'லிஃப்டில்' ஒருவர் இறங்கியவுடன்,
சில நொடிகள்
தாமதத்திற்குப் பின்,
தானாக மூடிக்கொள்ளும்,
தானியங்கிக் கதவுக்குக்கூட காத்திராமல்,
தானாக இயக்கி,
நொடிகளை நொடியாக்க
முயற்சிக்கும் முயற்சி,
ஏனென்று இன்றுவரை விளங்கவில்லை...
கால்கடுக்க பேருந்துக்காக
நிற்கையில், நிறுத்தத்தில்
நிற்காமல் செல்லும்
பேருந்துகளை வசைபாடும் நான்,
பேருந்தில் அமர்ந்து செல்கையில்,
அவசரமாகச் செல்லவேண்டிய சூழலில்,
ஒவ்வொரு நிறுத்தமாக, நின்று செல்லும்
பேருந்தை வசைபாடுவது,
ஏனென்று இன்றுவரை விளங்கவில்லை...
ஒருவழிப் பாதையில்,
எதிர்திசையில்
எதிர்வருபவரைக் கண்டு
மனதிற்குள் வசைபாடும் நான்,
சுற்றிச்சென்றால், கால விரயமென்று
ஒருவழிப் பாதையில் - எதிர்திசையில்
ஒருஓரமாகச் செல்லும்
என்னை முறைத்துப் பார்ப்பவர்களை
மனதிற்குள் திட்டிக்கொள்ள்வது,
ஏனென்று இன்றுவரை விளங்கவில்லை...
உண்ணும் உணவின் விலை-அதன்
உற்பத்தி விலையினைவிட
பன்மடங்கு அதிகம் எனத்
தெரிந்தும், உறபத்தியினைப்பற்றி
சிந்திக்க மனம் மறுப்பது,
ஏனென்று இன்றுவரை விளங்கவில்லை...
செடியோ,கொடியோ வளர்த்தால்
எம் வீட்டிற்கு உணவாகும்;
மரம் வளர்த்தால்,
என் சந்ததிக்கும்
வலு சேர்க்கும் - இவையெல்லாம் தெரிந்தும்,
கண்ணிற்கு மட்டும் அழகாய் காட்சிதரும்,
சீமைச் செடிகளை வளர்ப்பது,
ஏனென்று இன்றுவரை விளங்கவில்லை...
தவறெனத் தெரிந்தும்,
தவறுகளைத் தவறாமல்
செயவது,
ஏனென்று இன்றுவரை விளங்கவில்லை...
No comments:
Post a Comment