Thursday, November 10, 2011

எழுப்பியவனே தூங்கிப்போ


"Alarm" - அணைக்கும் போதெல்லாம்...

தொட தொட மலர்ததென்ன??? - இந்தப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது



தூங்கியவனை - எழுப்பியவனைத்
தூங்க வைத்து,
எழுப்பச் செய்கிறேன்...
எழுப்பியவனே தூங்கிப்போ!!!

Wednesday, August 3, 2011

நிணைவாணிகள் - பாகம் எட்டு

வேட்டையாடு விளையாடு - "துள்ளித் திரிந்த காலம்"


துள்ளித் திரிந்த காலம் என்று எல்லோருக்கும் உண்டு. அந்த காலங்களை எண்ணும்போதெல்லாம் எண்ணிக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது. அப்போதெல்லம் விடுமுறை என்றால் நாலைந்து பேர் சேர்ந்து கொண்டு வெளியே கிளம்பி விடுவோம். அப்படிச் செல்வது இலந்தைப் பழத்திற்காகவோ, தேனுக்காகவோ, மஞ்சனித்திப் பழத்திற்காகவோ, கள்ளிப் பழத்திற்காகவோ அல்லது புளியங்கயிற்காகவோ இருக்கலாம்.

இலந்தைப் பழம்:

இலந்தை பழத்திற்காகவென்றால் ஆளுக்கொரு குச்சியினை எடுத்துச் செல்வோம், அப்பொழுதுதான் அந்தச் செடியின் அடியில் விழுந்து கிடக்கும் பழங்களை எளிதாக எடுக்க முடியும். அப்படி அவைகளைச் சேகரிக்கும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அந்தச் செடியில்தால் "செங் குளவிகள்" அதிகமாக வசிக்கும். எனவே அந்தச் செடியினை நெருங்கிய உடன், அதில் ஏதேனும் குளவி குடி கொண்டு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது மிக அவசியம். அப்படிப்பட்ட நேரங்களில் நாங்கள் கொண்டு செல்லும் குச்சிகள் பேருதவியாக இருக்கும்.

முதலில் அந்தச் செடியினை மெதுவாக அசைத்துப் பார்ப்போம், பிறகு அதன் மேல் சற்று பலமாக அடிப்போம். இப்படிச் செய்யும்போது அதில் ஏதேனும் குளவி இருந்தால் உடனே வெளிவந்து விடும். அப்படி அவை வெளிவந்தால் நாங்கள் அந்தச் செடியினை விட்டு வேறு செடிக்குப் போய் விடுவோம், இல்லையென்றால் வீணாக அவைகளிடம் மாட்டிக்கொண்டு கடிபட நேரிடும். இப்படியாக செடிகளைத் தேர்வு செய்வதில் கவனமாக இருப்போம். அப்படித் தேர்ந்தெடுத்தச் செடியினில் இருக்கும் பழத்தின் தன்மையினைப் பொறுத்து எங்களது அணுகு முறையும் மாறுபடும்.


அந்தச் செடியினில் பழுத்த, பழுக்கின்ற பழங்கள் அதிகமாக இருந்தால் அதனை உலுக்கி அதிலிருக்கும் பழங்களைப் பிரிப்பதென்பது இயலாத காரியம். ஏனென்றால் அப்படிப் பிரித்தால் அதனால் சேதம் அடைவது அந்தப் பழங்களும் அந்தச் செடியும் தான். என்வே இப்படிப்பட்ட செடிகளில் நாங்களே முனைந்து அதிலிருக்கும் பழங்களை எங்கள் கைகளால் எடுப்போம். அப்படிப் பரிக்கும்போது சில இடங்களில் முட்களின் தாக்கம் இருக்கக் கூடும், ஆனாலும் அதைத் திண்ணும் ஆசையில் அதையும் பொருட்படுத்தாமல் அதைப் பரிப்போம். அந்த காயத்தின் வடுவானது சில நாட்கள் இருந்து பின் மறைந்து விடும்.




ஒருவேளை
அந்தச் செடியினில் அதிகமாக காய்ந்த பழங்களே அதிகம் என்றால் எங்களது வேலை எளிதாக இருக்கும். அப்படிப்பட்ட செடிகளை மெதுவாக உல்லுப்பினாலே அதிலுள்ள பழங்கள் எல்லாம் உதிர்ந்துவிடும். அதன் பிறகு கீழே விழும் பழங்களை எளிதாக சேகரித்துவிடலாம்.

இப்படியாகச் சேகரிக்கும் பழங்களை இருவிதமாக உண்போம். ஒன்று அப்படியே சாப்பிடுவது, மற்றொன்று சேகரித்த பழங்களை உரலில் இட்டு நன்றாக இடிக்க வேண்டும், அதை ஓரள்வு இடித்தவுடன் அதனுடன் "வெள்ளக்கட்டி" அல்லது "சீனி" அல்லது "கருப்பட்டி" சேர்த்து மீண்டும் இடிக்க வேண்டும். நன்றாக இடித்த பிறகு எடுத்து சாப்பிடுவோம். இதன் சுவையே தனிச் சுவைதான். எனக்குப் பிடித்தது கருப்பட்டி சேர்த்து செய்வதுதான்.


மஞ்சனித்திப் பழம்:


இந்த மரங்கள் எங்களது பகுதியில் பரவலாக காணப்படும். இதன் பழச் சுவை சற்றே வித்தியாசமாக இருக்கும். ஒரு வித காரமான இனிப்புடன் சற்று புளிப்பாக இருக்கும். நாங்கள் சாம்பலில் பழுக்க வைத்த பழங்கள் இரண்டுதான். அதில் ஒன்று புளியம் பழம் மற்றொன்று மஞ்சனித்தி பழம். இந்தப் பழமும் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். ஒரு ஒளுங்கற்ற வடிவத்தில் சற்று உருண்டையாக இருக்கும். இதன் பழம் கருப்பு நிறமாகவும், காயானது பச்சையாகவும் இருக்கும்.
இது பழுத்துவிட்டால் அதன் தோலானது மிக மெருதுவாக மாறிவிடும் மேலும் அதைத் தொடும்போது சற்று வெதுவெதுப்பாகவும் இருகும். இந்தப்பழமானது மரத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டால் சித்றிவிடும். அப்படிச் சிதறும் பழங்களானது கீழே இருக்கும் கரிசல் மண் படிந்து திடமாகிவிடும். நாங்கள் அதனை எடுத்து அந்த மண்போக அதனை ஊதிவிட்டும் மீதியினைச் சாப்பிடுவோம். இதுவே எமக்கு "சுட்ட பழம்". அதுவே "சுடாத பழம்" எனில் நாங்கள் அந்த மரத்தில் ஏறிச் சென்று பறிக்க வேண்டும். அதைச் சுவைக்கும்போது சற்று வெதுவெதுப்பாக இருக்கும். மேலும் சாப்பிட்டவுடன் நாக்கின் நிறம் கருப்பாக மறிவிடும்.


புளியங் காய்:


சாதாரணமாக நாங்கள் புளியம் பழங்களை மட்டுமே சாப்பிடுவோம். பள்ளி செல்லும் நேரங்களில் கல் எறிந்து பழங்களைக் கொய்து அவற்றைச் சாப்பிடுவோம். விடுமுறை நாட்களின்போது சில நேரங்களில் புளிங்காய்களைச் சேகரிக்கக் கிளம்பிவிடுவோம். நாலைந்துபேர் சேர்ந்து கொண்டு கைகளில் "துண்டு"களைக் கொண்டு சென்று விடுவோம். ஒருவர் அல்லது இருவர் மரங்களில் ஏறி காய்களைப் பறித்து கீழே போடுவார்கள். அதனை மற்றவர்கள் சேகரித்து துண்டுகளில் வைத்துக் கொள்வோம். இவ்வாறாக சேகரித்த புளியம் பிஞ்சுகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றுவிடுவோம். அங்கு எங்கள் வீட்டில் இருக்கும் அம்மியில் வைத்து அவற்றை அரைத்துவிடுவோம். அப்படி அரைக்கும்போது தேவைக்கேற்றாற்போல சீனியினைச் சேர்த்துக் கொள்வோம். இறுதியாக அவற்றை அரைத்து ஒரு கிண்ணத்தில் வைத்து மறுபடியும் அனைவரும் கூடி நின்று சாப்பிட்டு விடுவோம். இன்னும் அந்த வாசனை நாசியினைத் துளைத்துக் கொண்டுதான் இருக்கிறது.


கள்ளிப் பழம்:


எங்கள் பகுதியில் பரவலாகக் காணப்படும் மற்றுமொரு செடி கள்ளிச் செடி. நாங்கள் அவ்வப்போது உண்ணும் பழங்களில் இதுவும் ஒன்று. இந்தப் பழங்களைப் பரிப்பதற்கும், உண்பதற்கும் சற்று பழக்கம் இருக்க வேண்டும். இல்லையென்றால் அதன் முட்களால் கொஞ்சம் அவதிப்பட வேண்டி இருக்கும். முதலில் பழங்களை அடையாளம் காண வேண்டும். அதன் பழமும் காயும் ஒரே மாதிரித்தான் இருக்கும். சற்று உற்று நோக்கிப் பார்த்தால் வித்தியாசத்தை உணரலாம். பழமாக இருந்தால் அதன் கழுத்து ஓரத்தில் சற்று சிவப்பாக இருக்கும். அப்படி பழங்களை அடையாளம் கண்டபிறகு அவற்றைப் பறிக்க வேண்டும். சில நேரங்களில் அந்தப் பழங்கள் செடியின் நடுப்புரத்தில் கைக்கு எட்டாத தூரத்தில் இருக்கக் கூடும். அப்படிப்பட்ட சமையங்களில் நாங்கள், கொண்டு வந்திருக்கும் குச்சியினால் குறி பார்த்து அதன் அடியினை வேகமாக அடித்து அந்தப் பழத்தையும் குச்சியோடு வரும்படி செய்து விடும். பெரும்பாலும் இதற்கு நாங்கள் "பனை மட்டைகளைப்" பயன்படுத்துவோம், இது எங்களது வேலைகளை எளிதாக்கிவிடும். இவ்வாறாக சேகரித்த பழங்களை சற்று சுர சுரப்பான இடத்தில் வைத்து அதைச் சுற்றியுள்ள முட்களை தரையில் உரசி நீக்கி விடுவோம். பிறகு அந்தப் பழத்தைப் பிதுக்கி அதன் ஓரத்தில் இருக்கும் நட்சத்திர வடிவ முள்ளையும் நீக்கி விடுவோம். இல்லையென்றால் அந்த முள்ளானது தொண்டையில் சிக்கிக் கொள்ளும் அபாயம் ஊண்டு. அப்படிச் சாப்பிட்ட பிறகு எங்களது நாக்கும் சற்று வெளிரிய சிவப்பு நிறத்தில் மாறிவிடும்.



தேன் வேட்டை:



தேன் வேட்டை என்பது ஒரே நாளில் முடிந்து விடுவதல்ல. அமாவாசை காலங்களில் தேனீக்கள் தேனைப் பருகிவிடும் என்பதால் அமாவாசைக்குப் பிறகு சிறிது நாட்கள் நாங்கள் தேன் எடுக்கச் செல்வது இல்லை. அப்படியே அவற்றைப் பார்த்தாலும் சிறிது நாட்கள் கழித்துத்தான் எடுப்போம். அப்படி எடுக்கும்போது ஆளுக்கொரு வேலைகளைப் பிரித்துக் கொள்வோம். தேன் எடுப்பவர் ஒருவர், அதை இழுப்பவர் இருவர், விழுந்த தேனை இழுத்துக் கொண்டு ஓடுபவர் ஒருவர் என அவரவர்க்கு ஒரு வேலை இருக்கும். முதலில் தேனை எடுப்பதற்குத் தேவையான "கத்திக் கம்பினை" எடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் சுமாரான உயரம் கொண்ட கம்புகளையே எடுத்துச் செல்வோம், நீளமாக இருந்தால் அவற்றை கையாளுவது மிகக் கடினமாக இருக்கும். தேன் அடையினை பார்த்துவிட்டல் அதை எப்படி நெருங்குவது என்று முடிவு செய்து கொண்டு அதற்கான வழிகளை செய்வோம்.


எங்கள் பகுதியில் கருவேல மரங்கள் அதிகம் என்பதால் பெரும்பாலும் அவை இந்த மரத்தில்தான் கூடு கட்டும். எனவே முள் மரம் என்பதால் அதைச் சுற்றிலும் முட்கள் அதிகமாக இருக்கும். எனவே நாங்கள் எங்கள் வசதிக்காக தேவையற்ற முட்களை வெட்டிவிடுவோம் அல்லது சுருட்டிப் பிடித்துக் கொள்வோம். இல்லையென்றால் தேனை எடுப்பது மிகக் கடினம், மேலும் தேன் குழவிகள் வருவதும் தெரியாது-போய் அவற்றிடம் கடி வாங்க நேரிடும். எனவே இவற்றை மிகக் கவனமாக கையாள்வது மிக அவசியம்.
அப்படி செய்த பிறகு தேன் அமைந்திருக்கும் கிளையினை ஆராய்ந்து அதன் கிளை நுனியில், பட்டும் படாமல் கதிக்கம்பினை வைத்துவிடுவோம். பிறகு நேரம் பார்த்து அந்தக் கிளையினை அறுத்துவிட்டு கம்பினை வேகமாக இழுத்துவிடுவோம், அப்படிச் செய்யும்போது அந்தக் கம்புடன் சேர்ந்து தேன் அடையும் வந்து விடும். சிறிது நேரத்தில் அந்த கிளையானது கம்பில் இருந்து விடுபட்டு தரையில் விழுந்து விடும். அப்போது ஒருவர் கீழே விழுந்த கிளையினை கையில் பிடித்துக் கொண்டு வேகமாக ஓடி விட வேண்டும். இப்படியாகச் செய்யும் போது அந்தத் தேனீக்களின் தாக்கத்திலிருந்து தப்பித்து விடலாம், மேலும் தேன் அடையினில் இருக்கும் தேவயற்ற பகுதியானது கீழே விழுந்து விடும், மீதமிருக்கும் தேன் மட்டும் அந்தக் கிளையினில் தங்கி விடும். பிறகு நாங்கள் அனைவரும் பங்கிட்டு அதனை உண்போம், அப்படி உண்ணும்போது கடைசியாக இருக்கும் கிளையினில் ஒட்டிக்கொண்ட தேனை உண்பதற்கு பலரும் ஆர்வம் காட்டுவது உண்டு. ஏனென்றால் அந்தக் கிளையோடு அந்தத் தேனை உண்டவருக்குத்தான் அதன் அருமை தெரியும். சில நேரங்களில் அதிகமாக தேன் கிடைத்துவிட்டல் நாங்கள் அதைச் சேகரிப்பதும் உண்டு, இப்படி தேனைச் சேகரிக்கும்போது சில சமயங்களில் தேனீக்களிடம் கடிபடுவதுண்டு. அப்படிக் கடித்து விட்டால் உடனே அது பதித்துச் செல்லும் முள்ளைப் பிடிங்கு விடுவோம், அப்படிப் பிடிங்கி விட்டால் வலியும், வீக்கமும் சிறிது நேரம்தான் இருக்கும். அப்படி அதனை பிடுங்க முடியவில்லையென்றால் சேற்றினை எடுத்து கடிபட்ட இடத்தில் பூசி கொள்வோம், இது மிக ஆறுதலாக இருக்கும். அந்த இடத்தில் சேறு கிடைக்கவில்லையென்றால் எங்களது சிறு நீரால் சேற்றை உருவாக்கி அந்த மண்ணை எடுத்துப் பூசிக்க் கொள்வோம்.

--- "நினைவாணிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் நினைவுகள் தொடரும்"

Wednesday, July 20, 2011

நினைவாணிகள் - பாகம் ஏழு



அறுவடை:




எங்கள் ஊரில் இன்று வரை வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே விவசாயம் செய்கிறோம், அதவது ஒரு முறை மட்டுமே அறுவடை நடைபெறுகிறது. எங்கள் காட்டில் வழக்கமாக நாங்கள் மிளகாய், உளுந்து ஆகியவற்றை முதன்மைப் பயிராகவும்; வெங்காயத்தை ஊடு பயிராகவும் விதைப்பது வழக்கம். இது தவிர வரப்பு ஓரங்களில் பாகற்காய், சுரைக்காய், பூசணிகாய், துவரை போன்றவைகளையும் பயிரிடுவோம்.





உளுந்தைப் பிரித்தெடுக்க பொதுவாக சாலையினையும், இதற்காகவே ஒதுக்கப்படும் களங்களையும் நாடுவது எங்களது வழக்கம்.
சாலையினை பிரதானமாக தேர்வு செய்தால் மிக அதிமாக ஒன்றும் வேலை இருக்காது, வந்து செல்லும் பேருந்துகளில் சிக்கி அவையெல்லாம் பிரிக்கப்படும். அவ்வாறு இல்லாமல் களத்தினைத் தேர்வு செய்தால் அதற்கு மூன்று சோடி மாடுகளும், அதை ஓட்ட ஆட்களும் தேவை, கிட்டத்தட்ட இரவு பகலாக இவ்வேளை நடைபெறும்.




ஆனால் மிளகாயினைப் பொறுத்தவரை இந்த முறைகளைப் பின்பற்ற இயலாது. ஆகவே பரித்த மிளகாய் பழங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் பரப்பி வைத்து அவற்றைப் பக்குவப்படுத்துவார்கள். பரிக்கப்பட்ட பழங்களானது அந்தந்த இடங்களில் சில நாட்கள் காய்ந்து கொண்டிருக்கும். அப்போது அதில் பல சோடைகளாகிப் போகும். அவ்வாறு மாறும் சோடை வற்றல்களைத் தனியாகப் பிரிக்க வேண்டும். அதற்காக பலர் அங்க் வேலை செய்வார்கள். பெரும்பாலும் இதற்கு யாரையும் கூலிக்கு அமர்த்துவது கிடையாது. அதற்குரிய குடும்பத்தவர்களே வேலை செய்வார்கள். நானும் பள்ளி முடிந்து திரும்பியவுடன் எங்களது மிளகாய் பழங்களுக்காக, மாலை சிறிது நேரம் அங்கு சென்று அவ்வாறாக வேலை செய்வதுண்டு. அப்படி வேலை செய்யும்போது ஆளுக்கொறு ஓலைப்பெட்டி [கொட்டான் என்று அழைப்போம்] கொடுத்து விடுவார்கள். அதில் சோடை வற்றலை சேகரிக்க வேண்டும். இவ்வாறாக சேகரிக்கும் வற்றல்களை தனியாக சாக்கு [கோணிப் பை] மூட்டைகளில் சேகரித்து அதையும் விற்று விடுவோம்.



அவ்வாறு காய்ந்து கொண்டிருக்கும்போது, சில சமயங்களில் மழையின் இடையூறு இருக்கக் கூடும். அது இரவாகக் கூட இருக்கலாம். அவ்வாறு இரவு நேரங்களில் செல்லும் போது, அங்கு எந்தவிதமான வெளிச்சமும் இருக்காது. அந்த இரவு நேரத்தில் கிடைக்கும் மின்னல் ஒளியினையும், கொண்டு செல்லும் சிறு விளக்கிலிருந்து வரும் ஒளியில் கிடைக்கும் ஒளியினை மட்டும் கொண்டு வேலை செய்வோம். வீட்டிலிருந்து பல கோணிப் பைகைகளை இரண்டு சைக்கிள்களில் வைத்து எடுத்து வருவோம். அதனுடன் பல சிறிய அல்லது பெரிய பெட்டிகளையும் [காய்ந்த ஓலையினால் முடையப்பட்டது] கொண்டு செல்வோம். காய்ந்து கொண்டிருக்கும் அந்த மிள்காய்களை எங்களது கைகளால் அள்ளி அணைத்து, வாரி வாரி நாங்கள் கொண்டு சென்ற பெட்டிகளில் அள்ளிப் போடுவோம். அவ்வாறு அள்ளும்போது மண் சேர்ந்திடாதவாறு பார்த்துக்கொள்வோம். அப்படி அள்ளி பெட்டியில் சேகரித்த மிளகாயினை, கொண்டு வந்திருக்கும் கோணிப் பைகளில் நிரப்புவோம்.







அப்படி நிரப்புவதற்கு இராண்டு பேர் தேவை. ஒருவர் அந்தக் கோணியினை பிடித்துக் கொள்ள வேண்டும், மற்றொருவர் அதில் கொட்ட வேண்டும். முதலில் அந்தக் கோணியின் வாய்ப் பகுதியினை நன்றாக சுருட்டிக் கொள்ள வேண்டும். பிறகு அந்தக் கோணி நிரம்ப நிரம்ப, சுருட்டிய பகுதியனை விடுவிக்க வேண்டும். அவ்வப்போது அந்தக் கோணியின் இரு பக்கமும் பிடித்துக் கொண்டு, மேலே தூக்கி தரையினில் பக்குவமாக அடிக்க வேண்டும். இவ்வாறாக செய்யும்போது அந்தக் கோணியினுள் இன்னும் கொஞ்சம் நிரப்ப முடியும். அவ்வாறு நிரம்பியவுடன் அதன் வாயினைப் பெரிய ஊசி [கோணூசி என்போம் எமது ஊரில்] மற்றும் தடித்த சணல் கொண்டு தைத்து விடுவோம். பொதுவாக இந்த வேலையினை எனது தாத்தா அல்லது எனது அப்பாதான் செய்வார்கள், நான் இதுவரை அந்த வேலையினைச் செய்தது இல்லை.அவ்வாறாக பழங்களை அள்ளும்போது அந்த மண் வசையுடன் கலந்து அதனுடன் வரும் அந்த மிளகாய் பழ வாசனை இன்னும் என் நாசியினைத் துளைத்துக் கொண்டுதான் இருக்கிறது.





இறுதியாக கட்டப்பட்ட மூட்டைகளை [சாக்கு மூட்டைகள்] சைக்கிளில் வைத்து வீட்டிற்கு கொண்டு சென்று விடுவோம். மறு நாள் மழை நின்ற பிறகு மீண்டும் அவற்றை காய வைக்கும் நிகழ்வு தொடரும்.


"காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" - என்பதைப் பார்த்து வளர்ந்தவர்களில் நானும் ஒருவன்.





சாலை குண்டும் குழியாக இருக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்ட காலங்களை எண்ணும்போது மனதில் மகிழ்ச்சி மெல்ல மேலிடுகிறது.





அன்றிலிருந்து இன்றுவரை, எங்கள் ஊரில் அறுவடைக் காலத்தில் அறுவடை செய்த கம்பு, உளுந்து, சூரியகாந்தி போன்றவற்றை சாலைமீது பரப்பி வைத்து அந்த தானியங்களைப் பிர்த்தெடுப்பார்கள். அவ்வாறாக சாலை மீது பரப்பி வைத்துவிட்டால் சலையில் செல்லும் பேருந்துகளின் சக்கரங்களில் அழுந்தி அவை எல்லாம் செடிகளில் இருந்து பிரிந்து சாலையில் விழும். இப்படி இருக்கும்போது சாலையில் குழிகள் அதிகம் இருந்தால் அதைச் சேகரிப்பது கடினம். எனவே என்னைப் போன்ற சிறுவர்களுக்கு அது ஒரு வரவேற்கத்தக்க ஒரு நிகழ்வு. ஏனென்றால் நாங்கள் அந்த குழிகளில் விழுந்த, [எஞ்சிய] தானியங்களை சேகரித்து, தூசியெல்லாம் நீக்கி அவற்றை உண்பது வழக்கம். அதற்காகவே சாலை முழுவதும் அதிக குழிகள் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்வோம்...





அறுவடை காலஙளில் இந்த ஒரு மகிழ்ச்சியென்றால், மழைக் காலங்களில் வேறுவிதமான மகிழ்ச்சி. மழை பொழிந்து சாலையில் உள்ள குழிகளில் சேரும்போது அதைக் கால்களால் சீத்தி அடிப்பது மிக மகிழ்ச்சியான ஒரு தருணம்.


இது போன்று சாலைகளில் உள்ள குழிகளை நிரப்புவதற்கு, அவ்வப்போது ஒரு வண்டியில் "தார்" உற்றிச் செல்வார்கள். முதலில் இந்த தாரானது சலையின் ஓரத்தில் உள்ள, ஏற்கனவே அதற்காகவே வெட்டப்பட்ட குழி ஒன்றில் ஊற்றப்படும். அவ்வாறு ஊற்றப்பட்ட தாரினை, சாலை சீரமைக்கும் தொழிலாளர்கள் எடுத்து தேவையான இடங்களில் ஊற்றி சாலையினைச் சரி செய்வார்கள். அப்போது, புதிதாக ஊற்றப்பட்ட தாரானது சற்று மென் தன்மையுடன் இருக்கும். அவ்வாறு இருக்கும் அதன் மீது, நாங்கள் எங்களது கை மற்றும் கால் தடங்களைப் பதிய வைப்போம்...




--- "நினைவாணிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் நினைவுகள் தொடரும்"

Sunday, June 26, 2011

தவழ்ந்திட தவழ்ந்திடு




நீ
தவழ்ந்திட,
தவழ்ந்திடும் எம்
புன்னகை....

Wednesday, June 8, 2011

கானல் ஆடை

அனல் கண்ட
பனி போல - என்
கடை விழிப் பார்வை
கண்டு மறைந்தோடும்,
உன்
நாணல் எனும்
கானல் ஆடை...!!!

Tuesday, May 24, 2011

என்றேனும் நானும் ஒரு நாள்...







இன்று நாளிதழ் ஒன்றில் எதேச்சையாக படித்த ஒன்றினை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.



படிப்பிற்கும் - செய்யும் தொழிலுக்கும்முன்பெல்லாம் எப்படிச் சொன்னார்கள் என்றால் "விவசாயி பிள்ளை விவசாயம்தான் செய்ய வேண்டும?" என்றார்கள். அது மாறித்தான் போனது ஆனால் தற்போது அதே நிலையானது சற்றே மேம்பட்டுப் போய்க்கொண்டிருக்கிறது.




இப்போதைய காலகட்டத்தில் என்ன நினைக்கிறார்கள் என்றால் "ஒரு பொறியாளரின் பிள்ளை பொறியாளனாகத்தான் ஆக வேண்டுமென்பது" போல தற்போதைய கால நிலை உள்ளது.


ஒரு நாட்டின் வளர்ச்சியானது அந்த நாட்டின் இளைஙர்களின் கையில்தான் உள்ளது. நமது முன்னாள் குடியரசுத் தலைவர் "படித்தவர்கள் ஒவ்வொருவரும், அடுத்தவர் நிறுவனத்தில் பணிபுரிவதைத் தவிர்த்து, தனியாக தொழில் தொடங்க வேண்டும் [i.e. Entrepreneurship]" சொன்னது போல அனைத்து இளைஞர்களும் சற்றே சிந்தித்துப் பார்த்தால் நன்று.


இதோ அவருடைய எண்ணத்திற்கு வண்ணம் கொடுத்தது போல கீழே காணும் செய்தித் துளிகளைப் படிக்கவும்




பெங்களூரில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிய சாப்ட்வேர் இன்ஜினியர்கள் நான்கு பேர், கர்நாடகாகிராமத்தில் பால்பண்ணை தொடங்க முடிவு செய்துள்ளனர். பெங்களூரில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் சாஷிகுமார், ரஞ்சித் முகுந்தன், வெங்கடேஷ் சேஷாசாயி மற்றும் பிரவீன் நலே ஆகிய நான்கு பேர் சாப்ட்வேர்இன்ஜினியர்களாக பணியாற்றினர். கைநிறைய சம்பளம், சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இவர்களுக்கு கம்ப்யூட்டர்தொழில் அலுத்துவிட்டது. இதனால் வேறு தொழில் செய்வது பற்றி ஆலோசித்தனர். பால்பண்ணைஆரம்பிக்கலாம், நல்ல தொழில் என்ற முடிவுக்கு வந்தனர்.




பால் பண்ணை தொழிலில் ஏற்கனவே அனுபவம் மிக்க ஜி.என்.எஸ். ரெட்டி மற்றும் பிரசன்னா ஆகியோரை சந்தித்துஆலோசனை பெற்றனர். 21 பேரை பங்குதாரர்களாக சேர்த்து "அக்ஷயாகல்ப பார்ம்ஸ் அண்ட் புட்ஸ் லிமிடெட்" என்றபால் பண்ணையை கர்நாடகாவின் ஹசன் மாவட்டம் சன்னாராயபட்டின தாலுகாவில் உள்ள கோடிஹல்லிகிராமத்தில் தொடங்க முடிவு செய்துள்ளனர். 24 ஏக்கர் நிலத்தில் ரூ.15 கோடியில் இந்த பால்பண்ணை அமையஉள்ளது.

நவீன முறையில் பசுக்கள் வளர்ப்பு, மேய்ச்சலை கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவி மற்றும் சென்சார்கள், இயந்திரங்கள் மூலம் பால் கறப்பது, மாடுகளுக்கு தொடர்ச்சியாக மருத்துவ சோதனை, பால் கறக்கும் அளவைகண்காணித்தல் போன்ற முறைகள் பின்பற்றப்படவுள்ளன. கிராம மக்கள் 500 பேருக்கு இவர்களதுபால்பண்ணையில் வேலை கிடைக்கவுள்ளது.
இது தவிர சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விவசாயிகள் சிறு சிறு பால் பண்ணைகள் நடத்தவும் ஏற்பாடுசெய்துள்ளனர்.





மாடுவாங்க கடன் ஏற்பாடு செய்து கொடுத்து, அவர்கள் கறக்கும் பாலை தரகர் இல்லாமல் நேரடியாக கொள்முதல்செய்து விற்கவும் முடிவு செய்துள்ளனர். இது குறித்து சாஷி குமார் கூறுகையில், " வேளாண் துறையில் தொழிலைதொடங்கி` கிராம வேலை வாயப்பு திட்டத்தை அதிகரித்து கிராமங்களை வளம்பெறச் செய்வதே எங்கள் நோக்கம். இதன் மூலம் படித்த வேலையில்லா இளைஞர்கள் விவசாய தொழிலை கைவிட்டு நகரங்களுக்கு செல்வதைதடுக்கலாம்" என்றார்



பி.கு: இது போன்று தொழில் தொடங்க வேண்டுமென்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை, என்றேனும் கண்டிப்பாக தொடங்குவேன்.



செய்திகள்: தினகரன் நாளிதழ்

Saturday, May 14, 2011

நினைவாணிகள் - பாகம் ஆறு



அழகர்சாமியின்
"டீ"க்கடை






என்னுடைய
தந்தையின் மளிகைக் கடயின் எதிரில் "டீ"க்கடை கடை வைத்திருந்தவரின் பெயர் "அழகர்சாமி", எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவர் அங்கு கடை வைத்திருந்தார். அவரை "சித்தப்பா" என்றுதான் நானும் என்னுடைய அண்ணனும் அழைப்போம். அப்போது அவருடைய கடையினைப் பார்ப்பதர்க்கே மிகக் குளிர்ச்சியாக இருக்கும். ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றால், அப்போதெல்லாம் அவருடைய கடையானது ஆல மரம் போலத் தோற்றம் கொண்ட, ஒரு புளிய மரத்துக்கு அடியில் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் கிளைகள் அனைத்தும் மிக அடர்த்தியாக இருந்ததால் அவ்வாறான தோற்றத்துடன் காணப்பட்டது.



அவருடைய கடையில் காலை நேரம் மட்டும் இட்லி, மசாலா மொச்சைப் பயறுகளை விற்று வந்தார். எங்களுடைய வீட்டில் என்றாவது காலை சமைக்கவில்லையென்றால் நாங்கள் நாடிச் செல்லும் கடை இவருடையதுதான். அவருடைய கடையானது என்னைப் ஒறுத்தவரை "எங்கள் ஊர் இருட்டுக் கடைதான்", ஏனென்றால் எப்போதுமே அந்தக் கடையின் உள்புறம் கொஞ்சம் இருளாகவே இருக்கும். எதிரெதிராக இரண்டு "திண்டு"களும், அவைகளுக்கு எதிராக, சாப்பிடுவதற்கு இரண்டு "மேசை"களும் போடப்பட்டு இருக்கும். அதிகபட்சமாக ஆறுபேர் அமர்ந்து சாப்பிடலாம். அவருடைய கடையில் மட்டும் குடிக்கும் தண்ணீரானது, எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். அதற்கு அந்த புளிய மரத்தைத் தவிர, தண்ணிரைச் சேகரித்து வைக்க அவர் பயன்படுத்திய மண் தொட்டிகளும் மிக முக்கியக் காரணிகள்.


திருச்செந்தூரில் - கோயிலானது, ஒரு சாய்வாக அமைந்து இருப்பதுபோல, இவருடைய கடையும் அமைந்து இருக்கும், குறிப்பாக கை கழுவும் இடம் மிகச் சாய்வாக இருக்கும். அவருடைய மனைவி, அந்தக்கடையின் ஒரு "கோடியில்" அமர்ந்து "பூ" கட்டிக்கொண்டு இருப்பார். அவர் அன்றிலிருந்து இன்றுவரை "பூ" கட்டி வியாபாரம் செய்து வருகிறார்.


அவருடைய கடையின் சிறப்பே இந்த "மசாலா மொச்சை"தான் [என்னைப் பொறுத்தவரை"]. அந்த மொச்சையானது வெளிர் மஞ்சள் நிறத்தில், கிட்டத்தட்ட "கிளிப் பச்சை" நிறத்தில் அழகாக இருக்கும். அதை இலாவகமாக அவர் எடுத்துப் பரிமாறுவதும் அழகுதான். அதாவது ஒரு பெரிய கரண்டியில், மலைபோல் குவித்து வைத்திருக்கும் அந்த "மசாலா மொச்சையினை"ச் "சுரண்டி சுரண்டி" ஒரு சிறிய இலையில் வைத்து அவர் எடுத்து வருவது அவருக்கே உரியதொறு தனி அழகு.


எனக்குத் தெரிந்தவரை அங்கு நான் சாப்பிட்டபோதெல்லாம் ஒரு இட்லியின் விலை "முக்கால் ரூபாய்" அன்ற அளவிலும், மசாலா மொச்சையின் விலையானது "மூன்று ரூபாய்" என்ற நிலையிலும் இருந்தது. நான் அங்கு சாப்பிடும் போதெல்லாம் 5 முதல் ஆறு இட்லிகள் சாப்பிடுவேன், அதனோடு ஒரு "மசாலா மொச்சையும்" சாப்பிட்டுவிடுவேன். நாங்காள் வீட்டிலிருந்து மிக விரைவாக கிளம்பிவிட்டால் எங்கள் அப்பாவிடம் பணம் வாங்கிக் கொண்டு வந்து விடுவோம், இல்லையென்றால் சாப்பிட்டு விட்டு அவரை எங்களது கடையில் வாங்கிக்கச் சொல்லி விடுவோம். ஏனென்றால் முதல் போணிக்கு கடனோ, கண்க்கோ வைப்பது இல்லை என்பதால்.


பஞ்சு போன்ற அந்த இட்லியின் மீது, அவருடைய கடைக்கே உரிய வாசனையூடன் கூடிய, அந்த சாம்பாரினை [தண்ணியாக இருக்கும்] உற்றிச் சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும். ஆனால் சத்தியமாக சொல்கிறேன் இதுவரை அவருடைய கடையினைப் போன்ற சாம்பாரைச் சுவைத்தது இல்லை. அப்படிச் சாப்பிடும்போது, சற்றே சூடு தணிந்த அந்த "மசாலா மொச்சையினை"யும் சேர்த்து சுவைத்தால் ... ஆகா என்னே ஒரு ஆனந்தம்???


அவ்வப்போது "பால் பன்"களையும் விற்பனை செய்வார். "பன்னின்"-மீது சர்க்கரைப் பாகினை ஊற்றி வைத்து இருப்பார். அதுவும் அருமையாகத்தான் இருக்கும்.


ஆனால் இன்றோ, அந்த கடை காணாமல் போய் விட்டது. அவர் நொடிந்து போய் விட்டதால் அந்தக் கடையினை அவரால் தொடர்ந்து நடத்த முடியாமல் போய் விட்டது. இப்போது அந்தக் கடை இருந்த இடம் ஒரு கொட்டகையாக மாற்றப்பட்டுவிட்டது, அந்த மரமும் இப்போது வெட்டப்பட்டுவிட்டது.


இருப்பினும் அந்த கடையின் ஞாபகங்கள் இன்னும் என் மனதில் அவருடைய கடையின் "மசாலா மொச்சையினை"ப் போல பசுமையாக இருக்கிறது....

--- "நினைவாணிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் நினைவுகள் தொடரும்"

Friday, May 13, 2011

ஏனிந்த பாரபட்சம்?





"செய்யும் தொழிலே தெய்வம்",
"தொழில் தர்மம் காப்பது கடமை" - என்றும் சொல்வார்கள்.

இவையெல்லாம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டு இருக்கிறது என்றே எண்ணுகிறேன். அன்றொரு நாள் காலை வேலை, வழக்கம்போல சென்னை சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துக்கொன்டிருந்தது. அதனுடன் நானும் இணைந்துகொண்டு வேலைக்குச் செல்ல ஆயத்தமானேன். எனது அலுவலகத்திற்கு கிண்டி வரை பேருந்தில் சென்றுவிட்டு அங்கிருந்து "Share Auto" - வில் செல்வது என் வழக்கம். அன்றும் அது போலதான் சென்றுகொண்டிருந்தேன். கிண்டியில் இறங்கி அருகில் நின்று கொண்டிருந்த "Share Auto" - வினை நோக்கிச் சென்றேன்.

ஏறும்போது வழக்கமாக நான் செல்லவிருக்கும் இடத்தை சொல்லி உறுதி செய்துகொண்டபின்புதான் ஏறுவேன். அன்றும் அவ்வாறுதான் செய்தேன், ஆனால் வழக்கத்திற்கு மாறாக அது செல்லும் கடைசி நிறுத்தத்தின் பெயரைச் சொன்னேன்.

"போரூர்?" என்று கேட்டேன்.

அதற்கு அவரோ "DLF" என்று கூறிவிட்டு அமைதியானார்.

நானும் "DLF?!" என்று கூறி ஏறிக்கொண்டேன்.


அதன்பிறகு என் மனம் அமைதி ஆகவில்லை. இந்த IT-யின் தாக்கத்தால் தெரிந்தோ தெரியாமலோ சாமானியர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்றெண்ணும்போது சற்று மனது சங்கடப்படத்தான் செய்கிறது. இங்கு இந்த நிலை இப்படி இருக்க, நான் வசிக்கும் தரமணிப் பகுதியில் வேறு விதமான தாக்கம்.


தரமணி பேருந்து நிலையத்தில் இருந்து, மத்திய கைலாசம் வரை செல்வதற்கு Share Auto- வில் வசூலிக்கப்படுவது 5 ரூபாய் மட்டுமே, அதே போலத்தான் அங்கிருந்து திரும்பி வருவதற்கும். இதில் வேடிக்கை என்னவென்றால், தரமணி பேருந்து நிறுத்தத்தில் ஏறுபவர்களுக்கு ஒரு தொகையும், அதைத் தாண்டி உள்ள "Ascendos" நிறுத்ததில் ஏறுபவர்களுக்கு ஒரு தொகையும் வசூலிக்கப்படுகிறது. அந்த குறிப்பிட்ட நிறுத்தத்தில் ஏறுபவர்களிடம் மட்டும் 2 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. [அதிலும் குறிப்பாக இளைஙர்களிடம் இருந்து].

இதில் யாருக்காக நொந்து கொள்வதென்று தெரியவில்லை.

அதிகமாக வசூல்செய்யப்படுபவர்களுக்காகவா?
அல்லது
தடம் மாறி, தரம் தாழ்ந்து, தொழில் தர்மம் தவறி வசூல் செய்பவர்களுக்காகவா?
அல்லது
இவர்களிடம் 2 ரூபாய் அதிகம் வாங்குவதற்காக வேரு எங்கும் பயணிகளை ஏற்றாமல் செல்பவர்களுக்காகவா?
அல்லது
இந்த 2 ரூபாயால் பாதிக்கப்படும் சாமானியர்களுக்காகவா???


ஏனிந்த பாரபட்சம்???...

மாற்றம் - மாற்றம் தருமா?







எப்படியோ ஒரு வழியாக, தேர்தல் முடிந்து அதன் முடிவுகளும் அறிவித்தாகிவிட்டன. வரப்போகும் புதிய அரசானது இலவசங்களை
வழங்குகிறதோ இல்லையோ கடந்த ஆட்சியினைப் போல விலைவாசியினை உயரவிடாமல், கட்டுக்குள் கொண்டு வந்தால், அதுவே மிகப்பெரிய
சாதனையென்று நான் எண்ணுகிறேன்.


இந்த சமயத்தில் எனக்கு நம் மாநிலத்திற்காகச் செய்யவேண்டியவையென்று சில எண்ணங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

1. மிக அதிகமாக பெருகிவிட்ட மதுக்கடைகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். லாட்டரி சீட்டுக்களைத் தடை செய்த இந்த அரசு, மது விலக்கினை அமுல்படுத்தினால் மிக நன்றாகவே இருக்கும்.

2. அரசுப் பேருந்துகளில் ஆண்களுக்கும் இடம் ஒதுக்கப்பட வேண்டும், குறிப்பாக சென்னையில்.

3. சாலைகள் செம்மைப்படுத்தப்பட வேண்டும்.

4. மேம்பால ரயில் நிருத்தங்கள் செம்மைப்படுத்தப்பட வேண்டும். சுத்தமாகவும் மக்கள் அமைதியாகவும் பயணம் செய்யும் வகையில் அவை மாற்றப்பட வேண்டும். தற்போதுள்ள நிருத்தங்கள் அச்சுறுத்தும் நிலையிலும் சரியாக பராமரிப்பின்றியும் உள்ளன. இவையெல்லாம் செம்மைப்படுத்தப்பட வேன்டும்.


உதாரணமாக என்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

1. ரயில் நிறுத்தத்தின் அடித்தளம் முதல், ரயில் வந்து செல்லும் இடம்வரை கடைகளால் நிரப்ப வேண்டும், இதனால் அரசுக்கும் வருமானம் வரும். இந்தக்
கடைகளைத் தனியாரிடம் கொடுத்தால் இன்னும் செம்மையாக இருக்கலாம், சுத்தமாகவும் இருக்கும்.

2. ஒவ்வொரு நிறுத்தத்திலும் காவல் நிலையங்களை நிறுவலாம், இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பும், மக்களுக்கு பாதுகாப்பான உணர்வும் கிடைக்கும்.

3. சுத்தம் செய்வதற்கென்றே தனியாக பணியாளர்களை நியமனம் செய்யலாம், இதுவும் வேலை வாய்ப்பைப் பெருக்கும். இதையும் தனியார்மயம் ஆக்கினால் மிகச் சிறப்பாக இருக்கும்.

4. இதுபோன்ற இடங்களில் நலிவடைந்து வரும் தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். உதாரணமாக கைவினைப் பொருள் அங்காடிகளை நிறுவலாம்.

5. போக்குவரத்து வசதிகளை அதிகரிக்க வேண்டும்

6. பேருந்து நிலையஙளை ஆக்கிரமித்து குடியிருப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எல்லா பேருந்து நிலையங்களும் பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.

"காப்பீட்டுத் திட்டம்" போன்ற மக்களுக்குப் பயன்படும் திட்டங்கள் அனைத்தும், எந்தவொரு காரணத்திற்காகவும் நீக்கப்பட்டுவிடக் கூடாது. மாறாக அவை அனைத்திலும் உள்ள அரசியல் தலைவர்களின் பெயர் நீக்கப்பட்டு வெறும் திட்டங்களின் பெயர்களில் நீட்டிக்கப்பட வேண்டும்.


மின்வெட்டு நிறுத்தப்பட வேண்டும்; சென்னை மட்டுமே தமிழகம் என்ற நிலை மாற வேண்டும். தமிழ் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்னையில் கிடைக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். [ உதாரணமாக அனைத்து மாநகரஙளிலும் மின்சார ரயில் போக்குவரத்து துவக்கப்பட வேண்டும்.]

கடந்த ஆட்சியில் வரி விலக்கு செய்யப்பட்ட சினிமா தொழிலுக்கு [அதாவது தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்காம்? தமிழ் வளர்ப்பாம்]. இந்த துறையின் மூலம் அதிகமான இழப்பு அரசுக்கு என்பதால், அந்த வரி விலக்கினை உடனடியாக நீக்க வேண்டும், வேண்டுமென்றால் தமிழில் பெயர் வைக்காத திரைப்படங்களுக்கு அதிகமான வரி விதிக்கலாம்.


"பசுமைத் தாயகம் " - என்று பெயரளவில் சொல்லிக்கொள்ளாமல், அதிகமான மரங்கள் நடப்பட வேண்டும், குறிப்பாக சாலை ஓரங்களில்; தற்போதெல்லாம் வெறும் அழகுக்காக மட்டுமே மரங்கள் நடப்படுகின்றன, அதைத் தவிர்த்து சுற்றுச் சூழலுக்கு உதவும் விதமாகவும் நமக்கும் ஏற்ற வேம்பு, புளிய மரங்கள் நடப்பட வேண்டும். இதனாலும் வேலை வாய்ப்பு அளிக்கும் வாய்ப்பு உள்ளது, மேலும் அரசுக்கும் இதனால் பண வரத்து அதிகரிக்கும். அதாவது புளிய
மரங்களை ஏலத்திற்கு விடுவதன் மூலமாக அரசு பயனடைய முடியும்.


மாணவர்களுக்கு இலவசமாக தருவதாக கூறி உள்ள "மடிக் கணிணி"களை வழங்காமல், அந்த தொகையில் பள்ளியின் வசதிகளைச் செம்மைப் படுத்திக் கொள்ளலாம். படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தனித்தனி கணிணிகளைப் பயன்படுத்தும் விதமாக ஆய்வுக்கூடங்களை அமைத்துக் கொடுக்கலாம். அதாவது, அந்த வருட மாணவர்கள் மட்டுமல்லாமல் அடுத்து வருபவர்களும் இதனால் பயனடைய முடியும். மேலும் இதற்கான செலவும் மிக அதிகமாகக் குறையும். ஒருமுறை செலவு செய்தாலே மிக நீண்ட நாட்களுக்கு இவை பயனுள்ளதாக அமையும்.


விவசாயத்திற்காக இலவசமாக மின்சாரம் வழங்குவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் விலையினை அதிகரிக்கலாம். இதனால் கள்ளச் சந்தையினை ஓரளவு கட்டுப்படுத்த இயலும் என்றெண்ணுகிறென். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யும் வழக்கத்தை இதோடு நிறுத்திக் கொள்ளலாம். அவ்வாறு தவறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் நல்லது என்றெண்ணுகிறேன்.


இலவச மின்சாரம் - இதற்கு ஆகின்ற செலவினை கீழ்க்கண்ட வழிகளில் செலவிடலாம் என்பது எனது எண்ணம்...

1. விவசாயிகளுக்கெனெ ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதில் பணியிடங்களை நிரப்பலாம். உதாரணமாக "உழவு வண்டி ஓட்டுனர்", "மருந்து தெளிப்போர்" போன்றவற்றிற்கு ஆட்களை நியமித்து அவர்களை இலவசமாக விவசாயிகளுக்கு வேலை செய்து கொடுக்கச் செய்யலாம். இதனால் கிராமத்தில் உள்ளோர் பலர் பயனடைவார்கள்.

2. இயற்கை உரங்கள் பயன்படுத்துவதை அதிகரிக்க அனைத்து உரங்களையும் இலவசமாக வழங்குவதை அதிகரிக்க வேண்டும். அவ்வாறாக இயற்கை உரத்தில் விளைவிப்பதற்கு அதிகமான கொள்முதல் விலையினை அரசு வழங்கலாம்.

3. இவ்வாறாக வசதிகள் வழங்குவதால் அரசுக்கு ஏதேனும் இழப்பு ஏற்படும் என்று கருதினால், அவ்வாறாக விளையும் பயிர்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவினை, அரசு இலவசமாக விவசாயிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.


சென்ற ஆட்சியின்போது தலைமீது கொட்டு வைத்து "மழை நீர் சேகரித்தது" போலவே இம்முறையும் அதை நடைமுறைப்படுத்தினால் மிக நன்றாக இருக்கும். [ நாங்கள் புதிதாக கட்டிய வீட்டில் இந்த வசதியினைச் செய்யவில்லை, ஒருவேளை முன்பே இது மிக வழுவாக கட்டாயமாக்கப்பட்டிருந்தால் நாங்கள் நிச்சயமாக செய்திருப்போம் என்றெண்ணுகிறேன்]


அடுத்ததாக "இந்தி" எதிர்ப்பு - நமது தேசிய மொழியான இந்தியினை எதிர்க்காமல் அதைக் கல்வியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எவரோ? என்றோ? எதற்காகவோ? செய்த எதிர்ப்பை (!!??) நாம் இன்னும் தொடராமல் நம் தேசிய மொழியினை கற்க ஆரம்பிக்க வேண்டும். இதுவும் வேலை வாய்ப்புகளைப் பெருக்கும், "BUDGET" கூட்டத்தொடர்களில் என்ன பேசிகிறார்கள் என்று நம்மால் புரிந்து கொள்வதற்காகவாவது இது பயனடையும்.


"தமிழ், தமிழன்" - என்று இன்னும் வெறுமென மார்தட்டிக்கொண்டு வெட்டியாகப் பேசிக்கொண்டிராமல் அதற்கான உருப்படியான வழிகளில் நம்மை நாமே ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

கடைசியாக ஒன்று "இட ஒதுக்கீடானது முற்றிலும் நீக்கப்பட வேண்டும்", அனேகமாக இதனை ஒருவரும் ஆதரிக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.


இவையெல்லாம் சிறுபிள்ளைத்தனமாகக்கூட இருக்கலாம், ஆனால் இவையெல்லாம் என்னுடைய நீண்ட நாள் ஆசைகள்.... இன்னும் நிறைய இருக்கிறது நேரம் கிடைக்கும்போது கிறுக்கிகிறேன்...


இந்த
மாற்றமாவது வழக்கத்திற்கு
மாறாக,
மாற்றம் கொண்டு வருமா??? -
மாறாமல்
ஏமாற்றமே தருமா?...

மாற்றம் - மாற்றம் தருமா?

Tuesday, April 12, 2011

மறவாமல் வாக்களியுஙள்



அன்பர்களுக்கு வணக்கம்,

சில நாட்களாக, சதா நேரமும் தேர்தலைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேர் வாக்களிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை வாக்களிக்காத எவரும் தேர்தல் பற்றியோ அல்லது இதற்குப் பிறகு வரும் ஆட்சியினைப் பற்றியோ பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லாதவர்கள் [தவிர்க்க முடியாத காரணங்களால் ஓட்டுப் போட முடியாதவர்களைத் தவிர]. நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

வாக்களிக்கும் முன் சில நிமிடஙள் யோசிப்பதைவிட, வாக்களிக்கப் போகும் முன்பே முடிவு செய்து கொள்வது நன்று.

மூன்று மாதஙளுக்கு முன்பே ரயிலில் முன்பதிவு செய்து கொள்ளும் நாம், வரப்போகும் தேர்தலில் நாம் யாருக்கு வோட்டுப் போட வேண்டும் என்பதையும் சிந்தித்து வைத்திருக்க வேண்டும்

இந்த சமயத்தில் 49-O பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். ஒரு வாக்காளர் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லையென்றால் அவர் 49-O - வில் தனது வாக்கைப் பதிவு செய்து கொள்ளலாம். தற்போதைய முறைப்படி

இதற்காக நாம் வாக்குச் சாவடியில் உள்ள அதிகாரியிடம் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேன்டும். [ஒருவேளை 49-O - வின் எண்ணிக்கை அதிகமானால் இந்த முறையானது இயந்திரத்துடனே இணைக்க வாய்ப்பு உண்டு].

கடந்த தேர்தலில் எமது நண்பர் "கதிரவன்" அவர்கள் இந்த முறையில் வாக்களித்தார். அவருக்கு மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துக்கள்.



ஏட்டுச் சுரைக்காய் கரிக்குதவாதது போல,

வாக்களிப்பில்லாதோரின் பேச்சும் - எதற்கும் உதவாது...

நாம் வாக்களிக்கும் நாட்களில் மட்டும் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டே

இருந்தால் - நாம் ஒதுக்கப்பட்டுக் கொண்டேதான் இருப்போம்.

அரசியல்வாதி : ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தொடரும்

one of the Swiss bank directors :Indians are poor but INDIA is not a poor country". [அதாவது வாக்களிப்போர்ஏழைகள் வாக்குச் சேகரிப்போர் ---??? சிந்தனை செய் மனமே....]

புதியதோர் உலகம் அமைப்போம்??? - வேண்டாம்...

இருக்கும் பழைய உலகினைச் சுத்தம் செய்வோம்...

மறவாமல் வாக்களியுஙள்...

Monday, April 4, 2011

அமு(ழு)த சுரபி

தாங்கி தாங்கி
தூங்க வைப்போர்
இல்லாமல்,
ஏங்கி ஏங்கி
தூங்கிப்போனமையால்
இரவில் வரு(ழி)கிறது
அமுத சுரபி -
அழுத சுரபியாக...

பார்த்தும் பசி தீரவில்லை

வில்லை வளைத்து - அதன்

குவியின்

குவிப்பால்

குழிந்த - இடையுடையவளே

நாண் ஏற்றிய,

வில்லின்

குவிபோல்

குவிந்த - மார்புடையவளே...

என் மனதைக்

கசக்கும்

கசங்கா

கனியுடையவளே...

இடையாடும்

இடைவெளியில் என்

இதயம் நொறுக்குபவளே...

உன்னைப் பார்க்காவிடில்

கண்கள் பொய்த்துப் போகிறது...

உன்னைப் பார்க்கையில்,

பார்த்துப் பார்த்து,

மெய் மறந்து

மொய்க்கிறதடி...


Saturday, March 5, 2011

அன்றைய சனிக் கிழமைகளில்...


தேங்காய் எண்ணையுடன்
தேவையான அளவு
சீரகம் பூண்டு
சீராய் கலந்து - சூடாக்கி;

இளஞ் சூட்டுடன்,
தலையில்
தட்டி தட்டி
தேய்த்துவிடுவார் -
என் அப்பா,
அன்றைய சனிக் கிழமைகளில்...

தேய்த்து - ஓரிரு
நாழிகை
நன்கு எண்ணையில்
நனைந்த பின்,
சூடான நீரில்
குளியலுண்டு,
அன்றைய சனிக் கிழமைகளில்...

குளித்தபின்,
வெள்ளம் சேர்த்து செய்த
வெந்தயக் களியினில்,
ஓரிரு கரண்டி
அள்ளி வைத்து,
குழிக் கரண்டியின்
குவிப் பகுதியால் - அதை
குழி செய்து,
குழியில் நல்லெண்ணய்
ஊற்றித் தருவார்
என் அன்னை,
அன்றைய சனிக் கிழமைகளில்...

Monday, January 24, 2011

கோணிக் குடை

"பூவும் நாரும்"-போல
"காணியும் கோணியும்"
எங்கள் கிராமத்தில்...

விதை நெல்லும்,
விளவித்த நெல்லும் - இதனுள்;

கோடையென்றால் தரையிலும்,
மழையென்றால்
தலையிலும்,
தவழ்ந்திடும்...

தரை விரிப்பும்
தலைக்
கவசமாகும் - மழைக்
காலத்தில்,
... கோணிப் பை!!!

Sunday, January 23, 2011

அறுவடை நாள்

எனது நிறுவனத்தில் இருந்து நான் வெளியேறியபோது, எமது நண்பர்களுக்கு நான் அனுப்பிய மடல்...

அன்பர்களுக்கு வணக்கம்,



கல்யாணத்தைப்போலவே, இந்த நிறுவனத்தில் என்னுடைய பணிக்காலமும் ஆயிரம் காலத்துப் பயிர்தான்..."பயிர் என்றாலே என்றேனும் அறுவடையும் உண்டு"- என்பது போல, இந்தப்
பயிருக்கு இன்று அறுவடை நாள். அதிக விளைச்சல் இல்லாவிட்டலும் கூட, தரமான விளைச்சல்...

விளைந்ததையெல்லாம்
விளைந்த இடத்தில் மட்டுமே
விளைவிக்க வேண்டும் என்று எந்த
விதியும் இல்லையாமையால்...

இங்கு விளைந்த பயிர்களைக் கொண்டுதான் நான் அடுத்து பயிரிடப் போகிறேன்...

விளைச்சல் என்பது - விளைவிப்பவரை மட்டுமே சார்ந்தது அல்ல...
விதை நிலத்தையும் சாரும்;
விதையினையும் சாரும்...

நல்ல விதை கொடுத்தமைக்கு மிக்க நன்றி...

இதுவரை என்னோடு
இயைந்தவர்களுக்கும்;

என்னோடு தங்கள்
எண்ணங்களைப் பங்கிட்ட
எண்ணப் பங்கீட்டாளர்களுக்கும்;

சிறு புன்னகையில்
மட்டுமே, நட்பை
மயிரிழையில் இதுவரை
மடியாது
வைத்திருக்கும்
பண்பாளர்களுக்கும்;

"தட்டினால் திறக்கப்படும்" - போல
"என்னவென்றால்? இன்னவென்று"
ஓரிரு
வாக்கியங்களில், எம்மோடு
பழக்கம் வைத்திருக்கும்
பண்பாளர்களுக்கும்;

ஆயிரம்
வணக்கங்களோடு
விடைபெறுகிறேன் - இங்கிருந்து
வீழ்கிறேன் -விதையாக...


...உஙகள் எதிர்காலம் சிறக்க எனது வாழ்த்துக்கள்...