Wednesday, December 16, 2009

நினைவாணிகள் பாகம் நான்கு



பள்ளிப் பருவம்

"பள்ளிப் பருவம் என்பது காத தூரம்தான்" - என்பது எங்களது ஊரில் பொதுவாக உள்ள பேச்சு. வலது கையினை வானவில் போல வளைத்து, அவர்களது இடது காதைத் தொட வேண்டும், அங்கனம் தொட்டால் அவர்கள் ஒன்றாம் வகுப்பிற்குப் படிக்கத் தகுதியாகிவிட்டார்கள் என்று அர்த்தம். இல்லாவிட்டால், பால்வாடிக்குச் செல்ல வேண்டும்.


எங்கள் கிராமத்தில் 5வது வகுப்பு வரை மட்டுமே பள்ளி உள்ளது. அனைத்து வகுப்பிற்கும் சேர்த்து மொத்தம் இரண்டு வாத்தியார்கள்.பால்வாடிக்கென்று ஒருவர், ஆக மொத்தம் மூவர் மட்டுமே. பால்வாடியில் பயின்ற போது, வாரம் ஒரு முறை முட்டை கொடுப்பார்கள், பால்வாடி (அரைக் கிளாஸ்) என்பதாலோ என்னவோ, அரை முட்டை மட்டுமே
கொடுப்பார்கள்.


என்னுடைய அப்பா எங்களைப் பக்கத்து ஊரான பெருநாழியில் சேர்த்து படிக்க வைத்தார். என்னையும்,என்னுடைய அண்ணனையும் எங்கள் அப்பா சைக்கிளில் வைத்து பள்ளிக்கு அழைத்துச் செல்வார். எங்களது மளிகைக் கடையும் அந்த ஊரில்தான் இருக்கிறது. பள்ளிக்குக் கொண்டு செல்லும் பையானது ஒன்று மஞ்சள் பை அல்லது நரம்பு பை அல்லது சோல்னா போன்ற தோற்றமுடைய பை - இவற்றில் ஏதேனும் ஒன்றாகத்தானிருக்கும்.
நாங்கள் அந்தப் பையில் எங்கள் தட்டினை வைக்கும் விதமே தனிதான். தட்டினை சிலேட்டினைப் பொத்தியவாறு வைப்போம், எழுதிய வீட்டுப் பாடம் அழியாதிருக்க. இதற்கும் அனுபவம் வேன்டும்.மாலை சென்றதும் எழுதி முடித்த வீட்டுப்பாடம், மாயமாகிப் போனதென்ன? தயக்கத்துடன் ஆசிரியரிடம் கண்பித்தேன், அழிக்கப்பட்ட எனது பதிவை...


அவரோ,
விதைத்த நெல்லை மண் தின்றிடுமா என்ன?
என்பது போல, வசைபாடி விட்டார்.
திருடனுக்குத் தேள் கொட்டினால் சரி,
திருடுபட்டவனுக்குக் கொட்டினால்?
வலிமேல் வலிதானே???
சுரீரென்று இருந்தது, அவரின் அடியும், கவனமற்ற எனது செயலும்.


"நாலும் இரண்டும் சொல்லுகுறுதி"
நாவின் சொல் - தன்மானத்திற்கு உறுதி...
பயின்றேன் அனுபவம் - ஓரடியில் இருந்து,
பிஞ்சிலே பழுத்தேன் - பழுத்த என்
காயதிலிருந்து...
அன்று முதல், கவனித்துக் கொண்டேன் எனது கவனங்களை, எனது சிலேட்டினையும்தான்...


காலையில் ராஜாவாக அப்பாவுடன் மாலையில் நட-ராஜாவாக நண்பர்களுடன். எனது கால்களின், தாளத்துக்கு எற்ப இசையிடும் எனது குச்சி டப்பாவும், சிலேடும் - தட்டும் முத்தமிட்டுக் கொள்ளும் ஓசையும், இவை இரண்டுமே நான் அறிந்த முதல் இசை.


புளியம்பழம் - "சுட்ட பழம்"
"தான் என்றும் சுடும் பழம்" என்பதை
இருமுறை சுட்டிக் காட்டியது.
ஒன்று - நான் எடுத்து மண் ஊதியபோது;

மற்றொன்று - அதிகம் தின்று நாவினைச் சுட்டுக்
கொண்ட போது. ஆசை காட்டி மோசம் செய்தது.
வெந்தும் தணியாதிருந்தது - புளி ஆசை...



இணை கோட்டில் செல்லும்
இரயில் கண்டிடாத போதும்,
எங்கள் ஊரின்,
நனைந்த தார் சாலையில் காணும்,
கருப்பு நிற இரயில் வண்டியினைத் (பூச்சியினை)
தூக்குவதென்றால்
அது ஒரு சுகம்...

மாலையில்,
5மணி ஜெயவிலாஸ் வண்டியின் ஓட்டுனருக்கு,
"டாட்டா" காண்பிப்பதென்றால்,
அது ஒரு சுகம்...
கடந்து செல்லும் அந்த வண்டியின்
கொய்யாப் பழ வாசனையினைக்
கொய்வதென்றால்,
அது ஒரு சுகம்...
ஒரே கல்லில்,
பல புளியம்பழங்களைக்
கொய்வதென்றால்,
அது ஒரு சுகம்...
கொய்த பழத்தை,
ஓட்டுடன் உண்பதென்றால்,
அது ஒரு சுகம்...
குண்டும் குழியுமான,
தார் சாலையினில்
தேங்கிய நீரைக்
சீத்தி (உதைப்பது)
அடிப்பதென்றால்,
அது ஒரு சுகம்...
ஒரு மைல்கல் தொலைவில் இத்தனை
சுகங்கள் கிடைத்ததென்றால்
அது மிகப் பெறும் சுகமே...


---"நினைவாணிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் இனிய நினைவுகள் தொடரும்"---

Monday, December 14, 2009

விழி(ழு) நீர்?:


விழி(ழு) நீர்?:
-----------
வழியின்றி
வழிகிறது அதன்
வழியில்...
விண்ணில் இருந்து
மண்ணில் விழும் மழைத் துளி...!!!

உதிரிப் பூக்கள்

வார்த்தைகள்:
-----------------
உதிர்பவை அனைத்தும்
முதிர்ந்தவையாக இருக்கட்டும்...
முதிர்வன மட்டும்
உதிரட்டும்...

குறள்:
-------
சொல்லுக சொல்லைப் பிரிதோற் சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் என்மை அறிந்து

Tuesday, August 11, 2009

பொருளாதார நெருக்கடி


"உயிர்வரின் - உக்குரல் மெய் விட்டோடும்

பணம்வரின் - பலர் தாய் நாடு விட்டோடு(டின)வர்"

நெருக்கடி
-------------

"வேலையின்போது, வேலையில்
கண்ணாயிரு" -
வேலை முடிந்தபின்னும்
கண்ணாயிருக்கிறோம்
- பொருளாதார நெருக்கடி

தடுப்பூசி
--------------

தான் தான் கடைசி
என்றாலும்,
தனக்கும் உண்டு,
அந்தத் தடுப்பூசி...

மெழுகுவர்த்தி உருகுவதைப் போல
தன் வரிசை
குறுகுவதைக் கண்டு,
தனக்கு ஊசி
ஏற்றாமலே,
ஏறியது - பயம்,
தன் நிலமைதான்
பணி நீக்கத்தில்
தப்பி(ப்ப)யவனுக்குமோ(?!?)

Monday, August 3, 2009

நினைவாணிகள் - பாகம் மூன்று

எங்கள் ஊர் கிழவிகள்


ஒவ்வொரு கிராமத்திற்கும் அடையாளமாக இருப்பது அவர்களது ஆலமரம். அது போலவே ஒவ்வொரு தெருவிற்கும் அடையாளமாக இருப்பவர்கள் அந்தந்த தெருவில் உள்ள கிழவிகள்.
(எங்கள் வழக்கத்தில் பாட்டி = அவ்வா).


வயதுக்கு வந்தவர்கள் மாராப்பு அணிவதும், வயதானவர்கள் மாராப்பு அணியாததும் இன்று வரை கிராமத்தில் வழக்கமாகத்தான் இருக்கிறது. சுருங்கிய தோளும், குறுகிய கண்களுடனும் இருக்கும் அவர்களை, அவர்கள் அமர்ந்திருக்கும் விதம் கண்டு இனம் காணலாம். ஒரே ஒரு சேலையினில் தஙளைச் சுற்றிக் கொண்டு, குத்தவைதுக் கொண்டும், இரு கால்களை நேராக நீட்டி, எந்தச் சுவரிலும் சாயாமலும் அமர்ந்து இருப்பதிலிருந்து அவர்களின் வயது முதிர்வினைக் காணலாம்.


எங்கள் தெருவிலும் மூன்று பாட்டிகள் இருந்தனர், ஒருவரது பெயர் கல்லுப்பட்டி அவ்வா, இன்னொருவர் ஊள மூக்கு அவ்வா (என்னுடைய பாட்டிக்கு சொந்தக் காரர்), மற்றொருவர் கண்ணாடி அவ்வா.

நாங்கள் வெளியில் எங்கும் சுற்றச் செல்லாவிட்டால் எங்களுக்கு பொழுது போக்கே இவர்களுடன்
விளையாடுவதுதான். அது வம்புச் சண்டையாகவும் இருக்கலாம் அல்லது இதர விளையாட்டாகவும் இருக்கலாம். கல்லுப்பட்டி பாட்டியின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு இவர்களுடன் சேர்ந்து தாயம் விளையாடுவோம். ஒவ்வொரு பொடியர்களும் ஒவ்வொரு பாட்டியுடன் கூட்டு சேர்ந்து கொள்வோம். அப்படி விளையாடும் சமயங்களில் அவர்கள், ஆட்டத்தின் போக்குக்கு ஏற்றற்போல சில வேடிக்கையான பொன் மொழிகளைச் சொல்வார்கள். மேலும்,அவர்கள் ஆடும் பொது, கூறும் (பாடும்) சில வார்த்தைகள்...


"என்ன கேக்குற? அஞ்சு...
அஞ்சோட போகாத, ஈரஞ்சு
ஈர..ஞ்சு..., சோனா நாலு...
சோனா நா...லு, மூணு.
ஈரஞ்சு -
ஒரு சோனா நாலுக்கு,
இது மூணுக்கு "


என்று அவர்கள் ஒருவித

இராகம் பாடி கொண்டே, ஆட்டத்தைத் தொடர்வார்கள்.

களையெடுப்பு காலங்களில் அவர்களும் களைக்குச் சென்று வருவார்கள். அப்போது அவர்கள் தூக்குச் சட்டியில் தட்டாங் காய், உளுந்தங் காய், சூரியகாந்தி, சோளக் கருது இவற்றில் ஏதேனும் சிலவற்றைக் கொண்டு வருவார்கள். அவருக்காக அல்ல, எஙளைப் போன்ற சின்ன வாண்டுகளுக்காக.


"ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தனர், இவர்கள் பிள்ளையினை அன்றைய பாட்டிகள் ஊட்டி வளர்திருக்கலாம்". நாங்கள் சேட்டை செய்யும்போது அடிப்பதற்கு ஓடி
வருவார்கள். பிடித்து விட்டாலோ, "உங்க அப்பன மாதிரியே இருக்கியே" அல்லது "அம்மா மாதிரி இருக்கியே" என்று சொல்லிக் கொஞ்சவே செய்வார்கள்.

நகரமயமாகிவரும் இந்த யுகத்தில், என் பிள்ளையும் இவர்களைப் போன்ற பாட்டிகளின் அரவணைபில் அரவணைக்கப் பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.


"வயதான பின்னும்
பஞ்சு மிட்டாய் தின்றாய் - எங்களது கன்னஙளைக் கிள்ளி,
அயர்ந்தாலும்,
அயராமல் அழைத்தாய் - "என் ராசா"
உன்
சுருக்குப் பையினிம் அதிக
சுருக்கங்கள் உன் உடலில் - எனினும்
சுருக்காதிருந்தாய் - எங்கள் மேல் கொண்ட பாசத்தை...
என் கன்னம் வலிக்கக் கிள்ளி
முத்தம் இட்டாய் அன்று...
... இன்று
என் நெஞ்சு வலிக்கிறது -
நீ காலம் சென்ற சேதி கேட்டு...
கவலைப்ப்டாதே, நானும் வருவேன்,
மீண்டும் உன் தெருவில் உங்களது பேரனாய்.
தொட்டுத் தொடரட்டும்
இந்தப் பாட்டிப் பாரம்பரியம்...!!!"


கொடி படர - நல்ல கிளை,
நான் படர்ந்தேன் - எங்கள் உர் கிழவிகளால்.

---"நினைவாணிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் இனிய நினைவுகள் தொடரும்"---

Wednesday, July 29, 2009

நடைப் பிணம்

வியாபாரம் கடனுக்கு வியாபாரமாகி,
வியாதிக்காரனாகி,
நடைப் பிணமாக
நொடிந்து
விழுந்தவனுக்கு,
விழுந்தது கோடி - லாட்டரியில்,
இப்போது
வியாதிகள் வியாபாரமாகின
மருத்துவனிடம்;
அவனோ மீண்டும் உற்சாகமாய்
வியாபாரத்தில்

பணம் என்றால் பிணமும் வாய் திறக்குமாம்...
உண்மைதானோ!!!(?)

பயணத்தில் இரசித்தது

சென்ற வாரம் நான் சாப்பிடுவதற்காக கோடம்பக்கத்தில் இருந்து உதயம் அருகே உள்ள ஒரு உணவகத்திற்கு பேருந்தில் சென்றேன். அப்பொது பேருந்தில் சுமாரான கூட்டம் இருந்தது. கடைசி இருக்கையில் (பெண்கள் அமரும் இருக்கை) ஒரு ஆண் அமர்ந்து இருந்தார். என்னுடைய நிறுத்தத்தில் ஏறிய நடுத்தர வயதுள்ள பெண் ஒருவர் அவரை எழச் சொன்னார். அதற்கு அவர் நான் அடுத்த சில நிமிடஙளில் இறங்கிவிடுவேன் என்று கூறிவிட்டு எழாமல் அமர்ந்தே இருந்தார். இதனால் அந்தப் பெண் கோவமாகத் திட்டிக் கொண்டே வந்தார். அவரும் ஆண்களுக்கென்று தனியாக இருக்கை வசதி இல்லையே என்றும், பெண்கள் பொது இருக்கையிலும் அமர்கிறார்கள் என்றும் புல்ம்பிக் கொன்டே வந்தார். அவருடைய புலம்புலுக்கு ஏற்றாற்போல, பேருந்து, சாலை நெரிசலில் நின்ற போது, அருகில் இருந்த வாகனம் ஒன்றில்

" ரொம்ப ரொம்ப பாவமுங்க ஆம்பள சாதி...
இது புரியாம தவிக்குதுங்க ஆம்பள சாதி..."


ரொம்ப ரொம்ப மோசமுங்க பொம்பள சாதி,
இது புரியாம தவிக்குதுங்க ஆம்பள சாதி..."



இந்தப் பாடல் பாடிக் கொண்டு இருந்தது...

பேருந்தில் இருந்த பலரும் சிரித்து விட்டார்கள், பாவம் அந்தப் பெண், அவரது முகம் கோணிப் போகி விட்டது.

நானும் பொங்கிய பொங்கலை ஊதி அணைப்பது போல...
பொங்கி வந்த சிரிப்பை கை கொண்டடக்கிக் கொண்டேன்.



கண்டோரெல்லாம் கண்டிடாததால்,
கண்டிப்போர் யாருமில்லை (இருவரையும்)...
கண்டிப்பு
கண்டிக்கப்பட்டது,
கண்டாரால் அல்லாமல்,
கண்டவரால்(?)...

Tuesday, July 21, 2009

உதிர்க்காமல் உதிர்த்துவிடு

வற்றாத என் ஆசைகளை
சிற்றோடை போல
கலகலவென நான் அள்ளிக் கொட்ட
... நீயோ
சிற்றோடை சேர்ந்த
மடை போல,
சலனமின்றி இருந்து
என்னைச் சலனப்படுத்துகிறாய்...
என்றும் அன்பாய்
என்மேல் உதிர்பவனே,
ஒருபோதும்
கோவமாய் வார்தைகளை
"உதிர்க்காமல் உதிர்த்துவிடு"
அன்பாய்...

Tuesday, March 17, 2009

மடை வெள்ளத்தினும் பெரிய துளி

மடை திறந்த
வெள்ளத்தை விட
வேகம் அதிகம் உண்டு...
ஊடல் முடிந்து
கூடல் தொடரும் போது,
காதலன் நெஞ்சில் சாய்ந்து அழும்
காதலியின் கண்ணீர் துளி-க்கு