எப்படியோ ஒரு வழியாக, தேர்தல் முடிந்து அதன் முடிவுகளும் அறிவித்தாகிவிட்டன. வரப்போகும் புதிய அரசானது இலவசங்களை
வழங்குகிறதோ இல்லையோ கடந்த ஆட்சியினைப் போல விலைவாசியினை உயரவிடாமல், கட்டுக்குள் கொண்டு வந்தால், அதுவே மிகப்பெரிய
சாதனையென்று நான் எண்ணுகிறேன்.
இந்த சமயத்தில் எனக்கு நம் மாநிலத்திற்காகச் செய்யவேண்டியவையென்று சில எண்ணங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.
1. மிக அதிகமாக பெருகிவிட்ட மதுக்கடைகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். லாட்டரி சீட்டுக்களைத் தடை செய்த இந்த அரசு, மது விலக்கினை அமுல்படுத்தினால் மிக நன்றாகவே இருக்கும்.
2. அரசுப் பேருந்துகளில் ஆண்களுக்கும் இடம் ஒதுக்கப்பட வேண்டும், குறிப்பாக சென்னையில்.
3. சாலைகள் செம்மைப்படுத்தப்பட வேண்டும்.
4. மேம்பால ரயில் நிருத்தங்கள் செம்மைப்படுத்தப்பட வேண்டும். சுத்தமாகவும் மக்கள் அமைதியாகவும் பயணம் செய்யும் வகையில் அவை மாற்றப்பட வேண்டும். தற்போதுள்ள நிருத்தங்கள் அச்சுறுத்தும் நிலையிலும் சரியாக பராமரிப்பின்றியும் உள்ளன. இவையெல்லாம் செம்மைப்படுத்தப்பட வேன்டும்.
உதாரணமாக என்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
1. ரயில் நிறுத்தத்தின் அடித்தளம் முதல், ரயில் வந்து செல்லும் இடம்வரை கடைகளால் நிரப்ப வேண்டும், இதனால் அரசுக்கும் வருமானம் வரும். இந்தக்
கடைகளைத் தனியாரிடம் கொடுத்தால் இன்னும் செம்மையாக இருக்கலாம், சுத்தமாகவும் இருக்கும்.
2. ஒவ்வொரு நிறுத்தத்திலும் காவல் நிலையங்களை நிறுவலாம், இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பும், மக்களுக்கு பாதுகாப்பான உணர்வும் கிடைக்கும்.
3. சுத்தம் செய்வதற்கென்றே தனியாக பணியாளர்களை நியமனம் செய்யலாம், இதுவும் வேலை வாய்ப்பைப் பெருக்கும். இதையும் தனியார்மயம் ஆக்கினால் மிகச் சிறப்பாக இருக்கும்.
4. இதுபோன்ற இடங்களில் நலிவடைந்து வரும் தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். உதாரணமாக கைவினைப் பொருள் அங்காடிகளை நிறுவலாம்.
5. போக்குவரத்து வசதிகளை அதிகரிக்க வேண்டும்
6. பேருந்து நிலையஙளை ஆக்கிரமித்து குடியிருப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எல்லா பேருந்து நிலையங்களும் பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.
"காப்பீட்டுத் திட்டம்" போன்ற மக்களுக்குப் பயன்படும் திட்டங்கள் அனைத்தும், எந்தவொரு காரணத்திற்காகவும் நீக்கப்பட்டுவிடக் கூடாது. மாறாக அவை அனைத்திலும் உள்ள அரசியல் தலைவர்களின் பெயர் நீக்கப்பட்டு வெறும் திட்டங்களின் பெயர்களில் நீட்டிக்கப்பட வேண்டும்.
மின்வெட்டு நிறுத்தப்பட வேண்டும்; சென்னை மட்டுமே தமிழகம் என்ற நிலை மாற வேண்டும். தமிழ் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்னையில் கிடைக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். [ உதாரணமாக அனைத்து மாநகரஙளிலும் மின்சார ரயில் போக்குவரத்து துவக்கப்பட வேண்டும்.]
கடந்த ஆட்சியில் வரி விலக்கு செய்யப்பட்ட சினிமா தொழிலுக்கு [அதாவது தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்காம்? தமிழ் வளர்ப்பாம்]. இந்த துறையின் மூலம் அதிகமான இழப்பு அரசுக்கு என்பதால், அந்த வரி விலக்கினை உடனடியாக நீக்க வேண்டும், வேண்டுமென்றால் தமிழில் பெயர் வைக்காத திரைப்படங்களுக்கு அதிகமான வரி விதிக்கலாம்.
"பசுமைத் தாயகம் " - என்று பெயரளவில் சொல்லிக்கொள்ளாமல், அதிகமான மரங்கள் நடப்பட வேண்டும், குறிப்பாக சாலை ஓரங்களில்; தற்போதெல்லாம் வெறும் அழகுக்காக மட்டுமே மரங்கள் நடப்படுகின்றன, அதைத் தவிர்த்து சுற்றுச் சூழலுக்கு உதவும் விதமாகவும் நமக்கும் ஏற்ற வேம்பு, புளிய மரங்கள் நடப்பட வேண்டும். இதனாலும் வேலை வாய்ப்பு அளிக்கும் வாய்ப்பு உள்ளது, மேலும் அரசுக்கும் இதனால் பண வரத்து அதிகரிக்கும். அதாவது புளிய
மரங்களை ஏலத்திற்கு விடுவதன் மூலமாக அரசு பயனடைய முடியும்.
மாணவர்களுக்கு இலவசமாக தருவதாக கூறி உள்ள "மடிக் கணிணி"களை வழங்காமல், அந்த தொகையில் பள்ளியின் வசதிகளைச் செம்மைப் படுத்திக் கொள்ளலாம். படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தனித்தனி கணிணிகளைப் பயன்படுத்தும் விதமாக ஆய்வுக்கூடங்களை அமைத்துக் கொடுக்கலாம். அதாவது, அந்த வருட மாணவர்கள் மட்டுமல்லாமல் அடுத்து வருபவர்களும் இதனால் பயனடைய முடியும். மேலும் இதற்கான செலவும் மிக அதிகமாகக் குறையும். ஒருமுறை செலவு செய்தாலே மிக நீண்ட நாட்களுக்கு இவை பயனுள்ளதாக அமையும்.
விவசாயத்திற்காக இலவசமாக மின்சாரம் வழங்குவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் விலையினை அதிகரிக்கலாம். இதனால் கள்ளச் சந்தையினை ஓரளவு கட்டுப்படுத்த இயலும் என்றெண்ணுகிறென். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யும் வழக்கத்தை இதோடு நிறுத்திக் கொள்ளலாம். அவ்வாறு தவறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் நல்லது என்றெண்ணுகிறேன்.
இலவச மின்சாரம் - இதற்கு ஆகின்ற செலவினை கீழ்க்கண்ட வழிகளில் செலவிடலாம் என்பது எனது எண்ணம்...
1. விவசாயிகளுக்கெனெ ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதில் பணியிடங்களை நிரப்பலாம். உதாரணமாக "உழவு வண்டி ஓட்டுனர்", "மருந்து தெளிப்போர்" போன்றவற்றிற்கு ஆட்களை நியமித்து அவர்களை இலவசமாக விவசாயிகளுக்கு வேலை செய்து கொடுக்கச் செய்யலாம். இதனால் கிராமத்தில் உள்ளோர் பலர் பயனடைவார்கள்.
2. இயற்கை உரங்கள் பயன்படுத்துவதை அதிகரிக்க அனைத்து உரங்களையும் இலவசமாக வழங்குவதை அதிகரிக்க வேண்டும். அவ்வாறாக இயற்கை உரத்தில் விளைவிப்பதற்கு அதிகமான கொள்முதல் விலையினை அரசு வழங்கலாம்.
3. இவ்வாறாக வசதிகள் வழங்குவதால் அரசுக்கு ஏதேனும் இழப்பு ஏற்படும் என்று கருதினால், அவ்வாறாக விளையும் பயிர்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவினை, அரசு இலவசமாக விவசாயிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
சென்ற ஆட்சியின்போது தலைமீது கொட்டு வைத்து "மழை நீர் சேகரித்தது" போலவே இம்முறையும் அதை நடைமுறைப்படுத்தினால் மிக நன்றாக இருக்கும். [ நாங்கள் புதிதாக கட்டிய வீட்டில் இந்த வசதியினைச் செய்யவில்லை, ஒருவேளை முன்பே இது மிக வழுவாக கட்டாயமாக்கப்பட்டிருந்தால் நாங்கள் நிச்சயமாக செய்திருப்போம் என்றெண்ணுகிறேன்]
அடுத்ததாக "இந்தி" எதிர்ப்பு - நமது தேசிய மொழியான இந்தியினை எதிர்க்காமல் அதைக் கல்வியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எவரோ? என்றோ? எதற்காகவோ? செய்த எதிர்ப்பை (!!??) நாம் இன்னும் தொடராமல் நம் தேசிய மொழியினை கற்க ஆரம்பிக்க வேண்டும். இதுவும் வேலை வாய்ப்புகளைப் பெருக்கும், "BUDGET" கூட்டத்தொடர்களில் என்ன பேசிகிறார்கள் என்று நம்மால் புரிந்து கொள்வதற்காகவாவது இது பயனடையும்.
"தமிழ், தமிழன்" - என்று இன்னும் வெறுமென மார்தட்டிக்கொண்டு வெட்டியாகப் பேசிக்கொண்டிராமல் அதற்கான உருப்படியான வழிகளில் நம்மை நாமே ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
கடைசியாக ஒன்று "இட ஒதுக்கீடானது முற்றிலும் நீக்கப்பட வேண்டும்", அனேகமாக இதனை ஒருவரும் ஆதரிக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.
இவையெல்லாம் சிறுபிள்ளைத்தனமாகக்கூட இருக்கலாம், ஆனால் இவையெல்லாம் என்னுடைய நீண்ட நாள் ஆசைகள்.... இன்னும் நிறைய இருக்கிறது நேரம் கிடைக்கும்போது கிறுக்கிகிறேன்...
இந்த
மாற்றமாவது வழக்கத்திற்கு
மாறாக,
மாற்றம் கொண்டு வருமா??? -
மாறாமல்
ஏமாற்றமே தருமா?...
மாற்றம் - மாற்றம் தருமா?