Friday, December 29, 2023

வேகமா? விவேகமா?

 இந்தப்பதிவு எனக்குள் எழுந்து நீண்ட காலம் ஆகிறது, அதற்கு இந்தூர் எழுத்து வடிவம் கொடுத்துவிடலாமென்று முடிவு செய்து இன்று பதிவிடுகிறேன். பாத்திரத்தில் தண்ணீர் நிரப்புவதை பார்க்கும்போதெல்லாம் எப்பொழுத்ம் இந்த எண்ணம் வந்துகொடன்தான் இருக்கும்.

தினமும் நம் அன்றாடம் காணும் ஒரு நிகழ்வை வைத்துதான் இந்த கட்டுரையினை எழுதுகிறேன். தினமும் குளிக்கும்போது நமது பக்கெட்டில் நிரம்பும் நீரானது இருவகையாகப் பிரித்துள்ளேன். ஒன்று நீர் நிறைய இருக்கும்,அதீத உயரத்தில் இருக்கும் தொட்டியில் இருந்து அதிக வேகத்தில் விழும் நீர். மற்றோன்று குறைந்த வேகத்தில் விழும் நீர். ஒரு குழாயில் வழியும் நீரானது, அதன் வேகத்தைப் பொறுத்து அதன் பயனும் மாறுகிறது. ஒருவேளை அதன் வேகம் அதிகமாக இருந்தால் விரைவாக பாத்திரத்தை நிரப்பி சிறிது நீரானது வெளியேறிவிடுகிறது. மேலும் வேகம் அதிகமாக இருக்கும்போது நீரானது அந்தப் பாத்திரத்தில் முழுமையாக நிரம்பி இருக்க வழி இல்லை.


வேகமாக விழும் நீரானது, அதீத சிந்தனை அல்லது அங்கீகாரம் பெற்ற படைப்பாளர்களைப் பற்றியும், குறைவான வேகத்தில் விழும் நீரானது  சிறு படைப்பாளர்களை பற்றியும் குறிப்பாக எடுத்துக் கொள்வோம். 

மக்களிடம் தமக்கென ஒரு அடையாளம் பெற்ற , தமது படைப்பிற்கென்று ஒரு தனி கூட்டத்தினை வைத்திருக்கும் சிறந்த படைப்பாளர்கள் எப்பொழுதும் அவர்களது அடுத்த படைப்பினைப் பற்றிய சிந்தனையில் இருப்பார்கள். இதனைத்தான் நான் அதிக வேகத்தில் விழும் நீர் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன். இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து படைப்புகளை வேகமாகக் கொடுப்பதாலும், அல்லது சொற்பொழிவின்போது அதீத கருத்துக்களை அடுத்தடுத்து செல்வதாலும் அதை எல்லோராலும் உள்வாங்க முடிகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். அதீத கருத்துக்களை ஒருசேர தரும்போது அது சேர வேண்டிய இடத்தை சென்று சேர்வதில்லை, இதனால்தான் வேகத்தைவிட விவேகம் மிக முக்கியம் என்கின்றனர். தாம் சொல்லும் கருத்துக்களை செவி சாய்க்கும் இடத்தில் மட்டுமே நம் நமது கருத்துக்களை சொல்ல வேண்டும். பல இடங்களில் நான் பார்த்ததுண்டு, ஒரு சிறந்த பேச்சாளர் அல்லது நகைச்சுவை பேச்சாளர், தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பர். ஆனால், அதை கவனிப்போர் வெகு சிலர் மட்டுமே இருப்பார்கள். இருப்பினும் நமது கருத்தானது எவரேனும் ஒருவருக்காவது பிடித்தும், புரிந்தும் இருந்தால் நலம் என்ற கோணத்தில் எடுத்து கொண்டு நகர்ந்து விட வேண்டும். இதை, வேகமாக வழியும் குழாயில் இருந்து வெளியேறும் நீருக்கு ஓர் உதாரணமாகக் கொள்ளலலாம். தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால், அது பாத்திரத்தை வெகு விரைவாக நிறைந்துவிடும். மேலும் சிறிது கவனம் சிதறினாலும் தண்ணீர் வீணாக வெளியேறிவிடும். மேலும் அதிக வேகம் காரணமாக, பாத்திரம் நிரம்பியதாக தோன்றினாலும் சிறிதளவு இடம் கண்டிப்பாக வெற்றிடமாகத்தான் இருக்கும். 

சிறு படைப்பாளிகளுக்கான பிரச்சனையானது வேறுமாதிரியாக இருக்கிறது. இதனை வேகம் குறைவாக விழும் குழியினோடு ஒப்பிட விரும்புகிறேன். வேகம் குறைவு என்று நான் குறிப்பிடுவது, ஒவ்வொரு படைப்பிற்குமான இடைவெளி மற்றும் ஒவ்வொன்றுக்கும் ஆகும் கால விரயம். தமது கற்பனையில் அல்லது எண்ணத்தில் உதிக்கும் அனைத்தையும் இவர்களால் அப்படியே வெளிக்கொணர முடிவதில்லை (இது எனது அனுபவம்). அதற்கு மறதி ஒரு காரணமாக இருந்தாலும், உதிக்கும் கருவை உருவாக்க கால தாமதம் செய்வதும் ஒரு முக்கிய காரணியாகிப் போகிறது. எழுத வேண்டுமென்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதாது. அதை இறுதி வடிவமாக படைக்கும் வரை விடாமுயற்சியோடு தொடர்ந்தால் மட்டுமே இது சாத்தியம்.  மனதில் அவ்வப்போது தோன்றும் கருவினை அப்படியே நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. ஒன்று அதை பற்றிய குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும், அல்லது மனதில் தோன்றியவுடன் எழுத ஆரம்பித்துவிடவேண்டும். இவ்விரணடையும் தவறவிடும்பட்சத்தில் மனதில் உருவான கரு, மனதோடு மறைவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. அது, பாத்திரத்தில் நிரம்பி வழிந்து வீணாகும் நீரினைப்போலஇருப்பதாகவே  உணர்கிறேன்எனக்கு அப்படியாக நிறைய அனுபவம் உண்டு. 

நல்ல சிந்தனை உள்ள படைப்பாளர்கள் இன்னும் அதிகம் உருவாகாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், அவர்களுக்கான ஒரு இடம் கிடைக்காது போனதால்தான். சிலர் சிறந்த எழுத்தாளர்களாக இருக்கலாம். ஆனால் அதற்கான களம் அவருக்கு கிடைக்காது போவதால், அவருடைய அனைத்து படைப்புகளும் கேட்பாரற்று போய் இறுதியில் அந்தப் படைப்பாளியும் தனது முயற்சியிலிருந்து வெளிவந்துவிடுகிறார். இதற்கு, விடா முயற்சி இருந்தால் சாதிக்கலாம் என்ற கூற்றினை என்னால் முழுவதுமாக ஏற்க இயலாது. எல்லோருக்கும் குடும்பத்தின் ஒத்துழைப்பு, வாய்ப்புகள் ஒரேமாதிரியாக அமையாது என்பதால், இதுவும் தவிர்க்க இயலாது. ஒரு படைப்பாளியின் படைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்போது, அவர் மென்மேலும் புது வார்ப்புகளை படைக்க அது தூண்டுதலாக இருக்கும். இல்லையெனில், பாத்திரத்தில் வழிந்தோடும் நீர் போல அவரது படைப்பும் வீணாகித்தான் போகும். 

வேகமா? விவேகமா? எதுவாயினும், அங்கீகாரம் அவசியம்.