Friday, June 28, 2013

மாயக் கண்ணாடி


கண்ணாடியில்
தெரியும் தன் பிம்பத்தை,
'தான்'தான் அதுவென்று
தெரியும்முன், கைவைத்தவாறு முத்தமிட்டும்,
தெரிந்தபின், சிரித்துக் கொண்டே
வெட்கத்தோடு தன் பெயரைச்
சொல்லும் அக்
குழந்தையோடு நானும்
குழந்தையாய் மாறிப்போவதன் மாயம் என்ன?

Wednesday, June 26, 2013

கருத்தம்மா


பொத்தி பொத்தி
வளர்த்தவர்கள் பலர்,
பொத்தி பொத்தி
வளர்பவள் நீ...

உன்
நாணம் கலைக்க,
உன்னைச்
'சுற்றியவனைச் சுற்றுகிறாய்',
காலை முதல் மாலைவரை
நாணம் கலைந்தபின் நீ ...

பக(ல்+அ)வன் வழி
பழகுபவள் நீ,
பக(ல்+அ)வன் வழி
தொடர்பவள் நீ...
அவன் செல்லும்
திசையையே,
திண்ணமாய் உன்
எண்ணமாய் கொண்டவள் நீ...

பூப்பெய்தியதும் நாணம்
கொள்பவர்கள் மத்தியில்,
மூப்பெய்தியதியபின் நாணம் கொள்பவள் நீ...

மஞ்சள் நிறத்தவனுக்காக
மஞ்சள் நிறத்திலேயே
மகுடம் சூடிக் கொள்பவள் நீ...

அவன் முகம் பார்த்து,
அவன் பார்த்து வளர்பவரெல்லாம்
கருத்திட,
அவனைப் பாராததால்
கருத்திடும்
கருத்தம்மா நீ...சூரிய காந்தி!!!

Monday, June 24, 2013

நினைவாணிகள் - பாகம் பத்து


மழைக்காலம்

நம்முடைய பழைய நினைவுகளை நினைவூட்டுவதில் இசைக்கு எப்படி முக்கியமான பங்கு உள்ளதோ அதைவிட சற்று அதிகமாகவே நாம் சுவாசிக்கும் 'வாசதிற்கு' உண்டென்பதில் திடமான நம்பிக்கை கொண்டவன் நான். உதாரணத்திற்கு எங்கோ எவரோ வைக்கும் சாம்பாரின் மணம் என் அம்மாவின் சமையலை நினைவூட்டுவதாகட்டும், சில நேரங்களில் என் நாசியில் ஏறி என் மனதைத் தொடும் அந்த மல்லிகையின் வாசனையானது அன்றொரு நாள் எங்கள் வீட்டுத் தெருவில் சைக்கிளில் 'உதிரி மல்லி, உதிரி மல்லி' என்று கூவி கொண்டு வந்த அந்த வயதானவரையும் அவரிடம் நானும் என் அக்காவும் கையில் முறத்தினைக் கையில் வைத்திருக்க அதில் அந்தப் பெரியவர் அவர் வைத்திருக்கும் தராசில் அளந்து முறத்தில் கொட்டும்போது நுகரப்பட்ட வாசனையினை நினைவுபடுத்துவதாகட்டும். அவ்வப்போது இப்படியொரு நினைவூட்டல் இல்லையென்றாலும் எப்பொழுதாவது உண்டு அப்படியொரு நினைவூட்டலுக்கான பதிவுதான் இது.



அதுவொரு மழைக்கால மாலை நேர ஞாயிற்றுக்கிழமை. காலை முதல் மெதுமெதுவாய் தூரித் தாலாட்டிக் கொண்டிருந்த மழை, மாலையானதும் என்ன நினைத்ததோ தெரியவில்லை, கொட்டோ கொட்டென்று கொட்டத் தொடங்கியிருந்தது. எனக்குத் தெரிந்தவரை மழைக்கு இடி வருகிறதோ இல்லையோ மின்வெட்டு மட்டும் கண்டிப்பாக வந்து விடும், அன்றும் அப்படித்தான். அப்படிப்பட்ட அன்றைய மாலை நேரத்தில் ஆறு மணிக்கெல்லாம் இருள் கவ்வியிருந்தது, வீட்டில் என் அம்மாவும் மண்ணெண்ணை விளக்கினை ஏற்றிவைத்துவிட்டு அடுக்களைக்குள் சென்று விட்டார். நான், என் அண்ணன், அக்கா, தங்கை என அனைவரும் வாசலில் இடித்துக் கொண்டு மழையினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அவ்வப்போது யாரேனும் சென்று வெளியில் ஓடு வழியாக வழிந்து கொண்டிருக்கும் தண்ணீரைப் பிடிப்பதற்காக குடத்தை வைத்துவிட்டு வருவோம். சற்று நேரத்திற்கெல்லாம் எங்கள் அம்மா, சூடாக அரிசியினை வறுத்தெடுத்து அதை முறத்தில் வைத்து கொண்டு வந்தார். இளஞ்சூடாக இருந்த அதை அந்த நேர்த்தில் அந்த மழைப் பொழுதில் உண்ண அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். கையில் நொறுக்குத்தீனியுடன் வாசலில் பரப்பியிருகும் மூன்று சாக்குப் பைகளின்மீது கததப்பாக அமர்ந்து கொண்டு மீண்டும் அந்த மழையினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

வெளியிலிருந்து வரும் குளிர் காற்றை ரசிக்க வேண்டுமென்றால்,அதற்கு கதகதப்பாக நம்மை வைத்துக் கொண்டால் மட்டுமே முடியும் என்பதால் பெரிய போர்வைக்குள் சுருண்டு அமர்ந்திருந்தோம்.



இந்த நேரத்தில் ஒரு இசை கச்சேரியும் நடக்கும், அது எதுவெனில்,

மழை வீட்டின் ஓடுகளின் மீது பட்டு, கடம்போல் ஒலிக்க, பக்க்த்து வீடுகளில் அவ்வப்போது கேட்கும் பாத்திரம் உருட்டும் ஒலி மேளமாகவும் இடி ஒரு தாளமாகவும் அமைந்து ஒரு இசைக் கச்சேரியே நடக்கும். இதற்கெல்லாம் ஒத்து ஊதுவது போல, வாயில் மெல்லும் அரிசியின் ஓசை இருக்கும்.
அப்படி வாயசைந்த நேரம் அசந்து போகும்போது, அந்த மழைச் சாரலின் இசை ஒத்திற்கு மாற்றாகிவிடும். இந்த நேரத்திற்கெல்லாம் வாயிலிருந்த அரிசி காலியாகிவிடவே, தம்ப்ளரை எடுத்து ஓடுகளின் வழியாக ஓடி வரும் நீரைப் பிடித்துக் குடிக்க தாகம் சற்றென்று அடங்கும். நேரம் ஏறக்குறைய எட்டைத் தொட்டுவிடவே, மீண்டும் எனது அம்மா இரவு உணவை தயார் செய்ய அடுக்களைக்குள் சென்றுவிட்டார் இதை அடுப்படியிலிருந்து வரும் மதியம் செய்த வெந்தயக் குழம்பு உறுதி செய்தது, ஆமாம் அவர் அதை சூடுபடுத்திக் கொண்டிருந்தார்.

"யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே" என்பதுபோல, 'வாசம் வரும் முன்னே, வாசத்தின் அசல் வரும் பின்னே' என்பது உணவிற்கு நான் வைத்த புதுமொழி.
குழம்பினை இறக்கிவைத்து விட்டு வீட்டிலிருந்த சீனி அவரைக்காய் வற்றலை (சென்னையில் இதன் பெயர் கொத்தவரங்காய்) வறுத்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து தட்டில் சோற்றைப் போட்டு, ஊறுகாய் மற்றும் சீனி அவரைக்காயினைத் தொட்டுக் கொள்ள எடுத்து வந்தார். அன்று எனக்கு சாப்பிட ரொம்ப சோம்பேறியாக(?!) இருந்தது. எனவே அம்மாவிடம், தட்டு முழுதும் உருண்டை பிடித்துத் தரச் சொன்னேன். ஏன் ஊட்டிவிடச் சொல்லவில்லையென்றால், நான் என் சவுரியத்திற்கு உக்கார்ந்து கொண்டு சாப்பிட முடியும், அதற்காகத்தான். அவரும் தட்டு முழுதும் உருண்டை பிடித்துத் தர, நான் அதை வாங்கிக் கொண்டு கட்டில்மீதேறி உக்கார்ந்து கொண்டு, முதுகுக்கு வசதியாக தலையணையினை அண்டக் கொடுத்துவிட்டு (கிட்டத்தட்ட படுத்துக் கொண்டு) ஒவ்வொன்றாக லபக்கிக் கொண்டிருந்தேன்.

உண்ட மயக்கம்தான் உண்டு, ஆனால் அன்றைக்கு உண்ண உண்ண மயக்கம், காரணம் அந்த சுவையான சாப்பாடும், அந்த அற்புதமான பருவ நிலையும்தான்.
 சாப்பிட்டு முடிக்கும்போதே சொல்லிவிட்டேன் எனக்கு பால் வேண்டாமென்று. (இன்னிக்கு தப்பிச்சாச்சுடா சாமி என்று எனக்குள்ளே சொல்லி கொண்டேன்). வழக்கம்போல் அம்மாவும் அப்பாவுக்காக சாப்பிடாமல் காத்திருந்தார்.

சிறிது நேரம் கழித்து படுப்பதற்கு பாய் விரிப்பதற்கும், பக்கத்து ஊரில் மளிகைக் கடை வைத்திருக்கும் எங்கள் அப்பா கடையினை அடைத்துவிட்டு வருவதற்கும் சரியாக இருந்தது. கடையடைத்துவிட்டு என் தாத்தாவும் அப்பாவும் தனித் தனி சைக்கிளில் வருவார்கள். என்னதான் மழை பெய்தாலும் மெதுவாகத்தான் வருவார்கள்.அந்த அடை மழையிலிருந்து நனையாதிருக்க என் அப்பாவும் என் தத்தாவும் பயன்படுத்துவதென்னவோ சாக்குதான் (கோணிப் பை). அதுதான் சைக்கிளில் வரும்போது வசதியாக இருக்கும். அப்பா, வந்ததும் எல்லோரையும் சாப்பிட்டீங்களா என்பார்.


என்னயும் என் அண்ணனையும் "என்னய்யா? சாப்பிட்டீங்களா?" என்பார். நாங்களும் அதற்கு "...ம்ம்ம்.." என்று மட்டும் சொல்லிவிட்டு போர்வைக்குள் ஐக்கியமாகிவிடுவோம். அ நேகமாக என் தங்கையும் அ ந் நேரத்திற்கு தூங்கி இருப்பாள். நாங்கள் சொன்னாலும், என் அம்மாவிடம் மீண்டும் கேட்பார் "என்னத்தா? தம்பிங்க சாப்பிட்டாய்ங்களா?" என் தங்கையினை "அம்மா சாப்பிட்டாளா?" என்று கேட்பார். அதற்கு எங்கள் அம்மா 'ஆம்' என்று பதில் சொன்னால்தான் கேட்பதை நிறுத்துவார். வெளியில் என்னவோ மழை கொட்டிக் கொண்டுதான் இருந்தது, ஆனால், உள்ளே, இங்கே என் பெற்றோர் கொட்டும் பாச மழைக்கு ஈடு இணையேது...

முடிந்தால், மீண்டும் மழையோடு வருவேன்,பிடித்தால் என்னோடு சேர்ந்து நனையுங்கள், இல்லையென்றால் குடையோடு காத்திருங்கள்...

--- "நினைவாணிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் நினைவுகள் தொடரும்"

Friday, June 21, 2013

மனதோடு மழைக்காலம்-I


இன்று பள்ளிக்கூடம்
இருக்காது என்று என்னதான்
அம்மா சொன்னாலும்,
அடம்பிடித்து
அண்ணனும் நானும் சைக்கிளில்
ஒரு குடையில் இருவர் சென்று,
அந்த அறிவிப்புப் பலகையினைப்
பார்த்து திரும்பிய அந்தவொரு மழைக்காலம்...

குடையுடன் நனையும்
காளான்போல் நனைந்து கொண்டே
வீடு திரும்புகையில்,
சாலையின் குழியில்
வேண்டுமென்றே
வேகமாய் செல்லும்போது,
தெரித்துவிழும் அந்த மழை
தேங்கிய தண்ணீர்,
இன்னும் என் நெஞ்ச்சோடு
தேங்கித்தான் கிடக்கிறது...

இரவு முழுதும்
கொட்டிய மழையை,
கொட்டித் தீர்ப்பதென்னவோ
விடுமுறைவிட்ட பின்புதான்,
மழைக்குப் பூக்கும் காளான்போல்,
மழை நிற்க
மனம்
காத்து காத்துப்
பூத்துப்போனதொரு காலம்...

ஓடுவழி வழியும்
நீர் சொட்ட,
கொட்டும் மழைக்குப்
பிடிக்கும் குடையை-இந்தச் சொட்டும்
நீருக்குப் பிடித்ததொரு காலம்...

அவ்வப்போது
அடுப்பின் அருகில் சென்று குளிர்காய்ந்துவிட்டு,
மழைக்கால வரவான,
முறுக்கினை-பெரிய தகரப்
பெட்டியிலிருந்து எடுத்து உண்ணும்போது,
வாயில் எழுந்த
இடி சப்தம்
இன்னும் என் காதுகளில்
ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது...

மழை முடிந்து
மழை தள்ளாடி விழும்போது,
துள்ளிக் குதித்தோடி,
தொடர் மழையைத்
தொடர்ந்து,
ஓடிவரும் ஓடையில்
குச்சிகளையும், இலைதளையும்
வீசியெறிந்து
விளையாடி மகிழ்ந்த காலங்கள் என
இன்னும் என் மனதோடு
தூரிக் கொண்டுதான் இருகின்றன...

அதுவொரு அடை மழைக்காலமெனில், இது
மனதோடு அடைபட்ட மழைக்காலம்,
மனதோடு மழைக்காலம்...!!!

Wednesday, June 19, 2013

என்னோடு பயணியுங்கள்...

எங்களது ஊரில் இருக்கும் சில கோயில்களில் ஒரு சாமிக்கு மட்டும் இரண்டாண்டுகளுக்கொருமுறை திருவிழா எடுப்பது வழக்கம். இந்தமுறை அதற்காக ஊருக்குச் சென்று இருந்தேன். இந்தத் திருவிழாவனது எங்களது ஊரிலேயே வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரு கோவில் திருவிழாவாகும். கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு நடக்கும். கடைசி இரண்டு நாள் கொண்டாட்டத்துக்காக சென்று இருந்தேன். வெளியூருக்குச் சென்று வேலைபார்க்கும் பலரும் ஊருக்குத் திரும்பி இருந்ததைக் காண்கையில் மகிழ்ச்சியாக இருந்தது. பலரும் பல நாள்களுக்குப் பிறகு சந்திப்பதால் ஒருவரையொருவர் குசலம் விசாரித்துக் கொண்டோம்.



வழக்கமாக இருக்கும் மேள தாளங்களோடு இந்த வருடம் 28000 ருபாய் செலவழித்து செண்டை மேளமென்னும் கேரள வரத்தும் இருந்தது. ஊரெல்லாம் இதே பேச்சுத்தான், "என்னப்பா இது, செண்டை மேளம்னு சொல்லிபோனா, நல்லாவே இல்லைன்னு". அதாவது எங்களது ஊரில் ஒரு வழக்கம் உண்டு, மேள தாளங்களானது எங்களது ஊரின் மடத்திற்கு அருகில் இரவு ஒன்றிரண்டு மணிவரை கச்சேரி நடக்கும். அனைவரும்கூடி நின்று ரசித்து,லயித்துப் பார்ப்பது வழக்கம். அப்படிப் பார்க்கையில்தான் இந்தப் புலம்பல்.ஆனால் ஊரிலிருக்கும் பெரியவர் ஒருவர் சொன்னார் "மாட்டை விரட்டித் திரிஞ்ச நம்ம பயலுகளுக்கு நம்ம ஊரு கொட்டு(மேளம்)த்தான் சரி, அதை விட்டுட்டு திடு திப்புன்னு செண்டை மேளம், கொண்டை மேளம்னு சொன்னா புடிக்குமா? இன்னும் ரெண்டு மூனு வருசம் போச்சுன்னா பழகிடுவாங்க" என்றார். எனக்கும் அதுதான் சரிதான் என்று பட்டது. நாமெல்லாம் பேசிப்பேசியே பழகியவர்கள், நாம் ரசித்த கலைவாணரும், பாலய்யாவையும், கவுண்டமணியும் விடுத்து திடுதிப்புன்னு "சார்ளி-சாப்ளின்" பார்க்கச் சொன்னால் நமக்கு உடனே பிடிக்குமா என்ன?


பின்பு இரண்டு நாட்கள் முடிந்து, திரும்பவும் சென்னைக்குத் திரும்பும்போது வழக்கம்போல மனது கணக்கத்தான் செய்தது. ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்தேன், "Train"-இல் டிக்கெட் இல்லாததால் இந்த முறை பேருந்தில் பயணிக்க வேண்டியதாகிவிட்டது. மதுரையில் எனக்கு 11.30 மணிக்குத்தான் பேருந்து. எங்கள் ஊரில் இருந்து 8 மணிக்கு கிளம்பினாலே மதுரை-பெரியார் பேருந்து நிலையத்தை குறித்த நேரத்தில் அடைந்து விடலாம். இருந்தாலும் மதுரையில் இருக்கும் என் நண்பன் கார்த்திகேயனைச் சந்தித்துவிட்டுப் போகலாமென்று முடிவெடுத்து ஆறு மணிக்கெல்லாம் ஊரிலிருந்து பேருந்தில் பயணப்பட்டேன். நம்ம ஊரு தனியார் பேருந்தைப் பற்றிச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? சும்மா ‘ஜிகு ஜிகு’ன்னு விளக்குகளைப் போட்டுக் கொண்டு, உள்ளே அதிக ஒலியுடன் பாடல்களைப் போட்டுக் கொண்டு செல்வார்கள். அன்றும் அப்படித்தான். ஆரம்பித்திலேயே "ஊருவிட்டு ஊரு வந்து, காதல் கீதல் பண்ணாதீங்க..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. "அட என்னப்பா, யாரைச் சொல்றீங்க? நல்லாத்தான போகுது, இது எங்க ஊருப்பா… ஆகா, ஆகா.. இதோ உக்காந்துட்டேன்... போடுங்கப்பா பாட்டை" என்று தயார்படுத்திக் கொண்டேன் என்னை, அடுத்து ஒலிக்கவிருக்கும் ஒரு மணி நேர பாடல்களைக் கேட்க... அன்றைக்கு அருப்புக்கோட்டை செல்லும்வரை, இளையராஜா பாடலகளைப் போட்டு கொளுத்திவிட்டார்கள். ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.

"செவிக்கு உண்வில்லாதபோது சிறிதளவு உணவு வயிற்றுக்கும் ஈயப்படுமாம்". சரியென்று, அருப்புக்கோட்டை வந்திறங்கியதும் வழக்கமாக இளனீர் சாப்பிடும் கடைக்குச் சென்று இளனீர் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், அப்போது நடுத்தர வயதுள்ள ஒரு பெண் வந்தார், அவரும் ஒரு இளனீர் என்றார். கடைக்காரர் கடையில் இருக்கும் இன்னொரு பையனிடம் " டேய், அக்காவுக்கு சீனித்தண்ணியில விளைஞ்ச இளனியா பார்த்து கொடு, இல்லைன்னா, தண்ணி உப்பா இருக்குன்னு சொல்லுவாங்க" என்றார். "சரிதான், ஆக இந்த அம்மையார், ஏற்கனவே இங்கு ஒருமுறை உவர்ப்பாக இருப்பதாக சொல்லியிருக்கிறார். நமமாளுங்க நக்கலுக்கு ஈடு இணை இல்லப்பா " என்று எனக்குள் சொல்லிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து மதுரைப் பேருந்தில் ஏறிக் கொண்டு மதுரைப் பயணப்பட்டேன்.




மண்டேலா நகரில் இறங்கி பெரியார் செல்லும் பேருந்தில் ஏறி, வில்லாபுரத்தில் இறங்கிக் கொண்டேன். இறங்கியதும் அங்கு காத்திருந்த நண்பனும் நானும் அருகிலிருக்கும் டீக்கடைக்குச் சென்றோம். அந்தக் கடையினைப் பார்த்தால் நமக்கே ஒரு ஆசைவரும், அப்படி ஒரு கடை வைக்க வேண்டுமென்று. அவ்வளவு நேர்த்தியாக அழகாக,சுத்தமாக இருந்தது. சுடு தண்ணீரில் கண்ணாடித் தம்ளர்களைக் கழுவி பின்னர் அதில் டீ போட்டு தருவார்கள். தரும் முன்பு அந்த தம்ளரின் அடிப்பாகத்தை ஒரு சிறிய தண்ணீர் உள்ள வாயன்ற பாத்திரத்தில் வைத்துத் தந்தார்கள். மேலும் கடைக்கு வெளியில் சில மரப் பலகைகளை வைத்து இருப்பார்கள், அதில், தம்ப்ளர் செல்லும் அளவிற்கு சிறிய ஓட்டையும் இருக்கும். அதில்தான் நாம் அந்த தம்ப்ளர்களை வைப்போம். எனவே, அது கீழே விழும் வாய்ப்பும் இல்லை. டீயும் அருமை... மதுரையில் பெரும்பாலான கடைகளும் இப்படித்தான் இருக்கும்.


பின்னர் சிறிது நேர அளவளாவலுக்குப் பிறகு, இருவரும் அங்கிருந்து 10.30 மணியளவில் பெரியார் சென்றோம். நேராக கோனார் கடைக்கு முன்பாக வண்டியினை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றோம். இம்முறை நேரம் கடந்துவிட்டதால் "AC" அறைக்குப் போகச் சொன்னார்கள். சரியென்று மேலே சென்றால், அத்தனை மணிக்குக் கூட அவ்வளவுபேர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். "அடப்பாவிகளா?" இது எதுக்குன்னா, நமக்கு இருக்குமா? என்றுதான். அமர்ந்ததும், ஒரு பையன் வர, அவசரமாக "தம்பி, கறி தோசை இருக்க?" என்றேன். அவன் “இருக்குண்ணே” என்றதும், இரண்டு என்று சொல்லிவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டேன் "அப்பாடா" என்று.




கொஞ்சம் மாவில் ஊத்தாபம் இடுவதுபோல ஒரு வட்டமிட்டு, அதன்மீது ஒரு முட்டை யினை உடைத்து ஊற்றி, அது வெந்து கொண்டிருக்கும் சமயத்தில், அதன் அருகிலேயே மட்டன் சுக்கா செய்து, அந்த தோசையின்மீது அந்தச் சுக்காவினைப் பரப்பி அப்படியே வேகவைத்து எடுத்து வந்ததுதான் தாமதம் என் வயிற்றுக்குள் சென்றுவிட்டது. நாக்கிற்கு பிறவிப் பயனை அடிந்துவிட்டதுபோல அப்படி ஒரு சந்தோசம். நிறைந்த வயிற்றுடன் மட்டுமல்ல, நிறைந்த மனதுடனும் காசைக் கொடுத்துவிட்டு, தனியார் பேருந்து நிற்குமிடத்துச் சென்றோம், சரி இன்னும் கால் மணி நேரம் இருக்கிறதே என்று மீண்டும் ஒரு டீ சாப்பிடலாம் என்று பெரியார் நிலையத்தின் எதிரில் இருக்கும் 24 மணி நேர பால் சேவை கடைக்குச் சென்றோம்.


எனக்குத் தெரிந்தவரை அந்தக் கடையானது 24 மணி நேரமும் திறந்து இருக்கும். இதில் இன்னொரு விசயம் என்னவென்றால், சரியாக 11 மணி அளவில் கடைக்கு வெளியில், பெரிய வாயன்ற கடாயில் பாலினை ஊற்றி மசாலா பால் தயார் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஆக, அந்தக் கடையினைப் பொறுத்தவரை அந்த நேரம்தான் அவர்களுக்கு அன்றைய ஆரம்பமா, அல்லது அந்தாதியா? இன்றுவரை என்க்கு விடை தெரியவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம், மதுரை - தூங்கா நகர் என்பதில் எள்ளளவும் எனக்கு ஐயமில்லை.


அருமையான காபியினைக் குடித்து முடிப்பதற்கும் பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது.