Saturday, May 14, 2011

நினைவாணிகள் - பாகம் ஆறு



அழகர்சாமியின்
"டீ"க்கடை






என்னுடைய
தந்தையின் மளிகைக் கடயின் எதிரில் "டீ"க்கடை கடை வைத்திருந்தவரின் பெயர் "அழகர்சாமி", எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவர் அங்கு கடை வைத்திருந்தார். அவரை "சித்தப்பா" என்றுதான் நானும் என்னுடைய அண்ணனும் அழைப்போம். அப்போது அவருடைய கடையினைப் பார்ப்பதர்க்கே மிகக் குளிர்ச்சியாக இருக்கும். ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றால், அப்போதெல்லாம் அவருடைய கடையானது ஆல மரம் போலத் தோற்றம் கொண்ட, ஒரு புளிய மரத்துக்கு அடியில் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் கிளைகள் அனைத்தும் மிக அடர்த்தியாக இருந்ததால் அவ்வாறான தோற்றத்துடன் காணப்பட்டது.



அவருடைய கடையில் காலை நேரம் மட்டும் இட்லி, மசாலா மொச்சைப் பயறுகளை விற்று வந்தார். எங்களுடைய வீட்டில் என்றாவது காலை சமைக்கவில்லையென்றால் நாங்கள் நாடிச் செல்லும் கடை இவருடையதுதான். அவருடைய கடையானது என்னைப் ஒறுத்தவரை "எங்கள் ஊர் இருட்டுக் கடைதான்", ஏனென்றால் எப்போதுமே அந்தக் கடையின் உள்புறம் கொஞ்சம் இருளாகவே இருக்கும். எதிரெதிராக இரண்டு "திண்டு"களும், அவைகளுக்கு எதிராக, சாப்பிடுவதற்கு இரண்டு "மேசை"களும் போடப்பட்டு இருக்கும். அதிகபட்சமாக ஆறுபேர் அமர்ந்து சாப்பிடலாம். அவருடைய கடையில் மட்டும் குடிக்கும் தண்ணீரானது, எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். அதற்கு அந்த புளிய மரத்தைத் தவிர, தண்ணிரைச் சேகரித்து வைக்க அவர் பயன்படுத்திய மண் தொட்டிகளும் மிக முக்கியக் காரணிகள்.


திருச்செந்தூரில் - கோயிலானது, ஒரு சாய்வாக அமைந்து இருப்பதுபோல, இவருடைய கடையும் அமைந்து இருக்கும், குறிப்பாக கை கழுவும் இடம் மிகச் சாய்வாக இருக்கும். அவருடைய மனைவி, அந்தக்கடையின் ஒரு "கோடியில்" அமர்ந்து "பூ" கட்டிக்கொண்டு இருப்பார். அவர் அன்றிலிருந்து இன்றுவரை "பூ" கட்டி வியாபாரம் செய்து வருகிறார்.


அவருடைய கடையின் சிறப்பே இந்த "மசாலா மொச்சை"தான் [என்னைப் பொறுத்தவரை"]. அந்த மொச்சையானது வெளிர் மஞ்சள் நிறத்தில், கிட்டத்தட்ட "கிளிப் பச்சை" நிறத்தில் அழகாக இருக்கும். அதை இலாவகமாக அவர் எடுத்துப் பரிமாறுவதும் அழகுதான். அதாவது ஒரு பெரிய கரண்டியில், மலைபோல் குவித்து வைத்திருக்கும் அந்த "மசாலா மொச்சையினை"ச் "சுரண்டி சுரண்டி" ஒரு சிறிய இலையில் வைத்து அவர் எடுத்து வருவது அவருக்கே உரியதொறு தனி அழகு.


எனக்குத் தெரிந்தவரை அங்கு நான் சாப்பிட்டபோதெல்லாம் ஒரு இட்லியின் விலை "முக்கால் ரூபாய்" அன்ற அளவிலும், மசாலா மொச்சையின் விலையானது "மூன்று ரூபாய்" என்ற நிலையிலும் இருந்தது. நான் அங்கு சாப்பிடும் போதெல்லாம் 5 முதல் ஆறு இட்லிகள் சாப்பிடுவேன், அதனோடு ஒரு "மசாலா மொச்சையும்" சாப்பிட்டுவிடுவேன். நாங்காள் வீட்டிலிருந்து மிக விரைவாக கிளம்பிவிட்டால் எங்கள் அப்பாவிடம் பணம் வாங்கிக் கொண்டு வந்து விடுவோம், இல்லையென்றால் சாப்பிட்டு விட்டு அவரை எங்களது கடையில் வாங்கிக்கச் சொல்லி விடுவோம். ஏனென்றால் முதல் போணிக்கு கடனோ, கண்க்கோ வைப்பது இல்லை என்பதால்.


பஞ்சு போன்ற அந்த இட்லியின் மீது, அவருடைய கடைக்கே உரிய வாசனையூடன் கூடிய, அந்த சாம்பாரினை [தண்ணியாக இருக்கும்] உற்றிச் சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும். ஆனால் சத்தியமாக சொல்கிறேன் இதுவரை அவருடைய கடையினைப் போன்ற சாம்பாரைச் சுவைத்தது இல்லை. அப்படிச் சாப்பிடும்போது, சற்றே சூடு தணிந்த அந்த "மசாலா மொச்சையினை"யும் சேர்த்து சுவைத்தால் ... ஆகா என்னே ஒரு ஆனந்தம்???


அவ்வப்போது "பால் பன்"களையும் விற்பனை செய்வார். "பன்னின்"-மீது சர்க்கரைப் பாகினை ஊற்றி வைத்து இருப்பார். அதுவும் அருமையாகத்தான் இருக்கும்.


ஆனால் இன்றோ, அந்த கடை காணாமல் போய் விட்டது. அவர் நொடிந்து போய் விட்டதால் அந்தக் கடையினை அவரால் தொடர்ந்து நடத்த முடியாமல் போய் விட்டது. இப்போது அந்தக் கடை இருந்த இடம் ஒரு கொட்டகையாக மாற்றப்பட்டுவிட்டது, அந்த மரமும் இப்போது வெட்டப்பட்டுவிட்டது.


இருப்பினும் அந்த கடையின் ஞாபகங்கள் இன்னும் என் மனதில் அவருடைய கடையின் "மசாலா மொச்சையினை"ப் போல பசுமையாக இருக்கிறது....

--- "நினைவாணிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் நினைவுகள் தொடரும்"

No comments: