வாதமானது, வாக்குவாதம், விதண்டாவாதம், பக்கவாதம் என்று பலவாக வகைப்பட்டிருந்தாலும், இந்தப் பதிவில் நான் பதிய இருப்பது 'பயங்கர வாதம்' பற்றியது. இது 'பயங்கரவாதம் பற்றியது அல்ல, "பயங்கர-வாதம்" பற்றியது. ரஜினி ஒரு படத்தில் சொன்னதுபோல, தமிழனுக்குத்தான் பேசப்பிடிக்குமே. எனவே, நம் அனைவருக்குமே இது பரீட்சயமான ஒன்றுதான்.
பொதுவாக ஒருவரைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டுமெனில், அவருடைய நண்பனைப் பற்றிச்சொல் என்பார்கள். ஏனென்றால், ஒருமித்த எண்ணங்களைக் கொண்டவர்களே நண்பர்களாக இருப்பது வழக்கம். ஆனால், இந்த 'வாதம்' விசயத்தில் அது சற்றே தவறானதாகும். பொதுவாக ஒரு நண்பர் கூட்டமென்றால், ஒருவர் பேசுவதற்கு காசு கேட்பார், ஒருவரோ அவருடைய பேச்சை நிறுத்துவதற்கு காசு கேட்பார், ஒருவர் அளவோடு அளவளாவுவார். இப்படி, 'பல வாதங்களும்' கலந்த கலவையாகத்தான் அந்தக் கூட்டம் இருக்கும். வாக்குவாதம் என்றால், நம்மவர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.
இதுபொதுவாக, ஒரே நண்பர்கள் கூட்டத்திற்குள்தான் அதிகம் காணப்படும். பொதுவாக, ஒருவனிடம் எப்படிப் பேசினால் அவன் கடுப்பாவானோ, அப்படிப் பேசித்தான் இந்த வாக்குவதததை ஆரம்பிப்பார்கள். இதைப் பெரும்பாலும், பொழுது போவதற்காகவேச் செய்வார்கள் உதாரணத்திற்கு, கிரிக்கெட்டில் ஒருவருக்கு சச்சின் அதிகம் பிடிக்குமென்றால், மற்றவருக்கு, ட்ராவிட்டைப் பிடித்திருக்கலாம். அன்றைய போட்டியில், எவரேனும் ஒருவர் அதிக ரன் எடுக்காமல் அவுட்டாகிவிட்டால்போதும்;. உடனே, அவர்களை வெறுப்பேற்றுவதற்கு, அந்த விளையாட்டுவீரரை மட்டம் தட்டுவர். உடனே நம்மவர்களும் பொங்கிவிட ஒரு அருமையான வாக்குவதாம் நடந்துவிடும்...அவரவர் பொறுமைக்கு எல்லையுண்டு, அந்த எல்லையினைமீறி வரம்பு மீறி வாக்குவாதம் செய்யும்போதுதான் இது 'எல்லை தாண்டும் பயங்கர-வாதமாகிறது'.
எங்கெல்லாம் இந்த 'எல்லை தாண்டும் பயங்கர வாதம்' நிகழ்கிறது என்பதை ஒன்றொன்றாகப் பார்ப்போம்.
குழாயடிச் சண்டை: பெண்கள் இந்த 'பயங்கர-வாதத்திற்கு' பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து இருப்பார்கள் என்றே எண்ணத்தோன்றும் அளவிற்கு இவர்களது குழாயடி சண்டையிருக்கும். யாராவது ஒருவர், வேறொரு தெருவிலிருந்து, இந்தத் தெருவிற்கு தண்ணீர்பிடிக்க வந்துவிட்டால் போதும், சும்மா கிடந்த வாய்க்கு அவுள் கிடைத்த மாதிரி சும்மா வசைந்து தள்ளிவிடுவார்கள். சும்மா சொல்லக்கூடாது, என்னமா 'வாதம்' செய்கிறார்கள் இந்தப் 'பயங்கர-வாதிகள்'???
நாய்கள் இராஜ்ஜியம்:
தெருவிலிருக்கும் நாய்கள் இருக்கிறதே, இவை மனிதர்களைக் காட்டிலும் எல்லைச் சண்டையில் சிறந்தவர்கள். அதுவும் குறிப்பாக, இரவு நேரத்தில் சொல்லவே வேண்டாம். அடுத்த தெருவிலிருக்கும் நாயானது இரவு நேரத்தில், பக்கத்துத் தெருவிற்குச் சென்றுவிட்டால் போதும். உடனே அந்தத் தெருவிலிருக்கும் அனைத்து நாய்களும் ஒன்றுகூடி அதை நோக்கிக் குரைக்க ஆரம்பித்துவிடும். அது நாயாக மட்டுமல்ல, நாமாக இருந்தாலும் இதே கதிதான்.
இரவு நேரங்களில், அவைகளுக்கு ஏதோ அடிமை சிக்குவதுபோல, எவரேனும் தனியாகச் சிக்கிவிட்டால் போதும், அப்படியே குரைத்து, குரைத்து அவர்களை ஒருவழியாக்கிவிடும். இவற்றில் சில நாய்களுக்கு கொஞ்சம் குசும்பு அதிகம், அவை, அப்படிச் சிக்கியவர்களைத் துரத்துவது போலவே பாவலா காட்டிக் கொண்டிருக்கும். அப்பொழுதெல்லாம் அவருடைய மனதில் இதுதான் ஓடிக் கொண்டிருக்கும் "நான் அப்படியே சாக் ஆயிட்டேன்." என்னமோ இதைப் பற்றி யோசிக்கும்போதெல்லாம், வடிவேலுவின் ஒரு காமெடிதான் நினைவுக்கு வரும்; நாம அடிச்ச டீக்கடைக்காரன், இருக்கானா, இல்லையான்னு பாருன்னு சொல்வார். அந்த டீக்கடைக்காரர் இவருக்குப் பயந்து, ஓட்டமெடுப்பதைப் பார்த்ததும் சொல்வார், நமக்கும் ஒரு அடிமை சிக்கிட்டான்டா... அதயேதான் இவைகளும் பின்பற்றுகின்றனவோ என்னவோ?
சரி, நாய்களுக்குத்தான் 'எல்லை தாண்டிய பயங்கர-வாதம்' என்றால், பேய்களுக்குமா? அட, ஆமாங்க. நம்ம ஊர்ல கேட்டுப்பாருங்க, டேய், அந்தக் கிணத்துல குளிக்காத, அங்கதான் அவரோட ஆவி சுத்துதுன்னு சொல்லுவாங்க; அடப்பாவிங்களா, உயிரோட இருக்கும்போதுதான் எல்லைக்குப் பிரச்சனை பன்றானுங்கன்னா, செத்த பிறகுமா? நடத்துங்கடா,,,
பேருந்து நிறுத்தச் சண்டைகள்:
மதுரையில் ஆரப்பாளையம் பேருந்து நிலையம், திண்டுக்கல்லில் மதுரை மார்க்க பேருந்து நிறுத்தங்களில், நீங்கள் இதை சர்வ சாதரணமாகப் பார்க்கலாம். பெரும்பாலும் அரசுப் பேருந்துக்கும், தனியார் பேருந்துகளுக்கும் இடையேதான் இந்தச் சண்டை நடக்கும். இளசுகள் பெரும்பாலும், தனியார் பேருந்தைத்தான் விரும்புவார்கள். அதனால், பெரும்பாலானோர், அரசுப் பேருந்தைத் தவிர்த்து, அதற்கு அடுத்துப் புறப்படத் தயாராக இருக்கும் தனியார் பேருந்தில் ஏற முயர்சித்துவிட்டால் போது. உடனெ இரு பெருந்து நடத்துனர்களுக்கும் இடையே பெரிய களேபரம் ஆகிவிடும். அப்பொழுதுதான், அவர்கள் நொடிகளைக் கண்க்கிட்டுச் சொல்வார்கள். "இன்னும் 30 நொடிகள் இருக்கு, அதுக்குள்ள நீ ஏன் வண்டியில் ஆள் ஏஏற்றுகிறாயென்று". சீரியசாகச் சண்டையிட்டுக் கொள்ளும் அவர்களைப் பார்த்தால், எனக்கு என்னவோ சிரிப்புதான் வரும். இது, நேரத்திற்கான, 'எல்லை தாண்டும் பயங்கர-வாதம்'.
சாலையோரங்களில் எல்லைதாண்டும் பயங்கர-வாதம்:
சமீபத்தில், அருப்புக்கோடடை அருகிலிருக்கும் இருக்கன்குடி கோயிலுக்குச் சென்று திரும்புகையில் ஒரு நுங்குக் கடையில் வண்டியினை நிறுத்தினோம். மழைக்கு ஆங்காங்கே காளான் முளைப்பது போல, வெயிலுக்கு ஆங்காங்கே நுங்கு, பழரசக் கடைகள் முளைக்கின்றன; நுங்குகளை வெட்டச்சொல்லிவிட்டு, அவரிடம், "எத்தனையென்று கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்" என்றேன். அவரோ, "நீங்களே எத்தனை சாப்பிடுகிறீர்கள் என்று கணக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்றார், கடின வேலைதான் எனக்கு.
அவர் ஒவ்வொன்றாக சீவித்தர, அப்படியே எடுத்து வாயில் இலபக்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர் வந்து, அவரிடம் வாக்குவாதம் செய்தார். என்னவென்று கவனித்தால், அவர் 100 அடி தூரத்தில், கரும்பு சாறு கடை வைத்து இருக்கிறாராம், அதனால் இவரது கடையினை இன்னும் பல அடிதூரம் தள்ளிவைத்து கொள்ளச் சொல்கிறார். சரிதான், இங்கேயுமா இந்த எல்லைப் பிரச்சினை என்று காசை கொடுத்துவிட்டு நகர்ந்தேன். இதுவும் ஒரு "எல்லை தாண்டும் பயங்கர-வாதம்தான்".
இப்படியாக, எல்லை தாண்டும் பயங்கர-வாதங்கள் பலவாக இருந்தாலும், எல்லாவற்றையும் இந்தப் பதிவில் இட இயலாது எனபதாலும், அப்படி நான் நிறுத்தவில்லையெனில், உங்களுக்கும் எனக்கும் இந்தப் பதிவில் எல்லைதாண்டும் பயங்கர-வாதம் வந்துவிட்டும். என்பதாலும், இந்த வாதத்தினை இத்தோடு முடித்துகொள்கிறேன்...
இந்த Blog-ஐத் தாண்டி, நானும் வரமாட்டேன், நீங்களும் வரக்கூடாது. "Comments-reply" ஆகத்தான் இருக்கனும்... வர்ர்ட்டா???