இது
நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகி இருக்கும். அப்போது நானும்,என் நண்பனும் "MBA" தேர்வுக்காக கோயம்பேட்டிலிருக்கும் ஒரு கல்லூரிக்குச் சென்று தேர்வு எழுதிவிட்டு பின்பு மதிய வேளையில் திரும்புவது வழக்கம். தேர்வானது சனி, ஞாயிறுகளில் மட்டுமே நடக்கும். அன்றும் அப்படித்தான், தேர்வு எழுதிவிட்டு, கோயம்பேட்டில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தோம். நாங்கள் செல்ல வேண்டியது தரமணிக்கு, ஆகவே "M70"-க்காக காத்திருந்து, நேரம்தான் வீணானது. நமக்குத்தான் எந்த வண்டிக்குக் காத்திருக்கிறோமோ அந்த வண்டி மட்டும் கண்டிப்பாக வருவதில்லையே.
அன்றும் அப்படித்தான், வண்டி வந்தபாடாக இல்லை. அப்போது சென்னையின்பேர் சொல்லும் காலமான, வெயில் காலம்வேறு. சரியான தாகமாக இருந்தது. எவ்வளவு தண்ணி குடிச்சாலும் அந்த வெயில்காலங்களில் சரிப்படாது. ஒன்று வீட்டுக்குள்ளேயே அடங்கிவிடனும்; அப்படி இல்லையா, அடிக்கடி தண்ணீரைச் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். எங்களது அன்றைய நிலையும் அப்படித்தான். சரி கிண்டியில் இறங்கினால் அங்கொன்றும், இங்கொன்றுமாக சாத்துக்குடி கடைகளும், கரும்புச் சாறு கடைகளும் இருக்கும். சரி, வந்த வண்டியிலாவது சென்றால் கிண்டியில்போய் ஏதாவது குடித்துவிட்டு, காத்திருக்கலாமே என்று, D70-யில் ஏறிப் பயணப்பட்டோம்.
கிண்டியில் இறங்கிவிட்டு எதை முதலில் குடிப்பது என்று முடிவெடுப்பதில் குழப்பம் வந்தது. எங்களது பழக்கம் எப்படின்னா, டீ குடித்து முடித்த கையோடு(வாயோடு), பழச் சாறும் குடிப்போம். அதாவது சாப்பிடும் விசயத்தில் நாங்கள் யாரையும் எதற்காகவும் ஒதுக்கி வைப்பதில்லை. ஒருவர் இருக்கிறார் என்பதற்காக மற்றொருவரை ஒதுக்கி வைக்க மாட்டோம், அந்த அளவிற்கு பரந்த மனப்பான்மையாளர்கள் நாங்கள். அன்றும் அப்ப்டித்தான், முதலில் கரும்புச் சாறு அருந்திவிட்டு பிறகு, சாத்துக்குடி குடிக்கலாம் என்று முடிவெடுத்து கரும்புச்சாறு அருந்தச் சென்றோம்.
அதையும் அவ்வளவு சுலபமாக குடிப்பதில்லை, கரும்புச் சாற்றில் இரண்டு ரகம் உண்டு, ஒன்று புதிதாக அப்பொழுதுதான் போடுவார்கள். மற்றொன்று ஏற்கனவே போட்டு வைத்ததைத் தருவார்கள். அப்படி பழையது இருந்தால் எப்பொழுதும் முதலில் அதன் நிறத்தைப் பார்ப்போம் நல்ல வெளிர் பச்சை நிறத்தில் இருந்தால் மட்டுமே வாங்குவோம், இல்லையென்றால் திரும்பிவிடுவோம்.சில நேரங்களில், ஏற்கனவே போட்டுவைத்திருக்கும் சாறானது-கெட்டுப்போய் சற்று கருப்பு நிறத்தில் மாறிவிடும். அதைக் குடித்தால் "உவ்வே...", கேவலமா இருக்கும். ஆகவே சரியானதை மட்டுமே தேர்வு செய்வோம். இதை எப்படிச் சொல்லவேண்டுமென்றால் "தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பிக் கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்பட்டது" என்று காபி விளம்பரத்தில் சொல்வார்களே, அதைப் போல சொல்ல வேண்டுமென்றால், "தேர்ந்தெடுக்கப் பட்ட உணவுகளை மட்டுமே எமது வாய்க்கு உணவாக்குகிறொம்" என்றுதான் சொல்ல வேண்டும்.
அன்று அப்பொழுதான் சாறினைப் பிழிந்தார்கள், சரியென்று ஆளுக்கொன்று வாங்கிக் குடித்துவிட்டு, அடுத்ததாக சாத்துக்குடி கடைக்குச் சென்றோம். இந்த சாத்துக்குடிச் சாறைக் குடிப்பதிலும் ஒரு முறையுண்டு எங்களிடம். அதாவது சற்று பெரிய கடைகளுக்குச் சென்று இதைக் குடித்தால், அவர்கள் என்ன செய்வார்கள், சாறினைப் பிழிந்து, குடுவையில் வைத்து,சர்க்கரை சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து விடுவார்கள். இப்படிச் செய்வதால், அந்த சாத்துக்குடியின் உண்மையான தன்மையே போய்விடும். மேலும் நுரை, நுரையாக வேறு இருக்கும். எனவே, பெரிய கடைகளுக்குச் சென்றால் இன்றுவரை சாத்துகுடி மட்டும் வாங்குவதில்லை. இப்படி தள்ளுவண்டியில் வைத்து பிழிந்து கொடுக்கும் கடைகளில் மட்டுமே சாப்பிடும் பழக்கம் இன்றுவரை உள்ளது.
அன்றும் அப்படித்தான், ஒரு சிறிய தள்ளுவண்டிக் கடையில் வயதான பெரியவர் ஒருவர் விற்றுக் கொண்டிருந்தார். எப்போதும் வயதானவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நாங்கள் அன்றும் அதே போல அந்தப் பெரியவர் கடைக்கே சென்றோம். அப்போது மதியம் மணி 2 இருக்கும். அவரிடம் விலை எவ்வளவு என்றோம், அவரும் 10 ரூபாய் என்றார். சுட்டெரிக்கும் அந்த வெயிலில் அவர 10 ரூபாய் என்றதும் ஜில்லென்றாகிப் போனோம். மற்ற கடைகளில் 20 அல்லது 15 ரூபாய், இங்கு மட்டும் இவ்வளவு விலைக் குறைப்பால், மட்டற்ற மகிழ்ச்சியடைந்ததால் நானும் அந்த ஏழுகோடி பச்சைத் தமிழர்களில் ஒன்றென்பதை உணர்ந்து கொண்டேன். சரி "இரண்டு கொடுங்கள்" என்று சொல்லிவிட்டு காத்திருந்தோம்.
வழக்கமாக எல்லாக் கடைகளிலும் இருப்பதைப் போல, ஒரு சட்டியின்மேல் சல்லடையினை வைத்து இருந்தார். பிழியும் சாறினைப் பிடித்து இந்தச் சட்டியில் ஊற்றுவதற்காக ஒரு சிறிய சட்டியும் வைத்து இருந்தார்.
அவர், சரியாக ஒரு 10 பழங்களை எடுத்து நறுக்கி, அந்த சாறு பிழியும் கருவியில் வைத்துப் பிழிந்துகொண்டே இருந்தார். எங்களுக்கு ஆச்சரியத்திற்குமேல் ஆச்சரியம், எப்படி இவருக்கு கட்டுப்படியாகிறது என்று ஒரே வியப்பாக இருந்தது. பிறகு, கொஞ்சம் "ஐஸ்" போடுங்கள் என்று சொன்னதும் அவர். இந்த வெயிலுக்கு அதைச் சேர்க்கக்கூடாது என்று சொன்னார். உடனே நாங்கள் "என்னே ஒரு கரிசனம்" என்று எங்களுக்குள் எண்ணிக் கொண்டோம்.
சரியான வெயில், செவுளில் அறைந்ததுபோல வெயில் அடித்துக் கொண்டிருந்தது. இவரிடம் ஏதாவது கேட்கப்போய் இவர் அரை மணி நேரத்திற்கு அறுத்துவிட்டால் என்ன செய்வதென்று பயந்து "ஐஸ்" இல்லாமல் குடிப்பதற்குத் தயாரானோம்.
அவர் டம்ளரில் ஊற்றும்போது அதன் நிறத்தைக் கவனித்தால், தண்ணீராக இருப்பது உணர்ந்து கொண்டோம். பிழியும்போது இருந்த நிறத்திற்கும், தற்போதைய நிறத்திற்கும் நிறைய வேறுபாடு இருப்பதை உணர்ந்துகொண்டோம். சரி, நிறம்தான் இப்படி இருக்குமென்று குடித்தால் சுவை படு கன்றாவியாக இருந்தது, அதாவது "சப்பென்று" இருந்தது. என்னவோ இவர் கோல்மால் பன்னுவதாகவே நினைத்துக் கொண்டு அவ்விடத்தைவிட்டுச் சென்றோம்.
மறு நாளும் வழக்கம்போல கோயம்ப்பேட்டிலிருந்து கிண்டி வந்து செல்வதாக முடிவெடுத்து கிண்டியில் இறங்கினோம். சரி, இவர் என்ன செய்கிறார், எப்படி நிறம் மாறுகிறது என்பதை இன்று கண்டுபிடித்தே தீர வேண்டுமென்று எண்ணி, சற்று தூரத்தில் நின்று கொண்டு இவரையே வேவு பார்த்துக் கொண்டிருந்தோம். முந்தைய தினத்தைப் போலவே, இருவர் வந்தார்கள்; அவர்கள் சொன்னதும், ஆகப்பட்ட பழங்களைப் பிழிந்து ஊற்றுகிறார் அந்த சல்லடை மூடிய கிண்ணத்தில். ஊற்றும்ப்போது நல்ல நிறத்தில் இருக்கிறது. பிறகு குடிப்பதற்காக டம்ளரில் ஊற்றும்போது நிறம் மாறியிருந்தது. "என்னடா இது? எப்படி இது சாத்தியமாகும்" அப்படின்னு யோசிச்சிக்கிட்டு இருந்தா, அப்பத்தான் அந்த சூட்சமத்தக் கண்டுக்கிட்டோம். அவர் என்ன செஞ்சாருன்னா, முதலில் அந்தப் பெரிய சட்டியில் பாதி அளவிற்கு தண்ணீரை நிரப்பி வைத்து விடுகிறார். அதன்பிறகு, அதன்மீது, சல்லடையினை வைத்து மூடி வைத்து விடுகிறார். பிறகு யாராவது வந்து கேட்கும்போது, அவர்களை நம்ப வைப்பதர்காக, அவர்கள் கண் முன்னாடியே பல ப
ழங்களைப் பிழிவதுபோல படம் போடுகிறார். 'அடக் கிழட்டுப் பயலே... உன்னைப் போயி நல்லவன்னு நினைச்சிட்டோமே'ன்னு நொந்துகிட்டோம்.
"என்ன ஒரு வில்லத்தனம்?" "உக்கார்ந்து யோசிப்பாங்களோ?"... “நம்ம மூஞ்சியப் பார்த்ததும் உரண்டை இழுக்கனும்னு தோணுமோ?”
சொன்னா நம்ப மாட்டீங்க, இப்போ அந்தக் கடைக்கு இரண்டு சிறியவர்களை வேலைக்கு வைத்து அந்தக் கடையினை நடத்திக் கொண்டிருக்கிறார். அந்த தள்ளுவண்டிக் கடைக்கு பெயர் பலகைகூட வைத்துவிட்டார். இடம்: கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிலையம்; "" பேருந்து நிறுத்தம். எங்க ஊருப் பக்கமெல்லாம், இந்த அளவுக்கு, யோசிச்செல்லாம் ஏமாத்தாமாட்டாங்கடா சாமி...
"வருசா வருசம் நம்ம ஒரு கிருக்கன்கிட்ட மாட்டிக்கிறோமே"
அட அங்க ஒரு ஜூஸ் கடை இருக்கு; "அண்ணே, நம்ம பசங்களுக்கு, ஃபிரெஸ்ஸா ஒரு ஜூஸ் போடுங்க..."