"ஏய்...டண்டனக்கா...ஏய்...டணக்குனக்கா" என்று எவரேனும் சொல்வதைக் கேட்டால், அது யாருடைய வழிதோன்றல் என்பதை நம்மால் உறுதியாக சொல்ல முடியும். இன்றைய காலகட்டத்தில், இவரைப் பற்றி எதிர்மறையாக விமர்சிப்பவர்களே அதிகம். மேலும், இவரை விமர்சனத்திற்கு எடுத்துக் கொண்டாலே, அது ஒருவரைக் கிண்டல் செய்வதற்குத்தான் என்பதும் பலரது எண்ணமாக இருக்கிறது. 1980-90 களில் தமிழ் திரை உலகினை தன் இசையினால் கிரங்கடித்துக் கொண்டிருந்தவர் நமது இளையராஜா. தமிழ் பாடல்களை எழுதி ரசிகர்கள் அனைவரையும் கிரங்கடித்துக் கொண்டிருந்தவர்கள் வாலியும், வைரமுத்துவும். சிறந்த திரைப் படங்களைக் கொடுத்து நம்மை எல்லாம் கட்டிப் போட்டவர்கள் பாலு மகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா, பாக்கியராஜ் போன்ற இயக்குனர்கள். இவர்கள் எல்லாம், இவ்வாறு தனித்தனியாக செய்ததையெல்லாம், தான் ஒரு தனி ஆளாக நின்று கதை, திரைக்கதை,இசை, பாடல் மற்றும் இயக்கம் என அனைத்தையும் செய்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்தான் "T.இராஜேந்திரன்" அவர்கள். அந்த ஒரு மாபெரும் கலைஞனைப் பற்றிய பதிவுதான் இது. தனக்கென தனி பாணியையும், தன்னுடைய தனித்துவத்தையும், தன்னுடைய படைப்புகள் மூலம் தனியாக வெளிப்படுத்தினார் என்றால் அது மிகையல்ல.
இவரது படத்தில் வரும் பாடல்கள் மிக பிரமாண்டமாகவும், பாடல்களில் அதிகமாக எதுகை, மோனையும் இருக்கும்.
தமிழ் சினிமாவில் இவர் காலடி வைத்த புதிதில், தனது அடுத்த படத்திற்காக ரசிகர்களை ஏங்கிக் கிடக்கச் செய்தவர் இவர்.. கிட்டத்தட்ட 10 வருடங்கள் தனது திறமையினால் ரசிகர்களை கட்டுவிக்க முடிந்த இவருக்கு, அதற்கு பிறகு காலத்திற்கேற்ப தனது படைப்புகளைத் தர இயலாமல் போனதால் மிகவும் விமர்சந்திற்கு உள்ளாகி, மெல்ல மெல்ல தமிழ் சினிமாவிலிருந்து விலக ஆரம்பித்தார். காலத்திற்கேற்ப தன்னையும், தன்னுடைய படைப்புகளையும் மாற்றிக் கொள்ளாததால்தான் என்னவோ, ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகிப்போனார்.
இன்று பலரும் "எதுகை-மோனை" பற்றியும், அடுக்கு சொற்கள் பற்றியும் அறிந்து வைத்து இருக்கிறார்கள் என்றால், அதில் இவரது பங்கு மிக மிக அதிகம் என்பதே எனது எண்ணம். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இவரைப் பின்பற்றியே சிறிது சிறிதாக, எழுத்துக்களைக் கூட்டி, எதுகை மோனையில் கவிதையென சிறிது சிறிதாய் எழுத ஆரம்பித்தவர்கள் பலர். அவர்களுக்கு எல்லாம் ஒரு முன்னுதாரணமாகவும், எழுதத்தூண்டுமளவிற்கு இவரது பாடல்கள், வசங்கள் இருந்தன என்பது எனது எண்ணம்.
செல்போனானது நமது கைக்கு வருவதற்கு, 10 வருடங்களுக்கு முன்பு ஒரு நிறுவனம் 500 ரூபாய்க்கு தவணை முறையில் செல்போஙளை விற்க ஆரம்பித்ததுதான் இதன் முதல்படி என்றால் எத்தனைபேர் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியாது. அது மொக்கை போன், அதில் இந்த வசதி இல்லை, அந்த வசதி இல்லை என்று சொன்னாலும் நமது கைகளில் முதன் முறையாக செல்போனின் வாசம் வருவதற்கு வித்திட்டவர்கள் அவர்களதான். இது போலத்தான் இவரது நிலைமையும் இருக்கிறது இன்றைய கால கட்டத்தில். இவரது படைப்புகளை இன்று குறை கூறினாலும் இவரைப் பார்த்தும் சிலர்/பலர் வளரத்தான் செய்தார்கள் என்றால் அது மிகையல்ல.
"உயிருள்ளவரை உஷா" படத்தில் வரும் இவரது பாடல் ஒன்றே இவரது கவித் திறமையையும், இசைத் திறமையினையும் எடுத்துக் கூறும்.
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு
மன்னன் மனம் வாடுதுன்னு
மங்கைதனைத் தேடுதுன்னு
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
எத்தனை எத்தனையோ கலைஞர்கள் காலத்திற்கேற்ப தங்களது படைப்புகளைத் தர முடியாமல், இந்த சினிமா உலகில் இருந்து விலகி இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அப்போதைய கால கட்டத்தில், நம் தமிழ் சினிமாவிற்கு அற்பணித்த படைப்புகளைக் குறைகூற முடியாது. அவர்கள் வரிசையில் இவரையும் வைத்துப் பார்ப்பதற்கு கடைக் கோடி ரசிகன் யோசிக்கத்தான் செய்கிறான். ஆனால், இவரும் அதற்குத் தகுதியானவர்தான் என்பதால், தமிழ் சினிமாவிற்கு தம் படைப்புகளை அற்பணித்த பல சிறந்த கலைஞர்களோடு இவரையும் ஒப்பிட்டு பார்க்க விரும்புகிறேன். தமிழ் சினிமாவினைப் பற்றி பேசும்போது, இவரைத் தனித்து பேசினால் அது முற்றுப்பெறாத ஒன்றாகத்தான் இருக்க இயலும்.