நாமிருவர்
நமக்கிருவராய்,
காய் விட்டுக்கொண்ட
கவட்டைக் குச்சியுடன்
பழம் விட்டுக் கொண்ட
பனங் கூடே;
எதிரும் புதிருமாய்
நீவிர்
நின்றாலும்,
ஏறிச் செல்வதென்னவோ
நேர் திசையில்தான்;
விழி பறித்தோர் முன்
விழிக்கிறாய் மீண்டும்,
விளையாட்டுத் தோழனாய்,இதை
விதியென்பதா?
இல்லை,
உம் பாரம் குறைத்தவர்களுக்கு
நீயிடும் பாசம் என்பதா?
கண்ணிழந்தபின்
பயணத்திற்குத் தயாராகும்
உன்னை,
உண்ணும்போது நுங்கென்பர்;
உண்டபின்
உன்னை எங்கென்பர்;
உன்னைக் கண்டதும்,
காளைகளைப் போல் பூட்டிக்
கடைக் கோடி முதல்
தெருக்கோடிவரை
இட்டுச் செல்வர்...
பணம் கூடாது,
பனங் கூட்டால்
படைப்பர் உன்னை,
பனை நுங்கு வண்டியாய்...
தடியெடுத்தவனெல்லாம்
தண்டல்காரனல்ல - உன்னிலிருந்து
விளைந்த விசயம்தானோ?
செய்வது எளிது,
செல்வதும் எளிது,
செய்ததையும்,
சென்றதையும்
மறப்பது மட்டும் கடினம்...
No comments:
Post a Comment