Tuesday, June 17, 2014

இரண்டாம் உலகம்


இவ்வுலகில் பிறந்த அனைவருக்கும் பிறப்பென்பது முதல் உலகமென்றால், இறப்பென்பது இரண்டாம் உலகம்தான். இது உயிர் கொண்ட ஜீவராசிகளுக்கு மட்டுமல்ல உயிரற்ற பொருள்களுக்கும் பொருந்தும். என்னதான், இந்த உலகம் ஒரே மாதிரி இருந்தாலும், சிறுவர்களின் உலகமே தனிதான், அவர்களது உலகத்தில்தான் பலபொருள்களும் தமது இரண்டாமவது உலகத்தை அடைகின்றன. இந்தப் பதிவானது, நான் என் சிறு வயதில் அனுபவித்த பல பொருள்களைப் பற்றிய தொகுப்பே ஆகும், அனேகமாக இது நம் அனைவருக்கான பதிவாக இருக்கும் என்பது என் எண்ணம். நான் பிறந்து வளர்ந்தது கிராமம் என்பதால், எமது பகுதியில் இருந்த சிறுவர்களின் இரண்டாம் உலகம் பற்றியே இந்தப்பதிவு.

சைக்கிள் டயர்:




துள்ளித்திரிந்த அந்தக் காலத்தில், சிறுவர்கள் இருக்கும் எல்லோரது வீட்டிலும் கதவின் ஓரமோ, வீட்டின் பின்புறமோ இந்த சைக்கிள் டயரானது கண்டிப்பாக இருக்கும். பொதுவாக, இது ஒவ்வொரு சிறுவனின் அடையாளமாக்வே இருக்கும். ஒருசிலர், மிக உறுதியான சைக்கிள் டயர் வைத்து இருப்பார்கள். சிலர், இலகுவான சைக்கிள் டயரும், சிலரோ இரு டயர்களை இணைத்து ஒன்றாக வைத்தும் இருப்பார்கள். காலையில் அதை உருட்டிக் கொண்டு சென்றால் வீடு திரும்பும்வரை அதை வைத்துக் கொண்டுதான் பல வேலையும், விளையாட்டுக்களும் அரங்கேறும். அந்தந்த டயருக்கு ஏற்றவாரு அதைச் செலுத்துவதற்கு ஒரு குச்சியினையும் தயார் செய்து வைத்திருப்போம். தவில்காரனுக்கு எப்படி தவிலும், குச்சியும் இரு கண்களோ அது மாதிரி எங்களுக்கு இவ்விரண்டும் இரு கண்கள். யாருடைய டயர் வலுவானது என்பதைக் காட்ட போட்டிகள் நடக்கும். அதில் முதன்மையானது, ஒன்றோடொன்று மொதச் செய்வது. போட்டியிடும் இருவர் எதிரெதிராக நின்று கொண்டு அவர்களது டயர்களை எதிரில் நிற்பவரது டயரை நோக்கிவிட வேண்டும், எதிரில் இருப்பவரும் அவ்வாறே செய்வார். அப்போது ஒன்றோடொன்று மொதிக்கொண்டு, யாருடைய டயரானது கடைசியில் கீழே விழுகிறதோ, அந்த டயர் வெற்றிபெற்றதாகக் கருதப்படும். சேவல் சண்டையே எங்களது விளையாட்டைப் பார்த்துத்தான் வைத்திருக்கக் கூடும். டயரினை வைத்துக்கொண்டு ஓட்டப்பந்தயம் நடக்கும், அதற்கு முன்பாக அனைவரும் டயரினைப் பிடித்துக் கொண்டு தரையில் வேகமாகத் தேய்க்கும்வண்ணம் அதைப் பின்னோக்கி இயக்குவோம். அப்போது அதைப் பார்ப்பதற்கு எதோ மிகப்பெரிய கார் ரேசில் டயர்கள் உரசிக்கொளவது போல இருக்கும். இப்படிப்பட்ட இந்த டயரானது எங்கள் கைகளில் கிடைப்பதே ஒரு வேடிக்கைதான், ஏதாவதொரு சைக்கிள் கடைக்கு அருகில் தூக்கியெறியப்பட்ட எதேனும் ஒரு பழைய டயர்தான் இப்படி எங்களிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும். முதல் உலகத்தில் உழைத்ததோ இல்லையோ எங்களது இரண்டாம் உலகத்தில் நிறையவே உழைத்திருக்கிறது...

சிகரெட் அட்டை:

காலியான சிகரெட் அட்டையினைக் கொண்டு ஒரு விளையாட்டு விளையாடியது உண்டு. ஒவ்வொரு அட்டைக்கும் ஒவ்வொரு மதிப்புண்டு. வெளிப்புற அட்டையானது அதிக மதிப்புடையாதாக இருக்கும். உதாரணமாக, "Wills" வெளிப்புற அட்டையின் மதிப்பு 20, "Panama"என்ற சிகரெட் அட்டையின் மதிப்பு 40, மஞ்சள்நிற சிகரெட் அட்டையின் மதிப்பு 10.


அட்டையினை ஒரு சதுர வடிவமாக செய்து கொள்வோம். பின்னர், ஒருவட்டம் வரைந்துகொண்டு, பந்தயத்திற்கு இத்தனையென்று ஆளாளுக்கு அந்த வட்டத்தில் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிக் கொள்வோம். பின்னர் 15 அடியளவிலிருக்கும் எல்லைக்குச் சென்று ஒரு செதுக்கிக் கல்லால் அந்த வட்டத்தை நோக்கி வீச வேண்டும். அப்படிவீசும்போது அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் அட்டைகளானது, எத்தனை வெளியேறுகிறதோ அவை அத்தனையும் அவருக்குச் சொந்தம். இதைத் தடுப்பதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. அது வீசியவரது கல்லினை, எவராவது எல்லைக் கோட்டிலிருந்து அவரது கல்லால் தொடும்படிச் செய்துவிட வேண்டும். இதற்கு சொட்டி போடுவது என்று பெயர். அப்படிச் செய்துவிட்டால், அவர் எடுத்த அத்தனை அட்டைகளையும் அந்த வட்டத்திற்குள் மீண்டும் வைத்துவிட வேண்டும். இப்படி எல்லோரும் கற்களைக் கொண்டு எறிந்தபிறகு, வட்டத்திலிருந்து அதிகமான தூரத்தில் எவரது கல் உள்ளதோ அவர் முதலில் மீண்டும் அந்த இடத்திலிருந்து அந்த அட்டைகளை அடிக்க வேண்டும். இப்போது திரும்பப்பெரும் வாய்ப்பு கிடையாது. அவரது ஒருமுயற்சி தோற்கும்வரை அல்லது கட்டத்திலுள்ள அட்டைகள் காலியாகுவரை அவருக்கு வாய்ப்பு உண்டு. அப்படி எல்லாரும் முயற்சித்தபிறகு மிஞ்சிடும் அட்டைகளை மீண்டும் அடுக்கிவைத்து எல்லையிலிருந்து மறுபடியும் ஆரம்பிப்போம். இந்த விளையாட்டுக்காக, ஒவ்வொருவரும் செதுக்கிக் கல்லினைத் தேடி அழைவோம், நல்ல நண்பனைப் போன்றது, உறுதியான ஒரு செதுக்கிக் கல்.

அநேகமாக இப்போதெல்லாம் இந்த விளையாட்டு முற்றிலும் விளையாடப்படுவதில்லை என்பது எனது திடமான நம்பிக்கை.இந்த எண்ணங்களை மட்டுமே இப்போது என்னால் திரும்பப் பெற முடிகிறது...

சலசலக்கும்...ஓலை:

இப்போதெல்லாம் ஓலையென்று சொன்னால் அது என்னவென்று பலரும் கேட்கும் நிலை வந்துவிட்டது. அப்போதெல்லாம், எங்களோடு மிகவும் ஒட்டி உறவாடிய ஒன்றுதான் இந்த பனைஓலை. அனைத்து ஓடைகளின் இருபுறங்களிலும் இவை இருக்கும். எமது ஊரானது வறட்சிக்கு பிடித்தமான இராமனாதபுரம் மாவட்டத்திலுள்ளது, இங்கு பனைமரங்கள் மிக அதிகம்.


கோடை காலம் வந்துவிட்டால், காலை ஏழுமணிக்கெல்லாம் சைக்கிளில் பதனீர் கொண்டுவந்து விற்க ஆரம்பித்துவிடுவார்கள். பதனீருக்குச் சுவையூட்டுவதும் அழகூட்டுவதும் அந்தப்பனை ஓலைதான். ஒரு கீற்று பனைஒல்லையினை மடித்து, அதன் நடுவில் செம்பு நிறைய பதனீர் ஊற்றித்தருவார்கள். அப்படிக் குடித்துமுடித்த பனை ஓலைகளைக் கொண்டு காத்தாடி, கைக்கடிகாரம் என விளையாட்டுப்பொருள்களைச் செய்துகொள்வோம். இதன் ஆயுட்காலம் என்னவோ அன்றைய நாள் மட்டும்தான். ஏனென்றால், பனை ஓலை சீக்கிரமாகக் காய்ந்துவிடும். காத்தாடியென்றால், + போன்று வடிவம் வருவதற்காக நாட்டுக் கருவேல மரத்தின் முள்ளினை நடுவில் வைத்து பினைத்துவிடுவோன். பின்னர் அந்த முள்ளின் கொண்டைப்பகுதியினைப் பிடித்துக் கொண்டு வேகமாக ஒடுவோம், அப்போது அந்தக் காத்தாடியானது வேகமாகச் சுழலும், மேலும், சுழலும் வேகமனாது நம் கைகளில் உணர முடியும்...

புளிய முத்து:

முன்பெல்லாம் சாலையின் இருபுறமும் வெயில்படாத அளவிற்கு புளிய மரங்கள் அடர்த்தியாகவும் அதிகமாகவும் இருக்கும். பள்ளி சென்று திரும்பும்போதும், விடுமுறை நாட்களிலும், வேறு எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் புளியம்பழங்களைச் சுவைக்க முடிந்தது.


அப்படிச் சாப்பிட்டுவிட்டு கீழே போட்டுவிட்டுச் செல்லும் புளியங் கொட்டைகளைச் சேர்த்து வைத்துக் கொள்வோம், விளையாட்டிற்காகத்தான். எங்கள் பகுதியில் புளியங்கொட்டையினை, புளியமுத்தென்றே அழைப்போம். ஆகவே நானறிந்த முதல் முத்து இந்தக் கருப்பு முத்துதான். தாயம் விளையாடுவெதன முடிவு செய்துவிட்டால், சிமெண்ட் தரையிருக்கும் வீடுதேடிச் சென்று, சொற சொறப்பான இடத்தில், குதிங்காளில் அந்த கொட்டையினை வைத்து தேய்த்துக் கொள்வோம். சில சமயங்களில், ஒற்றையா, இரட்டையா என்று கைகளுக்குள் புளியமுத்துக்களை வைத்து விளையாடுவோம், எதிரில் இருப்பவர் அதைச் சரியாகக் கணித்துவிட்டால் அது அவருக்குச் சொந்தம். இப்படியாகச் சேர்த்த புளியமுத்துக்களை அவ்வப்போது சிறிது உப்பு போட்டு தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டுவிடுவோம். பெண்கள் விளையாடும் பல்லாங்குழி மரப்பழகையில் இந்த முத்துக்கள்தான் அலங்கரித்திருக்கும்

சிங்கி:

எமது பருவத்தில், எமது பகுதியில் சோடா பாட்டில் மூடியினை சிங்கி என்றுதான் அழைப்போம். இது எல்லா நாட்களிலும் எளிதாக கிடைக்கும் பொருளென்பதாலோ என்னவோ நாங்கள் இதை அவ்வப்போதுதான் கண்டுகொள்வோம். பெரும்பாலும் இதை வைத்து உடைந்த பலூனைக் கொண்டு விசில் செய்துவிளையாடிக் கொள்வோம். ஈர மணலில், இட்லி செய்வதற்கு, இது மிகவும் சரியான தேர்வு. மினி இட்லி என்று நாம் தற்போது உண்பதெல்லாம், இந்த விளையாட்டில் விளைந்ததாகத்தான் இருக்கும். கார்த்திகை மாத்ததில் மெழுவர்த்தி வைப்பதற்கு இதைப் பயன்படுத்திக் கொள்வோம். அங்கொன்றும், இங்கொன்றுமாகக் கிடைக்கும் உருகிய மெழுகுகளைச் சேர்த்து இந்தச் சிங்கியில் வைத்து உருக்கி, அதில் திரி வைத்து ஒரு விளக்காக மாற்றுவோம். வாழ்விழந்தவற்கு வாழ்வழித்த பெருமையினைத் தேடிக்கொண்டோம். இதில் வேடிக்கை என்னவென்றால், பல நிற மெழுகுகளும் சேர்ந்து இருப்பதால், இது புதுவித நிறத்தில் ரம்மியமாக காட்சி அளிக்கும். அப்படி உருக்கும்போது, கைகளில் தெரித்து விழும் அந்த உருகிய மெழுகில், என் நினைவுகளும் உருகிக் கொண்டுதான் இருக்கிறது....

சிற்பியின் கைபட்டால் கல்லானது ஒரு சிலையாகத்தான் ஆகும், ஆனால் சிறுவர்களின் கைகளில் கிடைக்கும் பொருளுக்கு புது உலகமே கிடைத்துவிடுகின்றது... "இரண்டாம் உலகம்"...!

No comments: