Thursday, March 23, 2017

உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே - 1

கேட்பதற்கு மிக அருமையாக இருக்கும் சினிமா பாடல்களில் சில பாடல்கள் மிக அபத்தமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். சில பாடல்கள் இசைக்கும், காட்சிக்கும் ஓர் உயிர்ப்பு இல்லாதது போல இருக்கும் . வெகு சில பாடல்கள்தான் பாடலின் இசை, பாடலின் குரல், பாடலின் காட்சியமைப்பு, பாடலின் வரிகள் என அனைத்தும் வெகு பொருத்தமாக அமைந்து இருக்கும். இப்படி ஒரு பாடலுக்குண்டான அழகுடன் அமைந்த பாடல்தான்  "டிக் டிக் டிக்" படத்தில் வரும் "பூ மலர்ந்திட நடமிடும் பெண் மயிலே" என்ற பாடல்.

பாடலின் ஆரம்பத்தில், கதாநாயகியின் கைகளைப் பற்றி, கதாநாயகன் வீணை வாசிப்பது போல ஆரம்பிக்கும். இசைக்கும், அந்தக் காட்சியமைப்புக்கும் அப்படி ஒரு பொருத்தம் இருக்கும். அதன் பிறகு பரத நாட்டிய இசையுடன் - பாடலின் இசை பயணிக்கும். கதாநாயகி ஆடும் நடனத்தை, கேமிராவில் பதிவு செய்வார் கதாநாயகன். இயக்குனர் பாரதிராஜா மற்றும் இளையராஜா இருவரும் சினிமா வாழ்க்கையினை ஆரம்பிக்கும் முன்பிருந்தே நல்ல நண்பர்கள் என்பதால், ஒருவரைப் பற்றி மற்றோருவர் நன்கு புரிந்து வைத்து இருக்கக் கூடும். இதனால், அவரவர் ரசனையினை இருவரும் நன்கு அறிந்த்திருப்பர். படத்தின் பெயரை ஒரு இசையாக அமைத்து இருப்பார்கள் இந்தப் பாடலில்.

மேலும் இயக்குனர் ஒரு படி மேலே சென்று, அந்த "டிக் டிக்" இசையினை புகைப்படக் கருவியில் இருந்து வருவது போலவும் காட்சியினைப் பிரமாதமாக பொருத்தியிருப்பார். கதாநாயகன் கதாநாயகியின் நடனத்தை கேமிராவில் பதிவு செய்யும்போது, கேமிராவில் அழுத்தும் அந்த பொத்தான் மற்றும் கேமிரா ஒளியின் ஒலி என அனைத்தையும், பாடலின் இசையோடு சேர்த்திருப்பார்கள். பாடலைப் பார்க்கும் அனைவருக்கும் அந்த சப்தமானது கேமிராவில் இருந்து வருவது போல அவ்வளவு அற்புதமாக அமைத்து இருப்பார்கள் இவ்விருவரும். இதை போலவே "ஐ லவ் யூ,ஐ லவ் யூ,ஐ லவ் யூ" என்று பாடல் வரி வரும் சில சமயங்களில் கதாநாயகியின் விழி அசைவுகளால் ஒரு நடனமாக கொடுத்து இருப்பார்கள் .

வயலின் ஓசை வரும்  சில இடங்களில், கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரது முகங்களையும் அடுத்தடுத்து, திரும்ப திரும்ப காண்பித்து அந்த இசையின் வேகத்தோடு பயணிக்க வைத்து இருப்பார் இயக்குனர் பாரதிராஜா அவர்கள். இப்படிஅந்தப் பாடல் முழுவதும் - இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் இருவருக்கும் உள்ள ஒரு புரிதலை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இதைத்தான் நான் "உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பு" என்று தமிழின் இலக்கணத்தையே - ஒரு பாடலின் இலக்கணமாக கூறுகிறேன். இதில் உடல் எது, உயிர் எது  என்பது அவரவரின் ரசனையினை பொறுத்தது!!!

பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்
விழிகளால் இரவினை விடியவிடு
நான் நடமிட உருகிய திருமகனே
ஐ லவ் யூ,ஐ லவ் யூ,ஐ லவ் யூ
ஐ லவ் யூ,ஐ லவ் யூ,ஐ லவ் யூ
விழிகளில் நிலவுகள் தெரிகிறதோ
ஐ லவ் யூ,ஐ லவ் யூ,ஐ லவ் யூ
ஐ லவ் யூ,ஐ லவ் யூ,ஐ லவ் யூ
---
---
---
நீ அணிகிற ஆடையில்
ஒரு நூலென தினம் நான் இருந்திட
சநிதபமபதநி
---
---
சுடச்சுட ஆசை வருகுது
இவள் மனம் தீயில் நனையுது
---


இப்படியொரு அழகிய தமிழில், ராஜாவின் இசையில் பாடலைக் கேட்கையில் "உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே"!!!

Friday, February 17, 2017

பித்தம் பிடித்த விடியல்


தூக்கம் கலைத்த
சிற்சில
சில்மிஷங்களை,

தூக்கம் கலைந்த
அதிகாலையில் தொடர்ந்திட,
உன்னை மெதுவாய்
அணைக்கையில்,

இருவரின் இதழோரம்,
கன்னம் பதித்து
இடையில் எழுந்து

அப்பாவுக்கொன்று,
அம்மாவுக்கொன்று,
அப்பாவுக்கென்று,
அம்மாவுக்கென்று,

தனக்கென்று - என
தர வேண்டியது,
பெற வேண்டியது,
வேண்டியது வேண்டியபடி
கிடைக்கப்பெற்று - அன்பெனும்
பித்தம் பிடித்து,
முத்தம் குடித்து,
விழித்தெழுந்த
விடியல் எண்ணி,
விழித்தும் எழாதிருக்கிறேன் ,
நீவிர் - என்னை
நீங்கி இருக்கும்
இந் நாட்களில்...

Monday, February 6, 2017

அதனிடம் (அதன்+இடம்)



இருப்பது அதனிடம்,
நடப்பது அதனிடம்,
காண்பது அதனிடம் -இங்கனம்
கண்டு கேட்டு
உண்டு உயிர்ப்பது,
அதனிடமாய் ஆகிப் போகையில்

கதவைத் திறந்ததும்
காற்றும்,
மாதங்கள் உருண்டதும்
மழையும் எப்படி வரும்...?

Friday, February 3, 2017

டண்டனக்கா...ஏய்...டணக்குனக்கா

"ஏய்...டண்டனக்கா...ஏய்...டணக்குனக்கா" என்று எவரேனும் சொல்வதைக் கேட்டால், அது யாருடைய வழிதோன்றல் என்பதை நம்மால் உறுதியாக சொல்ல முடியும். இன்றைய காலகட்டத்தில், இவரைப் பற்றி எதிர்மறையாக விமர்சிப்பவர்களே அதிகம். மேலும், இவரை விமர்சனத்திற்கு எடுத்துக் கொண்டாலே, அது ஒருவரைக் கிண்டல் செய்வதற்குத்தான் என்பதும் பலரது எண்ணமாக இருக்கிறது. 1980-90 களில் தமிழ் திரை உலகினை தன் இசையினால் கிரங்கடித்துக் கொண்டிருந்தவர் நமது இளையராஜா. தமிழ் பாடல்களை எழுதி ரசிகர்கள் அனைவரையும் கிரங்கடித்துக் கொண்டிருந்தவர்கள் வாலியும், வைரமுத்துவும். சிறந்த திரைப் படங்களைக் கொடுத்து நம்மை எல்லாம் கட்டிப் போட்டவர்கள் பாலு மகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா, பாக்கியராஜ் போன்ற இயக்குனர்கள். இவர்கள் எல்லாம், இவ்வாறு தனித்தனியாக செய்ததையெல்லாம், தான் ஒரு தனி ஆளாக நின்று கதை, திரைக்கதை,இசை, பாடல் மற்றும் இயக்கம் என அனைத்தையும் செய்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்தான் "T.இராஜேந்திரன்" அவர்கள். அந்த ஒரு மாபெரும் கலைஞனைப் பற்றிய பதிவுதான் இது. தனக்கென தனி பாணியையும், தன்னுடைய தனித்துவத்தையும், தன்னுடைய படைப்புகள் மூலம் தனியாக வெளிப்படுத்தினார் என்றால் அது மிகையல்ல.

இவரது படத்தில் வரும் பாடல்கள் மிக பிரமாண்டமாகவும், பாடல்களில் அதிகமாக எதுகை, மோனையும் இருக்கும்.

தமிழ் சினிமாவில் இவர் காலடி வைத்த புதிதில், தனது அடுத்த படத்திற்காக ரசிகர்களை ஏங்கிக் கிடக்கச் செய்தவர் இவர்.. கிட்டத்தட்ட 10 வருடங்கள் தனது திறமையினால் ரசிகர்களை கட்டுவிக்க முடிந்த இவருக்கு, அதற்கு பிறகு காலத்திற்கேற்ப தனது படைப்புகளைத் தர இயலாமல் போனதால் மிகவும் விமர்சந்திற்கு உள்ளாகி, மெல்ல மெல்ல தமிழ் சினிமாவிலிருந்து விலக ஆரம்பித்தார். காலத்திற்கேற்ப தன்னையும், தன்னுடைய படைப்புகளையும் மாற்றிக் கொள்ளாததால்தான் என்னவோ, ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகிப்போனார்.

இன்று பலரும் "எதுகை-மோனை" பற்றியும், அடுக்கு சொற்கள் பற்றியும் அறிந்து வைத்து இருக்கிறார்கள் என்றால், அதில் இவரது பங்கு மிக மிக அதிகம் என்பதே எனது எண்ணம். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இவரைப் பின்பற்றியே சிறிது சிறிதாக, எழுத்துக்களைக் கூட்டி, எதுகை மோனையில் கவிதையென சிறிது சிறிதாய் எழுத ஆரம்பித்தவர்கள் பலர். அவர்களுக்கு எல்லாம் ஒரு முன்னுதாரணமாகவும், எழுதத்தூண்டுமளவிற்கு இவரது பாடல்கள், வசங்கள் இருந்தன என்பது எனது எண்ணம்.

செல்போனானது நமது கைக்கு வருவதற்கு, 10 வருடங்களுக்கு முன்பு ஒரு நிறுவனம் 500 ரூபாய்க்கு தவணை முறையில் செல்போஙளை விற்க ஆரம்பித்ததுதான் இதன் முதல்படி என்றால் எத்தனைபேர் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியாது. அது மொக்கை போன், அதில் இந்த வசதி இல்லை, அந்த வசதி இல்லை என்று சொன்னாலும் நமது கைகளில் முதன் முறையாக செல்போனின் வாசம் வருவதற்கு வித்திட்டவர்கள் அவர்களதான். இது போலத்தான் இவரது நிலைமையும் இருக்கிறது இன்றைய கால கட்டத்தில். இவரது படைப்புகளை இன்று குறை கூறினாலும் இவரைப் பார்த்தும் சிலர்/பலர் வளரத்தான் செய்தார்கள் என்றால் அது மிகையல்ல.

"உயிருள்ளவரை உஷா" படத்தில் வரும் இவரது பாடல் ஒன்றே இவரது கவித் திறமையையும், இசைத் திறமையினையும் எடுத்துக் கூறும்.

வைகைக் கரை காற்றே நில்லு 
வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு 
மன்னன் மனம் வாடுதுன்னு 
மங்கைதனைத் தேடுதுன்னு 
காற்றே பூங்காற்றே  
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் 
காதோரம் போய் சொல்லு 

எத்தனை எத்தனையோ கலைஞர்கள் காலத்திற்கேற்ப தங்களது படைப்புகளைத் தர முடியாமல், இந்த சினிமா உலகில் இருந்து விலகி இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அப்போதைய கால கட்டத்தில், நம் தமிழ் சினிமாவிற்கு அற்பணித்த படைப்புகளைக் குறைகூற முடியாது. அவர்கள் வரிசையில் இவரையும் வைத்துப் பார்ப்பதற்கு கடைக் கோடி ரசிகன் யோசிக்கத்தான் செய்கிறான். ஆனால், இவரும் அதற்குத் தகுதியானவர்தான் என்பதால், தமிழ் சினிமாவிற்கு தம் படைப்புகளை அற்பணித்த பல சிறந்த கலைஞர்களோடு இவரையும் ஒப்பிட்டு பார்க்க விரும்புகிறேன். தமிழ் சினிமாவினைப் பற்றி பேசும்போது, இவரைத் தனித்து பேசினால் அது முற்றுப்பெறாத ஒன்றாகத்தான் இருக்க இயலும்.

Thursday, February 2, 2017

மனக் கணக்கு

சமீபத்தில் பாக்கியராஜ் அவர்கள் நடித்த "எங்க சின்ன ராசா" படத்தை பார்த்தேன். சித்தியின் வளர்ப்பில் வளர்க்கப்படும் ஒரு நாயகனின் கதை. "எங்க சின்ன ராசா"  படத்தில் கதையின் நாயகன், தனது சித்தியின் மீது அளப்பரிய அன்பும்,அளப்பரிய நம்பிக்கையும் வைத்திருப்பார். படம் நெடுக்கில் வரும் பல்வேறு காட்சிகளை அதை அவ்வப்போது காண்பித்து இருப்பார்கள் படத்தின் கடைசி பகுதியில், விஷம் வைத்த உணவை சாப்பிட்ட பிறகும் அவர் வைத்திருக்கும் அசாத்திய நம்பிக்கையில் "நான் மருத்துவம் எடுத்துக் கொண்டால், அது என் சித்திமேல நான் வச்சிருக்கிற நம்பிக்கை பொய்யாகிரும், அதனால நான் வரமாட்டேன்" என்று வீம்பு பிடித்து  இருப்பார். இந்தப் படத்தில் எனக்கு மிக மிகப் பிடித்த வசனம் மற்றும் காட்சி இதுதான். இதை வைத்து ஒரு கட்டுரை எழுத தோன்றிய எண்ணத்தின் விதையே இந்தக் கட்டுரை.

வின்னர் படத்தில் ஒரு காட்சியில், வடிவேலு மற்றும் பிரசாந்த் இருவருக்கும் இடையிலான உரையாடல் ஒன்று...

வடிவேலு: "இப்போ நம்மகிட்ட ரெண்டு பிஸ்கட் பாக்கெட் இருக்கு, அண்ணன் உள்ள போயி துணி எடுக்கிறவரைக்கும் இதுல ஒரு பக்கெட்ட எடுத்து ஒன்னொன்னா வீசனும். துணி எடுத்துட்டு வெளிய வரும்போது மீதி இருக்கிற பக்கட்ட எடுத்து ஒன்னொன்னா வீசனும். என்ன புரியுதா?"

பிரசாந்த்: "அண்ணே, நீங்க உள்ள போயி துணிய எடுத்திட்டீங்களான்னு எனக்கு எப்படிண்ணே தெரியும்"

வடிவேலு: "எல்லாம் மனக் கணக்குத்தான்"

அந்த மனக் கணக்கினைப் பற்றித்தான் இந்த பதிவு. இது மனிதனுக்கு மட்டுமே உரித்தான ஒரு கணக்கு இல்லை, உயிருள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் இது பொருந்தும் என்பது எனது கணிப்பு. தான் ஆடாவிட்டாலும் தன தசை ஆடும் என்று சொல்வார்கள், அதுவும் இதில் அடக்கம்தான். தளபதி படத்தில், நாயகனின் தாயார் ஒரு காட்சியில் நாயகன் வதைபடும்போது பதறித் துடித்து எழுவாரே அது இதற்கு சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.

நீங்கள் சமையல் கலைஞர்களை கவனித்துப் பார்தால் ஒன்று புலப்படும் (தற்போதைய நவீன யுக கலைஞர்களை தவிர்த்து). அவர்கள் பெரும்பாலும் சமையல் செய்கையில் அவர்களுக்கென்று ஒரு கணிப்பினை வைத்து இருப்பார்கள், அவர்கள் அளந்து கொடுக்கும் பொருளின் அளவானது அவ்வளவு துள்ளியமாக இருக்கும். சாம்பார் செய்ய வேண்டுமென்றால் அதற்கு எவ்வளவு தண்ணீர், காய் கறி, உப்பு, மிளகாய் தூள், மசாலா தூள் என சகலமும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பார். இதற்கெல்லாம் அவரது மனக் கணக்குதான் காரணம், அதாவது அவரது அத்தனை வருட அனுபவம் அவரை இந்த அளவிற்கு துல்லியமாய் இருக்க வைத்து இருக்கிறது. இதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு கணிப்பினில் இவ்வுலகினில் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்.

நாம் "Bike" இல் செல்லும்போது, எவரேனும் குறிக்கிட்டால் அல்லது சற்று தூரத்தில் வளைவு இருந்தால் அதற்குத் தகுந்தவாறு நாம் நமது வேகத்தை குறைத்து கொண்டு லாவகமாக செல்வதும் ஒரு மனக் கணக்குத்தான். நாம் நமது உள்ளார்ந்த அசைக்க முடியாத நம்பிக்கையிலேயே நமது ஒவ்வொரு கணத்தையும் கடத்துகிறோம். ஒருவேளை அந்தக் கணிப்பானது தவறும் பட்சத்தில் நமக்கு இழப்புகளும் சேர்ந்தே வரும். வாகனததில் செல்லும்போது, நாம் வழக்கமாகச் செல்லும் வழியில் வேகத்தடை இல்லாத இடத்தில் திடீரெனெ முளைத்திருக்கும் வேகத்தடை இருந்தால், அந்த இடம் வரை எந்தவித சலனமும் இல்லாமல் செல்லும் நமது மனது, அதன் பிறகு, நமது வழக்கமான கணிப்புகளை எதிர்பார்ப்புகளையும் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு, எதிர்வருவதைக் கணித்துஸ் செல்லாத தூண்டிவிடும்.

ஒரு சாதாரண,அன்றாட நிகழ்வுகளுக்கே நம்மை அறியாமலே இவ்வளவு மனக்கணக்கு வைத்திருக்கும் ஒரு மனிதனுக்கு, ஒரு மனிதன் மேல் வைத்திருக்கும் அசாத்திய நம்பிக்கை குழைந்து போனால்?