Tuesday, August 10, 2010

தட்டாங்(ன்)காய்


மெலிந்தது,
மெல்லியது - என்றால்,
மெல்ல மனமும்,
மெள்ள
வாயும்,
வாஞ்சையடைகிறது...

நீண்ட அரிவாளின்
கூரினையொத்த - உன்
நுனியில்,
நுனிப்புல் மேய்வதுபோல,
நுனிப் பல்லால்,
நுணுக்கமாய்க் கடித்து
இழுக்க, விழுந்திடும்
"புதிய-பழைய"
காம்புப் பாதையில்
பல் "பதித்து
பதித்து" எடுக்க,
உரிந்திடுவாய்
உன்னதமாக...

எம் வயலில் விளையும்
கனத்த காயினை-விட,
மாற்றான் தோட்டத்தில்
விளைந்த மெல்லிடையால்,
உன்னைப் பரித்திடவே
உள்ளம் பரிதவித்தது...

கை விரித்து
அழைத்தபடி இருக்கும்
உன்னை
பரிக்காமல் சென்றதில்லை...

பிஞ்சென்றால்
முழுதாய் உள்ளிட்டு
மென்றும்,
சறுகாகினால்
உன்னை உலுக்கியும்,
உண்டும் அசைபோட்ட
அந்த நாட்களை எண்ணி,
இன்னாளில்
அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன்
"என்னாசை - தட்டாங்(ன்)காயே..."

No comments: