நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்கள் எல்லாம் சொர்ப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்கள் எல்லாம் அர்ப்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
அர்ப்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
கடந்தவை அனைத்தும் கனவு போல இருப்பதால் நானும் ஒரு கனவுதானோ? மொத்த உலகமும் பொய்தானோ என்று கேட்கும் கேள்விக்கு பதில் தெரியவில்லை. எவ்வளவு ஒரு வலிமையான கேள்வி, சிந்தனை? வாழும் காலத்தில் வஞ்சனை இல்லாது சச்சரவு இல்லாது, அன்போடு வாழ்ந்தால்தான் என்ன? எதற்கு இந்த போட்டி, பொறாமை? என்னை மிகக் கவர்ந்த வரிகள் இதுதான்.
போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?
நாம் இப்பொழுது பார்க்கும் காட்சி அடுத்த நொடியில் மாயை ஆகின்றது, அப்படியென்றால் மாயமான அனைத்தையும் மறுபடியும் பார்க்கலாமா என்றும் எழுதி இருப்பார்.
காண்பதெல்லாம்
மறையுமென்றால்
மறைந்ததெல்லாம்
காண்போமன்றோ
இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம், ஒரு வித்தியாசமான ஒரு கேள்வி என்னுள் எழும்.
500 வருடங்களுக்கு முன்பு நான் இருக்கும் இந்த இடத்தில் எவரேனும் இருந்திருப்பாரா?அப்படி இருந்திருந்தால், 500 வருடங்களுக்கு பிறகு இதே இடத்தில் இருந்து ஒருவன்(நான்) அவரை பற்றி நினைப்பேன் என்று எண்ணி இருப்பாரா? அதுபோலவே, இன்னும் 500 வருடங்களுக்குப் பிறகு, இந்த இடத்தில் யாரவது இருந்தால் 'நான் எண்ணியது போலவே யாரவது எண்ணியிருப்பார்களா?' என்று எண்ணிப் பார்ப்பாரா? என்பதுதான் எனது கேள்வி.