எனது கிராமத்து கோயில் திருவிழாக்கள்,
திருவிழா என்றால் எங்கிருந்தோ ஒரு பாட்டி வந்து கலர் கடிகாரம்,கலர் கண்ணாடி, விசில், மற்றும் பல பொருள்களும் குறிப்பாக பெண்களுக்குத் தேவையானவைகளை அதிகாமகக் கொண்டு வந்து விற்பனை செய்யும்.
என்னதான் ஓலையில் கடிகாரம் கட்டி விளையாண்டாலும் அந்த வண்ணக் கடிகரத்தைக் கட்டிச் சுற்றுவதில் அவ்வளவு மகிழ்ச்சி,அதிலும் 50 பைசாவுக்கு விசில் ஒன்றை வாங்கி வாயில் வைத்து ஊதிக் கொண்டே சுற்றினால் அந்த திருவிழாவே களை கட்டுவதாக ஒரு எண்ணம் தோன்றும்.
மூன்று கோயில் திருவிழாக்கள் மட்டும் வெகு விமர்சையாகக் கொண்டாடப் படுவதுண்டு. அவை குச்சாரி அம்மன், பெருமாள் சாமி மற்றும் துர்க்கை அம்மன்.
முதலாவதாக குச்சாரி அம்மன்,
இது தான மிகப் பெரிய விழா. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாகக் கொண்டாடப்படுவது உண்டு. கோவில் விழாவானது பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டு ஒரு தேதி குறிக்கப்படும். அந்த தேதியன்று கன்னிப் பெண்கள் 10 பேரை கோவிலின் முன்பாக நிற்க வைத்து சாமிக்கு பூசை ந்டத்தப்படும்; இந்த பூசையின்போது எந்தப் பெண்ணிற்கு சாமி வருகிறதோ அந்தப் பெண் அந்த வருடத்தின் சாமியாகக் கருதப்பட்டு அவளை, எங்கள் ஊரில் குச்சாரி அம்மன் இருப்பதாகக் கருதப்படும் வீட்டில் வைப்பர்,கோவில் விழா முடியும் வரை அங்குதான் இருக்க வேன்டும். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து சாமி சிலையானது ஆற்றில் கரைக்கும் நிகழ்வுடன் முடிவடையும். அந்த ஏழு நாட்களில் 5 நாட்கள் காணிக்கை பெறுவதற்காக அந்தப் பெண்ணை பக்கத்தில் உள்ள ஊருக்கு நள்ளிரவில் அழைத்துச் செல்வார்கள் ; என்னே ஒரு அதிசயம் ! மற்ற எவரும் முன்னால் செல்ல தயங்கும் இடஙளில் இந்த பெண் மட்டும் தைரியமாக வேகமாக செல்வதுண்டு. ( எல்லா வருடமும் )
அந்த 5 நாட்களிலும் சாமி சிலையினை செய்வார்கள்,களிமண் கொண்டு. அதைத் தனியாளாகத் தூக்குவது மிகக் கடினமே.
ஆறாவது நாள் சாமி சிலையானது சிலை செய்யப்பட்ட வீட்டிலிருந்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும்,எடுத்துச் செல்பவர் குறிப்பாக ஆறடிக்கும் மேல் இருக்க வேன்டும். பல்லக்கின் நடுவில் அவர் சிலையினைச் சுமந்து கொண்டு கோவிலுக்குச் செல்வார். 5 நிமிடத்தில் செல்லக்கூடிய தூரத்தை 30 நிமிடத்தில் சென்றடைவார். அந்தக் கட்சியினைக் காண்பதென்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சில சமயஙளில் சரியாக தெரியவில்லை என்று எனது பாட்டி வீட்டு ஓட்டின் மேல் கூட ஏறியதுண்டு.
இப்படியாக ஆறாம் நாள் கழியும். அன்று இரவு அந்தப் பெண்ணை உள்ளூர் முழுவதும் வளம் வர வைப்பர். அப்போது கோவில்-காளை மாடும் உடன் இருக்கும். அதன் முதுகில் மேளம் கட்டி விட்டு மத்தளம் அடித்துக் கொண்டே வருவர்.
ஏழாவது நாள்,
அன்று காலை அனைவரும் கோவிலுக்குச் சென்று தேங்காய் உடைத்து வழிபடுவர். பிறகு அன்று மாலை சுமார் 4 மணி அளவில் சாமியை கண்மாயில் கரைக்க செல்வார்கள். கரைத்து முடித்ததும் பூசாரி கையில் வேப்பங் குலையுடன் கண்ணில் பட்டவர்களை அடித்துக் கொண்டே கோவிலுக்கு ஓடி வருவார்,அங்கு வந்ததும் அவருக்கு மஞ்சல் தண்ணீர் ஊற்றி பிற பூசைகள் நடத்துவார்கள்.
அன்று இரவு ஏதாவதொரு நாடகம் நடைபெறும், அத்துடன் விழா இனிதே நிறைவுறும்.
இதைப் போன்று பெருமாள் சாமி கோவில் விழாவும், துர்க்கை அம்மன் கோவில் திருவிழாவும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும்.
---"நினைவாணிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் இனிய நினைவுகள் தொடரும்"---