படிக்கும்போது படித்தவைகள் பசுமரத்தாணி போலப் பதிய வேண்டும் என்று கூறுவார்கள். எனது மனதிலும் இத்தகைய ஆணிகள் நிறைய உண்டு.
இன்று படர்ந்து மரமாக நிற்கும் என்னுள் பதிந்துள்ள நினைவாணிகள் எத்தனை என்பதை என்னாள் முடிந்தவரை கணக்கிட்டு நினைவு கூர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
நினைவாணிகள் பாகம் ஒன்று
இதோ எனது முதல் பதிவாக நான் பிறந்த மண் பற்றி. நான் பிறந்தது தமிழகத்தின் வாழ்வாதாரமான கிராமம். கவிதையினைப் படித்து வளர்ந்தோர் மத்தியில் கவிதையினைப் பார்த்து வளர்ந்தவர்களில் நானும்
ஒருவன். எனது கிராமத்தைத்தான் கவிதை என்று கூறுகிறேன்.
ஒரு தீவு என்று குறிப்பிடும்போது நான்கு பக்கஙளும் நீரால் சூழப்பட்டது என்றும்; ஒரு தீபகற்பத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது மூன்று பக்கம் கடலாலும்,ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டது என்றும் கூறுவோம். அவ்வகையில் எனது கிராமத்தைப் பற்றிக் குறிப்பிட வேன்டுமென்றால்
நான்கு பக்கம் வறட்சியால் சூழப்பட்ட ஒரு பசுமையான கிராமம்.
பஞ்சம் தலை விரித்து ஆடும் என்று அனைவரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள்,அதை கண்ணால் கண்டவன் நான். புரியவில்லையா?
எனது கிராமம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மிகச் சிறிய கிராமம்...
"இராமநாதபுரம்" என்றதும் அனைவருக்கும் கண்டிப்பாக நினைவுப்படவேண்டியது அதன் வறட்சியே; அந்த வகையில் எனது கிராமமும் ஒரு விதிவிலக்கு அல்ல. நான்கு பக்கம் பசுமை என்று நான் குறிப்பிடக் காரணம் முள் மரங்கள்(கருவேல முள் மரம்) எனது கிராமத்தில் நிறைய
உண்டு, அது பார்ப்பதற்கு தலை விரித்து ஆடுவது போல இருக்கும். அந்த முள் மரத்தின் தன்மை என்னவென்றால் நிலத்தடி நீர் மட்டத்தை குறைத்து விடும். எந்த ஒரு தீமைக்குள்ளும் ஓர் நன்மை இருப்பது போல இதற்குள்ளும் ஓர் நன்மை உன்டு. எங்கள் உடம்பில் கறி(சதை) நன்றாக வளர்ச்சியுற்று இருக்க இந்த விறகுக் கரியே காரணம். ஆம் விவசாயம் ஓய்வெடுக்கும் வேளையில் எங்கள் கிராமத்தில் பிரதான தொழில் கருவ முள் மரங்களை வெட்டி விறகு தயாரிப்பதே,இன்றளவும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அடுத்ததாக ஆலமரம்,
எமது கிராமம் எவ்வளவு பழமையானது என்பது இந்த ஆலமரதைக் கண்டால் போதும். எங்கள் கிராமத்தின் கல் வெட்டாய் இருப்பது இந்த ஆலமரம். சின்னஞ் சிறு பொடிசு முதற்கொன்டு மரம் ஏறி கூழாங் கற்களைக் கொண்டு அழகாக செதுக்கி வைப்பர் அவர்கள் பெயரை,அதில் நானும் எனது பெயரைப் பதித்ததுண்டு. படர்ந்து விரிந்த இது எங்கள் ஊரின் கண்மாய்
கரையின் எல்லையாகவே அமைந்து விட்டது. நீச்சல் அடிப்போர் எல்லோருக்கும் இக்கரையில் இருந்து அக்கரையில் உள்ள
இந்த மரத்தை அடைவதே குறிக்கோளாக இருக்கும்,போட்டி கூட உண்டு. அக்கரைக்கு சென்ற பின்பு ஆல மரத்தில் ஏறிச் சென்று,கண்மாய்க்கு மேலே தெரியும்படி உள்ள கொப்புகளை தேடிச் சென்று அதில்
இருந்து கண்மாயில் குதித்திடும் சுகம் யாருக்குக் கிடைக்கும். பின்னர் களி மண்ணைப் பூசிக் கொண்டு குளியல் இடுவது என எல்லா வால் தனங்களும் அரங்கேரும்.
அடுத்ததாக சுடுகாடு,
இந்த இடம் கூட பஞ்சத்தில் அடிபட்டது போலத்தான் இருக்கும். ( இடத்தின் அளவினைப் பற்றி) பொழுது போகாத தினங்களில் சுட்டெரிக்கும் வெயிலில் நாஙள் சுற்றித் திரிந்த ஒரு சுற்றுலாத்
தளம். அங்கு கிடைக்கும் கேந்திப் பூக்களை(இளஞ் சிவப்பு வண்ணதில்,பச்சை காம்புடன் இருக்கும்) எடுத்து வந்து ரோட்டில் வைது நசுக்கி விளையாண்டதுண்டு,மண்டை ஓடுகள் இருந்தால் வழக்கம் போல எத்தி
விளையாடியதுண்டு...
அடுத்தாக மாட்டு வண்டிகள்,
எனக்கு பத்து வயது இருக்கும் போது நிறைய வண்டிகள் இருந்தன, ஆனால் தற்போது சொற்ப அளவில் மட்டுமே உள்ளன. மாட்டு வண்டியில் செல்வதை விட, அதை நிருத்தி வைத்த பிறகு அதன் முகப்பில் இரு
பக்கமும் உட்கார்ந்து கொண்டு விளையடுவது தனி சுகம்தான்,
அதிலும் வண்டிக்கு சொந்தக்காரர் அருகில் இல்லாவிட்டால் படு குசி தான். அவர் இருந்தால் முகப்பு பழுதாகிவிடும் என்று எஙளைத் துரத்தி விடுவாரே.
அப்பொழுதெல்லாம் மாட்டிற்கும் எனக்கும் அப்படி ஒரு பிணைப்பு உண்டு,கீழே விழுந்து காயம் பட்டு விட்டால் எஙளுக்கு உடனடி மருந்து (டெட்டால்) மாட்டுக் கோமியம் அல்லது மாட்டுச் சாணம்தான்.
இப்படி விலங்கோடு விலங்காக வாழ்ந்த சுகமே தனி சுகம்தான்,இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இப்படிப் பட்ட கிராமத்திலேயே பிறக்க ஆசைப்படுகிறேன்...
---"நினைவாணிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் இனிய நினைவுகள் தொடரும்"---
--அன்பன் வினோத்
No comments:
Post a Comment