Tuesday, January 29, 2013

கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை...



அது என்னப்பா நம்மவங்கமீது ஏதாவது வழக்கு தொடரப்பட்டால், "என் மீது தொடரப்பட்டிருக்கும் வழக்குகளை, சட்டப்படி சந்திப்பேன்" என்கின்றனரே.


என்னோட கேள்வி என்னன்னா "சட்டப்படிதான் சந்திக்கனும், வேறு ஏதாவது வழி இருக்கா? சொல்லுங்களேன் நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்."

இந்த சாலையினைக் கடக்கும்போது, “One Way” என்றால்கூட இரண்டு பக்கமும் பார்த்துச் செல்ல வேண்டியிருக்கிறது. அப்படி நாம் பார்க்காமல் செல்லும்போது, தவறுதலாக வருபவர்கள் நம்மை வசைபாடிவிட்டுச் செல்வார்களேதவிர, அவர்களது தவறை உணரவே மாட்டார்கள்.

என்ன கொடுமை சார் இது?


பத்தினி
பெய்யனச் சொன்னதும்
பெய்யுமாம் மழை,

இவர்-
பெய்யும் என்றதும்
பெய்யாது
பொய்த்துப் போகுமாம் மாமழையும்...

[சென்னையில் இன்று வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்படும், தமிழகத்தின் ஒரு சில இடங்க்களில் இலேசானது முதல் ..., ஆம் அவரேதான்]



சாலையோரங்களில் சாலையினை ஆக்கிரமித்து கடை வைத்து இருப்பவர்கள், காவலர்கள் அவர்களை காலி செய்யச் சொல்லும்போது, "இவனுகளுக்கு மாமூல் கொடுக்கலைன்னா, இப்படித்தான் ஏதாவது சொல்லி மிரட்டுவது. ரொம்ப அநியாயம்பா இது" என்பார்கள். சாலையினை ஆக்கிரமிப்பதே ஒரு அநியாயம் என்பது இவர்களுக்குத் தெரியாதா என்ன?

*************************************************

இளநீர் கடையில் இளநீர் வாங்கும்போது, விலை எவ்வளவு என்று கேட்டால், பெரும்பாலும் இரண்டு விலையினைச் சொல்வார்கள். இரண்டிற்கும் 5 ரூபாய் வித்தியாசம் இருக்கும். பொதுவாகவே, அந்தக் கடையில் நல்ல பல காய்களும், சொறி பிடித்ததுபோல சில காய்களும், பெரிய காய்களும், சிறிய காய்களும் இருக்கும். அந்த கெட்ட அல்லது சிறிய காய்களைத் தவிர்ப்பதற்காக நாம் அதிக விலை சொன்ன காயினைக் கொடுக்கச் சொன்னால், அவர்கள் செய்யும் முதல்வேலை என்ன தெரியுமா?

விலைபோகாதிருக்கும் காய்களைத்தான் எடுப்பார்கள், அதை வெட்டும்வரை வாங்குபவர் ஒன்றும் சொல்லாவிட்டால் அதை அவர்கள் தலையில் கட்டிவிடுவார்கள். நல்லதைக் காட்டி கெட்டதை வியாபாரமாக்குவது தவறென்பதை எப்போதுதான் உணர்வார்களோ? பல கடைகளில் இருக்கும் கெட்ட காய்களுக்குக் காரணம், அவர்கள் அவை நன்றாக இருக்கும்போது வியாபாரிக்காததே.

அதிகமான வறட்சியினைப் பார்க்கும்போது மட்டும் நாம் அனைவரும் வருத்தப்படும் அதே நேரம், அதிகமான குளிர்சியினைப் பார்க்கும்போது மட்டும் ஏன் சந்தோசப்படுகிறோம்?.இன்னும் சொல்லப்போனால், அதிகமான குளிர்சியினால் பனி பொழிந்தால், அதில் அநேகமாக நாம் புகைப்படம் எடுப்பதை விரும்பாமல் இருப்பதில்லை.

*************************************************

சாலையோரங்களில் இருக்கும் பல பதாகைகளும் இதைத்தான் சொல்கின்றன. "வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்; மரம் மழையின் உயிர் நீர்". இவ்வாறாக இருக்கும் அந்தப் பதாகைகளுக்கு முன் அந்த இடத்தில் இருந்தது என்னவோ வானுயர்ந்த மரங்கள்தான். மரமழிப்பதால் மரம் வளர்க்கவேண்டிய சுழல் நமது.

*************************************************

தாய் நாடிலிருக்கும்போது அந்நிய மொழியும், அந்நிய நாட்டிலிருக்கும்போது தாய்மொழியும் பேசுவது எதனால்?

*************************************************

முதிர்ச்சியிடையும் பலவும் 'பழம்' என்றுதான் அழைப்பார்கள். இதிலிருந்து விதிவிலக்காக இருப்பது 'ஊறுகாய்'

*************************************************

"Lift"-காக காத்திருக்கும்போது, நிற்கவில்லையென்றால் வரும் கோபமும்; நாம் செல்லும்போது பல இடங்களில் நின்று செல்லும்போது வரும் கோபமும் ஒன்றாகவே உள்ளது.

இதைத்தான் ஒரு காமெடியில் சொல்லியிருப்பார்களோ.

கேள்வி: "ஏன் தம்பி, நம்மூர்ல இருந்து பக்கத்து ஊருக்கு எத்தனை கிலோமீட்டர்"

பதில்: "ரெண்டு கிலோமீட்டர்"

கேள்வி: "அப்ப, அந்த ஊர்ல இருந்து நம்ம ஊருக்கு எவ்வளாவு?"

ரெண்டும் ஒன்னாத்தானே இருக்கனும்? அதனால இப்படிக் கோபம் வருவது தவறல்ல. அப்படியா?

No comments: