Saturday, August 14, 2010

நினைவாணிகள் பாகம் ஐந்து

எமது பிஞ்சைகள்


கடலும் கடல் சார்ந்த இடமும், பாலையும் பாலை சார்ந்த இடமும் என்று குறிஞ்சி,நெய்தல்,பாலயி போன்றவற்றைக் குறிப்பிடுவதற்கு இவற்றையெல்லாம் மேற்கோள் காட்டுவார்கள். அதுபோல என்னை மேற்கோள் காட்ட வேன்டுமென்றால் "எனது ஊரும், ஊர் சார்புகளும்" என்று கூறலாம். எங்களுக்கு எங்கள் ஊரில் மூன்று இடஙளில் நிலம் உன்டு. ஒன்று ரோட்டோரத்தில் இருக்கும், மற்றொன்று நடுக் காட்டிலும் மற்றுமொன்று வடகாட்டிலும் இருக்கிறது. இவற்றில் நான் வடகாட்டிற்குச் சென்றது மிகச் சொற்பமே. அது மிகத் தூரம் என்பதாலோ அல்லது அங்கு எப்போதும் எனக்குப் பிடிக்காத உளுந்தக்காயினைப் பயிரிடுவதோலோ இருந்திருக்கலாம். இது தவிர மற்ற பிற பிஞ்சைகளுக்கு அடிக்கடிச் சென்றதுண்டு.

இதிலும் குறிப்பாக ரோட்டுப் பிஞ்சையினைப் பற்றிக் கூறியே தீர வேண்டும். அந்த பிஞ்சையில் உளும்போது நானும் சென்றதுண்டு,உளுவதைப் பார்ப்பதற்காக. என் தாத்தா என்னை உளவு வண்டியில் ஏற்றி விடுவார். எஙளுக்கு "சின்னக்கண்ணு" என்றொருவர் மிக நெருஙிய பழக்கம். அவர்தான் எப்போதும் எங்களுக்கு பயிரிடுபவர், அதவது விதைப்பவர். சுமார் ஆரடிக்கும் அதிகமான உயரம் உடையவர். அவர் விதைக்கும்போது அதைப் பார்ப்பதே அருமையாக இருக்கும். கைகளில் பெரிய பெட்டியில் இடப்பட்ட விதையினை எடுத்து "உஷ்..ஷ்.. " என்று அவர் இடும் ஓசையும், நாலு கால் பாய்ச்சலும் அற்புதமாக இருக்கும்.எல்லாவற்றுக்கும் ஒரு இலாவகம் வேண்டும். அப்போது எங்கள் பிஞ்சையில் வலது புறம் ஒன்று இடது புறம் ஒன்று என இரண்டு வேப்ப மரங்கள் இருந்தன. பிஞ்சையில் வேலை செய்துவிட்டு ஓய்வெடுக்கக் மிக உதவியாக இருந்தவை அவை. விவசாயியின் நண்பன் இவன்.

களை எடுப்புக் காலஙளின்போதும் நான் அவ்வபொது அங்கு சென்றதுண்டு, ஆனால் எனக்கு வேலை ஒன்றும் செய்யத்தெரியாது, சுமாராக எதாவது சிறிய வேலைகளைச் செய்து கொண்டிருப்பேன். அப்படி சென்ற நாள்களில் நான் அவ்வபோது என் தாத்தா கொண்டு வந்திருக்கும் தூக்குச் சட்டியில் இருக்கும் பழைய கஞ்சியனைக் குடிப்பேன், அதற்கு வெஞ்சனமாக சிறு வெங்காயம் சேர்த்து வதக்கிய கருவாடு அல்லது துவையில் இருக்கும், சில சமயங்களில் அங்கு விளையும் வெங்காயமும் வெஞ்சனமாகியதும் உண்டு.

தூக்கினைத்
திறக்கையில் என் நாசி
நிறைத்திடும் அந்த
புளித்த வாசனையும்...

ஒருகை அள்ளி
உள்ளே
ஒதுக்கி பின் - வெஞ்சனம்
சேர்த்து, ஒதுக்கியதோடு
சேர்த்து சேர்த்து விழுங்க...

தண்ணீர்
கலந்த கஞ்சி,
உதட்டில் படுகையில்,
உதடு உரசி
உதிர்த்திடும்
"ப்..ப்..ச் " சத்தம்
... இன்றும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது... (அந்த வாழ்க்கையையும்தான்)

விதைப்பு,களை பறிப்பு முடிந்து சிறிது காலத்திற்கெல்லாம் செடிகள் நன்றாக மெல்ல தழைய ஆரம்பித்து இருக்கும். அப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாய் வளர்ந்து இருக்கும் நறுமனச் செடியினைப் பிடுங்கி விளையாடுவது நன்றாக இருக்கும். இந்தச் செடிக்கு நாங்கள் வைத்த பெயர் - "பச்சை செடி"(??). ஆங்காங்கே வளர்ந்து இருக்கும் சொடக்குத் தக்காளிச் செடியும், நாட்டுத் தக்காளி செடியும் நான்க்கள் அடிக்கடிச் சாப்பிடும் பழங்கள். அதிகாலை சென்று பிஞ்சையினைப் பார்த்தால் அனைத்துச் செடிகளும் அப்போதுதான் தலைக்குக் குளித்தது போல அதன் "தலைமை" அனைத்தும் குளிர்ச்சியாக இருக்கும். இவற்றை கண்டே என் கண்கள் புண்ணியம் பெற்றுவிட்டன. நாங்கள் ஊடு பயிராக வெங்காயத்தை நடுவது உண்டு. அது ஆண்டு முழுவதும் எங்களுக்குப் பயன்படும். அதைப் பாதுகாப்பதும் தனித் திறமைதான். என்னுடைய வீடும் என்னுடைய தாத்த வீடும் ஓட்டு வீடுகள்தான். எங்கள் வீட்டில் ஓட்டுற்கு சற்றுக் கீழே பல பனைக் கட்டைகள் வரிசையாக பதித்துக் கட்டியிருப்பார்கள், இதுதான் எஙளுக்கு அவ்வப்போது மெத்தாகப் (மாடியாக) பயன்படுவதுண்டு. அந்தக் கட்டைகளுக்கு மேலே தென்னந்தட்டி கொண்டு அந்த இடம் முழுவதையும் பரப்பிவிட அது ஒரு தற்காலிக மாடியகிவிடும். அப்படிச் செய்யப்பட்ட இடத்தில் என் தாத்தா எங்கள் பிஞ்சையில் விளைந்த வெங்காயத்தை நிரப்பிப் பரப்பிவிட்டுவிடுவார். தேவைப்படும்போது என்னை அல்லது என்னுடைய அண்ணனை அந்த மெத்திற்குச் சென்று வெஙாயம் அள்ளித் தரச் சொல்லுவார்.இப்படியாக ஒரு வெங்காயக் களஞ்சியம் பற்றிக் கற்றுக் கொடுத்தார் என் தாதா.

கைவிரித்தபடி
உள்ள உன்னை
உள்ளே புதைதவர் எவரோ??

பிஞ்சிலே உன்னைப்
பார்த்தால்
எங்கள் ஊர்
வெள்ளைக்காரி நீதான் (வெங்காயம்)...

பி.கு:
அன்று எங்களுக்கு இளைப்பார நிழல் தந்த மரங்களில் ஒன்றை இப்போதுதான் நாங்கள் வெட்டினோம், நாங்கள் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டிற்குத் தேவையானவற்றைச் செய்து கொண்டோம்...

மன்னித்துவிடு
மரமே;
மறந்துதான் போனோம் உன்னை,
மரத்துத்தான் இருக்கிறது எங்கள்
மனமும்...



---"நினைவாணிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் இனிய நினைவுகள் தொடரும்"---

Tuesday, August 10, 2010

தட்டாங்(ன்)காய்


மெலிந்தது,
மெல்லியது - என்றால்,
மெல்ல மனமும்,
மெள்ள
வாயும்,
வாஞ்சையடைகிறது...

நீண்ட அரிவாளின்
கூரினையொத்த - உன்
நுனியில்,
நுனிப்புல் மேய்வதுபோல,
நுனிப் பல்லால்,
நுணுக்கமாய்க் கடித்து
இழுக்க, விழுந்திடும்
"புதிய-பழைய"
காம்புப் பாதையில்
பல் "பதித்து
பதித்து" எடுக்க,
உரிந்திடுவாய்
உன்னதமாக...

எம் வயலில் விளையும்
கனத்த காயினை-விட,
மாற்றான் தோட்டத்தில்
விளைந்த மெல்லிடையால்,
உன்னைப் பரித்திடவே
உள்ளம் பரிதவித்தது...

கை விரித்து
அழைத்தபடி இருக்கும்
உன்னை
பரிக்காமல் சென்றதில்லை...

பிஞ்சென்றால்
முழுதாய் உள்ளிட்டு
மென்றும்,
சறுகாகினால்
உன்னை உலுக்கியும்,
உண்டும் அசைபோட்ட
அந்த நாட்களை எண்ணி,
இன்னாளில்
அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன்
"என்னாசை - தட்டாங்(ன்)காயே..."

வேண்டாத வேலை?


மென்பொருள் சம்மந்த
வேலையிலிருந்து சிறிது காலம்,
மென்பொருள் சோதனையிடும்
பணிக்கு
பணித்தபின்னும் -

ஓய்வு நேரத்தில்
மென்பொருள் கட்டமைப்பை
படித்துக் கொண்டிருந்த
என்னிடம்,

"ஏன் இந்த
வேண்டாத வேலை?"
என்றவரிடம்
எப்படிச் சொல்வேன்?
"எனக்குத் தேவை
ஒரு
நல்ல வேலை" என்று...

பி.கு: நான் படித்துக் கொண்டிருந்தது "நேர்முகத் தேர்வுக்கான தேடல்கள்"