Friday, June 20, 2014

என்ன ஒரு வில்லத்தனம்?


இன்று  (20-06௨014) நடந்த சம்பவம் இது. நானும் எனது அலுவலக நண்பரும், "மதிய விருந்து உணவினை" முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் அலுவலகம் திரும்பி கொண்டிருந்தோம். மதிய வெயில் மண்டையினைப் பிழந்தது, 'உண்டே களைத்திருந்த' எங்களுக்கு மிகுந்த தாகமாகிவிட்டது. சரி, அலுவலகத்தின் எதிரிலிருக்கும் பழச்சாறு கடைக்குச் சென்று ஒரு 'எலுமிச்சை சோடா' சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம் என்று அந்தக் கடைக்குச் சென்றோம். எனது நண்பர், தனக்கு எதுவும் வேண்டாமென்று சொல்லிவிட்டார்.

"ஒரு Lime சோடா with Salt" என்று சொன்னேன், அதற்கு அவர், "கரண்ட் இல்லா" என்றார்.

"சரிங்க, எனக்கு "Ice வேண்டாம்" என்று சொன்னேன்.

அதற்கு அவர், "கரண்ட் இல்லா, சோடா இல்லா" என்றார்.

"அட ராமா, இவருக்கு தமிழ் வேற தெரியாதா? சோடா இல்லைன்னு சொல்றதுக்கே இவ்வளவு இழுவையா" என்று மனதுக்குள் முனுமுனுத்துக் கொண்டு, "சரி, ஒரு "Sweet Lime போடுங்க, அத, 'Ice' இல்லாம போடுங்க" என்றேன். சரியென்று மண்டையினை ஆட்டிவிட்டுச் சென்றார். பொதுவாக, சாத்துக்குடி சாப்பிடுவது, "மிக்சியில்" அடித்து குடிப்பதைவிட, அதைப் பிழிந்து சர்க்கரை சேர்த்து கலக்கிக் குடித்தால் அதன் சுவையும், மணமும் மாறாமல் இருக்கும். மாறாக மிக்சியில்அடித்துவிட்டால், அது நுரைத்துவிடும். அதன் மணமும், சுவையும் குறைந்துவிடும். எல்லா பெரிய பழச்சாறு கடைகளிலும், மிக்சியில் அடித்துத்தான் இதனைக் கொடுப்பார்கள். சில தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே இதனை இது போன்ற கடைகளில் குடிப்பதுண்டு. இன்று, இதற்கான நேரமென்று நொந்து கொண்டேன்.

கிட்டத்தட்ட 10 நிமிட இடைவேளைக்குப் பிறகு, "Juice" வந்தது. தொட்டுப்பார்த்தால் அவ்வளவு குளிர்ச்சியாக இருந்தது. அதை அவரிடம் காண்பித்து, "Ice இல்லாமத்தான் கேட்டேன்" என்றேன். அதற்கு அவர், "ஓ, 'Ice' இல்லாம இன்னொன்னோ?" என்றார்.

"இல்லீங்க, நான் கேட்டது ஒன்னே ஒன்னுதான், அதனால, "Cooling இல்லாம போட்டு கொண்டுவாங்க" என்றேன். அதை நேராக எடுத்துச் சென்று, மீண்டும் "மிக்சியில்" ஊற்றி சிறிது நேரம் ஒடவிட்டுக் கொண்டிருந்தார்கள். பின்னர், அதை ஊற்றி எடுத்துக் கொண்டுவந்து தந்தார்கள் "இப்போ, "Cooling" இருக்காது" என்று சொன்னார் அவர். அதற்கு நான் "இதை நீங்களே, வச்சிக்குங்க" என்று கடுப்பாக சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டேன். நம்மல ரோட்டுக் கடையிலதான் எமாத்துறான்னா இவனுமா என்று நொந்து கொண்டேன்.  நல்லவேளை, அப்படியே வாயுக்குள்ள வச்சிக்கிட்டு, "Cooling" போன பிறகு குடிக்கச் சொல்லாம போனானுவளே" என்று எண்ணிக் கொண்டு இடத்தைக் காலி செய்தேன்.

"'Sir'க்கொரு ஊத்தாப்பம் " நகைச்சுவை காட்சிபோல ஆகிவிட்டது இன்றைய எனது நிலை. கடை நடத்துகிறார்களாம் கடை... 

No comments: