காத்திருந்தோம். உடனே, இட்லிக் கொப்பறையிலிருந்து இட்லிகளைச் சூடாகக் கொண்டுவந்து தந்தார்கள். அதைக் கைகளில் வாங்கியதும் முதல் அதிர்ச்சி, இட்லி இந்த நிறத்திலும் இருக்குமாவென்று, இலேசாகக் கருத்து இருந்தது. மெதுவாகச் பிய்த்துப் பார்த்தால், மற்றொரு அதிர்ச்சி, இட்லி இப்படியும் கட்டியாக இருக்குமாவென்று. சரியென்று சாப்பிட்டால் அடுத்த அதிர்ச்சி, உவ்...உவ்வ்வ்வ்வே வென்று சுவையிருந்தது. சரி, ஏதாவது ஒரு இட்லியாவது நன்றாக இருக்கிறதாவென்று பார்க்க நான்கு இட்லிகளையும் சுவைத்துப் பார்த்தேன். எல்லாம் சொல்லிவைத்தாற்போல, கேவலமாக இருந்தது.
இந்த இட்லியில் நிறமில்லை,
நிறமிருந்தால் மெலிதாய் இல்லை,
மெலிதாய் இருந்தால் சுவையில்லை...
"இன்னிக்கு இவய்ங்களா?, சரிதான்" என்று சலித்துக் கொண்டேன். அருகில் என் நண்பன், பொதுவாக உண்வை வீணாக்க விரும்பாதவனென்பதால், இட்லிகளை மெதுவாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுதுதான் கவனித்தோம், அவர்கள் எப்படி இட்லி செய்கிறார்கள் என்று. மாவினை ஊற்றி வைத்துவிட வேண்டியது, பின்னர், யாராவது வரும்வரை, அதை அப்படியே அடுப்பில்விட்டுவிட வேண்டியது, எவரேனும் வந்தபிறகு, அல்லது கூட்டத்தாரைக் கண்டவுடன், அவர்கள் கண் முன்னால் சூடாக இருக்குமாறு ஆவி பறக்க எடுத்துத் தருவது. மேலும், அடுத்து ஒரு கூத்து நடந்தது. வெளியிலெடுத்த இட்லிகளை மீன்டும் இட்லி சட்டிக்குள் வைத்து வேக வைத்தார்கள். "அடப் பாவிகளா? என்ன ஒரு புத்திசாலித்தனம்?".
நண்பன் சாப்பிட்டு முடித்ததும் அங்கிருந்து கிளம்பினோம், எங்களுக்கு உள்ளூர மிகவும் கடுப்பாக இருந்தது, சரி இதுவும் ஒரு அனுபவம்தானென்று தேற்றிக்கொண்டோம்.

பின்னர் மணி ஏழினைத் தாண்டியபோது, டீ சாப்பிட முடிவெடுத்து ஒரு டீக்கடையில் நின்றோம். அந்தக் கடையில் டீ பாய்லருக்கு முன்பாக, பெரிய சட்டியில் இஞ்சியினை அடுக்கி வைத்து இருந்தார்கள். "இஞ்சி டீ போடுங்க" என்று சொல்லிவிட்டுக் காத்திருந்தோம். எங்களுக்குத் தெரிந்தவரை அவர் இஞ்சியினைத் தட்டி, சட்டியில் இட்டதுபோலவே தெரியவில்லை, ஆனாலும் டீ வந்துவிட்டது.

குடிக்கும்போதுதான் தெரிந்தது, அவர் அதில் இஞ்சியினைப் போடவேயில்லையென்று. இஞ்சியினை மட்டுமா, டீத்தூள் கூடப் போடாததுபோலத்தான் இருந்தது. ஆக, வருபவர்களைக் கவருவதர்காகத்தான் இவர்கள், நம் கண்களைக் குருடாக்கி கட்சி பிழைகளை ஏற்படுத்தி நம்மை ஏமாற்றுகிறார்கள்.


நீங்கள் யாராவது, திருப்பதிக்கு ந்டந்து செல்வதென்றால், இதுபோன்ற கடைகளில் ஏமாந்துவிடாதீர்கள். நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க...


பி.கு: இப்பொழுது இதே போன்றதொரு கண்கட்டு வித்தைகளை நமது மெரினா கடற்கரை டீக் கடைகளிலும் பார்க்கலாம். பெரும்பாலும், எல்லோரது கடைகளிலும் கடைக்கு வெளியே அனைவரது பார்வைக்கும் படும்படி, "1 கிலோ ப்ரூ பாக்கெட்" வைத்து இருக்கிறார்கள். நான், ஏற்கனவே ருசி கண்ட பூனை என்பதால், அந்தக் கடைகளைத் தவிர்த்துவிட்டேன், யாருக்காவது இந்தக் கடைகளில் அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.