மழைக்காலம்
நம்முடைய பழைய நினைவுகளை நினைவூட்டுவதில் இசைக்கு எப்படி முக்கியமான பங்கு உள்ளதோ அதைவிட சற்று அதிகமாகவே நாம் சுவாசிக்கும் 'வாசதிற்கு' உண்டென்பதில் திடமான நம்பிக்கை கொண்டவன் நான். உதாரணத்திற்கு எங்கோ எவரோ வைக்கும் சாம்பாரின் மணம் என் அம்மாவின் சமையலை நினைவூட்டுவதாகட்டும், சில நேரங்களில் என் நாசியில் ஏறி என் மனதைத் தொடும் அந்த மல்லிகையின் வாசனையானது அன்றொரு நாள் எங்கள் வீட்டுத் தெருவில் சைக்கிளில் 'உதிரி மல்லி, உதிரி மல்லி' என்று கூவி கொண்டு வந்த அந்த வயதானவரையும் அவரிடம் நானும் என் அக்காவும் கையில் முறத்தினைக் கையில் வைத்திருக்க அதில் அந்தப் பெரியவர் அவர் வைத்திருக்கும் தராசில் அளந்து முறத்தில் கொட்டும்போது நுகரப்பட்ட வாசனையினை நினைவுபடுத்துவதாகட்டும். அவ்வப்போது இப்படியொரு நினைவூட்டல் இல்லையென்றாலும் எப்பொழுதாவது உண்டு அப்படியொரு நினைவூட்டலுக்கான பதிவுதான் இது.
அதுவொரு மழைக்கால மாலை நேர ஞாயிற்றுக்கிழமை. காலை முதல் மெதுமெதுவாய் தூரித் தாலாட்டிக் கொண்டிருந்த மழை, மாலையானதும் என்ன நினைத்ததோ தெரியவில்லை, கொட்டோ கொட்டென்று கொட்டத் தொடங்கியிருந்தது. எனக்குத் தெரிந்தவரை மழைக்கு இடி வருகிறதோ இல்லையோ மின்வெட்டு மட்டும் கண்டிப்பாக வந்து விடும், அன்றும் அப்படித்தான். அப்படிப்பட்ட அன்றைய மாலை நேரத்தில் ஆறு மணிக்கெல்லாம் இருள் கவ்வியிருந்தது, வீட்டில் என் அம்மாவும் மண்ணெண்ணை விளக்கினை ஏற்றிவைத்துவிட்டு அடுக்களைக்குள் சென்று விட்டார். நான், என் அண்ணன், அக்கா, தங்கை என அனைவரும் வாசலில் இடித்துக் கொண்டு மழையினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அவ்வப்போது யாரேனும் சென்று வெளியில் ஓடு வழியாக வழிந்து கொண்டிருக்கும் தண்ணீரைப் பிடிப்பதற்காக குடத்தை வைத்துவிட்டு வருவோம். சற்று நேரத்திற்கெல்லாம் எங்கள் அம்மா, சூடாக அரிசியினை வறுத்தெடுத்து அதை முறத்தில் வைத்து கொண்டு வந்தார். இளஞ்சூடாக இருந்த அதை அந்த நேர்த்தில் அந்த மழைப் பொழுதில் உண்ண அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். கையில் நொறுக்குத்தீனியுடன் வாசலில் பரப்பியிருகும் மூன்று சாக்குப் பைகளின்மீது கததப்பாக அமர்ந்து கொண்டு மீண்டும் அந்த மழையினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
வெளியிலிருந்து வரும் குளிர் காற்றை ரசிக்க வேண்டுமென்றால்,அதற்கு கதகதப்பாக நம்மை வைத்துக் கொண்டால் மட்டுமே முடியும் என்பதால் பெரிய போர்வைக்குள் சுருண்டு அமர்ந்திருந்தோம்.
இந்த நேரத்தில் ஒரு இசை கச்சேரியும் நடக்கும், அது எதுவெனில்,
மழை வீட்டின் ஓடுகளின் மீது பட்டு, கடம்போல் ஒலிக்க, பக்க்த்து வீடுகளில் அவ்வப்போது கேட்கும் பாத்திரம் உருட்டும் ஒலி மேளமாகவும் இடி ஒரு தாளமாகவும் அமைந்து ஒரு இசைக் கச்சேரியே நடக்கும். இதற்கெல்லாம் ஒத்து ஊதுவது போல, வாயில் மெல்லும் அரிசியின் ஓசை இருக்கும்.அப்படி வாயசைந்த நேரம் அசந்து போகும்போது, அந்த மழைச் சாரலின் இசை ஒத்திற்கு மாற்றாகிவிடும். இந்த நேரத்திற்கெல்லாம் வாயிலிருந்த அரிசி காலியாகிவிடவே, தம்ப்ளரை எடுத்து ஓடுகளின் வழியாக ஓடி வரும் நீரைப் பிடித்துக் குடிக்க தாகம் சற்றென்று அடங்கும். நேரம் ஏறக்குறைய எட்டைத் தொட்டுவிடவே, மீண்டும் எனது அம்மா இரவு உணவை தயார் செய்ய அடுக்களைக்குள் சென்றுவிட்டார் இதை அடுப்படியிலிருந்து வரும் மதியம் செய்த வெந்தயக் குழம்பு உறுதி செய்தது, ஆமாம் அவர் அதை சூடுபடுத்திக் கொண்டிருந்தார்.
"யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே" என்பதுபோல, 'வாசம் வரும் முன்னே, வாசத்தின் அசல் வரும் பின்னே' என்பது உணவிற்கு நான் வைத்த புதுமொழி.குழம்பினை இறக்கிவைத்து விட்டு வீட்டிலிருந்த சீனி அவரைக்காய் வற்றலை (சென்னையில் இதன் பெயர் கொத்தவரங்காய்) வறுத்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து தட்டில் சோற்றைப் போட்டு, ஊறுகாய் மற்றும் சீனி அவரைக்காயினைத் தொட்டுக் கொள்ள எடுத்து வந்தார். அன்று எனக்கு சாப்பிட ரொம்ப சோம்பேறியாக(?!) இருந்தது. எனவே அம்மாவிடம், தட்டு முழுதும் உருண்டை பிடித்துத் தரச் சொன்னேன். ஏன் ஊட்டிவிடச் சொல்லவில்லையென்றால், நான் என் சவுரியத்திற்கு உக்கார்ந்து கொண்டு சாப்பிட முடியும், அதற்காகத்தான். அவரும் தட்டு முழுதும் உருண்டை பிடித்துத் தர, நான் அதை வாங்கிக் கொண்டு கட்டில்மீதேறி உக்கார்ந்து கொண்டு, முதுகுக்கு வசதியாக தலையணையினை அண்டக் கொடுத்துவிட்டு (கிட்டத்தட்ட படுத்துக் கொண்டு) ஒவ்வொன்றாக லபக்கிக் கொண்டிருந்தேன்.
உண்ட மயக்கம்தான் உண்டு, ஆனால் அன்றைக்கு உண்ண உண்ண மயக்கம், காரணம் அந்த சுவையான சாப்பாடும், அந்த அற்புதமான பருவ நிலையும்தான்.சாப்பிட்டு முடிக்கும்போதே சொல்லிவிட்டேன் எனக்கு பால் வேண்டாமென்று. (இன்னிக்கு தப்பிச்சாச்சுடா சாமி என்று எனக்குள்ளே சொல்லி கொண்டேன்). வழக்கம்போல் அம்மாவும் அப்பாவுக்காக சாப்பிடாமல் காத்திருந்தார்.
சிறிது நேரம் கழித்து படுப்பதற்கு பாய் விரிப்பதற்கும், பக்கத்து ஊரில் மளிகைக் கடை வைத்திருக்கும் எங்கள் அப்பா கடையினை அடைத்துவிட்டு வருவதற்கும் சரியாக இருந்தது. கடையடைத்துவிட்டு என் தாத்தாவும் அப்பாவும் தனித் தனி சைக்கிளில் வருவார்கள். என்னதான் மழை பெய்தாலும் மெதுவாகத்தான் வருவார்கள்.அந்த அடை மழையிலிருந்து நனையாதிருக்க என் அப்பாவும் என் தத்தாவும் பயன்படுத்துவதென்னவோ சாக்குதான் (கோணிப் பை). அதுதான் சைக்கிளில் வரும்போது வசதியாக இருக்கும். அப்பா, வந்ததும் எல்லோரையும் சாப்பிட்டீங்களா என்பார்.
என்னயும் என் அண்ணனையும் "என்னய்யா? சாப்பிட்டீங்களா?" என்பார். நாங்களும் அதற்கு "...ம்ம்ம்.." என்று மட்டும் சொல்லிவிட்டு போர்வைக்குள் ஐக்கியமாகிவிடுவோம். அ நேகமாக என் தங்கையும் அ ந் நேரத்திற்கு தூங்கி இருப்பாள். நாங்கள் சொன்னாலும், என் அம்மாவிடம் மீண்டும் கேட்பார் "என்னத்தா? தம்பிங்க சாப்பிட்டாய்ங்களா?" என் தங்கையினை "அம்மா சாப்பிட்டாளா?" என்று கேட்பார். அதற்கு எங்கள் அம்மா 'ஆம்' என்று பதில் சொன்னால்தான் கேட்பதை நிறுத்துவார். வெளியில் என்னவோ மழை கொட்டிக் கொண்டுதான் இருந்தது, ஆனால், உள்ளே, இங்கே என் பெற்றோர் கொட்டும் பாச மழைக்கு ஈடு இணையேது...
முடிந்தால், மீண்டும் மழையோடு வருவேன்,பிடித்தால் என்னோடு சேர்ந்து நனையுங்கள், இல்லையென்றால் குடையோடு காத்திருங்கள்...
--- "நினைவாணிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் நினைவுகள் தொடரும்"
No comments:
Post a Comment