Wednesday, January 23, 2013

நாயறிவு நமக்கில்லை...



தலைவனில்லா தனிமையில்,
தலைவனின் வீட்டிலிருக்கும்,
நாய்,
நடு நிசியில்,
தனனை நோக்கி,
தனித்து வருபவரை,
தனித்து நின்று பார்த்து குரைக்கின்றது....

பார்த்ததால் குரைக்கின்றதா,
பார்ப்பதற்காகக் குரைக்கின்றதா?
பார்த்தாலும் பிடிபடுவதில்லை
-'நாயறிவு நமக்கில்லை'

யாரோ,
கண்டவரென்பதாலோ - தன்னால்
கண்டவரென்பதாலோ - தான்
கண்டவர் - கண்டவரென்பதாலோ,
கண்டபடி குரைக்கின்றது,
கண்டபடி எண்ணத் தோன்றுகிறது
-'நாயறிவு நமக்கில்லை'

வருபவர் இதற்குமுன்
வந்தவரா? எப்போதேனும்
வந்து செல்பவரா?
வந்து வந்து செல்பவரா?
எதுவும் தெரியாது - இன்னும்
கண்டபடி குரைக்கின்றது நாய்,
-'நாயறிவு நமக்கில்லை'

வந்தவர் அருகில்
வந்ததும்
தாவிப்பாய்கிறது...
இன்னும் குரைக்கிறது,
நன்றியோடு
தன் தலைவன் கைகளுக்குள் இருந்துகொண்டு...

காணயொளி கிடைக்கும்வரை,
காட்சிக்குப் புலப்படும்வரை,
காட்டுத்தனமாய் குரைத்தது,
நாயல்ல - குழம்பிய மனமென்று விளங்கியது...
-'நாயறிவு நமக்கில்லை'

No comments: