நமது தமிழ் நாட்டில் சமீபத்தில் எழுப்பப்பட்ட தன்மானப்பிரச்சனைகளில் ஒன்றான வேட்டி கலாச்சரத்திற்கு சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம். அதாவது, நமக்கு நாமே அங்கீகாரம் தேடிக்கொள்ளும் அவல நிலையில் நம்முடைய நிலைமை இருக்கிறது. வெகு நாட்களாகவே இதனை பற்றி ஏதாவதொரு பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் உதித்த பதிவு இது.
முதலில் தமிழர்களாகிய நாமே நம்முடைய கலாச்சாரம், பண்பாடு என எதையும் நினைத்துப் பார்ப்பது கிடையாது. நம்மை நாமே கிண்டல் செய்வதுதான் அதிகம், குறிப்பாக, இறை வழிப்பாட்டைப் பற்றியும், உடை அலங்காரம் பற்றியும், பொது இடங்களில் தமிழில் பேசுவது கூட இதில் அடங்கும்.
அடுத்த முறை உங்களுக்கு வட மாநிலத்திலிருந்து, போன் வந்தால் அதில் பேசுபவர் எந்த மொழியில் பேசுகிறார் என்று கவனித்துப் பாருங்கள். அவர் முதலில் இந்தியில்தான் பேச ஆரம்பிப்பார். பின்னர் நாம் அவரிடம் "Comfortable in English" என்று சொன்னால் மட்டுமே அவர் ஆங்கிலத்திற்கு தாவுவார். இதை ஏன் சொல்கிறேன் என்றால், நமது தமிழ் நாட்டிலிருந்து வரும் அழைப்புகள் அனைத்தும் (Marketing Calls) எடுத்த எடுப்பிலேயே ஆங்கிலத்தில் ஒரு நிமிடம் பட படவென்று பேச ஆரம்பிப்பார்கள். நாம் தமிழில் பதில் சொன்ன பிறகும்கூட சிலர் ஆங்கிலத்திலேயே தொடர்வார்கள்.
இப்படி தொலைபேசி உரையாடல் என்று மட்டும் அல்ல, "தமிழ் தொலைக்காட்சிகள்" என்று பெயரளவில் தமிழைத் தாங்கி நிற்கும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், பலரும் பேசுவது ஆங்கிலம்தான். இதில் விதி விலக்கு என்று பார்த்தால் அது "மக்கள்" தொலைக்காட்சி மட்டுமே. முற்றிலும் மாற்று மொழி கலப்பில்லாது தமிழ் பேசும் ஒரு தொலைக்காட்சி. இந்த வரிசையில் அடுத்து நமது கவனத்தை ஈர்ப்பவை, இப்போது சமீப காலங்களாக தமிழ் பேச ஆரம்பித்திருக்கும் சில ஆங்கிலத் தொலைக்காட்சிகள். இவை தமிழில் ஒளிபரப்ப ஆரம்பித்த பிறகு இதற்கான வாசகர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது. இந்தத் தொலைக்காட்சிகளின் பெரும்பாலான நிகழ்ச்சிகளை உற்று நோக்கினால் அதில், நாம் பேச மறந்த (மறுத்த) பல அழகிய தமிழ் சொற்களைப் பயன்படுத்தி இருப்பார்கள். அவற்றில் ஒரு சில,
"அந்த மலையின்
விளிம்பில் இருக்கும் அந்த இடத்திற்குச் சென்றால், நமக்கு ஏதாவது கிடைக்கும்".
"
காலணிகளைக் கலற்றிவிட்டு என்னால் நடக்க முடியவில்லை"
சில நிகழ்ச்சிகளில் எதுகை மோனையில் உரை நடையினை மிகப் பிரமாதமாக அமைத்து இருப்பார்கள்.
"இந்த பிரேசிலின் கடற்கரைக் காட்சி ஒரு
சித்திரம், இங்கு நாம் வந்தது
சரித்திரம்".
"வீட்டில் மனைவி கரித்துக் கொட்டினால், இந்த இடத்திற்கு வந்து பழங்களை பறித்துக் கொட்டிக்கலாம்"
சரி இதையெல்லாம்கூட விட்டுவிடலாம். இவர்கள் தமிழ் நிகழ்ச்சிகளின்போது, இடையிடையேதான் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என்று. ஆனால், உலகமயமாக்கலில், நமது தமிழகத்தில் பல கடைகளைத் திறந்திருக்கும் அந்நிய கடைகளில் பெரும்பாலும் பணியமர்த்தப்பட்டு இருப்பவர்கள் தமிழ் பேசாதோர்தான் (அறியாதோர்). அந்தக் கடைகளுக்குச் செல்ல வேண்டுமென்றால் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். இது என்ன கொடுமை? அவர்கள் வந்திருப்பது நமது இடத்திற்கு, கடை வைத்திருப்பது நமது இடத்தில், வியாபாரம் செய்வது நம்மிடத்தில். ஆனாலும் அவர்களுக்குத் தமிழ் மொழி தெரிந்திருக்க அவசியமில்லை, வாங்கச் செல்லும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டுமா? இங்கிருக்கும் அனைத்து அந்நிய கடைகளிலும் தமிழ் பேசும் ஒருவராவது வாடிக்கையாளரைக் கவனிப்பதற்கு பணியமர்த்தப்பட வேண்டும்.
பிரபல கறிக்கடைக்குச் சென்றால் அங்கு இருப்பவர் நம்மிடத்தில் கேட்பது என்ன தெரியுமா?
"Dining or Take away Sir?" என்பார்கள். ஏன்டா, சின்ன கடைகளில்கூட, பார்சலுக்கு என்று தனியாக இடம் ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள், நீங்க ஏன்டா இன்னமும் அதே இடத்துல நிக்கிறீங்கன்னு கேட்கத் தோனுது. இந்தக் கேள்விகளைக் கேட்பது யாரு தெரியுமா,
கவுண்டமணி: உன் பேரு என்ன?
செந்தில்: Sugarcane Thousand
கவுண்டமணி:?!?!
புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். இதை, அவர்களது தவறு என்று சொல்ல வரவில்லை, இவர்கள் இப்படியாகவே பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனாலும், நமது மண்ணிற்கு வந்தால், நம்மவர்களின் மொழிக்கே முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்பது எனது கருத்து. உள்ளே தமிழில் ஒரு எழுத்தைக்கூட பார்க்க முடியாத இடத்தில், ஒரு தமிழ் வார்த்தையினை எதிர்பார்ப்பது தவறுதான்போலும்.
பிற மொழிகளின் பயன்பாட்டைத் தவிர்க்க முற்படாவிட்டாலும், தமிழ் மொழியினைத் தவிர்ப்பதை தவிர்க்கலாமே.