அன்றொரு நாள், வாழை இலை வாங்க அழைந்தபொழுதுதான் தெரிந்தது, அது வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறது என்று. தினமும் நான் பணிக்குச் சென்றுவரும் வழிதான், இருப்பினும் இதுவரை எத்தனை "ATM" இருக்கிறது, எத்தனை "Medical" இருக்கிறது, எத்தனை "Hotel" இருக்கிறது என்பது மட்டும்தான் எனக்குத் தெரியும். சற்று சிந்திக்கும் போதுதான் எனக்கு எத்தனையோ மனிதர்களைக் கடந்து செல்கிறோம்,எவரையும் எண்ணிப் பார்த்தது இல்லையே என்ற உண்மை விளங்கியது. பகலில்கூட வீடுகளைப் பூட்டிக் கொள்ளும் இந்த ஊரில், "Gated Community" இருக்கும் இந்த நடைமுறையில் மனிதர்களோடு பழகும் பழக்கம் மிகக் குறைவே. இருப்பினும் நல்ல நண்பர்கள், நல்ல மனிதர்கள் என பழக்கத்தை வளர்த்துக் கொள்வது நமது கையில்தான் இருக்கிறது.
நாம் பழகிய மனிதர்கள், பழக்கப்பட்ட இடம் என அனைத்தும் நாம் செல்லும் இடங்களிலும் இருக்கும்/கிடைக்கும் என்றெண்ணுவது தவறு. ஆனால் கிடைக்கும் சின்னச் சின்ன விசயங்களில் நாம் எவ்வாறு அவற்றை நமக்கு, நமது மனதிற்கு நெருக்கமானதாக மற்றிக் கொள்ளவேண்டுமென்பதைக் கொஞ்சம் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக மிக நீண்ட தேடல் எல்லாம் தேவையில்லை,மாறாக மனதை சற்றெ பக்குவப்படுத்திக் கொண்டால் போதும்..
உதாரணமாக வீட்டினில் ஒரு துளசி செடி வைக்க வேண்டி அதற்காக அழையும்போதுதான் தெரியும், நமக்கு மிக அருகிலேயே அழகான "Nursery" இருக்கிறது என்று. அங்கு செல்கையில், அந்தச் செடிகளைப் பார்க்கையில் நிச்சயம் நமக்கும் செடிகளுக்கும் எவ்வளவு நெருக்கம் இருந்தது என்று நம் நினைவுகளை பின்னோக்கி இழுத்துச் செல்லும். சிறு வயதில், நண்பர்களுடன் சேர்ந்து வீட்டினில் பூசணி, சுரைக்காய் சாமந்திப் பூ என பலவும் வளர்த்தது நினைவுக்கும் வரும் (வந்தது). இப்படி இதனுடனான தொடர்பு அறுந்து போனது எதனால்?
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போல, நமக்கு இன்னல் வரும் நேரங்களில் மட்டும், நாம் கடந்து வந்த நமது இனிய நாட்களைப் பற்றி எண்ணி அசைபோடுவதுண்டு. அதாவது நமது அன்றாட நிகழ்வுகளில் ஏதேனும் தொய்வு ஏற்படும்போது, இதற்கு முன்னர் நாம் அவ்வாறு இல்லையே? இன்று மட்டும் எதற்காக இப்படி? என்று, நம்முடைய அன்றாட, திட்டமிட்ட(?) நிகழ்காலத்தில் தொய்வு ஏற்படும்போது மட்டும் நாம் இவ்வாறாக எண்ணுவதுண்டு.
ஏன்? எதற்காக? இப்படி இருக்கிறோம் என்று சற்றாவது நாம் சிந்திப்பதுண்டா?, கிடையாது. எபோதும் நிகழ் காலம் தொலைத்து, எதிர் காலம் பற்றிய கணிப்பிலேயே நமது நாட்களானது கடந்து கொண்டிருக்கிறது. சின்னச் சின்ன ஆசைகளில் நம்மை அடைத்துக் கொண்டு, சிறந்த எதிர்காலத்தை தொலைத்துவிடக் கூடாது என்று பலரும் சொல்லக் கேட்டதுண்டு. இருப்பினும் எனக்கு இதில் உடன்பாடு கிடையாது.
ஏன்? எதற்காக? இப்படி இருக்கிறோம் என்று சற்றாவது நாம் சிந்திப்பதுண்டா?, கிடையாது. எபோதும் நிகழ் காலம் தொலைத்து, எதிர் காலம் பற்றிய கணிப்பிலேயே நமது நாட்களானது கடந்து கொண்டிருக்கிறது. சின்னச் சின்ன ஆசைகளில் நம்மை அடைத்துக் கொண்டு, சிறந்த எதிர்காலத்தை தொலைத்துவிடக் கூடாது என்று பலரும் சொல்லக் கேட்டதுண்டு. இருப்பினும் எனக்கு இதில் உடன்பாடு கிடையாது.
சிறு துளி பெருவெள்ளம், அதாவது பெருவெள்ளமே ஆயினும் அது உருவாக சிறு துளிதான் மூலம். அப்படித்தான் நம்மைச் சுற்றியும் எராளமான இன்பங்கள் கொட்டிக் கிடக்கிறது, ஆனால் அதை யாரும் கவனிப்பது இல்லை. உதாரணமாக மின்சாரம் இல்லாது போகும் இரவு நேரங்களில், வீட்டின் வெளியில் நண்பர்களுடன் சேர்ந்தோ, தனிமையிலோ அமர்ந்து அந்த வானத்தைப் பார்க்கையில் என்னவொரு பேரானந்தம்? இரவிலும் – கடந்து செல்லும் மேகங்கள், நிலவினை தழுவிச் செல்லும் அந்த வெண்/கரு மேகங்கள், சில்லென்ற தென்றல் என அனைத்தையும் நாம் ரசிக்க, நமது தினசரி வாடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் மட்டும்தான் வர வேண்டுமா? நிச்சயமாக இல்லை. நம்முடைய மகிழ்ச்சி என்பது, மனிதன் படைத்த கருவிகளால் அல்ல, மனிதம் படைத்த நல மனிதர்களால்தான் என்பதை மனம் ஒப்புக் கொள்ள வேண்டும்.
நம்மை சுற்றித்தான் நமது உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறது, இது அறியாமல்தான் நாம் இவ்வுலகைச் சுற்றி வருகிறோம்.
இப்படி உலகில் எத்தனையோ விசயங்கள் நமக்கு மிக அருகில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன, அதைக் கவனிப்பதற்குதான் நமக்கு நேரம் கிடையாது. பெரிய பெரிய கலைஞர்களைகூட அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களை மதிக்காமல், மறைந்த பின்பே போற்றியவர்கள் நாம். இதில் நமது பாரதியைச் சொல்லியே ஆக வேண்டும். அவர் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர் ஒரு இதழுக்கு கொடுத்த பேட்டியில், "அவர் இப்படிஎல்லாம் வருவார்னு தெரிஞ்சு இருந்தா அவர் உபயோகித்த பொருள் அனைத்தும் என்னுடனே வைத்து இருப்பேன்" என்றார். சக மனிதர்களை அவ்ர்கள் வாழும் காலத்தில் நேசிப்பதற்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
சமீபத்தில் நான் பார்த்த ஒரு பதிவை கொடுத்திருக்கிறேன். இவர் அவரது பிள்ளைகளுக்கு உணவளிப்பதை பெரும் பாக்கியமாக கருதுகிறார், மேலும் எவர் தயவும் தேவையில்லை எனும் வைராக்கியம் - அடடே நல மனிதர் அவர். இவரைப் போன்ற பலரையும் கடந்துதான் நாம் அன்றாடம் சென்று கொண்டிருக்கிறோம்.
ஒரு பாடல் ஒன்றை நினைவூட்ட விழைகிறேன்.
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?
எதுவும் புதிது அல்ல, அதை உணரும் தருணத்தில் மட்டுமே நமக்கு இத்தனைக் கேள்விகள். ஏதேனும் புதிதாய், அல்லது பழையன நம்மில் இருந்து விலகிச் செல்கையில் மட்டுமே நமக்கு நம்மைப் பற்றிய எண்ணம் எழுகிறது.
நம்மை சுற்றித்தான் நமது உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறது, இது அறியாமல்தான் நாம் இவ்வுலகைச் சுற்றி வருகிறோம்.