நான் படித்த ஒரு வார இதழின் ஒரு பகுதியில் குறிப்பிட்டு இருந்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒரு சிறிய கட்டுரையில் வெளியான ஒரு சிறிய தகவல் அல்லது யோசனை, பின்னாளில் எப்படி அனைவருக்கும் பயன்படும் ஒரு ஊடகமானது என்பதை பற்றியது அது. அதில் குறிப்பிட்டு இருந்தது இதுதான்
ஆஸ்திரியா நாட்டில் 1800 களின் மத்தியில் ஒரு பேராசிரியர், மக்கள் எப்படி எளிதாக தங்களுக்குள் அதிகம் செலவில்லாமல் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும் என்பதை பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்ததாகவும், அதில் அவர் கூறி இருந்த ஒரு யோசனையின் அடிப்படையில் உருவானதுதான் தற்போதைய காலத்தில் நாம் பயன்படுத்தும் அஞ்சல் அட்டை என்ற ஒரு விஷயத்தை குறிப்பிட்டு இருந்தார்கள்.இந்த தகவலைப் படித்ததும் ஒரு பதிவு போட வேண்டுமென்று முடிவு செய்து இருந்தேன். அதற்கான இடைவெளி கொஞ்சம் அதிகம்தான், இருந்தாலும் இப்போது அது இறுதி வடிவம் பெற்றுவிட்டது. சமீபத்தில் நான் பார்த்த ஒரு திரைப்பட காட்சியில், ஒரு சிறிய விஷயத்தை வைத்து அதை ஒரு கதையாக உருவானதாக காண்பித்து இருந்தார்கள். உடனே இந்த பதிவினை எழுத ஆரம்பித்துவிட்டேன். எதேச்சையாக, ஒரு பேராசிரியர் கொடுத்த ஒரு ஐடியா வை வைத்து, பின்னாளில் அது மிகப்பெரிய ஒரு தகவல் பரிமாற்றமாக முடிந்தது என்பதை எளிதாக கடந்து விட முடியாது. என்னதான் அந்த பேராசிரியர் யோசனை சொல்லி இருந்தாலும், அதைக் கவனிக்கவும், அதை செயல்படுத்தவும் ஒருவர் இருந்திருக்க வேண்டும். அதாவது, ஒருவரின் தேடலுக்கான விடையினை அந்தப் பேராசிரியர் வழியாகக் கண்டுகொண்டிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.நான் ஏற்கனவே சில பதிவுகளில் புத்தகம் வாசிப்பைப் பற்றிய எனது கண்ணோட்டம் வேறு என்று கூறி இருந்தேன். மேலும் நமக்கான அறிவு தேடல் என்பது வெவ்வேறு வழிகளில் நமக்கு கிடைக்கும் வாசிப்பு ஒன்று மட்டுமே அதை பூர்த்தி செய்வது இல்லையென்று. தேடலுக்கான விதையானது - கண்டு,கேட்டு,உண்டு,உயிர்த்து என எவ்விதமாக தேடினும் கிடைத்துவிடும். ஆயினும் அதற்கான முயற்சியும், தேடலும் கண்டிப்பாக நம்மிடம் இருக்க வேண்டும்.
ஒரு தமிழ் படத்தில் வரும் முக்கியமான உரையாடல் இது,
உன் வாழ்க்கையில் ஒரே ஒரு லட்சியம் அல்லது குறிக்கோள் வைத்துக்கொள். அதை சுற்றி உன்னுடைய கவனத்தை திருப்பி அதை நோக்கி பயணி என்பதுதான் அது.
ஒரு சிறிய விதையில் இருந்துதான் மிகப்பெரிய ஆலமரம் வருகிறது, அதுபோல நம்முடைய ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான சிந்தனையில் இருந்தும் ஏதேனும் ஒரு புதிய படைப்புகள் உருவாகக் கூடும். இதை திடமாக நம்பிக்கொண்டுதான் இன்று பலரும் "Start Up / Entrepreneur" என்று சொல்லப்படும் தொழில் முனைவோர், அவர்களது சிந்தனைகளை உருவாக்க ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்.
சிறிது காலத்திற்கு முன்பு வரை, நமது வீட்டு வாசலில் வந்து கார் அல்லது ஆட்டோ நம்மை வந்து அழைத்து செல்வதற்கு நமது கைபேசியிலேயே வசதிகள் வந்துவிடும் என்று எண்ணிப் பார்த்து இருப்போமா? ஒரு சிறிய யோசனையினை வைத்து எப்பேர்ப்பட்ட வளர்ச்சியினை அடைந்து இருக்கிறார்கள் இந்த "App" ஐ உருவாக்கியவர்கள். [மன்னிக்கவும் - இந்த வசதி இன்னும் பெரு சிறு நகரங்களுக்கு மட்டுமே உள்ளது]. இது போல, பலவற்றை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
அதாவது ஒரு ஐடியா/கரு என்பது எங்கிருந்து வேண்டுமென்றாலும் வரலாம். அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோமோ அதன்படியே நமது பயணம் தொடரும். அது மாதிரி, தற்போதைய சூழலில் இருக்கும் இந்த பறந்து விரிந்த இந்த உலகில், ஒரு ஐடியா(கரு) வை எப்படி, முன்னின்று எடுத்து வெற்றி பெருகிறோமோ அதை பொறுத்துதான் நமது வாழ்க்கை அமையும். அதற்கு தனியாக ஒரு தேடல் வேண்டும்,விடா முயற்சி வேண்டும். நாம் பார்க்க கூடிய ஒவ்வொரு விஷயமும் அதற்கென ஒரு தனி வரலாறு அல்லது கதை இருக்கும். நான் எழுதும் இந்த கட்டுரை முதற்கொண்டு.
ஒரு வாசகர் / நண்பர் ஒருவர் ஒரு புத்தகம் எப்படி உருவாகிறது என்பதை பற்றி ஒரு பதிவு வேண்டுமென்று கேட்டிருந்தார்.நான் அதற்கென தனியாக எதையும் தேடி அலையாமல், என்னுடைய அனுபவத்தையே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த போது, கல்லூரியில் எங்களது "Department" காக வருடா வருடம் ஒரு புத்தகம் வெளியிடுவது உண்டு. நான் இறுதி ஆண்டு படித்தபோது, அந்த புத்தகத்திற்கான "Editor" பொறுப்பை நான் ஏற்றிருந்தேன். அந்த புத்தகத்திற்கு பெயர் வைப்பதில் இருந்து, எமது நண்பர்களிடம் அவர்களது படைப்புகளை வாங்குவது [கட்டுரை, கவிதை, முக்கிய குறிப்புகள்-தகவல்கள், ஓவியம்] என பலவிதமான கலவையாக அவர்கள் தரும் படைப்புக்களை தொகுப்பது ஒரு பெரிய வேலையாக இருந்தது. அதில் தவறு இருந்தால் அவர்களிடம் விளக்கம் கேட்பது என பல வேலைகள் இருந்தது. அதன்பிறகு, பதிப்பகத்திற்கு சென்று அவர்களிடம் பல "Proofs" பார்க்க வேண்டி இருந்தது. நாம் செய்யும் சிறு பிழையும், பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பல மணி நேரங்கள் செலவிட வேண்டி இருந்தது. ஒரு சிறிய புத்தகத்திற்கே, அதுவும் வெகு சிலருக்கு மட்டுமே கொடுக்கப்படும் புத்தகத்திற்கே இவ்வளவு மெனக்கெடல் என்றால், அநேகம் பேராலும் படிக்கும் புத்தகத்திற்கு எவ்வளவு மெனக்கெடல் இருக்கும்?
இந்த பதிவினை எங்கோ ஆரம்பித்து எங்கே கொண்டு போகிறேன் என்று எண்ண வேண்டாம். நமது கேள்விகளுக்கான பதில் என்றும் நம்மை சுற்றித்தான் இருக்கிறது. ஆயினும், நாம்தான் அதை சரியாக கவனிக்காமல் சுற்றிக் கொண்டு இருக்கிறோம். நம்மை சுற்றி நாம் சரியாக கவனிக்க ஆரம்பித்தாலே ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக்கொண்டே இருக்கலாம். பல கேள்விகளுக்கான பதில் பெரும்பாலும் நம்மிடம் இருந்தும், நம் அனுபவத்தில் இருந்தும் கிடைத்துவிடும். பல நேரங்களில் நாம் கற்ற விஷயங்களை, பாடங்களை நாம் கண்டு கொள்ளாமல் போவதாலும், அதிலிருந்து கற்றுக்கொள்ளாது போவதாலும் நமக்கான தேடல் இன்னும் நீள்கிறது. அவ்வளவுதான், மற்றபடி
நம்மை சுற்றித்தான் நமது உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறது, இது அறியாமல்தான் நாம் இவ்வுலகைச் சுற்றி வருகிறோம்.
முந்தைய சார்பு பதிவு # https://anbanvinoth.blogspot.com/2016/02/blog-post.html