Saturday, March 8, 2014

ஒளிச் சிற்பி - பாலு மகேந்திரா!

"சினிமா ஒரு கலை" என்பது இன்னும் மெய்ப்பட்டுக் கொண்டிருக்கக் காரணமானவர்களில் வெகு சிலரில் ஒருவர்தான், சமீபத்தில் மறைந்த திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா அவர்கள்.




சினிமாவிற்காக முழுமையாக தன்னை அற்பணித்துக் கொண்டவருக்காக என்னுடைய எழுத்துக்களால் நன்றிகளைச் செலுத்திடத்தான் இந்தப் பதிவு.

ஒரு படைப்பாளி என்பவன் தன் எண்ணங்களில் விளைந்த விதைகளை எழுத்துக்களில் புதைத்து (இட்டு) அதைக் கதையாக மட்டுமல்லாமல், ஒரு திரைக்கதையாக உருக்கொண்ரும்போது, அவன் மனதில் நிறுத்தியிருந்த அக்கருவின் விருட்சத்தைக் காணவேண்டும். அதாவது தான் என்ன சொல்லவருகிறோம் என்பதை தெள்ளத்தெளிவாக, அழகாக எடுத்துரைக்க வேண்டும். இப்படிப்பட்ட திறமையுடையவர்களில் ஒருவர்தான் நம் பாலுமகேந்திரா என்றால் அது மிகையல்ல. தனக்கென ஒரு பாணி, தனக்கென ஒரு தொனி என் இவர் தனக்கென பலவற்றைக் கொண்டிருந்தாலும், அற்புதமான படைப்புகளை நமக்கென கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். இதற்காகவே இவரைத் தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவே இவருக்கென ஒரு இடம் ஒதிக்கிக்கொண்டுவிட்டது. இவரைவிடுத்து இந்திய/தமிழ் சினிமாவைப் பற்றி பேச முடியாது என்பதே அந்தச் சிறப்பு. என்னைப் பொறுத்தவரை, இவரைப் பார்த்தே பலரும் தத்தமது படங்களில் ஒரு இயக்குனரைக் காண்பிக்க வேண்டுமென்றால் அவருக்குத் தலையில் ஒரு தொப்பியினை வைத்துவிடுவார்கள். அந்த அளவிற்கு இவர் இயக்குனராக (இயக்குனர் என்பதற்கு உதாரணமாக) தம்மை வெளிப்படுத்தியிருந்தார்.
தமிழகத்தில் தொப்பிக்குப் பெயர்போன இரண்டாமவர் இவெரென்றால் அது நிதர்சனமான உண்மையே. விருதுகள் பலவும் இவரைத் தேடிவந்து அவற்றைக் கௌரவித்துக் கொண்டன.

ஒரு ஒளிப்பதிவாளராக தன்னை இந்தச் சினிமா உலகில் அறிமுகப்படுத்திக் கொண்டு, படிப்படியாக தன்னை ஒரு பண்பட்ட இயக்குனராக மாற்றிக்கொண்ட இவர், நம் அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்கா இடம்பெற்றுச் சென்றுவிட்டார். படத்திற்குப் பெயர் வைப்பதிலிருந்து அனைத்திற்கும் அப்படியொரு மெனக்கெடல் இருக்கும்.

இவர் இயக்கியத் திரைப்படங்களின் பெயரைச் சொல்லும்போது எனக்கு "...சொல்லச் சொல்ல இனிக்குதடா..." என்ற பாடல்தான் ஞாபகம் வருகிறது. அந்த அளவிற்கு இவர், படத்திற்கு அழகிய தமிழில் பெயர் வைத்து இருப்பார். மூடு பனி, மூன்றாம் பிறை, வண்ண வண்ணக் கோலங்கள், நீங்கள் கேட்டவை,ரெட்டை வாள் குருவி, அது ஒரு கனாக் காலம் போன்றவை இவற்றுள் அடக்கம். இதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது 'நீங்கள் கேட்டவை'. அது என்ன, நீங்கள் கேட்டவை, ஏதோ, நாம் அவரிடம் இப்படைத்தான் வேண்டுமென்று கேட்டதுபோலல்லவா இவர் பெயர் வைத்து இருக்கிறார் என்று வினவினாள், அதுதான் உண்மை. இவரது காலகட்டத்தில், இவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் முற்றிலும் கதையம்சம் கொண்டதோடு மட்டுமல்லாமல், ஒரு கலையம்சம் கொண்டதாகவும், பெரும்பாலும் வியாபார ரீதியாக என்ற கண்ணோட்டம்/எண்ணோட்டம் இல்லாமலும் இருக்கும். இதையே பலரும் இவர்மீது விமர்சனமாகவே வைத்தார்கள். ஆனால், இவர் எப்பேற்பட்ட கலைஞன், என்பதை தன் படைப்பின் மூலம் மட்டுமல்லாது, தன் தலைப்பின் மூலமாகவும் பதிலளித்தவர் இவர்.

ஆம், தன்னால் சனரஞ்சகமாக படம் எடுக்கத் தெரியாது என்பதை உடைக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம்தான் இது.இதை, அவர் தனக்கென உருவாக்காமல், முற்றிலும் விமரசனங்களுக்கு பதிலளிக்கவே உருவாக்கிய படம். ஒரு படைப்பாளிக்கு முழு படைப்புச் சுதந்திரம் வேண்டுமென்பதை தன்னுடைய பானியிலேயே நமக்கு உணர்த்தியவர் இவர். இவரிடம் இருந்த இத்தகைய விளையாட்டுத்தனம்தான் பின்னாளில், சதிலீலாவதியாக முழு நீள நகைச்சுவைப் படமாக வெளிப்பட்டது. என்னதான் அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தாலும், அவர் அதை மீண்டும் செய்ய விருப்பமில்லாமல், தன்னாலான ஆக்கப்பூர்வமான ஆக்கங்களை சினிமா உலகிற்குத் தந்தார்.


இவரது ஒளிப்பதிவினைப் பற்றி இந்தப் பதிவில் பதியாமல் விட்டுவிட்டால், இந்தப் பதிவும் எவர் மனதிலும் பதியப்போவதில்லை. மூடு பனி என்று சொன்னதும், ராஜா அவர்களின் இசையினைத் தொடர்ந்து நம் மனதில் நினைவுக்கு வருவது, அந்த மூடுபனிக் காட்சிதான். மூன்றாம் பிறை படத்தின் சில காட்சிகளிப் பார்த்தாலே போதும், நமக்கும் குளிர் ஒட்டிக் கொள்ளும், அந்த அளவிற்கு பனியோடு கேமிராவை உரவாட வைத்து இருப்பார். இவரின் ஒளிப்பதிவு மட்டும் எப்படித்தான் இவ்வளவு அழகாக, தெளிவாக இருக்கிறது(?) என்ற கேள்வி என்னூள் எழுபோதெல்லாம் என் நினைவுக்கு வந்து செல்வது இதுதான். இவர் ஒளிப்பதிவு செய்த படங்களைப் பார்க்கும்போது ....
உங்க நாயணத்துல மட்டும்தான் இந்த மாதிரி இசை வருமா... என்று மனோரமா அவர்கள் தில்லானா மோனாம்பாள் படத்தில் கேட்டதுபோல, உங்க கேமிராவில் இருந்து மட்டும்தான் இப்படிப் படம் எடுக்க முடியுமா என்ற சந்தேகம் என்னூள் எழும்.

இவரது படங்கள் எவ்வளவு அழகாக தெளிவாக இருக்கிறதோ அதே தெளிவு இவரது பேச்சிலும் இருக்கும். இவரது பேட்டியினை இங்கே காணவும்.



இவர் கனவு கணடது என்னவோ, ஒரு மாறுபட்ட சினிமாவை உருவாக்குவதுதான் என்று பலரும் கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. என்னைப் பொறுத்தவரை, சினிமா என்றால் அது இவர் நினைத்தது போலத்தான் இருக்க வேண்டும், அது மாறுபட்டு நிறபதால், இவர் நினைப்பதை மாற்றுக்கருத்தாக பலரும் பலவாராக என்னுகிறார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.

(தமிழ்) திரைப்படத் துறைக்கென தனியாக ஆவணக் காப்பகம் வைக்க வேண்டுமென்ற இவரது ஆசை ஈடேறுமா என்பது பெரிய கேள்விக்குறிதான். இறுதியாக இவரின் படத்தில் இடம் பெற்ற பாடலோடு இப்பதிவினை நிறைவு செய்கிறேன்...

கனவு காணும் வாழ்க்கையாவும்
களைந்து போகும் கோலங்கள்....

--அன்பன் வினோத்