Tuesday, August 11, 2009

பொருளாதார நெருக்கடி


"உயிர்வரின் - உக்குரல் மெய் விட்டோடும்

பணம்வரின் - பலர் தாய் நாடு விட்டோடு(டின)வர்"

நெருக்கடி
-------------

"வேலையின்போது, வேலையில்
கண்ணாயிரு" -
வேலை முடிந்தபின்னும்
கண்ணாயிருக்கிறோம்
- பொருளாதார நெருக்கடி

தடுப்பூசி
--------------

தான் தான் கடைசி
என்றாலும்,
தனக்கும் உண்டு,
அந்தத் தடுப்பூசி...

மெழுகுவர்த்தி உருகுவதைப் போல
தன் வரிசை
குறுகுவதைக் கண்டு,
தனக்கு ஊசி
ஏற்றாமலே,
ஏறியது - பயம்,
தன் நிலமைதான்
பணி நீக்கத்தில்
தப்பி(ப்ப)யவனுக்குமோ(?!?)

Monday, August 3, 2009

நினைவாணிகள் - பாகம் மூன்று

எங்கள் ஊர் கிழவிகள்


ஒவ்வொரு கிராமத்திற்கும் அடையாளமாக இருப்பது அவர்களது ஆலமரம். அது போலவே ஒவ்வொரு தெருவிற்கும் அடையாளமாக இருப்பவர்கள் அந்தந்த தெருவில் உள்ள கிழவிகள்.
(எங்கள் வழக்கத்தில் பாட்டி = அவ்வா).


வயதுக்கு வந்தவர்கள் மாராப்பு அணிவதும், வயதானவர்கள் மாராப்பு அணியாததும் இன்று வரை கிராமத்தில் வழக்கமாகத்தான் இருக்கிறது. சுருங்கிய தோளும், குறுகிய கண்களுடனும் இருக்கும் அவர்களை, அவர்கள் அமர்ந்திருக்கும் விதம் கண்டு இனம் காணலாம். ஒரே ஒரு சேலையினில் தஙளைச் சுற்றிக் கொண்டு, குத்தவைதுக் கொண்டும், இரு கால்களை நேராக நீட்டி, எந்தச் சுவரிலும் சாயாமலும் அமர்ந்து இருப்பதிலிருந்து அவர்களின் வயது முதிர்வினைக் காணலாம்.


எங்கள் தெருவிலும் மூன்று பாட்டிகள் இருந்தனர், ஒருவரது பெயர் கல்லுப்பட்டி அவ்வா, இன்னொருவர் ஊள மூக்கு அவ்வா (என்னுடைய பாட்டிக்கு சொந்தக் காரர்), மற்றொருவர் கண்ணாடி அவ்வா.

நாங்கள் வெளியில் எங்கும் சுற்றச் செல்லாவிட்டால் எங்களுக்கு பொழுது போக்கே இவர்களுடன்
விளையாடுவதுதான். அது வம்புச் சண்டையாகவும் இருக்கலாம் அல்லது இதர விளையாட்டாகவும் இருக்கலாம். கல்லுப்பட்டி பாட்டியின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு இவர்களுடன் சேர்ந்து தாயம் விளையாடுவோம். ஒவ்வொரு பொடியர்களும் ஒவ்வொரு பாட்டியுடன் கூட்டு சேர்ந்து கொள்வோம். அப்படி விளையாடும் சமயங்களில் அவர்கள், ஆட்டத்தின் போக்குக்கு ஏற்றற்போல சில வேடிக்கையான பொன் மொழிகளைச் சொல்வார்கள். மேலும்,அவர்கள் ஆடும் பொது, கூறும் (பாடும்) சில வார்த்தைகள்...


"என்ன கேக்குற? அஞ்சு...
அஞ்சோட போகாத, ஈரஞ்சு
ஈர..ஞ்சு..., சோனா நாலு...
சோனா நா...லு, மூணு.
ஈரஞ்சு -
ஒரு சோனா நாலுக்கு,
இது மூணுக்கு "


என்று அவர்கள் ஒருவித

இராகம் பாடி கொண்டே, ஆட்டத்தைத் தொடர்வார்கள்.

களையெடுப்பு காலங்களில் அவர்களும் களைக்குச் சென்று வருவார்கள். அப்போது அவர்கள் தூக்குச் சட்டியில் தட்டாங் காய், உளுந்தங் காய், சூரியகாந்தி, சோளக் கருது இவற்றில் ஏதேனும் சிலவற்றைக் கொண்டு வருவார்கள். அவருக்காக அல்ல, எஙளைப் போன்ற சின்ன வாண்டுகளுக்காக.


"ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தனர், இவர்கள் பிள்ளையினை அன்றைய பாட்டிகள் ஊட்டி வளர்திருக்கலாம்". நாங்கள் சேட்டை செய்யும்போது அடிப்பதற்கு ஓடி
வருவார்கள். பிடித்து விட்டாலோ, "உங்க அப்பன மாதிரியே இருக்கியே" அல்லது "அம்மா மாதிரி இருக்கியே" என்று சொல்லிக் கொஞ்சவே செய்வார்கள்.

நகரமயமாகிவரும் இந்த யுகத்தில், என் பிள்ளையும் இவர்களைப் போன்ற பாட்டிகளின் அரவணைபில் அரவணைக்கப் பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.


"வயதான பின்னும்
பஞ்சு மிட்டாய் தின்றாய் - எங்களது கன்னஙளைக் கிள்ளி,
அயர்ந்தாலும்,
அயராமல் அழைத்தாய் - "என் ராசா"
உன்
சுருக்குப் பையினிம் அதிக
சுருக்கங்கள் உன் உடலில் - எனினும்
சுருக்காதிருந்தாய் - எங்கள் மேல் கொண்ட பாசத்தை...
என் கன்னம் வலிக்கக் கிள்ளி
முத்தம் இட்டாய் அன்று...
... இன்று
என் நெஞ்சு வலிக்கிறது -
நீ காலம் சென்ற சேதி கேட்டு...
கவலைப்ப்டாதே, நானும் வருவேன்,
மீண்டும் உன் தெருவில் உங்களது பேரனாய்.
தொட்டுத் தொடரட்டும்
இந்தப் பாட்டிப் பாரம்பரியம்...!!!"


கொடி படர - நல்ல கிளை,
நான் படர்ந்தேன் - எங்கள் உர் கிழவிகளால்.

---"நினைவாணிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் இனிய நினைவுகள் தொடரும்"---